பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/667

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

612

இந்தியா

பற்றிய குறிப்பு அதிகமாக இல்லை. சமுத்திரம் என்னும் வார்த்தை ரிக்வேதத்தில் வந்தாலும் அதன் பொருள் கடல் அன்று என்பதும், சிந்து நதியின் கடைசிப் பாகமே என்பதும் சிலருடைய கொள்கை. விந்திய மலையும் நருமதை நதியும் ரிக்வேதத்தில் கூறப்படவில்லை.

ரிக்வேத சூக்தங்கள் முக்கியமாகத் தெய்வங்களைத் துதித்து வணங்குவதற்கு ஏற்பட்டவை. உஷஸ் என்னும் விடியற்கால தேவதையைத் துதிக்கும் சூக்தங்கள் மிகவும் நேர்த்தியான கவிதைகளாம். ஒரு சூக்தத்தில் ஹரி - யூபிய என்னுமிடத்தில் இந்திரன் உதவியால் ஓர் ஆரிய அரசன் தன் சத்துருக்களைத் தோற்கடித்ததாகப் படிக்கிறோம். இந்த ஹரி-யூபிய என்பது இப்பொழுது ஹாரப்பா என்று வழங்கப்படும் ஊராக இருந்தால் இந்த யுத்தம் ஆரியர்களுக்கும் பூர்வீகச் சிந்துநதிக்கரை மக்களுக்கும் நடந்ததாக ஏற்படும். ஆரியர்களுக்கும், அவருக்குமுன் இந்தியாவிலுள்ள தஸ்யு அல்லது தாஸர்களுக்கும் நடந்த போர்கள் பல என்று அறிகிறோம். அனால் ஆரிய அரசர்களுக்குள்ளும் சண்டை சச்சரவுகள் இல்லாமல் இல்லை. சமயத்துக்குத் தகுந்தபடி. அரசர்கள் போர் புரிந்தனர் எனக் காண்கிறோம். இப்போர்களில் மிகவும் பிரசித்தமானது 'பத்து அரசர்களின் போர்'. பரதர்கள் என்னும் வகுப்பினருக்கு விசுவாமித்திரர் புரோகிதராக இருந்து வந்தார். ஆனால் சுதாஸ் என்னும் அரசன் அவரைத் தள்ளிவிட்டு வசிஷ்டரைப் புரோகிதராக நியமித்தான். அதனால் கோபங்கொண்ட விசுவாமித்திரர் பரதர்களுக்கு விரோதமாக வேறுபத்து வகுப்பினரைச் சேர்த்துப் போர் தொடுக்கும்படி தூண்டிவிட்டார். பருஷ்ணி நதிக்கரையில் நடந்த போரில் சுதாசும் வசிஷ்டருமே வென்றனர். புரு வமிசத்தைச் சார்ந்த த்ரஸ தஸ்யு அதாவது தஸ்யுக்களுக்கு அபயம் என்ற பேர் பூண்ட அரசன் அக்காலத்து அரசர்களுள் பிரசித்தி பெற்ற ஒருவன். தஸ்யுக்கள் ஆகிய பெரும் புராதன இந்திய மக்கள் ஆரியரினின்றும் நிறத்திலும், மொழியிலும், மத ஆசாரங்களிலும் வேறுபட்டவர்கள். அவர்களில் அநேகர் அடிமைகளாக்கப்பட்டிருக்க வேண்டும். ரிக்வேதத்தில் அடிமைச் செல்வம் பல இடங்களில் கூறப்பட்டிருக்கிறது. சூத்ர என்னும் ஜாதிப் பெயர் புருஷ சூக்தத்தைத் தவிர வேறு எங்கும் ரிக்வேதத்தில் காணப்படவில்லை.

அரசர்கள் பல தாரங்களை மணந்தாலும், பொதுவாக ஓர் ஆடவனும், ஒரு பெண்ணும், அவர் குழந்தைகளும் அடங்கிய குடும்பங்களே சமுதாயத்தில் வாழ்ந்துவந்தன. சிறு வயதில், கலியாணம் செய்யும் வழக்கம் இல்லை. புருஷர்களைத் தேர்ந்தெடுக்கும் உரிமை பெண்களுக்கு இருந்தது. ஸ்திரீதனமும் கன்னியா சுல்கமும் பழக்கத்திலிருந்தன. கலியாண மென்பது மாற்றக் கூடாத ஒரு சம்ஸ்காரம். வயது முதிர்ந்த தகப்பன் குடும்ப விவகாரங்களைத் தன் மூத்த மகனிடம் விட்டு விடுவதுண்டு. விவசாயத்துக்கு நிலம் ஏராளமாக இருந்தது. வயல்களை அளப்பதும் உண்டு. நெருங்கின சம்பந்தமுள்ள பல குடும்பங்கள் நிறைந்தது கிராமம். அதற்கு மேற்பட்டு, வேசம், ஜனம் என்ற பிரிவுகள் இருந்தன. ஜாதிப் பிரிவுகள் அதிகமாக ஏற்படவில்லை. பிராமணரும் க்ஷத்திரியரும் ஒன்று சேர்ந்து அரசியல் நடத்தி வந்தார்கள். சாதி வேறுபாடுகள் பிற்காலத்தில் இந்தியாவிலேயே வளர்ந்த போதிலும் தெய்வ வணக்கம், கலியாணம், உணவு முதலிய விஷயங்களைச் சார்ந்த நிபந்தனைகள் மிகப் புராதனமான இந்தோ-ஐரோப்பிய சம்பிர தாயங்களைச் சார்ந்தவையே. இந்தியாவில் நாட்டின் வளம், தொழில், மதம் முதலியவற்றில் உண்டான வேறுபாடுகளால் படிப்படியாகச் சாதி வேறுபாடு அதிகரிக்க நேரிட்டது.

நாட்டுத் தலைவன் ராஜா எனப்பட்டான். முற்காலத்தில் இவனை மக்கள் தெரிந்தெடுத்தார்கள். நாளடைவில் அரசியல் ஒரே வமிசத்தில் பரம்பரையாகத் தங்கிற்று. அரசனுக்குப் பரிவாரம் பலம். படைத்தலைவனும் புரோகிதனும் இவர்களில் முக்கியமானவர்கள். கிராமணி என்பவன் ஒரு கிராமத்திலிருந்து யுத்தத்துக்குச் செல்லும் படைகளுக்குத் தலைவனாக இருந்திருக்கலாம். சமிதி, சபை ஆகிய இரண்டு பொது மன்றங்கள் இருந்தன என அறிகிறோம். அவைகளின் உரிமைகளும் கடமைகளும் தெளிவாக எங்கும்காணோம். குற்றம் செய்தவர் அபராதப் பணம் கொடுப்பதுண்டு. மனிதன் சததாய என்று கூறப்படுவதால் ஒருவனைக் கொலைபுரிந்தால் அதற்கு அபராதம் நூறு பசுக்கள் அல்லது நூறு பொற்காசுகள் என்று யூகிக்கலாம். நாணயப் பழக்கம் அதிகமாக இல்லை. சிறு வியாபாரங்கள் பண்டமாற்று முறையிலேயே நடந்து வந்தன. சூதாடுவது அக் காலத்து மக்களுக்கு மிகவும் பிரியம்போல் தோன்றுகிறது. சூதாட்டத்தில் கடன் பட்டவன் வென்றவனுக்கு அடிமையாவது வழக்கம். பணக்காரர்கள் குதிரைகள் பூட்டிய தேரின் மீது ஏறிச் சென்றனர். வில், ஈட்டி, கத்தி, கோடாலி, கவண் கற்கள் ஆகியவை போர்க் கருவிகள். கவசங்கள், கேடயங்கள் முதலிய பாதுகாப்புக் கருவிகளும் உபயோகத்திலிருந்தன. அம்பின் முனை, கொம்பினாலோ, உலோகத்தாலோ ஆக்கப்பட்டது. சில வேளைகளில் அதற்கு நஞ்சு தடவுவதுண்டு.

வீடுகளையும் வயல்களையும் தவிரக் கால்நடைகளும் குதிரைகளுமே முக்கியமான செல்வம். தேர்ப் பந்தயம், குதிரைப் பந்தயம் முதலியன விளையாட்டுக்கள். ஆடுகளும் கழுதைகளும் வளர்க்கப்பட்டன; அவைகளைக் காப்பாற்றவும், இரவுகளில் காவல் காக்கவும், வேட்டையாடவும் நாய்கள் பயன்பட்டன. தச்சனுடைய தொழில் மிகவும் சிறப்புற்றிருந்தது. செம்பு, வெண்கலம், இரும்பு முதலிய உலோகங்களால் பாத்திரங்களும் கருவிகளும் செய்யப்பட்டன. தோல் வேலையும் முக்கியமான தொழில்களில் ஒன்று. ஒவ்வொருவரும் கம்பளத்தினாலோ அல்லது தோலினாலோ ஆன இரண்டு அல்லது மூன்று ஆடைகள் தரித்தனர். தங்க ஆபரணங்கள் இருபாலாரும் அணிந்தனர். பெண்டிர் தலைமயிரை எண்ணெய் இட்டு வாரிப் பின்னல்களாகவும், இருபாலாரும் அழகிய சுருள்களாகவும் செய்து கொண்டார்கள். நாட்டியத்திலும் இசையிலும் அதிகமாகப் பழகினர். மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் எல்லாம் அக் காலத்திலேயே ஏற்பட்டுவிட்டன. சாமகானமும் போர்ப் பாடல்களும் அக் காலத்து இசையின் விசேஷமான பிரிவுகள்.

வேதகாலத்து மக்கள் இயற்கையின் சக்திகளைத் தெய்வங்களாகக் கருதினர். ஆகாயம், பூமி, சூரியன், வாயு, அக்கினி எல்லாம் தெய்வங்கள். வருணன் என்னும் ஆகாய தெய்வம் உலக அமைப்பையும் தருமத்தையும் காத்து வருவதாகச் சொல்லப்படுகிறது. இந்தியாவில் நாளடைவில் வருணனினும் இந்திரனுக்குப் பிரசித்தி அதிகமாயிற்று. இந்திரன் மழைக்கும் போருக்கும் அதிபதியாகக் கொள்ளப்பட்டான். ஆரியர்களுக்கும் தாசர்களுக்கும் நடந்த போர்களில் இந்திரன் ஆரியர்களைக் காப்பாற்றித் தாசர்களை முறியடித்தான் என்று ரிக்வேதத்தில் பல முறை கூறப்பட்டிருக்கிறது. அக் காலத்தில் நடந்த வேள்விகள் பலவும், இந்திரனுக்குச் சோமபானம் கொடுத்து, அவனுடைய