பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/669

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

608

எதிரான உபாசனை முறைகளையும், ஞானத்தை வளர்த்து முத்தி பெறும் வழிகளையும் கூறுவன உபநிஷத்துக்கள். மறு பிறப்பு உண்டென்பதும், பிறவிக் கடலைக் கடந்து முத்தி எய்துவதே மானிடப் பிறவியின் முக்கிய நோக்கம் என்பதும் இக் காலத்தில் ஏற்பட்ட கொள்கைகள். மேலும் உருத்திரன் அல்லது சிவன் என்ற தெய்வமும், விஷ்ணு அல்லது கிருஷ்ணன் என்ற தெய்வமும் முக்கியமாக ஆராதிக்கப்பட்டனர். இவர்களுடைய பண்புகளும், இவர்களைச் சார்ந்த புராணக் கதைகளும், பழைய நாட்டுத் தெய்வங்களிடமிருந்து எடுத்துக்கொள்ளப் பட்டிருக்கலாம் என்பது இக்காலத்து ஆராய்ச்சியின் துணிபு. பாமர மக்கள் மரங்களையும், பாம்புகளையும், கிராம தேவதைகளையும் தெய்வங்களாகக் கொண்டாடினார்கள்.

முக்கியமான உபநிஷத்துக்கள் கி.மு.600க்கு முன் ஏற்பட்டன. வேள்விகளையும் (சிரௌத), வீட்டுச் சடங்குகளையும் (க்ருஹ்ய), பொதுவான தருமங்களையும் (தர்ம) விளக்கும் சூத்திரங்களும் புராணங்களும் முதன்முதலாக ஏற்பட்டன. இதிகாசங்களும் புராணங்களும் தொடங்கினதும், ஆரிய நாகரிகம் விந்திய மலையைக் கடந்து தென்னாடெங்கும் பரவியதும் ஏறக்குறைய இதே சமயந்தான். அகத்தியரையும் பரசுராமரையும் சார்ந்த கதைகளும், சிலர் கொள்கைப்படி இராமாயணக் கதையும் ஆரிய நாகரிகம் தென்னாடுகளில் பரவியதைக் குறிக்கின்றன.

உபநிஷத்துக்களில் உபாசனைகளும் ஆன்மஞானமும் முத்திக்கு வழிகளாகக் காணப்படுகின்றன என்று கூறினோம். அதற்குச் சற்றுப் பின்னாக வேதத்திற்குப் புறம்பான சமயங்கள் ஏற்பட்டன. அவைகளில் முக்கியமானவை சமண மதமும் பௌத்த மதமும் ஆகும். இவ்விரு சமயங்களைச் சார்ந்த நூல்கள் அக் காலத்து வரலாற்று நிகழ்ச்சிகளையும் ஒருவாறு தெளிவாக்குகின்றன. புத்தர் பிறந்த காலம் நிச்சயமாகக் கூற முடியவில்லை. அவர் கி. மு. 563-ல் பிறந்து 483-ல் நிருவாணம் அடைந்ததாகக் கூறலாம். சமண மதத்தை ஸ்தாபித்த மகாவீரர் புத்தருக்குச் சில ஆண்டுகளுக்குப் பின் உடல் நீத்தார்.

புத்தர் காலத்தில் வட இந்தியாவில் 16 மகாஜன பதங்கள் இருந்தன. அவை: 1. அங்கம், 2. மகதம், 3. காசி, 4. கோசலம், 5.வஜ்ஜி, 6. மல்லா, 7. சேதி, 8. வம்சம், 9.குரு. 10. பாஞ்சாலம், 11. மச்சம், 12. சூரசேனம், 13. அஸ்ஸகா, 14. அவந்தி, 15.காந்தாரம், 16. காம்போஜ மகாஜனபதங்களாகும். வேறு ஒரு பட்டியில் 7 நாடுகளும் அவைகளின் ராஜதானிகளும் குறிக்கப்படுகின்றன. அவை பின்வருமாறு: கலிங்கம் (தந்தபுரம்), அஸ்ஸகம் (போதன), அவந்தி (மாகிஷ்மதி), சோவீரம் (ரோருக), விதேகம் (மிதிலா). அங்கம் (சம்பா). காசி (வாரணாசி). இந்தப் பிரிவுகள் புத்தர் காலத்திற்குச் சற்றுமுன் ஏற்பட்டன. நாளடைவில் கோசல நாடு காசியையும், மகத நாடு அங்க நாட்டையும் வென்று தம் வயமாக்கிக் கொண்டன. அவந்தியும் அஸ்ஸகமும் ஒன்று சேர்ந்திருக்கலாம். புத்தர் காலத்தில் இரண்டொரு பெரிய இராச்சியங்களும் பல சிறு இராச்சியங்களும் இருந்தன. தவிரவும் அரசனில்லாத ஜனநாயக நாடுகள் பல கோசல நாட்டிற்குக் கிழக்கே கங்கைக்கும் இமயமலைக்கும் நடுவே ஏற்பட்டிருந்தன. அவைகளில் புத்தர் பிறந்தமையாற் புகழ் பெற்றது கபிலவாஸ்துவைத் தலைநகராகக் கொண்ட சாக்கியர் நாடு. சாக்கியர்கள் எண்பதாயிரம் குடும்பங்கள் அடங்கியவர்கள்; மொத்தம் சுமார் 5.00.000 பேர் எனக் கூறலாம். அவர்களுக்கும் கோசல நாட்டு மக்களுக்கும் தொடர்பு உண்டு. ஜனநாயக நாடுகளில் அடிக்கடி மரத்தடியிலோ அல்லது சந்தாஹாரம் என்று சொல்லப்பட்ட திறந்த மண்டபங்களிலோ பொதுக் கூட்டம் கூடி நாட்டின் விவகாரங்களை நடத்துவது வழக்கம். பொதுவாக எல்லோரும் ஒரு மனப்பட்டுத் தீர்மானங்களுக்கு வருவதுண்டு. சிக்கலான விஷயங்களைச் சரிவர விசாரித்துத் தீர்மானம் செய்யச் சிறு குழுக்கள் ஏற்படுத்துவதும் உண்டு. பல இடங்களில் ராஜா என்னும் பட்டம் பெற்ற ஒரு தலைவனை ஓர் ஆண்டிற்கோ அல்லது வேறு குறிப்பிட்ட காலத்திற்கோ அரசாட்சி நடத்துவதற்குத் தேர்ந்தெடுப்பது உண்டு. ஜனநாயக நாட்டுமக்கள்: பாவா, குசிநாரா என்னும் ஊர்களைச் சார்ந்த மல்லர்கள். பிப்பலி வனத்து மோரியர், மிதிலையைச் சார்ந்த விதேகர்கள், வைசாலியைச் சார்ந்த லிச்சவிகள். கடைசியாகக் கூறப்பட்ட இரண்டு நாடுகளும், வேறு சிலவும் சேர்ந்தது வஜிய சங்கம். இந்த ஐக்கிய சங்கத்தைக் குறித்துப் பல செய்திகள் சமணர்களாலும் பௌத்தர்களாலும் தங்கள் நூல்களில் எழுதப்பட்டிருக்கின்றன.

அவந்தி, மகதம், கோசலம் என்பவையே அக்காலத்து முக்கிய இராச்சியங்கள். அவந்தியின் தலைநகரான உஜ்ஜயினி பலுகச்சா என்ற மேலைக்கடல் துறைமுகப் பட்டினத்திலிருந்து கங்கைக்கரை நாடுகளுக்குச் செல்லும் சாலையில் இருந்ததனால் மிகவும் செல்வம் விளைந்த நகராயிற்று. கோதாவரிக் கரையிலுள்ள அஸ்ஸக நாட்டோடு அதற்கு நெருங்கிய சம்பந்தம் உண்டு. புத்தர் காலத்தில் அவந்தியை ஆண்டவன் சண்டப்பிரச்சோதனன். அவன் பெண் வாசவதத்தைக்கும் அண்டையிலுள்ள வத்ச நாட்டுக் கோசாம்பி அரசன் உதயணனுக்கும் ஏற்பட்ட காதலைப் பற்றிய கதைகள் பல. புத்தர் இறந்த கொஞ்ச காலத்திற்கெல்லாம் பிரச்சோதனனுடைய படையெழுச்சிக்கு அஞ்சி, மகத நாட்டரசன் தன் தலைநகரான ராஜக்கிருகத்தை ஒரு பெருங்கோட்டை கட்டிப் பலப்படுத்தினான். அவந்தி நாடு சிறிது காலத்தில் பௌத்த மதத்திற்கு முக்கிய கேந்திரமாக ஏற்பட்டது. பௌத்தநூல்கள் எழுதப்பட்ட பாலி மொழி இந்நாட்டு மொழியே.

புத்தர் காலத்தில் கோசல நாடு புகழ்பெற்றிருந்தது. சாக்கியர்கள் நாட்டையும் உள் அடக்கிக்கொண்டு இந்நாடு இமயம் முதல் பிரயாகை வரை பரவி இருந்தது. இதன் அரசியலில் தல சுய ஆட்சியும் மானியங்களும் மிகுந்திருந்தன. இந்நாடு காசி நாட்டுடன் பல தலைமுறைகளாகப் போர்புரிந்து வெற்றி பெற்றது. புத்தர் காலத்தில் அவருக்குச் சம வயதினனான பிரசேனஜித் கோசல நாட்டு அரசன். அவன் புத்த மதத்தில் சேராவிட்டாலும் புத்தரை அடிக்கடி சந்தித்தான். மகதநாட்டு அரசன் அஜாத சத்துருவுடன் பலமுறை போர்தொடுத்தான். ஒரு சமயம் தான் தோல்வி அடைந்தபோதிலும் மற்றொரு முறை அஜாதசத்துருவைக் கைது செய்து, பின் அவன் நாட்டிற்குத் திரும்ப அரசனாக அனுப்பினான். வயது காலத்தில் பிரசேனஜித்தின் மகன் விடேபன் தன் தகப்பனாரைச் சிங்காதனத்திலிருந்து விரட்டி விட்டான். அதன் பிறகு பிரசேனஜித் மகத நாட்டுத் தலைநகரான ராஜக்கிருகத்தில் மரணமடைந்தான். விடேபன் சாக்கியர்களுடன் கொடும்போர் புரிந்ததே இக்காலத்துக் கோசல நாட்டைக் குறித்த கடைசி விவரம். பின் இது மகத நாட்டின் பகுதியாகக் காணப்படுகிறது.

மகத நாடு ஆதியில் பாட்னா ஜில்லாவும், கயா ஜில்லாவில் ஒரு பாகமும் சேர்ந்து கோசல நாட்டில் ஆறில் ஒரு பங்கு பரப்புடைய ஒரு சிறு நாடாக இருந்தது.