பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/687

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

622

இந்தியா

தானும் ஒரு கவியாக விளங்கினான். அவன் கையெழுத்து அவனுடைய செப்பேடுகளிரண்டிலும் காணப்படுகிறது. இரண்டு பெளத்தத் தோத்திரங்களும், நாகானந்தம், இரத்தினாவளி, பிரியதர்சிகா என்னும் நாடகங்களும் ஹர்ஷனால் எழுதப்பட்டன. நாகானந்தம் ஒரு பௌத்தக் கதையைத் தழுவியது. ஹர்ஷனால் ஆதரிக்கப்பட்ட கவிகளில் பாணனும் மயூரனும் முக்கியமானவர்கள். வியாகரணத்தில் புகழ்பெற்ற பர்த்ருஹரியும் அதே காலத்தவனாக இருந்திருக்க வேண்டும்.

ஹர்ஷன் சீன தேசத்தோடு தூதர்கள் மூலமாக நெருங்கிய தொடர்பை உண்டு பண்ணினான். தை -த்- சூன் (கி.பி. 627-49) என்னும் சீனச் சக்கரவர்த்தி ஹர்ஷனுடைய சிற்றரசனான நேபாள அரசன் அஞ்சுவர்மனுடைய மகளை மனந்தான். கி.பி. 641-ல் ஹர்ஷன் அனுப்பின பிராமண தூதனொருவன் இரண்டு ஆண்டுகட்குப்பின் சீனச் சக்கரவர்த்தி அனுப்பின தூதர்களுடன் திரும்பிவந்தான். சீனத்தூதர்கள் இந்தியாவில் இரண்டு ஆண்டுகள் தங்கிவிட்டு 645-ல் அவர்கள் நாட்டிற்குத் திரும்பினர். அடுத்த ஆண்டு இன்னும் ஒரு தூதனைச் சீனச்சக்கரவர்த்தி இந்தியாவிற்கு அனுப்பிவைத்தான். ஆனால் அவன் இந்தியாவைச் சேருமுன் ஹர்ஷன் இறந்துவிட்டான். ஆகையால் இந்தத் தூதனுக்கும் சில இந்தியச் சிற்றரசருக்கும் சண்டைகள் ஏற்பட்டன. அஸ்ஸாமில் ஆண்டுவந்த பாஸ்கரவர்மனும், சீனச்சக்கரவர்த்தியின் மகளை மணந்திருந்த திபெத்து அரசனும் உதவியதால் அத்தூதன் தன்னை எதிர்த்த இந்திய அரசர்களைத் தோற்கடித்துச் சிறைப்படுத்திக்கொண்டு சீனாவிற்குத் திரும்பினான். அந்தச் சீனத்தூதனின் பெயர் வாங்யு வாங்கே. அவன் மற்றொரு முறை கி.பி. 657-ல் சீனச் சக்கரவர்த்தியின் உத்திரவுப்படி இந்தியாவிலுள்ள பௌத்த ஆலயங்களுக்குக் காணிக்கை செலுத்துவதற்கு வந்தான். அவன் லாசா, நேபாளம் வழியாக இந்தியாவை யடைந்து, வைசாலி, புத்த கயை முதலிய பௌத்த க்ஷேத்திரங்களைத் தரிசித்துவிட்டு, ஆப்கானிஸ்தானத்தின் வழியாகச் சீனாவிற்குத் திரும்பினான்.

ஹர்ஷனுக்குப் பிறகு மகத நாட்டில் பிற்காலத்துக் குப்தர்கள் தங்கள் இராச்சியத்தை வலுப்படுத்திக் கொண்டனர். ஆதித்தியசேன குப்தன் சக்கரவர்த்தி பதம்பெற்று, அசுவமேதயாகம் செய்து கி.பி. 672வரை ஆண்டான். தெற்கேயிருந்து வரும் யாத்திரிகர்களுடைய வசதிக்காகக் கயையில் ஒரு மடம் கட்டுவித்தான். அவனுக்குப்பின் ஆண்ட அரசன் அவன் மகன் மூன்றாம் தேவகுப்தன் ஆவான். அவன் சைவனாயிருந்தபோதிலும், சீன யாத்திரிகர்களின் உபயோகத்திற்காக ஒரு மடத்தை ஒதுக்கி வைத்தானென்று கூறுகிறார்கள். அவனுக்குப்பின் சக்கரவர்த்தி பட்டத்தைத் தரித்து ஆண்டவர்கள் முறையே அவன் மகன் விஷ்ணுகுப்த சந்திராதித்தனும், பேரன் இரண்டாம் ஜீவிதகுப்தனும் ஆவார்கள். ஆனால் பொதுவாக ஹர்ஷன் இறந்த பிறகு சிலகாலம் வட இந்தியாவில் ஒரு பேரரசும் இல்லாமலே போயிற்று. இதற்கு முக்கிய காரணம் ஹர்ஷனுக்குச் சந்ததி இல்லாததுதான்.

ஹர்ஷனுக்குப் பிறகு வட இந்தியாவில் நிலைபெற்ற பல இராச்சியங்களில் முதலாவது வங்காளம். இது நான்கு பெரும்பிரிவுகளாக இருந்து வந்தது: 1. புண்டரவர்த்தனம் (வட வங்காளம்), 2. கர்ண சுவர்ணம் (பாகீரதி நதிக்கு மேற்குள்ளது), 3. சமதடம் (வங்காளத்தின் கிழக்குத் தெற்குப் பாகங்கள்). 4. தாமிரலிப்தம் (வங்கத்தின் தென்மேற்குப் பாகம்); அதே பெயர்கொண்ட துறைமுகத்தையுடையது. மகஸ்தான் என்னும் இடத்தில் கிடைத்த ஒரு சாசனத்தால் வங்கநாடு மௌரிய இராச்சியத்தைச் சேர்ந்திருந்தது என்று அறிகிறோம். குப்தர்களும் வங்கத்தில் ஆண்டார்கள். அவர்களுக்குப்பின் வங்கத்தில் ஆண்ட அரசர்களில் முக்கியமானவர்கள் ராஜாதி ராஜனான வைஷ்ணவ அரசன் ஜயநாகனும், சைவ அரசன் சமாசார தேவனும் ஆவார்கள். ஹர்ஷன் காலத்தில் வங்கத்தை ஆண்டவன் சசாங்கன். ஆரம்பத்தில் இவன் கர்ண சுவர்ணம் என்னும் பாகத்தை ஆண்டு, பிறகு அஸ்ஸாம். ஒரிஸ்ஸா, கஞ்சம் முதலிய நாடுகளில் தன் அதிகாரத்தை நிலை நிறுத்தினான். ஒரு சமயம் அவன் இராச்சியம் மேற்கே காசிவரை பரவியிருந்தது. அவனே ராஜ்ய வர்த்தனனைக் கபடமாகக் கொலை செய்தவன். ஹியூன் சாங் இந்தியாவிலிருந்தபோது சசாங்கனுடைய நாடுகள் சில. அஸ்ஸாம் இராச்சியத்துப் பாஸ்கரவர்மனைச் சேர்ந்துவிட்டன. மிகுதி ஹர்ஷன் இராச்சியத்தில் அடங்கிவிட்டது. ஹர்ஷனுக்குப் பின் ஆண்ட பிற்காலத்துக் குப்தர்கள் வங்கத்தின் ஒரு பகுதியை ஆண்டனர். அதே காலத்தில் சமதடத்தில் கட்க வமிசத்து அரசர்கள் சுயேச்சையாக ஆண்டு வந்தனர்.

ஆதிசூலன் என்ற ஓர் அரசன் வங்கத்தை ஆண்டதாகவும், அவன் ஐந்து பிராமண குடும்பங்களையும், ஐந்து காயஸ்த குடும்பங்களையும் கன்னோசியிலிருந்து வங்கத்திற்கு வரவழைத்து, அந்நாட்டில் இந்து மதத்திற்குப் புத்துயிர் கொடுத்தான் என்றும், இக்குடும்பங்களிலிருந்து உண்டானவர்களே முக்கியமான வங்காள வமிசத்தவர் என்றும் ஓர் ஐதிகம் இருக்கிறது. சிலர் இதை வெறுங் கதையென்று தள்ளிவிடுவர். உண்மையில் ஆதிசூரன் என்னும் அரசன் கௌர் என்னும் ஊரையும், அதன் அருகிலுள்ள சிறு நிலப்பகுதியையும் சுமார் கி.பி.700-ல் ஆண்டுவந்ததாக எண்ணலாம். கி. பி. 730-40-ல் ஒரு கௌட அரசன் கன்னோசியிலிருந்து படையெடுத்து வந்த யசோவர்மனால் போரில் தோற்கடித்துக் கொல்லப்பட்டான் என்று கௌடவஹோ என்னும் பிராகிருத காவியத்தால் அறிகிறோம்.

வங்கநாட்டு இராச்சிய வமிசங்களில் மிகவும் புகழ் பெற்றது பாலர்களுடைய வமிசம். இவர்கள் பௌத்தர்கள். இவ்வமிசத்து அரசர் பலர் பரந்த நாடுகளை ஆண்ட சக்கரவர்த்திகளாவர். கி. பி. எட்டாம் நூற்றாண்டின் நடுவில் வங்க தேசத்து மக்கள் கோபாலன் என்பவனைத் தங்கள் அரசனாகத் தேர்ந்தெடுத்து, நாட்டில் பரவியிருந்த அராஜகத்தை முடித்தனர். கோபாலன் மகத நாட்டை வென்று நாற்பத்தைந்து ஆண்டுகள் ஆண்டான்.உத்தண்டத்தில் அவன் ஒரு பௌத்த விஹாரத்தைக் கட்டுவித்தான். கூர்ஜர அரசன் வத்ச ராஜனுடன் போர்புரிந்து தோல்வியுற்றான். பாலர்களில் இரண்டாம் அரசனான தர்மபாலன் ஆண்டது அறுபத்துநாலு ஆண்டுகள்.கி. பி. 800க்குப் பிறகு அவன் கன்னோசியின் மீது படையெடுத்து, அங்கு ஆண்டுவந்த இந்திராயுதனை நீக்கிச் சக்கராயுதனுக்குப் பட்டம் கொடுத்தான். அவன் நாளில் குன்றிப்போயிருந்த பழைய மௌரியத் தலைநகரான பாடலிபுத்திரம் புத்துயிர் பெற்றது. விக்ரமசீலம், சோமபுரம் என்னுமிடங்களில் அவன் பௌத்த விஹாரங்கள் நிறுவினான். முதல் விஹாரம் கங்கைக் கரையில் ஒரு மலைமேல் கட்டப்பட்டது. இதில் நூற்றேழு கோயில்களும், ஆறு கலாசாலைகளும் இருந்தனவாம். தர்மபாலனுடைய ஆட்சி, வங்காளம் முதல் டெல்லி வரையிலும், ஜாலந்தரம் முதல் விந்தியமலை வரையும் பரவி இருந்தது என்-