பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/672

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

611

இந்தியா

மாதம் பிரயாணம் செய்து எகிப்து தேசத்தை அடைந்ததாகவும், அதே ஆசிரியர் கூறுகிறார். டரையஸுக்குப் பின் பாரசீகருடைய ஆட்சி சிந்து நதிக் கரையில் எவ்வளவு காலம் நீடித்திருந்தது என்று அறிவதற்கு வேண்டிய சான்றுகள் இல்லை. இந்தியப் படைகள் சுமார் கி.மு. 480-ல் பாரசீக அரசனது கிரேக்கர் மேற் சென்ற படையெழுச்சிக்கு உதவி புரிந்தன. அதற்கு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் மூன்றாம் டரையஸ், அலெக்சாந்தர் என்னும் கிரேக்க அரசனிடம் தோல்வியடைந்தான். இப்போரில் உதவிய இந்தியப் போர் வீரர்கள் பருத்தி ஆடைகள் உடுத்து, மூங்கில் வில்களையும், இரும்பு முனையோடு கூடிய மூங்கில் அம்புகளையும் உபயோகித்தார்கள் என்று தெரிகிறது. ஆனால் இதிலிருந்து அவ்வளவு காலமும் பாரசீக ஆட்சி இந்தியாவில் நிலவி யிருந்ததாக ஊகிக்க முடியாது. போர் வீரர்கள் கூலிக்காகவே போருக்குச் சென்றிருக்கலாம். தவிரவும் சிந்து நதிக்கு மேற்கே இந்துகுஷ் வரை உள்ள நாடுகளில் வசித்த மக்களைக் கிரேக்க ஆசிரியர்கள் இந்தியர்கள் என்றே குறிப்பிடுகிறார்கள். வடமேற்கு இந்தியாவில் சில பழைய பாரசீக நாணயங்கள் அகப்படுகின்றன. கரேரஷ்டி என்று சொல்லப்பட்ட எழுத்தும் பாரசீக எழுத்திலிருந்து உண்டானதாகச் சொல்லலாம். ஏறக்குறையப் பாரசீக ஆட்சிக் காலத்தில் சமஸ்கிருதத்திற்கு இலக்கணம் வகுத்த பாணினி, யவனானி என்பது ஒரு லிபியின் பெயர் எனக் குறிப்பிடுகிறார். இது பாரசீக எழுத்தாய் இருந்தாலும் இருக்கலாம்; அல்லது அவருக்குப் பின்வந்த காத்தியாயனர் என்னும் ஆசிரியர் கொண்டதுபோலக் கிரேக்க லிபியாகவும் இருக்கலாம்.

பாரசீகத்தை வென்ற மகா அலெக்சாந்தர் இந்தியாவின் வடமேற்குப் பாகத்தின்மீது படை யெடுத்தான். கி.மு. 327 மே மாதத்தில் இவன் இந்துகுஷ் மலையைக் கடந்து, காபுல் நகரத்துக்கருகில் சில படைகளை நிறுத்திவிட்டு, சுவாட், பஜோர் நதிக் கரைகளில் வசித்து வந்த மலை நாட்டு இந்திய மக்களைப் படியச் செய்வதற்காக ஓர் ஆண்டிற்குமேல் கடும்போர் புரிந்தான். அதே சமயத்தில் அவன் சைனியத்தின் மற்றொரு பகுதி கைபர் கணவாய் வழியாகச் சிந்து நதியை அடைந்து, அந் நதியை அலெக்சாந்தர் தன் சைனியத்துடன் கடப்பதற்காக ஒரு தோணிப் பாலத்தைத் தயாரித்தது. சிந்து நதிக்குக் கிழக்குக் கரையில் தட்சசீல நகரத்தைத் தலை நகராகக் கொண்ட ஓர் இராச்சியம் இருந்தது. இது இந்தியாவிலிருந்து மத்திய ஆசியாவிற்குச் செல்லும் வியாபாரப் பாதையில் அமைந்திருந்ததால் மிகவும் செழிப்புற்று வளர்ந்தது. வட இந்தியாவின் பல நாடுகளிலிருந்து வேதங்கள், ஆயுர்வேதம், படைப் பயிற்சி முதலிய துறைகளில் உயர்தரக் கல்வியைப் பெறுவதற்கு மாணவர்கள் அந்நகரத்துக்குச் செல்வது வழக்கமாக இருந்தது. அவ் வூரில் பருவமடைந்த பெண்களை மணந்து கொள்ள விரும்புவோர் சந்தைகளில் அவர்களைப் பரிசோதித்துப் பொறுக்குவது வழக்கம் என்றும், பிணங்களைக் கழுகுகளுக்கு இடுவது வழக்கமென்றும் கிரேக்க ஆசிரியர்கள் குறிப்பிடுகிறார்கள். தட்சசீல இராச்சியம் சிந்து நதியிலிருந்து ஜீலம் வரை பரவியிருந்தது. ஜீலம் நதிக்குக் கிழக்கே புரு வமிசத்து அரசன் ஆண்டு வந்த இராச்சியம் ஒன்றிருந்தது. அவனைப் போரஸ் என்பர் கிரேக்கர். நாம் பௌரவன் என்று கூறலாம். இவ்விரு இராச்சியங்களுக்கும் வடக்கே மலைப் பிரதேசத்தில் அபிசார என்னும் இராச்சியம் இருந்தது. அந் நாட்டு அரசன் பௌரவனோடு நேசங்கொண்டிருந்தும், அலெக்சாந்தரிடம் தூதனை அனுப்பிச் சமாதானம் பேசினான். தட்சசீல அரசனாகிய அம்பி பௌரவனுக்கு விரோதி. ஆகையால், ஆதி முதலே அலெக்சாந்தரின் நட்பைத் தேடி, அவன் சிந்து நதியைக் கடந்ததும், அவனுக்கும் அவன் படை முழுவதுக்கும் விருந்து அளித்துப் பெரிய உபசரணைகள் செய்தான். அவன் தலைநகரிலிருந்துதான் அலெக்சாந்தர் சுற்று வட்டத்திலிருந்த இந்திய அரசர்களுக்கு அவர்கள் தனக்குக் கீழ்ப்படிய வேண்டுமென்று தூதர்களை அனுப்பினான். அந் நகருக்கருகிலுள்ள தபோவனம் ஒன்றில் இந்திய சன்னியாசிகளை அவன் முதன்முதல் சந்தித்து, அவர்களுடைய பழக்கங்களையும் கொள்கைகளையும் அறிந்துகொண்டான். அவனுடைய தூதர்கள் வந்ததும் பௌரவ அரசன் தான் அவனை எதிர்க்கப் போவதாகச் செய்தி அனுப்பினான். கி.மு. 326-ல் ஜீலம் நதிக் கரையில் பெரும் போர் மூண்டது. இறுதியில் வெற்றி அலெக்சாந்தரைச் சேர்ந்தபோதிலும் பௌரவனுடைய யானைகளால் கிரேக்கப் படைகள் மிகவும் சேதமடைந்தன. அலெக்சாந்தரும் பௌரவனுடைய வீரத்தை மெச்சி, அவன் இராச்சியத்தை அவனிடமே கொடுத்துவிட்டதுமன்றி அதனுடன் தான் புதிதாக வென்ற சில நாடுகளையும் சேர்த்தான். அலெக்சாந்தருடைய படை ஜீலத்திற்குக் கிழக்கே பியாஸ்நதி வரை வெற்றிகரமாகச் சென்றது. அதன் பிறகு பௌரவனை விட யானைப் படைகள் அதிகம் கொண்ட அரசனை எதிர்க்கவேண்டும் என்று கேள்விப்பட்ட கிரேக்கப் படைகள் தாம் இனிப் போருக்குத் தயாரில்லை என்றும், தங்கள் நாட்டை விட்டு வெகு காலமானபடியால் அதற்குத் திரும்ப வேண்டுமென்றும் பிடிவாதம் புரிந்ததால் அலெக்சாந்தர் அங்கிருந்து திரும்ப வேண்டியதாயிற்று. அவன் திரும்பும் வழியில் ஜீலம், சிந்து நதிகளின் வழியாகச் சிந்து தேசத்தை அடைந்தான். வழியிலெல்லாம் மானவர் முதலியோரின் குடியரசுகளோடு கடும்போர் செய்தான். சிந்து நாட்டிலிருந்து அவன் படைகளின் ஒரு பகுதி தரை வழியாகப் போலன் கணவாய்களின் வழியே மேற்கு நோக்கிச் சென்றது. மற்றொரு பகுதி கடல் வழியாகப் பாரசீக வளைகுடா வழியே சென்றது. மீதியிருந்த படைகளை அழைத்துக்கொண்டு அலெக்சாந்தர் எளிதிற் கடத்தற்கரிய கடற்கரை வழியாகக் கி. மு. 324 மே மாதத்தில் சூசா நகரத்தை அடைந்தான். ஓர் ஆண்டிற்குப்பின் கி.மு. 323 ஜூன் மாதத்தில் பாபிலோன் நகரத்தில் 33ஆம் வயதில் மரணமடைந்தான். அவன் இந்தியாவை விட்டுத் திரும்பும் போது அவன் வென்ற நாடுகளின் அரசாட்சியை நடத்தப் பௌரவனையும் அபிசார அரசனையும் தவிர மூன்று க்ஷத்திரபர்களை (கவர்னர்களை)யும் நியமித்தான். ஆனால் அவனுடைய அகால மரணத்தினால் அவன் ஆட்சி இந்தியாவில் நிலை பெறவில்லை. சுமார் கி.மு. 317க்கு மேல் அதன் சின்னங்கள் ஒன்றுமே இந்தியாவில் இல்லாமற் போயின.

வடமேற்கு இந்தியாவின்மேல் அலெக்சாந்தர் படையெடுத்த காலத்தில் கடைசி நந்த அரசன் மகத நாட்டை ஆண்டுவந்தான். அவனுக்குச் சேனாதிபதியாக இருந்த மெளரிய சந்திர குப்தனுக்கும் அவனுக்'கும் ஏற்பட்ட விரோதத்தால் சந்திரகுப்தன் நாட்டைவிட்டகன்று, பஞ்சாபிற்குச் சென்று, அலெக்சாந்தரைச் சந்தித்து, அவனை மகதநாட்டை வென்று நந்தனது ஆட்சியை ஒழிக்கும்படி வேண்டினான். ஆனால் கிரேக்கப் படைகளின் எதிர்ப்பினால் அது நிறைவேறவில்லை. அதன் பிறகு சந்திரகுப்தனும் நந்த அரசனுடன் பகை கொண்டிருந்த சாணக்கியன் என்னும் அந்தணனும் சேர்ந்து பல சிற்றரசர்கள், குடியரசின் தலைவர்கள்