பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/692

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

627

இந்தியா

சத்தை நிறுவிய அம்சுவர்மன் திபெத்து அரசனுக்குத் தன் மகளை மணம் செய்து கொடுத்தான். அதற்குப் பின் சிறிது காலம் ஹர்ஷனுடைய மரணத்திற்குப் பின் நடந்த நிகழ்ச்சிகளால் நேபாளம் திபெத்திற்குக் கீழ்ப்படிந்திருந்தது. கி.பி. 70-ல் ஒரு திபெத்து அரசன் யுத்தத்தில் உயிரிழக்கவே, நேபாளம் மறுபடியும் சுதந்திர நாடாயிற்று. ஏழாம் நூற்றாண்டு முதல் நேபாளத்தில் தந்திரத்தைச் சார்ந்த மகாயான பௌத்தமதம் செழித்து வந்தது. பல நேர்த்தியான புத்த விக்கிரகங்கள் வெண்கலத்தினால் செய்யப்பட்டன.

நேபாளமும் காச்மீரமும் இந்தியர்களுடைய பண்பாட்டைத் திபெத்திற்கும் சீனாவிற்கும் கொண்டு செல்ல ஏற்ற சாதனங்களாக இருந்தன. கே. ஏ. நீ.

கி. பி. 1206-1526: குத்புதீன் ஐபெக் என்பவன் முகம்மது கோரியினுடைய படைத்தலைவர்களில் ஒருவன் ; தன் அரசனுடைய இந்தியப் படையெழுச்சிகளில் கலந்துகொண்டு சிறந்த வீரச் செயல்கள் பல புரிந்தவன். அவனுடைய வீரச் செயல்களையும் திறமையையும் கண்டறிந்த முகம்மது கோரி 1195-ல் அவனை இந்தியாவிலிருந்த தன்னுடைய நாடுகளுக்கு அரசப் பிரதிநிதியாக நியமித்திருந்தான். 1206-ல் அவன் இறந்தவுடன் குத்புதீன் சுயேச்சை பெற்றுத் தனியரசனாக டெல்லியிலிருந்து ஆள ஆரம்பித்தான். அவனுடைய வமிசத்தைச் சேர்ந்த மன்னர்கள் தத்தம் இளம்பருவத்தில் சாதாரண ஊழியம் புரிந்து, பின்னர்த் தம்முடைய அறிவாற்றல் முதலியவற்றால் உயர்ந்த பதவியை அடைந்தவர்கள். ஆதலால் அவர்களுடைய வமிசத்துக்கு அடிமை வமிசம் என்னும் பெயர் ஏற்பட்டது.

இந்த வமிசத்து முதல் மன்னனாகிய குத்புதீன் (ஆ. கா. 1206-10) ஆட்சியில் அவனோடு கோரியின் கீழ்ப் படைத் தலைமை வகித்த சிலரால் சில இன்னல்கள் விளைந்தன. அவற்றை யெல்லாம் அவன் திறமையோடு எதிர்த்து வெற்றி கொண்டான். டெல்லியைத் தலைநகராகக் கொண்ட அவனுடைய ஆட்சி மேற்கே பஞ்சாபிலிருந்து கிழக்கே வங்காளம் வரை பரவியிருந்தது. அவன் போர் புரிவதில் மட்டுமன்றி, நாட்டை ஆளுவதிலும் திறமை உடையவன். பொதுமக்கள் மகிழக்கூடியவகையில் அவன் ஆட்சி அமைந்திருந்தது. சிறந்த கொடைப் பண்பும் அவனிடம் அமைந்திருந்தது. மிகுந்த மதப்பற்றுடைய அவன் டெல்லியிலும் அஜ்மீரிலும் இரு மசூதிகள் கட்டினான். 1210-ல் போலோ விளையாடுகையில் தவறி விழுந்து இறந்தான்.

அவனுக்குப்பின் இல்தூத்மிஷ் பட்டம் பெற்றான் (ஆ. கா. 1210-36). இவன் முதலில் ஐபெக்கிடம் ஊழியம் புரிந்து அவனுடைய மகளை மணந்துகொண்டவன். ஐபெக் ஆட்சியில் அடங்கியிருந்த படைத் தலைவர்கள் இப்போது முரண்பட்டுத் தனியாட்சி நடத்த விரும்பினர். மேலும் டெல்லி அரசைச் சேர்ந்த வங்காளம், மூல்தான் போன்ற பகுதிகள் சுயேச்சை பெற விரும்பின. இவைகளால் டெல்லி அரசில் குழப்பம் நிலவியது. இல்தூத்மிஷ் தனது திறமையினால் குழப்பத்தைப் போக்கிச் சிறந்த முறையில் ஆட்சியை வலுப்படுத்தினான்.

இவன் காலத்தில் செங்கிஸ்கான் என்னும் மங்கோலியர் தலைவன் பாரசீகம், சீனா, மத்திய ஆசியா போன்ற இடங்களை யெல்லாம் வென்று, கொடுஞ் செயல்கள் பல புரிந்து, சிந்து நதிக் கரையில் வந்து தங்கினான். இந்தியாவின்மீது படை யெடுக்கும் நோக்கமும் அவனுக்கு இருந்தது. இந்த மங்கோலியப் படை யெழுச்சி நிகழ்ந்தால் டெல்லி அரசுக்குப் பேராபத்தாகலாமென்று இல்தூத்மிஷ் அஞ்சி யிருந்தான். ஆனால் அது நிகழவில்லை. செங்கிஸ்கான் இந்தியாவின் தட்பவெப்ப நிலைகட்கு அஞ்சி, இந்தியாவின் எல்லையை விட்டு அகன்று போய்விட்டான். ஆதலால் இல்தூத்மிஷ் அச்சம் தெளிந்து, தனது ஆட்சியை மேலும் வலுப்படுத்தத் தொடங்கினான். 1225-ல் வங்காளத்தைத் தன்னடிப் படுத்தினான். 1228-ல் குவாலியர் டெல்லி அரசின் வசமாகியது. மாளவமும் கைப்பற்றப்பட்டது (1234). பில்சா, உச்சயினி ஆகியவையும் அதற்குட்பட்டன. உச்சயினியில் புகழ்பெற்று விளங்கிய காளி கோயில் அழிக்கப்பட்டது. சிறிது காலங்கழித்து இஸ்மெயிலர்கள் என்னும் முஸ்லிம் மதக் குழுவினர் இம் மன்னனைக் கொல்ல ஒரு சதி செய்தனர். அது நிறைவேறவில்லை. இதற்குத் தப்பிப் பிழைத்த இல்தூத்மிஷ் 1236-ல் இறந்தான். டெல்லியில் உள்ள குதுப்மினார் இவன் கட்டியது. ஐபெக் காலத்தில் நிறுவப்பட்ட முஸ்லிம் அரசைப் பல இன்னல்களினின்றும் காப்பாற்றி, மேலும் அதை விரிவுபடுத்திய பெருமை இவனுக்கு உரியது. சிறந்த கல்விமான்களையும் துறவிகளையும் இவன் ஆதரித்துப் போற்றினான்.

இல்தூத்மிஷுக்குப் பல மக்கள் உண்டு. அவர்களுள் ரசியா திறமையும் அருங்குணங்களும் உடையவள். அவள் தான் தனக்குப்பின் முடிசூட வேண்டும் என்பது இல்தூத்மிஷின் விருப்பம். பிரபுக்கள் அதற்கு மாறாக இல்தூத்மிஷின் மூத்த மகனான ருக்னுதீன் பிரோலை 1236-ல் சுல்தானாக்கினர். ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபட்ட அவன் விரைவில் கொல்லப்பட்டான்.

ரசியா (ஆ. கா. 1236-40) சுல்தான் என்னும் பெயர் பூண்டு, ஆணுடை தரித்து ஆட்சி புரிந்தாள். தனது ஆட்சியின் முற்பகுதியில் ஏற்பட்ட கலகங்களைத் திறமையோடும் தந்திரத்தோடும் சமாளித்து வெற்றி கொண்டாள். ஜலால் உத்தீன் யாகுட் என்னும் ஆப்பிரிக்கன் ஒருவன் அரசவையில் செல்வாக்குப் பெற்றிருந்தான். அதைப் பல பிரபுக்கள் வெறுத்தார்கள். அவர்கள் தூண்டுதலால் பாட்டிண்டா (Bhatinda) பகுதியில் கவர்னராயிருந்த அல்ட்டூனியா, ரசியாவுக்கு எதிராகக் கலகம் செய்ய ஆரம்பித்தான். கலகத்தை அடக்கச் சென்ற ரசியா அவனால் சிறைபிடிக்கப்பட்டாள். அவளுடைய ஆதரவைப் பெற்ற யாகுட் கொல்லப்பட்டான். இந் நிலையில் இல்தூத்மிஷின் மகன் பாஹ்ரம் என்பவன் டெல்லியில் சுல்தானானான். ரசியா அல்ட்டூனியாவை மணந்து கொண்டாள். தன் மனைவியை மீண்டும் டெல்லி அரியணையில் அமர்த்த விரும்பிய அல்ட்டூனியா ஒரு பெரும்படையுடன் டெல்லி நோக்கிச் சென்றான். ஆனால் கணவன் மனைவி இருவரும் தோல்வியுற்றுத் தமக்கு ஆதரவாயிருந்தோராலேயே 1240-ல் கொல்லப்பட்டனர். நீதி, நேர்மை, இரக்கம், போர்த்திறன், அறிஞர்களை ஆதரிக்கும் பண்பு முதலிய நற்குணங்கள் பலவும் ஒருங்கே அமையப்பெற்ற ரசியா ஆணாகப் பிறவாத குறையினால் சிறப்போடு நீண்டகாலம் ஆள முடியவில்லை. அவளுடைய உயர்ந்த குணங்களையும் நேர்மையையும் அக்காலத்தில் இருந்த மின்ஹஜ் உன் சிராஜ் என்னும் வரலாற்றாசிரியர் மிகவும் புகழ்ந்து கூறியுள்ளார். அவளுக்குப் பின் முடி சூடிய பாஹ்ரம் (ஆ.கா. 1240-42) வலிமையும் செல்வாக்கும் பெற்ற குழுவினராகிய 'நாற்பதின்மர்' எனப்படும் பிரபுக்களுடைய விருப்பத்திற்கேற்ப நடக்க வேண்டியவனானான். எனினும், இயல்பாகவே வீரமும் உண்மையுமுள்ள அவன் அவ்வாறு நடக்க விரும்பவில்லை. இதனால் நாற்பதின்மர்