பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/666

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

605

இந்தியா

சிந்து நதி மக்களுடைய நடையுடை பாவனைகளையும், மதக் கொள்கைகளையும் நாம் அறிந்துகொள்ளவேண்டிய சாதனங்கள் கிடைக்கவில்லை. பலவிதமான சுடுமண் பொம்மைகளும், கல்லாலும் மாக்கல்லாலும் செய்யப்பட்ட சில பிம்பங்களும், பல முத்திரைகளுமே நமக்குக் கிடைத்திருக்கின்ற சான்றுகள். முத்திரைகளில் சில பிராணிகளும் காட்சிகளும் காணப்படுகின்றன. ஒவ்வொரு முத்திரையிலும் ஒன்று அல்லது இரண்டு வரிகள் அடங்கிய சித்திர எழுத்துக்களும் உண்டு. இவ் வெழுத்துக்களை இன்னும் சரிவரப் படிக்க முடியவில்லை. ஆனால் ஜகன்மாதாவாகக் கொள்ளப்பட்ட ஒரு தேவதையையும், அரசு, வேம்பு முதலிய மரங்களையும் வணங்கினதோடு, யோகமும் பயின்று வந்தார்கள் எனக் கூறலாம். ஒரு நேர்த்தியான சிறு வெண்கல விக்கிரகம் ஒரு நாட்டியப் பெண்ணின் விக்கிரகமாக இருப்பதால் அக் காலத்தில் நாட்டியப் பயிற்சி ஏற்பட்டிருந்தது என்றும், வெண்கல வார்ப்பு வேலை செவ்வையாக நடத்தப்பட்டது என்றும் ஊகிக்கலாம். பருத்தியாலும் கம்பளத்தாலும் உடைகள் நெய்யப்பட்டன. தங்கம், வெள்ளி, செம்பு முதலிய உலோகங்களாலும், தந்தம், ஸ்படிகம், கோமேதகம் முதலிய விலை யுயர்ந்த பொருள்களாலும் ஆன பல ஆபரணங்கள் உபயோகத்திலிருந்தன. அம்மாதிரியான வளைகள், வாகுவலயங்கள், மேகலைகள், அட்டிகைகள் முதலியன கிடைத்திருக்கின்றன. அக்காலத்துத் தட்டார்கள் வெகு நேர்த்தியான வேலைகள் செய்து வந்ததாகவே கூறவேண்டும். வீடுகளிலுள்ள பாத்திரங்கள் மண்ணாலும் உலோகத்தினாலும் செய்யப்பட்டன. பீங்கானும் உண்டு. இரும்பு கிடையாது. ஊசிகளும் சீப்புக்களும், சிப்பியாலோ தந்தத்தாலோ செய்யப்பட்டன. சதுரமாகச் செதுக்கி உருவான கற்கள் தராசுப் படிக்கற்களாக உபயோகப்பட்டு வந்தன. குழந்தைகளின் விளையாட்டுக் கருவிகளில் சக்கரமிட்ட வண்டிகள், நாற்காலிகள், பிராணிகளின் உருவங்கள், கிலுகிலுப்பைகள் முதலியன இருந்தன. சூதாட்டம் பழக்கத்திலிருந்தது. காளை, எருமை, ஆடு, நாய் முதலிய பிராணிகள் வளர்க்கப்பட்டன. யானையும் ஒட்டகமுங்கூட உபயோகத்திலிருந்ததாக அறிகிறோம். ஆனால் குதிரையைப் பற்றிய தெளிவான சான்றுகள் ஒன்றுமில்லை. விவசாயிகள் கோதுமை, யவம், பருத்தி முதலியன பயிர் செய்தார்கள். நெசவு, தச்சுவேலை, மண் பாண்டம் வனைதல், கல் வேலை, தந்த வேலை, நகைகள் செய்தல் முதலிய கைத் தொழில்கள் செழித்து வளர்ந்து வந்தன. தரை வழியாகவும், கடல் வழியாகவும், தென்னிந்தியாவோடும் மேனாடுகளோடும் வியாபாரம் நடந்து வந்தது.

மிக விமரிசையாக ஏற்பட்டிருந்த இந்த நாகரிகத்தை நிலை நாட்டியவர்கள் எந்த இனத்தைச் சார்ந்த மக்கள் என்று நிச்சயித்துக் கூற முடியவில்லை. அவர்களைத் திராவிட மொழி பேசினவர்கள் என்பர் சிலர். வேதத்தில் காணப்படும் ஆரிய மொழிகள் பேசியவர் என்பர் வேறு சிலர். இவ்விரு கட்சியாருக்கும் மேற்கூறிய முத்திரைகளிலுள்ள எழுத்துக்களே ஆதாரம். உண்மையில் இந்தச் சித்திர எழுத்துக்கள் எந்த மொழியைச் சார்ந்தன, எந்த விஷயங்களைக் குறிக்கின்றன என்பது இன்னும் தெளிவாகவில்லை.

இந்தச் சிந்து பதிக்கரை நாகரிகத்தைத் தவிர வரலாற்றுக் காலத்தில் பிரசித்திபெற்ற இந்து நாகரிகத்தைத் தோற்றுவித்தவர் ஆரியர்களே. இந்தியாவில் பேசப்படும் ஆரிய மொழிகளுக்கும், பாரசீகத்திலும் ஐரோப்பாவிலும் பேசப்படும் ஆரிய மொழிகளுக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதால் இம் மொழிகள் எல்லாவற்றையும் இந்தோ-ஐரோப்பிய மொழி வமிசம் என்று கூறுவது வழக்கம். பல வேற்றுமைகளுக் கிடையே இம் மொழி ஒற்றுமை ஏற்பட்டிருப்பது சுமார் கி.மு. 2500 முதல் 1500 வரை இந்தோ-ஐரோப்பியத் தாய் மொழி ஒன்றைப் பேசி வந்த மக்கள் ஏதோ காரணம்பற்றி, ஓரிடத்திலிருந்து பெயர்ந்து பல நாடுகளுக்குச் சென்று, அங்கங்கே தங்கி, அந்தந்த நாட்டு மக்களுடன் கலந்துகொண்டதன் பயனேயாகும். சுமார் கி. மு. 1400-ல் ஆசியா மைனரில் ஆரியத் தலைவர்கள் ஆரியத் தெய்வங்களை வணங்கிக் கொண்டு வசித்து வந்ததற்குச் சான்றுகளான சில சாசனங்கள் கிடைத்திருக்கின்றன. அத் தலைவர்களில் ஒருவன் துஸ்ரத்தன் என்பவன். தெய்வங்களின் பெயர்கள் மித்திரன், வருணன், இந்திரன், நாசத்தியன் என்பன. அதே சமயத்திலோ அதற்குச் சிறிது முன் பின்னாகவோ ஆரியர்கள் இந்தியாவிலும் குடியேறி இருக்கவேண்டும்.

இந்தியாவில் புகுவதற்கு முன் சில நூற்றாண்டுகளாக இந்திய ஆரியர்களும், ஈரானிய அதாவது பாரசீக ஆரியர்களும் ஒன்றாகவே வசித்திருக்க வேண்டும். ரிக் வேதத்தின் மொழிக்கும் பழைய பார்சி அல்லது ஜெண்டு மொழிக்கும் உள்ள நெருங்கிய சம்பந்தத்தைக் கொண்டும், மத சம்பந்தமான வைதிக வழக்கங்களுக்கும். பழைய பார்சி வழக்கங்களுக்கும் உள்ள ஒற்றுமைகளைக் கொண்டும் இவ்வாறு ஊகிக்கலாம். நான்கு வருணங்கள், உபநயனம், முப்பத்து மூன்று தேவர்கள், யாகங்கள். அவைகளில் உபயோகப்படும் யஜ்ஞம், மந்திரம், சோமம், ஹோதா முதலிய மொழிகள் ஆகிய இவை அக்காலத்து இந்திய ஆரியரிடத்தும் ஈரானியரிடத்தும் ஒருங்கே காணப்பட்டன.

ரிக்வேதமென்பது இந்திய ஆரியர்களால் இயற்றப்பட்ட நூல்களில் மிகப் பழமை வாய்ந்தது. அது சமஸ்கிருத இலக்கணம் வகுத்த பாணினிக்குப் பல நூற்றாண்டுகளுக்கு முற்பட்டது என்பது உறுதி.

ரிக்வேதத்தில் கூறப்பட்டுள்ள நதிகளில் குபா (காபுல்), சுலாஸ்து, க்ருமு, கோமதி என்பவை முக்கியமானவை, இவையெல்லாம் சிந்து நதிக்கு மேல்புறம் வந்து சேரும் உபநதிகள். மற்றும் விதஸ்தா, அசிக்னி, பருஷ்மி அல்லது இராவதி, விபாஸ் சுதுத்ரீ ஆகிய ஐந்து பஞ்சாப் நதிகளும் கூறப்பட்டிருக்கின்றன. இவையும் சிந்து நதியின் உபநதிகளே. சரஸ்வதி, த்ருஷருஷத்வதி, ஆபயா, யமுனா, கங்கா முதலிய நதிகளும் இந்த வேதத்தில் குறிப்பிடப்படுகின்றன. ஆனால் கடைசியாகக் கூறப்பட்ட நதிகள் பிற்காலத்திய பத்தாவது மண்டலத்திலுள்ள நதி ஸ்துதியில் மட்டுமே காணப்படுகின்றன. மலைகளில் ஹிமாலயமும், சோமலதை விளையும் மூஜவந்து என்னும் மலையும் குறிப்பிடப்படுகின்றன. மலைகளில் சிங்கம், ஓநாய், யானை ஆகிய மிருகங்களை ரிக்வேத கால இந்தியர் அறிவர். ஆனால் புலியைப்பற்றிய பேச்சு இல்லை. தான ஸ்துதிகளில் ஒட்டகம் அடிக்கடி கூறப்படுகிறது. தானியங்களில் யவம் உண்டு. ஆனால் அரிசி காணப்படவில்லை. பாலும், பழங்களும், இறைச்சியும் உணவுப் பொருள்களாக வழங்கி வந்தன. இறைச்சியைச் சட்டிகளில் வேக வைப்பதும் உண்டு; நெருப்பில் காய்ச்சுவதும் உண்டு. அக் காலத்திலேயே பசுவை அடிக்கக்கூடாது என்ற உணர்ச்சி மேலிட்டு, அக்னியா என்ற பெயரிட்டனர். யாகங்களில் சோமரசமும், இதர வேளைகளில் தானியங்களாலாக்கப்பட்ட சுரா என்னும் கள்ளும் மிகவும் விருப்பத்துடன் குடிக்கப்பட்டு வந்தன. மீன்களைப்-