பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/656

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

599

இந்தியா

விவசாயத்தை விட்டுக் கைத்தொழிற்சாலைகளில் புகுந்ததாலும் அவர்கள் நலிவு அடைந்து வருகிறார்கள். இந்தியாவில் காணப்படும் முக்கியமான கைத்தொழில்களில் சில ஆதிக்குடி மக்களுடைய உழைப்பைக் கொண்டே நடைபெறுகின்றன. உதாரணம்: அஸ்ஸாமில் தேயிலைத்தோட்டவேலை, பீகாரில் நிலக்கரிச் சுரங்கவேலை, சிங்பூமில் இரும்புவேலை, மொசபாணியில் செம்புவேலை, கல்கத்தாவில் சணல் வேலை. இத் தொழில்களில் ஈடுபடும் ஆதிக்குடி மக்கள், தங்கள் கிராமங்களைவிட்டு வேறிடம் சென்று, வேறுவிதப் பண்பாட்டுடன் தொடர்பு கொள்வதால் தமது பண்பாட்டுக்கு நலிவை உண்டாக்கிக் கொள்கிறார்கள். ஆயினும் இப்பொழுது ஆதிக்குடிகள் அரசியல் உணர்ச்சி உடையவர்களாக ஆகிவருவதால், இனி நாகரிக மக்களின் தொடர்பால் நலிவு அடையாமல் இருக்கக்கூடும்.

பழங்குடிகள் பலதரப்பட்ட பண்பாட்டு நிலையில் உள்ளவர்களாயிருப்பதாலும், அவர்களுடைய அரசியல் உணர்ச்சியும் பலதரப்பட்டதாக இருப்பதாலும், அவர்களை அழிந்துபோகாமல் பாதுகாக்க வேண்டுமானால் அங்கங்கே அவர்களுடைய தேவைகளையும் விருப்பங்களையும் ஆராய்ந்து அறிந்துகொண்டு, அவற்றிற்குத் தக்கவாறு நடவடிக்கைகள் மேற்கொள்ளவேண்டும். அவர்கள் அரசியல் உணர்ச்சி உடையவர்களாக ஆகியிருப்பதால், இனிமேல் அவர்களுடைய தலைவர்கள் அவர்களைச் சேர்ந்தவர்களாக இருக்கவேண்டும். அந்தத் தலைவர்களே அவர்களுடைய பிரதிநிதிகளாக இருக்க வேண்டும். அவர்களுக்குக் கல்வி கொடுப்பது அவசியமாயினும், அவர்களுடைய வறுமையை நீக்குவது அதைவிட அவசியமாகும்.

ஆதிக்குடிகளைப் பாதுகாக்க வேண்டுமானால் கீழ்க்கண்ட இரண்டு தத்துவங்களை நினைவில் வைத்துக் கொள்ளவேண்டும்:

1. ஒவ்வொருவரும் நாகரிகம் அடையாதவரையில் ஒரு குழு, நாகரிகம் அடைந்ததாக ஆகாது.

2. நாகரிகம் அடைந்ததாயிருந்தாலும் இல்லாவிட்டாலும், எந்த இனமும் தன்னுடைய பண்பாட்டை இழக்காமலிருப்பதற்கு உரிமை உடையதாகும்.

அதாவது ஆதிக்குடிகளின் பண்பாடு நலியவும் கூடாது; அவர்களுடைய துன்பங்கள் நீங்கவும் வேண்டும். அதற்கு அவர்களுடைய பழக்க வழக்கங்களையும் பண்பாட்டையும் நன்கு அறிந்துகொண்டு, மிகுந்த அனுதாபத்துடன் நெருங்கிப் பழகி உதவி செய்தல் அவசியம். முதன்முதலாகச் செய்யும் உதவி, அவர்களுடைய பொருளாதார நிலைமையை ஆராய்ந்து, அத்துறையில் அவர்களைக் கைதூக்கி விடுவதாகும். அதனுடன் சமூக ஒத்துழைப்பையும் நல்க வேண்டும். ஆதிக்குடிகளைக் கவனியாமல் இருந்துவிட்டால், அவர்கள், வாழ்க்கையில் குறிக்கோள் எதுவுமின்றி, வெறுப்படைந்து, நாளடைவில் நலிந்து அழிந்துபோவார்கள். டீ. என். ம.

மொழிகள்

இந்திய மொழிச் சர்வேயின்படி இந்தியாவில் 179 மொழிகளும், 544 கிளை மொழிகளும் உள்ளன (1951). ஆயினும் பெருமொழிகள் சிலவே உள்ளன. இம்மொழிகள் எல்லாம் முண்டா, திராவிட, இந்தோ-ஆரிய, திபெத்தோ-சீன என்னும் நான்கு பகுதிகளுள் அடங்குவனவாம்.

திராவிடர்களுக்கும் முன்பே இந்தியாவில் இருந்துவந்த மக்களால் பேசப்படுவன முண்டா மொழிகள். இவர்கள் பெரும்பாலும் சோட்டாநாகபுரி பீடபூமியைச் சார்ந்த மலைகளிலும் காடுகளிலும் வசிக்கின்றனர். இவற்றையடுத்து வங்காளம், ஒரிஸ்ஸா, சென்னை, மத்தியப் பிரதேச இராச்சியங்களில் உள்ள பகுதிகளிலும், மகா தேவமலைகளின் மேற்குப் பக்கத்திலும் இம்மொழி பேசுபவர்களைக் காணலாம். இவர்கள் மொத்த மக்கள் தொகையில் 1·3% ஆவர்.

தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு ஆகிய திராவிட மொழிகளைப் பேசுபவர்கள் பரந்துள்ளனர். தென் இந்தியாவிலும், மத்திய இந்தியக் குன்றுகளிலும் இம் மொழிகளைப் பேசுபவர்கள் இருக்கின்றனர். சோட்டா நாகபுரியிலும், சந்தால்-பர்க்கணாக்களிலும் முண்டா மொழிகளைப் பேசுவோரும், திராவிட மொழிகளில் இருவகையினைப் பேசுவோரும் காணப்படுகின்றனர். பிராஹுயி என்னும் திராவிட மொழி வடமேற்கிலுள்ள பலூச்சிஸ்தானத்தில் பேசப்படுகின்றது. வடக்கே மைசூர் வரையிலும், மேற்கே மேற்குத் தொடர்ச்சி மலைகள் வரையிலும், தென் இந்தியா முழுவதும் தமிழ் பேசப்படுகிறது. வட கிழக்கே சென்னையை யடுத்துள்ள பொன்னேரி போன்ற இடங்கள் வரையிலும் தமிழ் பரவியுள்ளது. இலங்கையின் வடபகுதியில் மக்கள் பேசுவது தமிழே. மலையாளக் கடற்கரையோரப் பிரதேசத்தில் பேசப்படும் மொழி மலையாளம், குடகிலுள்ள சாதியாருள் எரவர் பேசும் எரவர் மொழி மலையாளத்தின் ஒரு கிளை மொழியாகும். மைசூரிலும், சுற்றியுள்ள மலைப்பிரதேசங்களிலும், பம்பாய் இராச்சியத்தின் தென்கோடியிலும் பேசப்படுவது கன்னடம். சென்னைக்கும் ஓரிஸ்ஸாவிற்கும் இடையே உள்ள கீழைக் கடற்கரையோரப் பிரதேசத்தில் பயில்வது தெலுங்கு மொழி. ஐதராபாத்தின் கிழக்குப் பகுதியிலும், மத்தியப் பிரதேசத் தென்பகுதியிலும், பீராரின் ஒரு பகுதியிலும் இம்மொழி பேசுகின்றனர். சென்னை இராச்சியத்தைச் சேர்ந்த தென் கன்னட ஜில்லாவின் ஒரு பகுதியில் பேசப்படுவது துளு. இம் மொழிகளைப் பேசுவோர் தொகை:

இலட்சம்
தமிழ் 200
தெலுங்கு 260
கன்னடம் 110
மலையாளம் 90
துளு 1

மொத்தம் 661

இந்தோ-ஐரோப்பிய மொழி இனத்தில் இந்தோ-ஆரிய மொழிக்கூட்டம் ஒன்றாகும். இம் மொழிக் கூட்டம் இந்திய நாகரிகத்தின் போக்கையே பாதித்துள்ளது. இம் மொழி வகையைப் பேசுபவர்களே உலகிற் பெரும்பாலர் ஆவர். வடமேற்கிலிருந்து வந்த வேற்று நாட்டவர்களால் புகுத்தப்பட்ட இம்மொழிகள் வடஇந்தியா முழுவதும் பரவி, விந்திய மலைக்குத் தெற்கேயும் சிறிது பரவியுள்ளன. விந்தியமலைக்கு வடக்கே பாகாரி, லண்டா, பஞ்சாபி, காச்மீரி, இந்தி, பீகாரி, ஒரியா, வங்காளி முதலிய மொழிகளும், அம் மலைக்குத் தெற்கே ராஜஸ்தானி, குஜராத்தி, மராத்தி முதலிய மொழிகளும் காணப்படுகின்றன. இம் மொழிகளில் முக்கியமானது இந்தி. இம் மொழி பேசுபவர்கள் மத்திய தேசத்தில் வசிப்பவர்கள். மத்திய தேசம் என்பது கிழக்குப் பஞ்சாபும், மேற்கு உத்திரப் பிரதேசமும் அடங்கிய பகுதி ஆகும். சமஸ்கிருதம், பிராகிருதம், பாலி, இந்தி ஆகிய மொழிகள் கால முறைப்படி முறையே இங்குப் பேசப்பட்டு வந்துள்ளன. இவையே ஆரிய இந்தியர்களுடைய பேச்சு மொழியாக-