பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/689

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

624

இந்தியா

களில் அடுத்த பேரரசன் II-ம் நாகபட்டனின் பேரன் வீர போஜன் (ஆ.கா. 840-890). அவனுக்குப் பிரபாசன், ஆதிவராகன் என்ற பட்டங்களும் உண்டு. கடைசிப் பட்டம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்கள் வட இந்தியாவில் பல இடங்களில் கிடைக்கின்றன. போஜன் மகன் I -ம் மகேந்திரபாலன் (ஆ.கா. 890-908) தன் தகப்பன் தனக்குக் கொடுத்த சாம்ராச்கியத்தைச் சரிவர ஆண்டு வந்தான். பிரசித்தி பெற்ற கவியாகிய ராஜசேகரன் அவனுக்கு ஆசிரியனாக இருந்தான். அவன் மூத்த மகன் II -ம் போஜன் சிறிது காலம் ஆண்டு இறந்தபின், இரண்டாவது மகன் மகிபாலன் முப்பது ஆண்டுகள் ஆண்டான் (910-40). அவன் சூரிய பக்தன். அவன் முத்திரையில் பகவதியின் உருவம் காணப்பட்டது. அவனுடைய வலிமையை மசூதி என்னும் அராபிய யாத்திரிகன் புகழ்ந்திருக்கிறான் (915). ஆனால் 916-ல் ராஷ்டிரகூட அரசனான III-ம் இந்திரனால் அவனுக்கு ஆபத்து நேர்ந்தது. இந்திரன் கன்னோசியை ஆக்கிரமிக்கவும், மகிபாலன் தன் இராச்சியத்தை விட்டு ஓடவும் நேர்ந்தது. ஆனால் விரைவில் சந்தேல அரசனின் உதவியால் தன் இராச்சியத்தை மீட்டுக் கொண்டான். ராஜசேகர கவி அவனை ஆர்யாவர்த்த அரசன் என்று வருணிக்கிறான். ஆயினும் ராஷ்டிரகூடப் படையெழுச்சியினால் பிரதிகார இராச்சியம் நிலைகுலைந்தது என்பதில் ஐயமில்லை. சண்டகௌசிகம் என்னும் நாடகத்தை இயற்றிய கவி க்ஷேபீசுவரன் மகிபாலனால் ஆதரிக்கப்பட்டான். மகிபாலன் மகன் தேவபாதன் (ஆ.கா. 946-960) தன் தந்தைக்கு இராச்சியத்தை மீட்டுக்கொடுத்த நன்றிக்காக ஓர் அபூர்வமான விஷ்ணு விக்கிரகத்தைச் சந்தேல யசோவர்மனுக்கு அளித்தான். அவனும் அதைக் கஜுராஹோவில் ஓர் அழகான கோயிலில் பிரதிஷ்டை செய்தான். தேவபாலனுக்குப்பின் அவன் தம்பி விஜயபாலன் ஆண்டான் (960-91). அவன் காலத்தில் வஜ்ரதாமன் என்னும் கச்சவாகத் தலைவன் கோபாத்ரி (குவாலியர்) என்னும் மலைக்கோட்டையைத் தன் வயமாக்கிக் கொண்டு சுயேச்சையாக ஆள ஆரம்பித்தான் (977). கூர்ஜர தேசத்தில் சாளுக்கியர்களும், மாளவத்தில் பரமாரமுஞ்சனும் (974-95) தங்கள் சுதந்திரத்தை நிறுவினர்.

ஆகவே பிரதிகார இராச்சியம் குறுகிக் கொண்டே வந்தது. வட மேற்கிலிருந்து ஆப்கானிஸ்தானத்தில் கஜனியை ஆண்ட துலுக்க அரசர்களும் இந்தியாவின் மீது படையெடுக்கத் தொடங்கினர். கி.பி. 1008-ல் விஜயபாலன் மகன் ராஜ்யபாலன் பஞ்சாப் அரசன் ஆனந்தபாலனுடன் சேர்ந்து கஜனி சுல்தான் மாமூதை எதிர்த்துத் தோல்வியுற்றான். அதற்குப்பத்து ஆண்டுகளுக்குப்பின் மாமூது மதுராவைக் கொள்ளையடித்துக் கன்னோசி மீது படையெடுத்தான். ராஜ்யபாலன் கன்னோகியை விட்டு ஒடவே, அந்த நகர் முகம்மதியப் படைகளுக்கு இரையாயிற்று. அடுத்த ஆண்டு சந்தேல அரசன் கண்டனும், அவன் சிற்றரசனாகிய குவாலியர் கச்சாவாகனும், ராஜ்யபாலன் மாமூதைச் சரிவர எதிர்க்காததிற்காக அவனை யுத்தத்தில் கொன்று வீழ்த்தினர்.1019-ல் அவன் மகன் திரிலோசன பாலன் மட்டுமன்றிச் சந்தேலக்கண்டனும் மாமூதால் தோற்கடிக்கப்பட்டனர். திரிலோசனனுக்குப் பிறகு பிரதிகார வரலாறு நன்றாக விளங்கவில்லை. 1036-ல் ஆண்ட யசபாதன் அவன் மகனாக இருந்திருக்கலாம்.

சுமார் 1090-ல் காஹர்வார் தலைவன் சந்திரதேவன் கன்னோசியைப் பிடித்துக்கொண்டு, காசி, அயோத்தி, டெல்லி முதலிய இடங்களில் தன் ஆதிக்கத்தை நிறுவினான். இவன் வமிசத்தவர் 1140 வரை ஆண்டனர். அவர்களுடைய சாசனங்களில் துருஷ்க தண்டம் என்னும் ஒரு வரி குறிப்பிடப்படுகிறது. அவர்களில் 1104 முதல் 1155 வரை ஆண்ட கோவிந்தசந்திரனே மிகவும் புகழ்பெற்றவன். 1128-ல் அவன் கொடுத்த சாசனம் அக்காலத்துச் சமயநிலையைத் தெளிவாகக் காட்டுகிறது. கோவிந்த சந்திரனுடைய பேரன் ஜயச்சந்திரனுடைய மகள் சம்யோகிதா தேவியை, அஜ்மீர் அரசன் பிருதிவி ராஜன் மணந்துகொண்ட வரலாறு ஒரு பெரிய இந்திப் புராணமாகச் சந்தவரதாயி என்னும் கவியினால் எழுதப்பட்டது. ஜயச்சந்திரனைக் காசி ராஜா என்று துருக்கிய வரலாற்று நூல்கள் குறிப்பதனால் காசி அவன் இராசதானியாக இருந்திருக்கலாம். யமுனா நதிக்கரையில் சந்தாவர் என்னுமிடத்தில் ஷிஹாபுதீன் கோரி என்னும் முகம்மதிய அரசனால் ஜயச்சந்திரன் யுத்தத்தில் கொல்லப்பட்டான். அவன் இராச்சியம் துருக்கர் வசமாயிற்று (1194).

அஜ்மீருக்கு வடக்கே சாகம்பரி என்னுமிடத்தில் சௌஹாண வமிசத்து ராஜபுத்திரர்கள் 700 முதல் ஆண்டு வந்தனர். இவர்களில் பன்னிரண்டாம் நூற்றாண்டின் நடுவில் ஆண்ட நான்காம் விக்கிரக ராஜன் தன் இராச்சியத்தைப் பெருக்கிப் புகழ் பெற்றான். ஆனால் டெல்லி இவன் இராச்சியத்தில் சேரவில்லை. அது தோமர வமிசத்தார் வசம் இருந்தது. விக்கிரகராஜன் இரண்டு சமஸ்கிருத நாடகங்களைக் கறுப்புச் சலவைக் கற்களில் பொறிக்கச் செய்தான். இவனுடைய சகோதரனின் மகன் பிருதிவி ராஜன் தான் முற்கூறியவாறு கன்னோசி அரசன் ஜயச்சந்திரன் மகளைச் சுமார் 1175-ல் தூக்கிக்கொண்டுபோய் மணந்து கொண்டவன். இவன் ஒரு வீரன். சந்தேல அரசன் பர்மால் என்பவனை வென்று, அவன் இராசதானியான மஹோபாவைக்கைப்பற்றினான் (1182). படையெடுத்து வந்த துருக்கர்களுக்கு விரோதமாகப் பெரும்போர் புரிந்து,1191-ல் தலாவரி என்னுமிடத்தில் ஷிகபுதீன் முகம்மது கோரியைத் தோற்கடித்தான். ஆனால் அடுத்த ஆண்டு அதே இடத்தில் அவன் கையாலேயே தோல்வியுற்றுக் கொலையுண்டான்.

வலபி: கூர்ஜரத்தில் வலபியை இராசதானியாகக் கொண்டு மைத்ரக அரசர்கள் ஆண்டு வந்ததை முன்னமே குறிப்பிட்டிருக்கிறோம். இந்த இராச்சியம் குஜராத், கட்சு, மாளவம் என்னும் நாடுகள் முழுவதும் பரவி இருந்தது. இதன் அரசர்கள் பௌத்தர்கள். வட இந்தியாவின் கீழ்ப்பாகத்தில் நாலந்தாவைப் போல் மேற்குப் பாகத்தில் வலபி ஒரு பெரிய கல்வி நிலையமாக விளங்கிற்று. குணமதி, ஸ்திரமதி,ஜயசேனன் (கி.பி. 553) என்னும் ஆசிரியர்கள் ஒருவருக்குப்பின் ஒருவராக வலபியில் கல்வி கற்பித்து வந்தனர். அங்கே சுவேதாம்பர ஜைனர்களும் தங்கள் மத நூல்களைச் சீர்ப்படுத்துவதற்காக ஒரு சபை கூட்டினார்கள் (454 அல்லது 514).

தர்மாதித்தியன் என்ற பட்டம் பெற்ற I-ம் சீலாதித்தியன் 595 முதல் 615 வரை ஆண்டான். ஹர்ஷன் காலத்தில் ஆண்ட துருவபடனைக் குறித்து முன்னமே கூறினோம். இவ் வமிசத்தில் அவன் ஒருவனே சக்கரவர்த்தி என்னும் பட்டம் கொண்டவன். அதன் கடைசி அரசன் VII-ம் சீலாதித்தியன் (766). அராபியர்கள் 711-12-ல் சிந்து நாட்டைக் கைப்பற்றின பின் அவர்களால் வலபி இராச்சியத்திற்கு அடிக்கடி தொந்தரவு உண்டாயிற்று.

அன்ஹில்வாரா: வலபிக்குப்பின் வன ராஜனால் 746-ல் நிறுவப்பட்ட அன்ஹில்வாரா பட்டணம் தலையெடுத்தது. இவ் வரசன் சாப வமிசத்தைச் சேர்ந்த-