பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/635

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

583

இந்தியா

பகுதி கோடையில் அதிகமாக வெப்பமடைதலும், குளிர் காலத்தில் அதிகமாகக் குளிர்ச்சி அடைதலுந்தான் முக்கிய காரணமென்று உறுதியாகச் சொல்லலாம். ஜனவரி மாதத்தில் ஆசியாக் கண்டத்தில் குளிர் மிகுந்துள்ளபோது வடகிழக்குப் பருவக் காற்று இந்தியா முழுவதும் அடிக்கிறது. மாசு மறுவற்ற ஆகாயம், நல்ல காலநிலை, ஈரக் குறைவு, தினசரி வீச்சு மாற்றம் அதிகரித்தல், மெதுவாய் வீசும் வடகாற்று ஆகியவை இப் பருவத்தின் காலநிலை இயல்புகளாம். இடையிடையே பேரழுத்தம் மாறிப் பாரசீகம், வட இந்தியா வழியாகச் சீனாவை நோக்கிக் குறைந்த அழுத்தத்தால் ஏற்படும் சுழல்கள் செல்லும். இவை ஐரோப்பியப் பகுதிகளில் உண்டாகும் சுழல்களைவிடக் கடுமையாக இல்லாவிட்டாலும் ஏறக்குறைய அவ்வகையைச் சேர்ந்தவைகளே. இச் சுழல்களோடு வரும் மழை மிகக் குறைவே யெனினும், வட இந்தியாவின் குளிர் காலப் பயிர்களுக்கு மிகவும் முக்கியமானது. கிழக்கு நோக்கிச் செல்லும் இச் சீரழுத்தச் சுழல்களிற் சில வட இந்தியா முழுவதற்கும் சிறு மழை தரும். வடக்கு வடகிழக்காய்ச் செல்பவை பஞ்சாப் சமவெளிகளிலும் காச்மீரத்திலும் பெரு மழையையும், இமயச்சரிவுகளில் பெரும்பனிப் பொழிவையும் தருகின்றன. இவை கடந்து செல்லும்போது இராப்பகல் வெப்பநிலை மாற்றம் அதிகரித்துச் சில வேளைகளில் கடுங்குளிர் வீசும். அவற்றால் தெற்கே நாசிக் வரையும் கரும்புக்கும் பழவகைப் பயிர்கட்கும் பெருஞ்சேதம் விளைகின்றது. ஏப்ரல் முதல் மே வரையுள்ள வெப்பக் காலத்தில் வெப்ப நிலை நாளுக்குநாள் உயர்கிறது. அதற்குத் தக்கபடி வட இந்தியாவில் வாயு அழுத்தம் குறைகிறது. ஆனால் இந்திய சமுத்திரத்தின் தென்பாகத்திலும், அதனை ஒட்டியுள்ள ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியா நிலப்பகுதிகளிலும் வெப்பநிலை ஒழுங்காகக் குறைந்துகொண்டே வருவதோடு பேரழுத்தங்களும் அதிகரிக்கின்றன. இந்தியாவில் வெப்ப மிகுதி கிரமமாக வடக்கே செல்லுகிறது. தக்கிணத்தில் மார்ச்சு மாதத்தில் 100° பா. வெப்பநிலை ஏற்படுகிறது. ஏப்ரல் மாதத்தில் பகல் வெப்பநிலை 100° பா. முதல் 110° பா. வரை மத்தியப்பிரதேசத் தின் தெற்கிலும் குஜராத்திலும் உயர்கிறது. மே மாதத்தில் வட இந்தியாவின் வெப்பநிலை மிக அதிகமாயுள்ளது. வட மேற்குப் பாலைவனத்தில் அப்போது வெப்பநிலை 120° பா.க்கும் அதற்கு மேலும் உயர்கிறது. ராஜஸ்தானம், சிந்து, தார் பாலைவனம் குறைந்த அழுத்தமுள்ள பகுதிகள். இக் குறைந்த அழுத்தமுள்ள பகுதி ராஜஸ்தானத்திலிருந்து சோட்டாநாகபுரிவரை பரவியுள்ளது. இக் காலத்தில் தூசிப்புயல்களும், தூசியைக் கிளப்பும் காற்றும் வட இந்தியாவில் அநேகமாக உண்டாகின்றன.

தென்மேற்குப் பருவக்காற்று : மே மாதக் கடைசியில் வடமேற்கிந்தியாவில் அழுத்தக்குறைவு நன்றாக ஏற்படுகிறது. அதனால் இந்தியா முழுதும் காற்றோட்டம் அதிக வேகத்தோடு செல்கிறது. பல ஆண்டுகளில் பூமத்திய ரேகைக்குத் தெற்கிலிருந்து வீசும் தென்கிழக்குத் தடக்காற்றுக்கள் வடக்கு நோக்கி அரபிக் கடலிலும் வங்காளவிரிகுடாவிலும் இழுக்கப்படுகின்றன. இந்தக் குளிர்ந்த ஈரமான ஓட்டந்தான் தென்மேற்குப் பருவக்காற்று எனப்பட்டு, ஜூன் மாதத் தொடக்கத்தில் மலையாளக் கடற்கரையில் கொந்தளித்து வீசத்தொடங்குகிறது. பின் சிறிது சிறிதாக வடக்கு நோக்கிச் சென்று, ஜூன் மாதத்திற்குள் இந்தியாவிற் பெரும் பகுதியிலும் பரவுகிறது. இந்தியாவை அடைவதற்கு முன் இவ்வோட்டம் கடல் வழியாக 2,000 மைல்களுக்கு மேல் வருவதால் நீர் நிறைந்திருக்கும். இந்தியாவின் பெரும்பகுதிக்கு இதிலிருந்துதான் மழை கிடைக்கிறது. இந்தியாவில் பெய்யும் மழையில் 85 சதவீதம் இதிலிருந்துதான் கிடைக்கிறது.

இந்தியாவின் இயற்கையமைப்பை ஒட்டியே பருவக் காற்றோட்டத்தின் போக்கும் மழையின் அளவும் இடத்துக்கிடம் வேறுபடுகின்றன. இந்தியாவின் வடகிழக்கிலும் வடமேற்கிலுமுள்ள மலைத்தொடர்கள் ஒரு பெட்டியின் இரு பக்கங்கள்போல உள்ளன. ஆகையால் பருவக்காற்றோட்டம் தீபகற்பத்தின் இரண்டு பக்கங்களிலும் இரண்டு ஓட்டங்களாகப் பிரிந்து செல்கின்றது. வங்காள விரிகுடாவின் ஓட்டம் முதலில் வடக்கு நோக்கிச் சென்று, இமயமலைத் தொடரால் தடுக்கப்பட்டுப் பின் மேற்கு நோக்கிக் கங்கைப் பள்ளத்தாக்கின் வழியாகத் திரும்புகிறது. அரபிக் கடலோட்டம் மேற்குக் கடற்கரை மலைத்தொடர்களுக்குக் குறுக்காக வீசி எழும்போது அம் மலைகள்மீது மிகுந்த மழையைப் பெய்வித்துப் பின் தக்கிணம், மத்தியப்பிரதேசம்வரை முன்னோக்கிச் செல்கிறது. பருவக்காற்று முழுதும் பரவி நிலைத்தவுடன் ஒரிஸ்ஸாவிலும் தீபகற்பத்தின் வடகிழக்குப் பகுதியிலுள்ள குறைந்த அழுத்தமுள்ள இடத்திலும் இரண்டு ஓட்டங்களும் ஒன்று கூடுகின்றன.

பருவக்காற்று மழை இந்தியாவில் ஓரிடத்திலும் தொடர்ந்து பெய்வதில்லை ; ஒரே அடியாகப் பல நாள் பொழிவதும் உண்டு; விட்டுவிட்டுப் பெய்வதும் உண்டு. காற்றின் சலனமும், மழைப் பொழிவின் சலனமும் நாடியின் துடிப்பை ஒத்திருத்தல் தென்மேற்குப் பருவக்காற்றின் ஒரு சிறந்த அமிசமாகும். சராசரியில் ஓட்டத்தின் வேகமும், அதனைத்தொடர்ந்து பெய்யும் மழையின் அளவும் ஜூன் முதல் ஜூலை வரை அதிகமாகிக்கொண்டே வந்து, ஆகஸ்டு முடிவுவரை ஒரே அளவில் இருக்கும். செப்டம்பர் மாதம் மூன்றாவது வாரத்தில் பருவக்காற்று வடமேற்கு இந்தியாவிலிருந்து பின்வாங்கத் தொடங்குகிறது. மேற்கடற்கரைப் பகுதிகளில் தென்மேற்குப் பருவக்காற்று மழை 100 அங்குலத்திற்கு மேல் பெய்கிறது. ஆனால் மலைத் தொடர்களுக்குக் கிழக்கே தீபகற்பத்தின் நடுவிலும் கீழ்ப்பகுதியிலும் 20 முதல் 30 அங்குல அளவு வரை மழை பெய்கிறது. அஸ்ஸாம் பள்ளத்தாக்கில் 100 அங்குலத்திற்கு மேலும், பிறகு சிறிது சிறிதாக மேற்குப் பக்கத்தில் குறைந்துகொண்டே போய் ராஜஸ்தானத்தின் பகுதிகளில் 5 அங்குலத்திற்குக் கீழும் மழை பெய்கிறது. இந்தியாவில் பெரும்பாலும் மழை மிகுதியாகப் பெய்யும் காலம் ஜூன் முதல் செப்டம்பர்வரை யென்று கொள்ளலாம். ஆனால், தென்கிழக்குக் கடற்கரைப் பகுதிகளான தமிழ் மாவட்டங்களில் இப் பருவக் காற்றினால் கிடைக்கும் மழை மிகமிகக் குறைவு. இப்பகுதிகளிற் பெரும்பாலும் வங்காள விரிகுடாவில் ஏற்படும் சீரழுத்தச் சுழல்கள் அல்லது சூறாவளிகளினால் அக்டோபர் முதல் டிசம்பர்வரை மழை பெய்கிறது.

சூறாவளிகள்: இவை வங்காள விரிகுடாவில் தொடங்கி வடமேற்கு அல்லது மேற்குப் பக்கமாகச் செல்கின்றன. இவை வீசும் இடங்களில் ஏராளமான மழை பெய்கிறது. நாட்டின் பக்கமாகச் செல்லச் செல்ல இவற்றின் வலிமை குறைகிறது. இரண்டு பருவக் காற்றுக்களுக்கிடையே யுள்ள காலத்தில் ஏற்படும் சூறாவளிகள் வேகமும் வலிமையும் மிகுந்தவை. அரபிக் கடலிலும் வங்காள விரிகுடாவிலும் இச் சுழல்கள் முக்கியமாக மே, அக்டோபர், நவம்பர் மாதங்களில் ஏற்படுகின்றன. ஏப்ரல், செப்டம்பர், டிசம்பர்