பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

முகவுரை


தமிழ் மொழி மிகவும் பழமையானது ; பேச்சு வன்மையிலும் இலக்கிய வழக்கிலும் அழிவின்றிச் சிறந்து விளங்குவது; உலகப் பொதுமறை எனத்தகும் திருக்குறளையும், ஒப்புயர்வற்ற சங்க நூல்களையும், சிறந்த காவியங்களான சிலப்பதிகாரம், பெரிய புராணம், கம்ப ராமாயணம் போன்ற நூல்களையும் உடையது. எனினும் இச் சிறப்புக்களுடன் தற்கால வாழ்க்கைக்குரிய பிற கலைச் செல்வங்களும் தமிழிற்கு இன்றியமையாத தேவையாகும். எட்டுத் திக்கினும் உள்ள கலைகளையும் தன் அகத்தே பெற்று நம்மொழி வளம் பெற்றால்தான் தமிழ் மக்கள் அறிவிலும் ஆற்றலிலும் ஏனைய நாட்டு மக்களுடன் சமத்துவமாக அல்லது அவர்களினும் சிறப்பாக வாழ முடியும். இவ்வுயர்ந்த அறிவு பெற உதவியாயிருக்கக் கலைக் களஞ்சியம் ஒன்று வெளிவர வேண்டும் என்பது தமிழ் அறிஞர்களின் நெடுநாளைய அவா. ஆனால், இது வெளிவருவதற்கு அவசியமான ஏராளமான தொகையும், இந்த வேலையின் மகத்தான தன்மையும் கடக்க முடியாத மலைகள் போலத் தோன்றி, இப்பணியை நடைபெற வொட்டாமல் தடுத்தன. மற்ற நாடுகளில் இயற்றப்பெற்ற கலைக்களஞ்சியங்கள் பலருடைய நீண்ட கால முயற்சியின் பயனாகவே வெளிவந்தன. எனவே கலைக்களஞ்சிய வெளியீடு தனிப்பட்டவர்களோ, தனிச் சங்கங்களோ மேற்கொள்வதற்கு இயலாத தென்றும், அரசாங்கம் அல்லது பல்கலைக்கழகந்தான் மேற்கொள்வதற் குரியதென்றும் கருதப்பட்டு, இதைச் செய்யும் முயற்சிகள் கைவிடப்பட்டன.

1947-ல் தமிழ் வளர்ச்சிக் கழகம் ஏற்பட்டது. 1947 ஆகஸ்டு மாதம் 15ஆம் தேதி இந்தியா பூரண சுதந்திரம் பெற்ற நாள். அன்று, நாடு முழுவதும் மக்கள் மனத்தில் உற்சாகம் கரைபுரண்டு ஓடிற்று, ஒரு நூற்றாண்டின் முயற்சி, பல தலைமுறைகளின் கனவு நனவான நாளன்றோ அந்நாள்? எங்கும் மகிழ்ச்சியின் அறிகுறிகள். எல்லோர் உள்ளத்திலும் எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையான எண்ணங்கள், அரும்பெருஞ் செயல்களை மேற்கொள்ள வேண்டும், மேற்கொண்டால் முடிக்க முடியும் என்ற உறுதியான கருத்துக்கள் அன்று தோன்றின. மக்கள் உள்ளத்தில் பொங்கி எழுந்த இந்த உற்சாக வெள்ளத்தைச் செயல் என்ற வாய்க்கால் வழியே கரைகோலிச் செலுத்தினால் நற்பயன் விளையும் என்ற எண்ணம் எனக்குத் தோன்றிற்று. இந்த மேலான சந்தர்ப்பத்தில் கலைக்களஞ்சியம் ஒன்றை ஆக்கும் அரிய வேலையில் நாம் ஈடுபட வேண்டும் என்ற அறிக்கை ஒன்றைத் தமிழ் வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் சுதந்திர தினத்துக்கு முந்தின நாள் வெளியிட்டிருந்தேன். நண்பர்கள் அனைவரும் அதை அன்புடன் வரவேற்றார்கள். தமிழ் அன்பர் பலர் அதற்கு உதவ முன்வந்தார்கள். டாக்டர் ஆர்எம். அளகப்ப செட்டியார் முதன்முதல் ரூ. 10,001/- அளிப்பதாக வாக்களித்தார். ராஜா சர் எம். ஏ. முத்தைய செட்டியாரும், தருமபுர ஆதீனத் தலைவரும் இவ்வரிய பணிக்குத் தனித்தனியே அதே தொகை அன்புடன் வழங்கினார்கள். காலம் சென்ற திரு டி. ஏ'. ராமலிங்க செட்டியாரும், மற்றும் திரு. கருமுத்து தியாகராஜ செட்டியார், திரு. ட்ரோஜன் அண்ணாமலைச் செட்டியார், திரு. ரா. கிருஷ்ண மூர்த்தி, திரு. வீ. எஸ்.