பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/699

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

634

இந்தியா

அரசாங்கத்தினுடைய மதிப்பையும் உயர்வையும் பெருக்கி வந்தனர். சக்கரவர்த்திக்கு ஆட்சி சம்பந்தமாக ஆலோசனை கூறுவதற்கு மந்திரிகளும், மற்ற உத்தியோகஸ்தர்களும் பிரபுக்களும் அடங்கிய மஜ்லிஸ் என்னும் சபையொன்று இருந்தது. அக்பர் காலத்தில் இச்சபையில் இருபது அங்கத்தினர்கள் இருந்தார்கள். பொதுவாக அரசியல் விஷயங்களை ஆலோசிப்பதற்கும், அவைபற்றிச் சக்கரவர்த்திக்கு ஆலோசனை கூறுவதற்கும் இச்சபை கூட்டப்படுவது வழக்கம். ஆனால் இச்சபையின் தீர்மானப்படி சக்கரவர்த்தி நடக்கவேண்டும் என்பதில்லை. மொகலாய அரசாங்கம் ஒரு தனி மனிதனுடைய ஆட்சியே யாகும். அரசனுடைய மந்திரிகள் தங்கள் மன்னர் விருப்பத்தை ஆட்சிமுறையில் நடத்தி வைக்கும் செயலாளர்களாகவேதான் இருந்தனர்.

மொகலாயப் பேரரசு 17ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் 15 மாகாணங்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. தற்கால வட இந்திய இராச்சியம் ஒன்றின் பாதியளவுதான் அக்பர் காலத்தில் மாகாணம் ஆகும்'. ஒவ்வொரு மாகாணத்தின் முழு நிருவாகமும் சுபேதார் என்ற அரசப் பிரதிநிதியின் கீழ் இருந்தது. ஒவ்வொரு சுபேதாரும் தனது சுபாவில் சக்கரவர்த்தியைப்போல் அதிகாரம் வகிக்க விரும்பினான். சுபேதாரைத் தவிரத் தலைமை நீதிபதி, திவான் போன்ற வேறு சில உத்தியோகஸ்தர்களும் மாகாணங்களில் வேலை பார்த்து வந்தனர். மாகாணங்களின் மீது மத்திய அரசாங்கத்தின் மேற்பார்வை அதிகமாயில்லை.

மாகாணம் ஒவ்வொன்றும் பல சர்க்கார்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. ஜில்லாவுக்குத் தலைமை அதிகாரி பவுஜுதார். கலகக்காரர்களை அடக்குவதும் வரிவசூல் செய்வதும் இவனுடைய கடமைகள். மாகாணத் தலைவன் கீழ் இவன் வேலை பார்த்தாலும், இவனை நியமிப்பதும் மாற்றுவதும் மத்திய அரசாங்கத்துக்கு உரியவை. ஒரு சர்க்கார் பல பர்கனாக்களாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பர்கனாவின் தலைவன் சௌதரி. நகரத்துக்குத் தலைவன் கொத்தவால். தற்காலத்தில் நகரசபைகள் செய்யும் வேலையையும் போலிஸ் சூப்பரின்டெண்டென்ட் செய்யும் வேலையையும் அவன் ஒருங்கே கவனித்து வந்தான். குற்றவாளிகளைத் தன் விருப்பம்போல் தண்டிக்க அவனுக்கு அதிகாரம் இருந்தது.

வரி வசூல் முறையை மொகலாயப் பேரரசில் கையாண்டவன் அக்பருடைய நிதி மந்திரியான ராஜா தோடர்மால். இம் முறையின்படி நிலங்களெல்லாம் ஒழுங்கான கருவிகளால் அளக்கப்பட்டன. நிலங்கள் பயிரிடப்படும் முறையில் மூன்று வகையாகப் பிரிக்கப்பட்டன. விளை பொருள்களில் மூன்றில் ஒரு பங்கு அரசாங்கத்துக்குச் சேரவேண்டிய நிலவரியாகக் கருதப்பட்டது. இவ்வரி விகிதம் பார்வைக்குப் பழைய இந்திய விகிதத்தைக் காட்டிலும் மிக அதிகமாகவும் ஷெர்ஷாவின் வரி விகிதத்தைக் காட்டிலும் அதிகமாகவும் தோன்றினும், உண்மையில் உழவர்களுக்கு இந்த வரி விகிதத்தினால் எவ்வித இன்னலும் இல்லை. அவர்கள் வரிவிகிதம் அதிகமென்று கருதினால் வரி குறைக்கப்பட்டது. முன்னர் வசூலிக்கப்பட்டுவந்த ஜசியாவும் வேறு பல வரிகளும் எடுபட்டுவிட்டன. இத்திட்டம் மிகவும் வியக்கத்தக்கது. மொகலாயப் பேரரசில் இத்திட்டம் பத்து மாகாணங்களில் கையாளப்பட்டது. முற்கூறிய திட்டத்தால் உழவர்கள் நேரடியாக அரசாங்கத்தோடு தொடர்புகொண்டிருந்தார்கள்.

சேனையை அமைப்பதில் ஷெர்ஷா, அல்லாவுதீன் முதலியவர்கள் கையாண்ட முறைகளினின்றும் அக்பர் தவறிவிட்டான். சுமார் 22,000 வீரர்கள் அடங்கிய சேனையொன்று அக்பர் காலத்தில் நிலைப்படையாக இருந்தது. மன்சப்தார்களிடத்தும், விசுவாசமுள்ள சுமார் இருபது தலைவர்களிடத்துந்தான் அக்பர் ராணுவ பலத்திற்காக நம்பிக்கை வைத்திருந்தான். ஆகவே அவனது ராணுவமானது பல குறைபாடுகள் உள்ளதாயிருந்தது. மன்சப்தார்களையடக்கிக் குறிப்பிட்ட எண்ணிக்கையுள்ள குதிரைப் படைகள் வைத்துக்கொள்ளுமாறும், மன்சப்தாரி முறையில் சீர்கேடுகள் எவையும் இல்லாமல் இருக்குமாறும் அக்பர் பார்த்துக்கொண்டபோதிலும், மன்சப்தார்கள் கையாண்ட தவறான வழிகளை ஒழித்து, மன்சப்தாரி முறையைச் செம்மையும் வலிவும் கொண்ட அமைப்பாக ஆக்குவதற்கு அக்பரால் இயலவில்லை. மன்சப்தார்கள் குறிப்பிட்ட அளவு குதிரைப்படைகள் வைத்துக்கொள்ளாமல் மத்திய அரசாங்கத்தை ஏமாற்றிவந்தார்கள். படைகள் புறப்பட்டுச் செல்லும்போது மிக்க ஆடம்பரத்தோடு செல்வது வழக்கம். இம்மாதிரியான குறைபாடுகளால் அக்பருடைய படைகள் வலிமையற்று இருந்தன. இருந்தபோதிலும் தன் கையிலுள்ளவற்றைக்கொண்டு காரியத்தைச் சாதித்துக்கொள்ளும் அக்பரின் திறமையால் அப்படைகள் வெற்றியடைந்தன.

முதலில் அக்பர் முஸ்லிம் மதப்பற்று மிகுந்துதான் இருந்தான். பிறகு மற்றச் சமயங்களில் அடங்கியுள்ள உண்மைகளையறிய ஆவல்கொண்டு, இந்து மதம், ஜைன மதம், கிறிஸ்தவ மதம் இவற்றின் பிரதிநிதிகளோடு கலந்து, அவரவர்கள் மதங்களின் முக்கியக் கொள்கைகளைத் தெரிந்துகொண்டான். அம்மதத்தினர்கள் மத வாதத்துக்கென்று சிக்ரி நகரில் அக்பரால் கட்டப்பட்ட வழிபாட்டு இல்லத்தில் தத்தம் மதக்கொள்கைகள் பற்றி விவாதித்தனர். 1582-ல் அக்பர் முஸ்லிம் மதக் கொள்கைகளில் இருந்த சிக்கல்களை ஆராய்ந்து முடிவுகூறும் அதிகாரத்தைப் பெற்றான். இதனால் உலகியலில் மட்டுமன்றி மத விஷயங்களிலும் அக்பர் அதிகாரம் பெற்றான். பல மதங்களின் உண்மைகளையும் அறிந்த அக்பர் எந்த மதத்தினாலும் முழு நிம்மதி அடையவில்லை. ஆகவே எல்லா மதக் கொள்கைகளையும் ஒன்று சேர்த்துத் தின் இலாஹி என்னும் ஒரே கடவுள் வழிபாடுள்ள ஒரு மதத்தைப் பிரசாரம் செய்யத் தொடங்கினான் (1582). இம்மதத்தின் முக்கியக் கொள்கையாவது : “அல்லாவைத் தவிரக் கடவுளில்லை; அக்பர் அவருடைய மதத்தைப் பரப்பும் தீர்க்கதரிசி ” என்பதுதான். அக்பருடைய மதம் இன்னதென்று ஒருவராலும் தெளிவாகக் கூறமுடியவில்லை. ஒவ்வொரு மதத்தவனும் அக்பரைத் தன்தன் மதத்தைச் சேர்ந்தவனாகக் கருதினான். அக்பர் உண்மையில் சிறந்த கடவுள் நம்பிக்கை உடையவன்.

அக்பர் இந்துக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றுபடுத்திப் புதியதோர் சமுதாயத்தைக் காண விரும்பியவன். 1562-ல் ஓர் இந்துப் பெண்ணை மணந்து, அவள் வயிற்றில் உதித்த சலீமைத் தன் வாரிசாக ஏற்றுக்கொண்டான். அவன் 1563-64-ல் இந்துக்கள் செலுத்திய யாத்திரை வரி, ஜசியா ஆகியவற்றை நீக்கினான். இந்துக்களைப்போல் நெற்றியில் திலகம் வைத்துக்கொண்டு, இந்துக் கொள்கைகளைக் கையாள முனைந்தான். இஸ்லாமியரும் இந்துக்களும் கலப்புமணம் செய்து கொள்ளுமாறு செய்தான். இந்துக்களிடையே நிலவிய குழந்தை மணம், விதவை மறுமணத்துக்கு எதிர்ப்பு, சதி ஆகியவற்றைச் சட்டவிரோதமாக்கித் தடுத்துத் தானே இந்துப் பெண்களை மணந்து, கலப்புமணத்தை நாடெங்கும் பரப்பினான். இந்துக்களில் பலர் உயர்ந்த உத்தியோகங்-