பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/660

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

603

இந்தியா

ஆயின. ஸ்ரீ அரவிந்தர் எடுத்துக் காட்டுவதுபோல இகவாழ்வின் நன்மைக்காகவும், சுவர்க்கத்தைப் பெறுவதற்காகவும் மட்டும் இயற்கைச் சக்திகளை யாகங்கள் மூலம் வழிபடவில்லை. இவைகள் சில ஆன்ம தத்துவங்களின் குறிக்கோளுமாகும். இதையடுத்து உபநிடதங்களில் விவரிக்கப்படும் தத்துவநூற் கருத்துக்கள் தோன்றின. இதைத் தொடர்ந்து இச்சமயத்திற்கு எதிராக பெளத்தமும் சமணமும் நடத்திய எதிர்ப்புத் தோன்றியது.

ஆனால் ஆரியர்கள் நடு இமயமலைப் பகுதியிலிருந்து வந்து, மத்திய தேசத்தில் குடியேறி, மற்றப் பகுதிகளில் பரவினார்கள் என்றும், இவர்கள் பல தொகுதிகளாகவும் உபதொகுதிகளாகவும் பிரிந்திருந்தார்கள் என்றும் புராண மரபிலிருந்து அறிகிறோம். இத்தொகுதிகளில் அய்லர்கள் (Aila) என்பவர் முக்கியமானவர்கள். இவர்களுடைய பிரிவினரான யாதவர்களும் பௌரவர்களும் முக்கியமானவர்கள். பாரதர்கள், கௌரவர்கள், பாண்டவர்கள், பாஞ்சாலர்கள் ஆகியோர் பௌரவ வமிசங்களைச் சேர்ந்தவர்கள். இந்த வமிசங்கள் தெற்கே விதர்ப்பம் வரை வட இந்தியாவின் பெரும் பகுதியை ஆண்டன. மகா பாரதப்போர் நடக்கும்வரை இந்த வமிசங்கள் இருந்தன. இப்போர் எப்போது நடைபெற்றது என முடிவாகக் கூற இயல்வில்லை. யமுனையில் தோன்றிய வெள்ளத்தால் அஸ்தினாபுரம் மூழ்கியது என்றும், இதன் அரசர்கள் கங்கையாற்றங்கரையிலிருந்த கௌசாம்பிக்குத் தம் தலைநகரத்தை மாற்றிக்கொண்டார்கள் என்றும் கர்ணபரம்பரையாக அறியப்படுகின்றன. தொல்பொருள் ஆராய்ச்சியில் இதுவரை இக்காலத்தைப் பற்றிய சான்றுகள் ஒன்றும் அறியப்படவில்லை. ஆனால் 1950-51-ல் கங்கை, யமுனைச் சமவெளிகளில் நடைபெற்ற ஆராய்ச்சிகளில் நேர்த்தியான மட்பாண்டங்களும்,அக்காலத்தில் தோன்றிய பெருவெள்ளத்தின் அடையாளங்களும் கிடைத்துள்ளன. இதுவே பாரதத்தில் விவரிக்கப்படும் வெள்ளமாக இருக்கலாம். ஆனால் ஆரியர்கள் இதற்கு முன்னரே இங்கு வந்து குடியேறினார்கள் என்று இதைக் கொண்டே முடிவு செய்ய முடியாது.

வரலாற்றுத் தொடக்கக் காலத்தைப் பற்றிய இலக்கியச் சான்றுகள் வடஇந்தியாவில் இருப்பதுபோல் தென்னாட்டில் அதிகமாக இல்லை. செம்பைப் பயன்படுத்திய பழம் பண்பாடு ஒன்று மைசூரிலும் மகாராஷ்டிரத்திலும் இருந்ததாக அண்மையில் தெரியவந்தது. ஆனால் இதுவும் இதையடுத்து வந்த பண்டைத் திராவிட நாகரிகமும் வரலாற்றுக்கு முற்பட்டவையா அல்லது வரலாற்றுத் தொடக்கக் காலத்தவையா என்பது தெளிவாகவில்லை. எச். டீ. ச.

தென்னிந்தியாவின் வரலாற்று முற்காலம் : சில ஆண்டுகளுக்குமுன் பிரமகிரியில் தொல்பொருள் ஆராய்ச்சி இலாகா நடத்திய அகழ்தலினால், புதிய கற்காலத்தில் வாழ்ந்து, பெரும்பாலும் வேளாண்மை செய்துவந்த மனித சமூகத்தார், இறந்தோரைத் தாழியிற் புதைத்து ஈமக்கடன் செலுத்தினார்கள் எனத் திட்டமாகத் தெரியவருகிறது. தென்னிந்தியாவில் புதிய கற்காலத்தின் கடைப் பகுதியுடன் தொடர்ந்து, செழிப்பு மிக்க இரும்புக்கால நாகரிகம் எங்கும் வியாபித்திருப்பதைக் காண்கிறோம். புறநானூறு, மணிமேகலை முதலிய பண்டைத் தமிழ் நூல்களில் அக்காலத்தில் மாண்டோரை அடக்கம் செய்வதில் ஐவகை முறைகளைக் கையாண்டனர் எனக் குறிப்புக்கள் காணப்படுகின்றன. இவைகளில் முக்கியமாகப் புதைப்புத் தாழிகளும், புதைக்குழிமேல் எழுப்பப்பட்ட 'பெருங்கற் சின்னங்களும்' (Megalithic monuments) தென்னிந்தியாவில் ஏராளமாகத் தென்படுகின்றன. நீலகிரி, கோயம்புத்தூர்ப் பகுதிகளிலும், திருநெல்வேலி ஜில்லாவிலுள்ள ஆதிச்சநல்லூரிலும் கிடைத்த புதை குழிச்சின்னங்கள் குறிக்கும் நாகரிகம் மிக்க வளம் பெற்றதாக

புதை குழிப் பெருங்கற் சின்னங்களில் ஒருவகை உதவி: தொல்பொருள் இலாகா, சென்னை.

இருந்திருக்க வேண்டும் என்பது இப்புதை குழிகளிலிருந்து எடுத்துவந்து, சென்னைப் பொருட்காட்சிச்சாலையில் வைத்துள்ள தொன்மையான பண்டத் தொகுதிகளிலிருந்து பெரிதும் விளங்கும். இவைகளில் இரும்பாற் செய்த ஈட்டி முனைகளில் இருபக்கத்திலும் கூரிய விளிம்பையுடைய வாட்களும், மிக்க வேலைப்பாடமைந்த வெண்கலப் பாண்டங்களும், வெவ்வேறு உருவங்களையும் வர்ணங்களையும் கைத்திறமையின் அடையாளங்களையுமுடைய வெவ்வேறு பயன்களுடைய மட்கலங்களுமுள்ளன. கடந்த சில ஆண்டுகளாக அரசாங்கத்தின் மேற்பார்வையில் பல இந்திய அறிஞர்களும் ஆராய்ச்சியாளர்களும் தொடர்ந்து நடத்திவரும் வரலாற்று முற்காலத்து நாகரிகத்தின் பல படிகளைப் பற்றிய ஆராய்ச்சி பெரும்பயன் தருவது. ஆனால் இந்தியாவின் வரலாற்றுத் தொடக்கக் காலத்திற்கு இலக்கியச் சான்றுகளும் கர்ண பரம்பரையும் உள்ளனவே தவிர, உண்மையான தொல்பொருள் சான்றுகள் குறைவு. வரலாற்றிற்கும், வரலாற்றுத் தொடக்கக் காலத்திற்கும், அதற்கும் முற்பட்ட காலத்திற்கும் உரிய தொல்பொருள் ஆராய்ச்சி உண்மைகள் இனிமேல்தான் தோன்றவேண்டும். வீ. டீ. கி.

வரலாறு

வட இந்தியா : கி. பி. 1206 வரை: இந்தியா என்னும் பெயர் பாரசீகர்களால் முதன் முதல் கொடுக்கப்பட்டது. அவர்கள் சிந்து நதியை ஹிந்து என்று வழங்கினார்கள். இந்தியாவுக்குப் பாரத வருஷம் என்பதே இந்நாட்டு முன்னோர் இட்ட பெயர். இது ஜம்புத்வீபத்திற்குத் தென் பாகமாகக் கருதப்பட்டது. பின் வரும் வரலாற்றில் இந்தியா என்னும் பெயர் பாகிஸ்தானையும் உட்கொண்டதாகவே கருதப்பட வேண்டும்.

மலைகளும் கடல்களும் இந்தியாவைப் பிற நாடுகளினின்றும் வேறாகப் பிரிக்கின்றன. ஆயினும், இந்தியசமுத்திரத்தின் நடுவே அமைந்திருப்பதாலும், மேற்கு மலைகளின் சில கணவாய்களின் மூலமாக அயல் நாடுகளுடன் சம்பந்தம் ஏற்பட்டதாலும், இந்தியா எக்காலத்திலும் வெளி நாடுகளுடன் பலவிதமான தொடர்புகள் பெற்றே இருந்தது. இந்தியா நில வளமும் நீர் வளமும் பெற்ற பரந்த நாடு. முற்காலங்களில் மக்கள்