பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/66

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசிட்டோபினோன்

31

அசிரியா

பொருள்கள் தொழில்களில் கரைப்பான்களாகப் பயன்படுகின்றன. அசிட்டிலீனிலிருந்து செயற்கை ரப்பரைத் தயாரிக்கும் முறையும் வழக்கத்தில் உள்ளது.

அசிட்டோபினோன் (Acetophenone) [C6H5CO CH3]: இதன் ரசாயணப் பெயர் பினைல் மெதில் கீட்டோன். இக் கீட்டோன் நிலக்கரித் தாரிலிருந்து கிடைக்கிறது. இது ஹீப்னோன் என்ற பெயருடன் ஒரு தூக்க மருந்தாகப் பயன்பட்டு வந்தது.

இது பென்சீனையும் அசிட்டைல் குளோரைடையும் அலுமினியம் குளோரைடின் உதவியால் வினைப்படுத்திப் பெறப்படுகிறது. சம மூலக்கூற்று விகிதத்தில் கால்ஷியம் அசிட்டேட்டையும் பென்சோயேட்டையும் வறட்சியில் வாலைவடித்து இதை தயாரிக்கலாம்.

இது வாதுமையைப் போன்ற மணமுடைய திரவம். இது தண்ணீரில் கரையாது. ஆனால் ஆல்கஹால், ஈதர், பென்சீன் ஆகியவற்றில் எளிதில் கரையும். இக் கீட்டோன் செல்லுலோஸ் ஈதர்களைக் கரைக்கப் பயன்படுகிறது.

அசிட்டோன் (Acetone) [(CH3CO CH2.]: கீட்டோன் இன வரிசையில் முதலாவதாக உள்ளது அசிட்டோன். இது மரத்தைச் சிதைத்து வடித்தால் கிடைக்கும் பொருள்களுள் ஒன்று. நீரிழிவு நோயாளிகளின் சிறுநீரில் சில சமயங்களில் இது காணப்படுவதுண்டு.

தொழில் முறையில் இது கால்ஷியம் அசிட்டேட்டை வறட்சியில் வாலை வடித்துத் தயாரிக்கப்பட்டு வந்தது. இதற்கு வேண்டிய அசிட்டேட்டை மரத்தைச்சிதைத்து வாலைவடிப்பதால் கிடைக்கும் பைரோலிக்னிய அமிலத்திலிருந்து பெறலாம். அசிட்டிக அமில வாயுவை 500 வெப்ப நிலையிலுள்ள சுண்ணாம்பின்மேல் செலுத்தியும், எதில் ஆல்கஹாலை மிகச் சூடான (540°) மாங்கனீஸ் டையாக்சைடின்மேலோ, சுண்ணாம்பையும் இரும்பு ஆக்சைடையும் கலந்து அதன் மேலோ பாய்ச்சியும் இதைப் பெறலாம்.

அசிட்டிலீனை நீராவியுடன் கலந்து நாக ஆக்சைடின் மேலோ, பொட்டாசியம்-தோரியம் கார்போனேட்டின் மேலோ செலுத்தி இது தற்காலத்தில் தயாரிக்கப்படுகிறது. தகுந்த பாக்டீரியாவின் உதவியால் கார்போஹைட்ரேட்டுகளை கொதிக்கவைத்து இதைத் தயாரிக்கிறார்கள். ஒருவகை பாக்டீரியா மாப்பொருளிலிருந்து 10 முதல் 30% வரை ஆல்கஹாலையும் 6 முதல் 10% வரை அசிட்டோனையும் தருகின்றன.

அசிட்டோன் ஒரு தனிப்பட்ட வாசனையுடைய நிற மற்ற திரவம். இது தண்ணீரில் கலக்கும் தன்மையுடையது. அநேக முக்கியமான பண்டங்களை இதிலிருந்து செயற்கை முறையில் தயாரிக்கலாம். உதாரணமாகக் குளோரோபாரம், அயடோபாரம் ஆகிய இரண்டையும் அசிட்டோனிலிருந்து தயாரிக்கலாம். செல்லுலோஸ் அசிட்டேட்டு, செல்லுலோஸ் நைட்ரேட்டு, அநேக கொழுப்புக்கள், பிளாஸ்ட்டிக்குகள், அசிட்டிலீன் முதலியவற்றின் கரைப்பானாக அசிட்டோன் பெரிதும் பயன்படுகிறது. ஏ. பி. ம.

அசிதர் : 1. கெளதம புத்தர் பிறந்த காலத்தில் அவர் தோற்றத்தைக் கண்டு அறிஞர் என்று போற்றியவர்.
2. இந்திர சாபத்தால் அறநெறி தப்பி நடந்து, சிவ வழிபாட்டால் அறத்தையும் ஆயுளையும் பெற்றவர் (பாரதம்).

அசிதன் :
1. திருதராட்டின் மகன்.
2. தருமனுக்கு அறமுரைத்த முனிவன்.
3. சூரியகுல மன்னரில் ஒருவன்.
4. ஜைன தீர்த்தங்கரரில் இரண்டாமவர்.
5. அங்க நாட்டரச புரோகிதன்.

அசிரியா : அஷுர் நகரைச் சுற்றி எழுந்த இராச்சியத்திற்கு அசிரியா என்பது பெயர். அஷுர் டைக்ரிஸ் நதிக்கரையில் நினிவேயிற்கு வடக்கே 60 மைல் தொலைவில் இருந்த ஒரு நகரம். யூப்ரடீஸ் நதியின் கீழ்ப்பகுதியில் பாபிலோனியா பேரரசு செலுத்தி வந்த காலத்தில் அசிரியாவில் பாபிலோனிய கவர்னர் ஒருவன் இருந்தான். ஹிட்டைட்டுகள் ஆண்ட காலத்தில் ஹிட்டைட்டு கவர்னர் இருந்தான். அசிரியா கி.மு.13 ஆம் நூற்றாண்டில் தன் முழு பலத்தையும் அடைந்தது. அப்போது அசிரியர்கள் பாபிலோனியாவை வென்று ஆண்டனர். மேற்கே மத்தியதரைக் கடற்கரைப் பக்கத்தில் இருந்த டமாஸ்கஸ், பாலஸ்தீனம் முதலிய இராச்சியங்களையும் வென்று அடிப்படுத்துவதற்கு அதற்கு மேலும் 5 நூற்றாண்டுகள் ஆயின. கி.மு.8 ஆம் நூற்றாண்டில் சிரியாவை அசிரியா முற்றிலும் வென்றது. 11-ம் சார்கோன் என்பவன் (கி.மு.8ஆம் நூற்றாண்டு) தொடங்கின வமிசம் மிகப் புகழ் பெற்றது. இதில் வந்த சனகேரிப், ஏசர்ஹாடன், ஆசூர் பானிபல் என்னும் அரசர்கள் ஒருவரையொருவர் விஞ்சிய புகழ் பெற்றவர்கள். கி.மு.7 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அசிரியப் பேரரசில் எகிப்து, மத்தியரைக்கீழ்கரை நாடுகள், கப்படோசியா, ஆர்மீனியா, ஈலம், பாபிலோனியா என்பவை அடங்கியிருந்தன. கி.மு.606-ல் நேபுகாத்நேச்சார் என்னும் பாபிலோனிய அரசன் நினிவேயைக் கைப்பற்றியதும் அசிரியாவின் பலம் குறையத் தொடங்கிற்று. கி.மு.7ஆம் நூற்றாண்டிறுதியில் அசிரியாவின் பெருமை குன்றத் தொடங்கிற்று.

பாபிலோனிய நாகரிகம் அசிரிய நாகரிகத்திற்கு அடிப்படையாயிருப்பினும் அசிரியர்களுடைய தனித்தன்மை அவர்கள் பலவகை வளர்ச்சியில் தென்படுகிறது. அவர்களுடைய ஆட்சிமுறை மிகச்சிறப்பும் திறமையு முடையதாயிருந்தது. அசிரியர்களுடைய அரண்மனைகளிலுள்ள ஓவியங்கள் அவர்கள் கலைத்திறனுக்குச் சான்றாகும். அவர்களுக்கு நூல்களில் மிகுந்த விருப்பம் உண்டு. அவர்கள் வரலாற்றை எழுதிவைத்தவர்கள். நினிவேயில் அசூர்பானிபல் பெரிய நூல் நிலையம் ஒன்று வைத்திருந்தான். அவர்களுடைய மதம் பாபிலோனியர்களுடைய மதம் போன்றதே. அவர்கள் பல கடவுளர்களை வணங்கிவந்தனர். பண்டை நாகரிகங்களின் மிக உன்னத நிலைமையை அடைந்திருந்தது அசிரியா எனலாம். தே. வெ. ம.

அசிரிய நாகரிகம் பழங்கால நாகரிகங்களுள் மிகச் சிறந்தது எனக் கருதப்படுவது. பழைய நூல்களும், சிதைந்த நிலையிலுள்ள சின்னங்களும் இதன் மேம்பாட்டைத் தெளிவாக்குகின்றன. இதன் நாகரிகம் பெரும்பாலும் இதன் தெற்கேயிருந்த பண்டைய பாபிலோனியா நாட்டின் நாகரிகத்தை ஒத்ததாகும். இவர்கள் தமது