பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/693

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

628

அவனுக் கெதிராகக் கலகம்செய்து, ருக்னுதீன் மகனான மசூத் என்பவனை அரியணையிலேற்றினார்கள். பாஹ்ரம் கொல்லப்பட்டான். மசூத் (ஆ. கா.1242-1246) ஆட்சியின்போது இந்தியாமீது படை யெடுத்த மங்கோலியர் தோற்கடிக்கப்பட்டுத் துரத்தப் பட்டனர். மசூத் தனது அரசியல் கடமைகளை மறந்து, உலகவின்பங்களில் அதிகமாக ஈடுபட்டதன் பயனாகப் பிரபுக்களின் நம்பிக்கையை இழந்து, அரியணையினின்றும் நீக்கப்பட்டுச் சிறையில் 1246-ல் வைக்கப்பட்டான். பின்னர்ச் சிறிது காலத்துக்குள் அவன் இறந்தான்.

அவனுக்குப்பின் பட்டமெய்திய நசீருத்தீன் முகம்மது (ஆ. கா.1246-66) இல்தூத்மிஷின் புதல்வன். இவன் துறவி மனப் பான்மையுடையவன்; குர்ஆனில் கூறப்பட்டபடி உண்மையான முஸ்லிம் வாழ்க்கையை நடத்தி வந்தான். அழகாகக் கையெழுத்து எழுதும் திறம் படைத்த இவன் குர் ஆனைப் பிரதிசெய்து, அதனை விற்றுக் கிடைக்கும் பொருளைக் கொண்டு வாழ்ந்து வந்ததாகக் கதைகள் வழங்குகின்றன. இவனுடைய ஆட்சியில் பால்பன் முதல் மந்திரி பதவிவகித்து, அரசியலை நசீருத்தீன் சார்பாக நடத்தி வந்தான். பெயரளவில்தான் நசீருத்தீன் சுல்தானாக இருந்தான். பால்பனுடைய மகளை இவன் மணந்ததும் அவனுடைய அதிகார வளர்ச்சிக்கு ஒரு காரணமாயமைந்தது. நாட்டின் பல பகுதிகளில் ஏற்பட்ட கலகங்களைப் பால்பன் கடுமையாக அடக்கி ஒழுங்கை நிலைநாட்டினான். 1257-ல் ஏற்பட்ட மங்கோலியர் படையெழுச்சி முறியடிக்கப்பட்டது. நசீருத்தீன் முகம்மது 1266-ல் இறந்தான். தனக்குப்பின் பால்பன் அரசுரிமை பெறவேண்டும் என்று அவன் ஏற்பாடு செய்திருந்தான்.

பால்பன் (ஆ.கா.1266-86) நசீருத்தீனின் திட்டப்படியே 1266-ல் பட்டம் பெற்றான். அரச பதவி யேற்பதற்குமுன் அவன் பல பதவிகளை வகித்து நல்ல அனுபவம் பெற்றிருந்தான். மன்னனுடைய பழைய கெளாவத்தையும் அதிகாரத்தையும் மீண்டும் நிலைநாட்டுவது, நாட்டுக்கும் அரச வமிசத்துக்கும் பெரும்பகைவர்களாக விளங்கிய நாற்பதின்மருடைய வலிமையை அழிப்பது, மங்கோலியப் படையெடுப்பினின்றும் நாட்டைக் காப்பது போன்ற பல நோக்கங்கள் முடிசூடும் காலத்தில் பால்பனுக்கு இருந்தன. இவற்றை யெல்லாம் அவன் தன் ஆட்சிக் காலத்தில் நிறைவேற்றினான். சேனையைத்திருத்தியமைத்து, முக்கியமான இடங்களில் கோட்டைகளைக் கட்டி, நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தினான். அவன் மேற்கொண்ட தீவிரநடவடிக்கைகளால் திருடர்கள் தொல்லை ஒழிந்தது. அமைதியும் ஒழுங்கையும் நிலைநாட்டுவதில் பால்பன் சிறந்த வெற்றியடைந்தான். நாற்பதின்மருடைய வலிமையை அழிப்பதில் ஊக்கம் கொண்டான். அப்பிரபுக்களின் முன்னோர்கள் இல்தூத்மிஷ் காலத்தில் ஜாகீர்கள் பெற்றுச் செல்வத்திலும் அதிகாரத்திலும் உயர்ந்தவர்கள். அவர்கள் சந்ததியினர் வலி குறைந்து, மன்னன் ஆளுகையில் பல சதிகளில் ஈடுபட்டு, அமைதியையும் ஒழுங்கையும் கெடுத்து வந்தார்கள். அவர்களுடைய வலிமையை அழிப்பதற்காகப் பால்பன் முதலில் அவர்கள் ஜாகீர்களைப் பறிமுதல் செய்ய உத்தரவு பிறப்பித்தான். பின்னர் அந்த உத்தரவை மாற்றினான். எனினும் அவர்களுடைய ஆதிக்கத்தை அறவே ஒழித்துவிட்டான். நாட்டின் முழுநிருவாகத்தையும் தானே பார்த்துவந்தான். நீதி செலுத்துவதில் நடுநிலைமையோடு நடந்துவந்த பால்பன் தன் உறவினர்களையும் கூட அவர்கள் தவறினவிடத்துத் தண்டித்து வந்தான்.

அடிக்கடி மங்கோலியர் படையெடுத்துத் துன்பம் விளைப்பதைத் தடுக்க அவன் பல சிறந்த முறைகளைக் கையாண்டான். எல்லைப்புறக் காவலை இளவரசன் முகம்மதுகானுக்கு அளித்தான். திறமையும் கட்டுப்பாடும் நிறைந்த படையைத் திரட்டி டெல்லி அரசின் பலத்தை அதிகப்படுத்தினான். மங்கோலியர் இரண்டு தடவைகள் (1279, 1285) இந்தியாமீது படையெடுத்தபோதிலும், மேற்கண்ட முறைகளால் பால்பன் அவர்களை முறியடித்துத் துரத்தினான். இரண்டாவது படையெழுச்சியின்போது முகம்மதுகான் போர்க்களத்தில் உயிரிழந்தான்.

மங்கோலியர் படையெழுச்சிக் காலத்தில், வங்கக் கவர்னர் துக்ரில்கான் பால்பனுக் கெதிராகக் கலகம் செய்தான். அதை அடக்குவதற்கு அனுப்பப்பட்ட படைகளை அவன் தோற்கடித்தான். ஆகவே பால்பன் நேரில் சென்று அவனைச் சிறைபடுத்திக் கொன்றான். துக்ரில்கானுடைய நண்பர்கள் கடுந்தண்டனை யடைந்தார்கள். பின்னர் பால்பன் தன் இரண்டாவது புதல்வன் புக்ராகானை வங்காளக் கவர்னராக மித்து, துக்ரிலைப்போல அவன் நடந்தால், துக்ரிலின் கதியே அவனுக்கும் வாய்க்கும்என எச்சரித்துவிட்டுத் திரும்பினான்.

தன்னுடைய அருமைப்புதல்வன் முகம்மது 1285-ல் இறந்துவிட்டதாலும், இரண்டாவது புதல்வன் புக்ராகான் அரசபதவி ஏற்க விரும்பாததாலும், தன் பேரனும் முகம்மதுகானுடைய புதல்வனுமாகிய இளவரசன் கெய் குஸ்ருவைத் தன் வாரிசாக நியமித்துவிட்டுப் பால்பன் 1286-ல் இறந்தான்.

தன் ஆட்சிக்காலத்தில் பால்பன் பல அருங்காரியங்களைச் சாதித்து முடித்தான். அரசபதவியின் கண்ணியத்தையும் மதிப்பையும் அவன் உயர்த்த விரும்பி வெற்றியும் பெற்றான். தாழ்ந்தவர்களையும் விரும்பத் தகாதவர்களையும் அவன் வெறுத்து ஒதுக்கிவந்தான். சூதாடல் போன்ற ஒழுங்கீனமான வழக்கங்களை அவன் விட்டொழித்து, வேட்டையாடுவதில் மட்டும் ஊக்கங் காட்டினான். அவன் மிகுந்த மதப்பற்றுள்ளவன்.

பால்பனுக்குப் பின்னர் பிரபுக்கள் குஸ்ருவைப் புறக்கணித்துப் புக்ராகானுடைய மகன் கைகோபாத்தை அரியணையில் 1286-ல் அமர்த்தினர். சிறிது காலத்திற்குள் குஸ்ரு கொல்லப்பட்டான். கைகோபாத் ஒழுங்கீனமாக நடந்தான். அவன் தந்தை புக்ராகானின் அறிவுரைகளும் பயனற்றுப் போயின. பிரபுக்கள் இந்தச் சீர்கேடான ஆட்சியை ஒழிக்கத் துணிந்து, கில்ஜி வமிசத்தைச் சேர்ந்தவனும், அரசாங்கத்தில் உயர்பதவி வகித்தவனுமாகிய ஜலாலுதீன் தலைமையில் ஒன்று சேர்ந்தார்கள். ஜலாலுதீன் சுல்தான் கைகோபாத்தைக் கொன்று 1290-ல் அரியணை யேறினான். இவ்வாறாக 1206-ல் ஏற்பட்ட அடிமை வமிசம் 1290-ல் முடிவுற்றது.

கில்ஜி வமிசத்தின் முதல் அரசன் ஜலாலுதீன் (ஆ. கா.1290-96) கருணை, அன்பு, எளிமை ஆகிய தன்மைகள் கொண்டவனாதலால் சுல்தானுடைய மதிப்பும் அதிகாரமும் குறைந்தன. இவன் ஆட்சியின் இறுதியில் இவனுடைய மருமகன் அல்லாவுதீன் இவனை வஞ்சகமாகக் கொன்று, அல்லாவுதீன் கில்ஜி என அரசாண்டான்.

அல்லாவுதீன் கில்ஜி (ஆ. கா.1296-1316) ஆண்ட காலம் முஸ்லிம் அரசின் வரலாற்றில் முக்கியமானதாகும். நாட்டு நிருவாகத்தில் பல முக்கியச் சீர்திருத்தங்களைத் துணிவுடன் செய்து, அவற்றை நிறைவேற்றி, ஒழுங்கும் அமைதியும் நிலைபெறச் செய்தான். முஸ்லிம்அரசின் பலவீனத்தைப் போக்குவது, இந்து மன்னர்-