பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/679

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

614

இந்தியா

பாகவதனும், விதிசா நகரத்து அரசன் காசிபுத்திர பாகபத்திரனும் ஒருவனே. அவன் ஆட்சியின் பதினாலாம் ஆண்டில் தட்சசீல நகரத்து அந்தால்கிடாஸ் (Antalkidos) என்னும் கிரேக்க அரசனுடைய தூதனான ஹீலியோடோரஸ் (Heliodoros) தான் ஒரு பாகவதன் அதாவது விஷ்ணு பக்தன் என்பதைக் குறிக்க, வீதிசா நகரத்தில் உயரமான கருடஸ்தம்பம் ஒன்றைக் கல்லால் அமைத்தான். பிறகு மந்திரி வாசுதேவன் அரசனானான். அவனைச் சேர்த்து அவன் வமிசத்தில் நான்கு அரசர்கள் நாற்பத்தைந்து ஆண்டுகள் கி.மு. 72 முதல் 27 வரை ஆண்டனர். இவ் வமிசத்திற்குக் காண்வ அல்லது காண்வாயன வமிசம் என்று பெயர்.

சுங்க அரசர்கள் காலத்தில் கோசாம்பி, மதுரா, அகிசி, சந்திரா முதலிய இடங்களில் அவர்களுக்கு உள்ளடங்கி ஆண்டு வந்த பல சிற்றரசர்கள் இருந்தார்கள் என்று அவர்களுடைய நாணயங்களால் அறிகிறோம். பஞ்சாபிலும் வடக்கு ராஜபுதனத்திலும், க்ஷத்திரிய இராச்சியங்கள் ஏற்பட்டிருந்தன எனவும் நாணயங்களால் அறிகிறோம்.

அசோகன் இறந்த கொஞ்ச காலத்திற்கெல்லாம் ஆந்திர சாதியைச் சேர்ந்த சாதவாகன வமிசத்து அரசரின் தலைமையில் ஒரு பலமான சுயேச்சை இராச்சியம் தோன்றியது. பிளினி என்னும் ரோமானிய ஆசிரியர் ஆந்திர நாடு தட்சிணத்தின் கீழ்ப்பாகத்தில் இருந்ததென்றும், அதில் முப்பது கோட்டைகளால் சூழப்பட்ட பெரு நகரங்களும், எண்ணிறந்த கிராமங்களும் இருந்தன என்றும் குறிப்பிடுகிறார். அந் நாட்டின் படை, இலட்சம் காலாட்களும், இரண்டாயிரம் குதிரைகளும், ஆயிரம் யானைகளும் அடங்கியது. ஆனால், சாதவாகன குலத்து அரசர்கள் மேற்குத் தட்சிணத்தில் பிரதிஷ்டான நகரத்தைத் தலைநகராகக் கொண்டு தங்கள் இராச்சியத்தை முதன் முதலாக ஸ்தாபித்த பிறகே, தட்சிணம் பூராவும் தங்கள் வயம் ஆக்கிக் கொண்டார்கள் என்று தோன்றுகிறது. முதல் சாதவாகன அரச சின்னம் ஒன்றும் தட்சிணத்தின் கிழக்குப் பாகங்களில் காணப்படவில்லை.

சாதவாகன என்னும் பெயர் சிறிது காலத்தில் சாலிவாகன என்று மாறியது. அந்த வமிசத்து அரசர்கள் பலர் சாதகர்ணி என்னும் பெயரைப் பூண்டனர். இப்பெயர்களுக்கு என்ன பொருள் என்பது சரியாக விளங்கவில்லை. முண்டா மொழியில் சதம் என்றால் குதிரை, ஹபன் என்றால் மகன். இவ்விரு சொற்களிலிருந்தும் சாதவாகன என்ற பெயர் அசுவமேதயாகம் புரிந்த அரசர்களைக் குறிக்க ஏற்பட்டது என்பர் ஒரு சாரார். சில சாதவாகன நாணயங்களிலும் குதிரையின் உரு பொறிக்கப்பட்டிருக்கிறது. கோன், கோனி என்றாலும் முண்டா மொழியில் மகன் என்றே பொருள்படும். சமஸ்கிருதமாகிய சதகர்ண என்னும் பெயரைச் சிலப்பதிகாரத்தில் நூற்றுவர் கன்னர் என்று காண்கிறோம். சாதவாகனர் பிராமணரா அல்லரா என்பதும் நிருணயிக்கக் கூடவில்லை. பழைய கதைகளில் அவர்கள் ஒரு பிராமணனுக்கும் நாக கன்னிகை ஒருத்திக்கும் உண்டான சந்ததியார் எனப்படுகிறார்கள். சாசனங்களில் கௌதமி புத்திர சாதகர்ணி என்னுமரசன் ஏகப்பிராமணன் என்று வருணிக்கப்படுகிறான். மச்ச புராணத்தில் இவ் வமிசத்தைச் சேர்ந்த முப்பது அரசர்கள் நானூற்று அறுபது ஆண்டுகள் ஆண்டார் எனக் குறிக்கப்பட்டுள்ளது. ஆனால் வாயு புராணமோ பதினேழு, பதினெட்டு அல்லது பத்தொன்பது அரசர்கள் மொத்தம் முந்நூறு ஆண்டுகள் ஆண்டார்கள் என்று கூறுகிறது. மச்ச புராணத்துப் பட்டியே சரியானது என்று தோன்றுகிறது.

ஆந்திர நாடு அசோக சாம்ராச்சியத்தின் பகுதியாக இருந்தது. அப்பொழுது சாதவாகன குலத்தைச் சார்ந்தவர் மெளரிய உத்தியோகஸ்தர்களாக இருந்து, அசோகனுக்குப் பின் தட்சிணத்தின் மேற்குப் பாகத்தில் தங்கள் இராச்சியத்தை ஸ்தாபித்தனர். இந்தக் காரியத்தில் இரட்டிகளும் போஜரும் அவர்களுக்கு உதவியாக இருந்து, சிறந்த பதவிகளையும், அரச குலத்தோடு மணவுறவு கொள்ளும் உரிமையையும் பெற்றனர். சாதவாகன இராச்சியம் முதலில் மகாராஷ்டிர இராச்சியத்தில் பரவிப் படிப்படியாக மாளவதேசம், மத்தியப் பிரதேசம், தக்காணம் எங்கும் பரவியது. இவ் வமிசத்து முதல் அரசன் சிமுகன். இவன் இருபத்துமூன்று ஆண்டுகள் ஆண்டபின் கொடுங்கோல் மன்னனாக மாறிச் சிம்மாசத்தினின்றும் வீழ்த்திக் கொல்லப்பட்டான் என்பது சமண ஐதிகம். இவனுக்குப்பின் இவன் சகோதரன் கண்ணன் பட்டத்திற்கு வந்து நாசிக் வரை உள்ள நாட்டை வென்றான். மூன்றாவது அரசனாகிய முதலாம் சாதகர்ணி புகழ்பெற்றவன். அவனுடைய உருவச்சிலையும், அவன் தந்தையுள்ளிட்ட குடும்பத்தார் ஆகிய எல்லோருடைய சிலைகளும் நானாகாட் என்னுமிடத்தில் செதுக்கப்பட்டிருந்தன. இப்பொழுது அவர்கள் பெயர்களும் பாதங்களும் மட்டுமே எஞ்சி இருக்கின்றன. சாதகர்ணி மாளவத்தின் மேல்பாகத்தை வஞ்சித்துச் சுங்க அரசர்களோடு போர்புரிந்து, அசுவமேதம், ராஜசூயம் முதலிய பல யாகங்கள் செய்து பிராமணருக்கு ஏராளமான வெகுமதிகள் வழங்கினான். இந்த யாகங்களைப் பற்றிய செய்தி அவன் மனைவி நாகனிகையால் பொறிக்கப்பட்ட சாசனத்திலிருந்து விளங்குகிறது. சாதகர்ணிக்குத் தட்சிணாபதி என்ற பட்டம் உண்டு. ஆறாவது அரசனாகிய இரண்டாம் சாதகர்ணி ஐம்பத்தாறு ஆண்டுகள் ஆண்டான். அவன் ஆட்சிதான் சாதவாகன அரசர்கள் ஆட்சிகளில் மிகவும் நீண்டது. அதன் கடைசியில் கிழக்கு மாளவ தேசத்தைச் சுங்கர்களிடமிருந்து வென்றான். காரவேலன் என்ற கலிங்க அரசனால் சாசனத்தில் குறிக்கப்பட்ட சாதகர்ணியும் இவனே போலும். ஆபீலகன் என்ற எட்டாவது அரசன் காலத்தில் மத்தியப் பிரதேசம் சாதவாகன இராச்சியத்தில் சேர்ந்துவிட்டது. இந்த மரபின் பதினேழாவது அரசன் (கி.பி. 20-24) இலக்கியத்தில் பிரசித்தி பெற்றவன்; சப்தசாயி என்னும் எழுநூறு காதற் பாடல்கள் அடங்கிய தொகை நூலைத் தொகுத்தான்.

சாதவாகன ஆட்சிக்குச் சக அரசர்களால் இடையூறு ஏற்பட்டது. இவ்வரசர்கள் க்ஷகராத வமிசத்தைச் சேர்ந்த க்ஷத்ரபர்கள். ஹாலனுக்குப் பின் ஆண்ட நான்கு அரசர்கள் சேர்ந்து பன்னிரண்டு ஆண்டுகளே ஆண்டனர். இக் குறுகிய ஆட்சிகள் சகர்களுடன் போர் தொடங்கிய காலத்தைக் குறிக்கலாம். பூகமன் என்பவன் முதலாவது சக க்ஷத்ரபன். அவர்களில் மிகவும் பிரசித்திபெற்ற நகபானன், குஜராத், கத்தியவார், கொங்கணம், வடக்கு மகாராஷ்டிரம், தெற்கு மகாராஷ்டிரத்தின் சில பகுதிகள் ஆகிய நாடுகளை ஆண்டவன். பெரிப்ளஸ் என்னும் கிரேக்க நூலில் நகபானன் காலத்தில் சாதவாகனனது துறைமுகமான கலியாணை நோக்கி வந்த மரக்கலங்கள் பரிகஜா (ப்ரோச் ) வுக்குத் திருப்பப்பட்டனவாகக் காண்கிறோம். இந்தச் சகர் சாம்ராச்சிய காலம் கி. பி. 40 முதல் 80 வரை எனலாம். இருபத்துமூன்றாவது சாதவாகன அரசன் கௌதமிபுத்திர சாதகர்ணி கி.பி. 80 முதல் 104 வரை ஆண்டான். இவன் சகர், பாலவர், யவனர்