பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/668

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

607

இந்தியா

பலத்தையும் ஆரியர்களின் மேன்மையையும் விருத்தி செய்வதற்காகவே ஏற்பட்டவை. வேதங்களில் சூரியனே விஷ்ணுவாகக் கூறப்படுகிறான். உருத்திரன் புயல் காற்றுக்கு அதிபதியான தெய்வம். அவனுக்கு ஊழியர்கள் மருத்துக்கள். ஆதித்தியர்கள், வசுக்கள் முதலிய வேறு பல சிறு தெய்வங்களும் உண்டு. உஷஸ் என்ற காலைத் தெய்வமும், சரஸ்வதி என்னும் நதியுமே வேதத்தில் காணப்படும் முக்கியப் பெண் தெய்வங்கள். கோவில்களைப் பற்றியாவது, விக்கிரகங்களைப் பற்றியாவது குறிப்பே கிடையாது. தேவர்களுக்கு முக்கியமான விரோதிகள் அசுரரும் இராட்சசரும். அசுரர் என்னும் பெயர் ஒரு காலத்தில் சிறப்புடையதாக இருந்திருக்கவேண்டும். ஏனென்றால் வேதத்தில் சில இடங்களில் வருணன் போன்ற பெரிய தெய்வங்களை அது குறிக்கிறது. வேள்வியானது தேவதைகளுடைய பிரசாதத்தைப் பெறுவதற்காகச் செய்யப்படுவது.

அக் காலத்தில் பிணங்களைச் சுடுவதும் புதைப்பதும் உண்டு. சதி எனப்படும் சககமனம் இல்லை. யமனை முதன் முதல் இருந்த மனிதனாகவும், இறந்துபோனவர்களுக்கு அரசனாகவும் கூறுவர். ஆன்மாவுக்கு மறுபிறவி உண்டு என்ற கொள்கை ஓர் இடத்திலும் காணப்படவில்லை.

ரிக் வேதத்தின் மொழி பொது மக்களால் பேசப்படவில்லை. ஆனால் இந்த வைதிக மொழியில் பொது மக்கள் பேசிய வார்த்தைகள் கலந்திருத்தல் கூடும். ரிக் வேதத்தின் காலத்தைப் பற்றிய அபிப்பிராயங்கள் பல. ஆயினும் சூக்தங்கள் செய்ய ஆரம்பித்த காலம் சுமார் கி.மு.2000 என்று ஒருவாறு கூறலாம்.

எல்லா வேதங்களும் முதலில் ஒன்றாக இருந்து, பின் பாரதம் எழுதிய வியாச முனிவரால் நான்கு வேதங்களாக வகுக்கப்பட்டன என்பது ஒரு புராண ஐதிகம். வரலாற்று முறையில் பார்த்தால் சாம வேதமும் யசுர் வேதமும் ரிக் வேத காலத்திற்குப் பிற்பட்டன என்பது தெளிவு. முதல் இரண்டும் யாகங்கள் மிகுதியாகச் செய்யத் தொடங்கிய பிறகே ஏற்பட்ட நூல்கள். யசுர் வேதம் யாகங்கள் செய்யும் முறையும் அவைகளுக்குரிய மந்திரங்களும் அடங்கியது. யாகங்களுக்குரிய இசையுடன் பாடுவதற்காக ரிக் வேதத்திலுள்ள சில மந்திரங்களை எடுத்துச் சாம வேதத்தில் அமைத்துள்ளார்கள். அக் காலத்தில் வேதங்கள் எழுதப்படாமல் குரு-சிஷ்ய பரம்பரையாகக் கற்பிக்கப்பட்டு வந்தன. அதனால் ஒவ்வொரு வேதத்திற்கும் பல சாகைகள் அல்லது கிளைகள் உண்டாயின. மந்திரங்களைத் தவிரப் பிராமணங்களும் உபநிஷத்துக்களும் நாளடைவில் ஏற்பட்டன. மந்திரங்கள் பொதுவாகப் பாக்களாகவும், மற்றவை உரை நடையிலும் உள்ளன. பிராமணங்களை மந்திரங்களுக்கு வியாக்கியானம் என்று கூறலாம். உபநிஷத்துக்கள் செய்யுள், வசனம்ஆகிய இரண்டு நடைகளில், உபாசனை முறைகளையும், யோக வழிகளையும், மற்றும் உள்ள வேதாந்தப் பிரச்சினைகளையும் விளக்கிச் செல்வன. நெடுங்காலம்வரை வேதங்கள் மூன்றாகவே கருதப்பட்டு வந்தன. பிறகு அதர்வண வேதத்தையும் சேர்த்து நான்கு வேதங்களை அங்கீகரித்தார்கள். இந்நான்காவது வேதமும் மந்திரங்கள், பிராமணங்கள், உபநிஷத்துக்கள் என்ற மூன்று பிரிவுகள் கொண்டது. ஆனால் இதிலுள்ள மந்திரங்கள் பல ஆரியர் இந்தியாவில் புகுமுன் பழக்கத்திலிருந்து, ஒரு சிறிது மாற்றப்பட்டு, அதர்வணத்திற்குள் எடுத்துக்கொள்ளப்பட்டதாக நினைக்க இடமுண்டு.

பிற்பட்ட மூன்று வேதங்களில் வடமேற்கு இந்தியா அவ்வளவு பிரசித்தமாகக் கூறப்படவில்லை. குருக்ஷேத்திரம், மத்திய தேசம் விதேகம், மகதம், அங்கம் முதலிய தேசங்கள் சிறப்பிக்கப்படுகின்றன. விந்திய மலையும் அதில் வசிக்கும் காட்டு மக்களும் குறிக்கப்படுகிறார்கள். ஆசந்தீவந்த், காம்பீலம், கௌசாம்பி, காசி முதலிய பெருநகரங்கள் ஏற்பட்டன. அதர்வண வேதத்தில் பரீக்ஷித்து ஒரு பேரரசனாகக் கூறப்படுகிறான். அவன் சந்ததியிலுண்டான ஜனமேஜயன் செய்த அசுவமேத யாகம், சதபத பிராமணத்தில் போற்றப்படுகிறது. விதேக அரசனான ஜனகன் ஞானத்திற் சிறந்தவனாதலால் அவனிடம் பல பிராமணர்கள் சென்று ஞானம் பெற்றதாகக் காண்கிறோம். யாஞ்ஞவல்கியரும் சுவேத கேதுவும் காசி அரசனான அஜாதசத்துருவும் அவன் காலத்தவரே. இந்த ஜனகனையே சீதையின் தகப்பனாகத் தகுந்தவன் என்று வான்மீகி முனிவர் கருதினர் போலும். இறந்தவர்களுடைய சுட்ட எலும்புகளைப் பொறுக்கிப் புதைத்து, அந்த இடங்களில் வட்டமாகவும் சதுரமாகவும் சமாதிகள் கட்டும் வழக்கம் பிராமணங்களில் குறிப்பிடப் படுகிறது. இதிலிருந்தே பௌத்தருக்கும் சமணருக்கும் தங்கள் சமய ஆசாரியர்கள் இருந்த இடங்களைக் குறிக்க உயர்ந்த ஸ்தூபங்கள் கட்டவேண்டும் என்று தோன்றியிருக்கலாம்.

இக் காலத்தில் வைசியர், சூத்திரர் என்னும் சாதிகள் பல கிளைகளாகப் பிரிந்தன. சாதிக் கட்டுப்பாடுகள் பிற்காலத்தைப் போல் இறுகி விடவில்லை. சத்தியகாம ஜாபாலன் என்பவன் ஓர் அடிமைப் பெண்ணின் மகன். ஆயினும் அவனை ஒரு பிராமணன் தன் சீடனாகக் கொண்டான். அரசர்களின் அபிஷேகம் இராச்சியத்து உயர்தர உத்தியோகஸ்தர்கள் எல்லோரும் சேர்ந்து நடத்தி வைக்கும் ஒரு விரிவான சடங்காக ஏற்பட்டது. கிராமத் தலைவர்கள் அரசனால் நியமிக்கப்பட்டார்கள். அந்த உத்தியோகத்தைப் பெறுவது வைசியர்களின் பெரு நோக்கமாக ஆயிற்று. சமிதி, சபை என்ற இரண்டு மன்றங்களில் சமிதி பிற்பட்ட வேத காலத்துப் பெரிய இராச்சியங்களில் வழக்கற்றுப் போயிற்று. ஒரு சிறு சபை மட்டுமே அடிக்கடி கூடி நியாய விசாரணை செய்துவந்தது. குற்றங்களுக்குத் தண்டனை சாதிக்குத் தகுந்தவாறு விதிக்கப்பட்டது. பெண்களுக்கும் சூத்திரர்களுக்கும் சொந்தமான சொத்துக் கிடையாது என்ற வழக்கு ஏற்பட்டது. கோதுமையும் அரிசியும் பயிரிடப்பட்டன. கைத்தொழில்கள் பல படியாகக் கிளைத்துச் செழித்தன. துணிகளில் பூ வேலையும், சாயம் ஏற்றுதலும், கூடைகளை முடைதலும் பெண்களுக்குரிய வேலைகளாக ஏற்பட்டன. வியாபாரிகளின் சமூகங்களையும், அவர்களுக்குத் தலைவர்களான சிரேஷ்டிகளையும் குறித்துச் செய்திகள் கிடைக்கின்றன. வெள்ளி, இரும்பு, ஈயம் முதலிய உலோகங்களும் உபயோகத்துக்கு வந்தன. வீடுகள் மரத்தாலோ, மண்ணாலோ கட்டப்பட்டன. முப்பது நாட்கள் கொண்ட மாதங்கள் பன்னிரண்டு அடங்கிய ஆண்டு ஆறு இருதுக்களாகப் பிரிக்கப்பட்டது. அபிசித்தைச் சேர்த்து இருபத்து எட்டு நட்சத்திரங்கள் கணக்கிடப்பட்டன. யாகங்கள் சில பெருவேள்விகளாக விளைந்து, ஆண்டுக் கணக்காக நடத்தப்பட்டு வந்தன. ஆரியருக்கு முன் இந் நாட்டில் வசித்த பழைய மக்களின் பழக்க வழக்கங்கள் இந்த யாகங்களிலும், வேறு சடங்குகளிலும் கலந்துகொண்டன. யாகங்கள் செய்து முடித்தவர்கள் சுவர்க்கத்திலே எப்போதும் சுகமாக வாழலாம் என்ற நம்பிக்கை ஏற்பட்டது. ஒருவாறு யாக முறைக்கு