பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/684

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

619

இந்தியா

தில் ஹுணர்களுடன் போர்கள் நிகழ்ந்தன. இப்போர்களால் வறுமை மிகுந்தது. நாணயங்கள் முன்போல் உயர்ந்த தங்கத்தினால் அடிக்க முடியாமல் போயிற்று. ஆனால் வெள்ளி நாணயங்கள் மிகுந்தன. மாளவதேசம் குப்த இராச்சியத்தினின்று விலகி, வாகாடக அரசன் நரேந்திரசேனனுக்கு உட்பட்டதாகத் தெரிகிறது. ஆயினும் ஸ்கந்தகுப்தன் நன்கு ஆண்ட குப்த அரசர்களில் ஒருவனாகவே கருதப்பட வேண்டும். அவன் நூறு அரசர்களுக்கு அதிபதி என்றும், அவன் ஆட்சியில் அவன் இராச்சியம் முழுவதும் சமாதானம் நிலவியிருந்ததென்றும் அவன் சாசனங்கள் கூறுவது மிகையாகாது.

ஸ்கந்த குப்தனுக்குப் பிறகு ஹூணர்களின் படையெழுச்சிகள் அதிகப்பட்டுக் குப்த இராச்சியம் நிலை குலைந்தது. குப்த அரசர்களுடைய பரம்பரையும் தெளிவாக விளங்கவில்லை. புருகுப்தன், இரண்டாம் குமாரகுப்தன் என்ற இரண்டு அரசர்கள் கி. பி. 477வரை ஆண்டனர். அவர்களுக்குப்பின் ஆண்ட புதகுப்தன் காலத்தில் குப்த இராச்சியம் மீண்டும் உயிர்பெற்று மாளவம் முதல் வங்காளம் வரை பரவி இருந்தது. மைத்கர அரசர்கள் ஆண்டுவந்த சௌராஷ்டிர தேசமும் கி.பி. 545 வரை குப்தர்கள் சாம்ராச்சியத்திற்கு உள்ளடங்கி இருந்தது. ஆனால் வட இந்தியா முழுவதும் வலி மிகுந்த பல சிற்றரசர்களால் ஆக்கிரமிக்கப்பட்டுக் குப்த சக்கரவர்த்தியின் வலிமை மிகவும் குன்றியதாகவே கூறவேண்டும். இந்தச் சிற்றரசர்களில் ஒருவன் கி.பி.484-ல் யமுனைமுதல் நருமதைவரை உள்ள நாடுகளை ஆண்ட மகாராஜா சுரச்மிசந்திரன். அவனுக்குக் கீழ்ப்பட்டு மகாராஜா மாத்ரு விஷ்ணு ஏரண் பிரதேசத்தை ஆண்டான். அவன் இராச்சியத்திற்குக் கீழ்ப்புறம் பரிவ்ராஜக மகாராஜாக்கள் ஆண்டுவந்த நாடு இருந்தது. இவர்களில் முக்கியமான அரசர்கள் ஹஸ்தியும் (475-517), சம்க்ஷோகனும் (518-528) ஆவர். சுமார் கி.பி.500-ல் புதகுப்தன் இறந்ததும் குப்தஇராச்சியம் பிரிவுபட்டது. அதன் கீழ்ப்பாகத்தில் வைநியகுப்தனும், மேல்பாகத்தில் பானுகுப்தனும்ஆண்டனர். பானுகுப்தனும் அவனுக்குப்பின் மேல்நாடுகளை ஆண்ட நரசிம்ம குப்தனும் ஹூணர்களுடன் போர் புரிந்தனர். அவர்கள் ஆண்டகாலம் கி.பி.500 முதல் 550 வரை. நரசிம்ம குப்தனுக்குப் பாலாதித்தன் என்ற பட்டம் உண்டு. அவனுக்கு விரோதியாய் இருந்த ஹூண அரசன் பெயர் மிகிரகுலன். மிகிரகுலன் காந்தாரத்திலிருந்து மத்திய இந்தியாவரை பரவியிருந்த ஒரு பெரிய இராச்சியத்தை ஆண்டான். அவன் ஒரு சிவபக்தன். பௌத்த மதத்திற்கு விரோதி. சிலகாலம் நரசிம்மகுப்தனைக்கூடத் தனக்குக் கீழ்ப்படியுமாறு செய்தான். இவனுக்குப் பெரும்பகையாகத் தலைப்பட்டவன் மாளவ தேசத்து அரசன் யசோ தர்மன் என்பான். இவன் தன் சாசனங்களில் மிகிரகுலனை வென்றதாகவும், குப்தர்களும் ஹுணர்களும் வெல்லாத நாடுகளைத் தான் வென்றதாகவும், இமயமலை முதல் மகேந்திரமலைவரை ஆண்டுவந்த இந்திய அரசர்களெல்லாம் தனக்குக் கீழ்ப்படிந்து நடந்தார்கள் என்றும் கூறுகிறான். இந்தச் சாசனங்களின் காலம் கி.பி. 534. இதற்குப்பின் நரசிம்ம குப்தன் மிகிரகுலனுடைய இராச்சியத்தை வேரறுத்தான் என்று சீன யாத்திரிகன் ஹியூன் சாங் கூற்றிலிருந்து அறிகிறோம். இதற்குப்பின் குப்த சாம்ராச்சியம் வலுக்குறைந்து 550வரை தொடர்ந்து இருந்தது. அதற்குப்பின் வடஇந்தியாவில் பல சிறு இராச்சியங்கள் ஏற்பட்டன. அவைகளில் முக்கியமானவை பிற்காலக் குப்தர்கள் ஆண்ட மகத இராச்சியம்; அதற்கு மேல்புறம் அதனுடன் அடிக்கடி போர் தொடுத்துவந்த மௌகரிகளுடைய இராச்சியம். சௌராஷ்டிர தேசத்தில் படார்கன் என்னும் படைத் தலைவனால் நிறுவப்பட்ட மைத்ரக வமிசமும் இங்குக் குறிப்பிடத்தக்கது. மைத்ரகர்கள் கி.பி. 550 வரை குப்தர்களின்கீழ்ச் சிற்றரசராய் இருந்து பிறகு சுதந்திரம் எய்தினர்.

குப்த சாம்ராச்சியத்தின் காலம் இந்திய வரலாற்றில் மிகவும் மேன்மையான காலங்களில் ஒன்று. பொதுவாக வடஇந்தியா முழுவதும் அமைதி நிலவிச் செழிப்பாக இருந்தகாலம் அது. பாஹியான் என்னும் சீன யாத்திரிகன் கி.பி. 401 முதல் 410 வரை இந்தியாவில் யாத்திரைசெய்தான். அவன் கருத்து முக்கியமாகப் பௌத்த மதத்திலும் அதன் ஸ்தாபனங்களிலும் சென்றது. குப்த இராச்சியத்தில் பௌத்த மதம் மிகுதியான பிரசாரத்தில் இருந்ததாக அவன் கூறுகிறான். எல்லா நகரங்களிலும் பணம் மிகுந்த விஹாரங்களும், அவைகளில் கல்வி மிகுந்த ஆசிரியர்களும், அவர்களிடம் கற்பதற்காகப் பல நாடுகளிலும் இருந்துவந்த மாணவர்களும் இருப்பதைக் கண்டான். உதாரணமாக மதுரா நகரில் இருபது விஹாரங்களும் மூவாயிரம் பிட்சுக்களும் இருந்தார்கள். அரசியல், மக்களுக்கு நன்மை பயக்கும் முறையில் நடந்து வந்தது. வரிகள் மிகவும் அதிகம் இல்லை. படைகளுக்கும் உத்தியோகஸ்தர்களுக்கும் ஒழுங்காக மாதச் சம்பளம் கொடுக்கப்பட்டது. குற்றவாளிக்குக் கடுந்தண்டனை பொதுவாக விதிக்கப்படவில்லை. மக்கள் நன்னடத்தையில் ஈடுபட்டார்கள். யாத்திரிகர்களுக்கு அங்கங்கே தங்குமிடங்களும், நோயாளிகளுக்கு மருத்துவச் சாலைகளும் இருந்தன, “மக்கள் பொதுவாகப் புலால் உண்பதில்லை; குடிப்பதில்லை; வெங்காயம் பூண்டு முதலியவற்றைத் தின்பதில்லை” என்று பாஹியான் கூறியிருப்பது பௌத்தர்கள் சம்பந்தப்பட்ட வரைக்கும் உண்மையாக இருக்கலாம். மற்றவர்கள் புலால் உண்டதாகவே தெரிகிறது. அக்காலத்து ஸ்மிருதிகளில் அது சிரார்த்தத்திற்குச் சிறந்த உணவாகக் கூறப்படுகிறது. உடைகளிலும் ஆபரணங்களிலும் சில வெளிநாட்டுப் பழக்கங்கள் இந்தியாவில் பரவத்தொடங்கின. ஆனால் தேசிய உடையான வேட்டி, அங்கவஸ்திரம், தலைப்பாகை முதலியன ஒருநாளும் வழக்கழிந்து போகவில்லை. பொதுவாகப் பருத்தி ஆடைகள் அணிந்தனர்; பட்டாடைகளும் உண்டு. அக்காலத்துச் சிற்பங்களையும் ஓவியங்களையும் உற்று நோக்கின் இருபாலாரும் அணிந்துவந்த ஆடை ஆபரணங்களின் வகைகளும் அழகும் வெளியாகும். முக்கியமாகப் பலவிதமான மேகலைகளும் மாலைகளும் உபயோகிக்கப்பட்டன. தலைமயிர், முகம், உதடு முதலியவற்றை அழகு படுத்தப் பல உபாயங்கள் தேடினார்கள். நாழிகையை அளக்கக் கன்னல் என்னும் கருவி உபயோகத்திலிருந்தது. வீடுகளிற் சூதும் சதுரங்கமும், வெளியே வேட்டை, ஆட்டுச் சண்டை, சேவற் சண்டை முதலியனவும் பொழுதுபோக்கும் விளையாட்டுக்களாக இருந்தன. குழந்தைகளும் பெண்களும் பந்தாடுவதுண்டு. திருவிழாக்களும் நாடக மேடைகளும், விநோதமாகப் பொழுதைப் போக்க அவகாசம் கொடுத்தன. கைத்தொழில், வியாபாரம், கொடுக்கல் வாங்கல் முதலியன விருத்தியடைந்தன. தொழிலாளிகளும் வியாபாரிகளும் தங்கள் சங்கங்களை ஏற்படுத்தி நடத்தி வந்தார்கள். அவர்களால் பல பொது நன்மைகள் ஏற்பட்டன. உதாரணமாகத் தசபுரம் என்னும் ஊரில் உள்ள சாலியச்சங்கத்தார் கி. பி. 437-ல் சூரியன் கோவில் ஒன்று கட்டி, மறுபடி 473-ல் அதை ஜீர்ணோத்தாரணம் செய்-