பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/705

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

640

இந்தியா

களும், உபகாரச் சம்பளம்போன்ற தம் உரிமைகளை இழந்த மன்னர்களும், மனக்கொதிப்படைந்த வீரர்களும், மதப்பற்றுடைய மக்களும் ஆங்கில ஆட்சியை நீக்கிச் சுதந்திரமடைய விரும்பினர். நானா சாகிப், ராணி லட்சுமிபாய், தாந்தியாதோபி ஆகியவர்கள் தலைமை வகித்துப் போரை நடத்தினர். சிறிது காலம் கழித்து, நீல், ஹாவ்லக், சர்காலின் காம்பெல், ரோஸ் ஆகிய ஆங்கிலத் தளபதிகள் லட்சுமணபுரி, ஜான்சி போன்ற இடங்களைக் கைப்பற்றிக் கிளர்ச்சித் தலைவர்களைத் தோற்கடித்தனர். 1858ஆம் ஆண்டு ஜூலையில் கிளர்ச்சி அடக்கப்பட்டுவிட்டது. கானிங் கிளர்ச்சி செய்தவர்களைக் கொடுமையாக நடத்த விரும்பவில்லை. அதனால் அவன் காருண்ய கானிங் (Clemency Canning) என வழங்கப்பட்டான்.

இதற்குப் பின்னால் கம்பெனியின் ஆட்சி முடிவடைந்து, ஆங்கில அரசாங்கமே இந்திய ஆட்சியை ஏற்றுக்கொண்டது. 1858 ஆகஸ்டில் இந்திய அரசியல் சட்டம் லண்டன் பார்லிமென்டில் நிறைவேறியது. நவம்பரில் விக்டோரியா அரசி ஒரு பேரறிக்கையை வெளியிட்டு, இந்தியர்களுக்குப் பல உரிமைகள் அளிப்பதாக உறுதியளித்தார். கவர்னர் ஜெனரல் இதுமுதற் கொண்டு இந்தியாவில் ராஜப்பிரதிநிதி பதவியையும் வகித்தான். கானிங் பிரபுதான் முதல் ராஜப் பிரதி நிதியானான். எஸ். தி.

1858 - 1950 : அரசியல் மாற்றங்கள் : 1857-ல் தோன்றிய இந்தியக் கிளர்ச்சியை ஒடுக்கிய பின் ஆங்கிலேயர்கள் இந்திய அரசாங்கத்தில் பல மாறுதல்களைச் செய்தனர். கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆட்சியை அகற்றி, பிரிட்டிஷ் அரசாங்கமே இந்திய அரசியலை மேற்கொண்டது. பிரிட்டிஷ் மந்திரிசபை அங்கத்தினராகிய இந்தியா மந்திரியிடம் (Secretary of State) இந்நாட்டு அரசாங்கப் பொறுப்பு அளிக்கப்பட்டது. அவருக்கு உதவியாக 15 அங்கத்தினர்களடங்கிய சபை ஒன்றும் அமைக்கப்பட்டது.

புதிய அரசியல் தோன்றியவுடன் விக்டோரியா மகா ராணியாரின் பேரறிக்கை 1858 நவம்பர் முதல் தேதியன்று வெளியிடப்பட்டது. இந்திய மக்களுடனும், உள் நாட்டு மன்னர்களுடனும் ஏற்கெனவே கம்பெனியார் செய்திருந்த ஒப்பந்தங்களை ஆங்கில அரசாங்கம் ஆதரிப்பதாகவும், இந்திய மக்களை அரசாங்க உத்தியோகங்களில் அமர்த்தும் விஷயத்தில் சாதி, மத வேற்றுமையின்றி நடத்துவதாகவும் இவ்வறிக்கை உறுதி கூறியது.

1858-க்குப்பின் படிப்படியாக இந்திய மக்களைச் சட்டசபையிலும் அரசியலிலும் சேர்த்துக்கொள்ள முற்பட்டனர். 1861-ல் இயற்றப்பட்ட இந்தியக் கவுன்சில் சட்டப்படி கவர்னர் ஜெனரலின் நிருவாக சபைக்கு ஐந்தாவது அங்கத்தினர் சேர்க்கப்பட்டதோடு, சட்டம் இயற்றும் காலத்தில் அச்சபைக்கு 12க்கு மேற்படாமல் வெளியிலிருந்து அதிகப்படியான அங்கத்தினர்களைச் சேர்த்துக்கொள்ளவும் உரிமை அளிக்கப்பட்டது. அவ்வாறு நியமிக்கப்பட்ட புது அங்கத்தினர்களில் பாதி அரசாங்க உத்தியோகமற்றவர்களாக இருத்தல் வேண்டும். மாகாணச் சட்டசபைகளும் இம்முறையில் மாற்றி அமைக்கப்பட்டன. ஆனால், இச்சட்டத்தில் பல குறைகள் இருந்தன. முதலாவதாகச் சட்டமியற்றும் வகையில் மாகாணச் சபைகளுக்கும் பொதுச்சபைக்கும் அதிகாரங்கள் வரையறுக்கப்படவில்லை.

இரண்டாவதாக, அரசாங்கத்தைக் கண்டிக்கவோ, கேள்வி கேட்கவோ சட்ட சபைகளுக்கு உரிமை அளிக்கப்படவில்லை. மேலும், அங்கத்தினர்கள் பொது மக்களின் பிரதிநிதிகளெனக் கருதத்தக்கவர்களாயில்லை. உத்தியோகஸ்தரல்லாத அங்கத்தினர்கள் பலரும் ஜமீன்தார்கள், சிற்றரசர்கள், அமைச்சர்கள் ஆகியவர்களைப் போன்றவர்களே.

இதனிடையே மேனாட்டுக் கொள்கைகள் இந்தியாவில் பரவிவந்ததன் பயனாக இந்நாட்டில் சுதந்திர இயக்கம் தோன்றியது. 1885-ல் அமைக்கப்பட்ட இந்தியத் தேசியக் காங்கிரசுச் சபை விரைவில் மக்கள் உரிமைகளை வற்புறுத்த முனைந்தது. இவர்கள் விருப்பத்தை ஒருவாறு நிறைவேற்றக் கருதியே அரசாங்கம் 1892-ல் மற்றும் ஒரு சட்டத்தை அமலுக்குக்கொண்டு வந்தது. இதன்படி கவர்னர் ஜெனரலின் சபையில் அதிகப்படி அங்கத்தினர்களாக 16 உறுப்பினர் வரையிலும், மாகாணச் சபைகளில் 20 பேர் வரையிலும் சேர்க்கப்படலாம். இச்சபைகளுக்கு வரவு செலவுத் திட்டத்தைப் பற்றி விவாதிக்கவும், பொது விஷயங்களைப்பற்றிக் கேள்விகள் கேட்கவும் உரிமை இருந்தது. ஆயினும், அங்கத்தினர்கள் பொதுமக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவரல்லர். பல்கலைக்கழகம், நகராண்மைக் கழகம் முதலியவைகள் தாம் அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்பின.

1892-ல் வகுத்த சட்டம் அனைவருக்கும் அதிருப்தியை அளித்தது. பாலகங்காதர திலகர் போன்ற தேசியத் தலைவர்கள் அச்சட்டத்தைக் கண்டித்தனர்.

கர்சன் பிரபு வைசிராயாக இருந்த காலத்தில் (1898-1905) அவருடைய செயல்கள் நாட்டு மக்களுக்கு வருத்தத்தையும் ஆத்திரத்தையும் உண்டுபண்ணின. அவர் வகுத்த வங்காளப் பிரிவினையையொட்டிப் பெருங்கிளர்ச்சி தோன்றியது.

மக்களுக்கு ஆறுதலளிப்பதற்காக 1909-ல் மின்டோ - மார்லி சீர்திருத்தச் சட்டம் இயற்றப்பட் டது. இதன்படி சட்ட சபைகளில் அங்கத்தினர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. கவர்னர் ஜெனரலின் சபையில் அதிகப்படியாக 60 அங்கத்தினர் வரையிற் சேர்க்க அனுமதி அளிக்கப்பட்டது. அன்றியும், அங்கத்தினர்களைத் தேர்ந்தெடுக்கும் முறையும் முதன் முதல் கையாளப்பட்டது.

முகம்மதியர்களுக்கென்று தனித் தொகுதி அளிக்கப்பட்டது. மாகாணச் சட்ட சபைகளில் பெரும்பாலோர் அரசாங்க அலுவலாளர் அல்லாதவர்களாயிருக்க ஏற்பாடாயிற்று. வரவு செலவுத் திட்டம் பற்றி விவாதிக்கவும் கேள்விகள் கேட்கவும் சட்டசபை அங்கத்தினர்களுக்கு உரிமையளிக்கப்பட்டது.

எனினும், இதையும் பிற்போக்கான சட்டமெனவே மக்கள் பலரும் கருதிவந்தனர். உத்தியோகஸ்தர்களுக்கு இன்னும் அதிகாரம் அதிகமாகவே இருந்தது. பொறுப்பாட்சி அதுவரை ஏற்பட்டதாகவே இல்லை. ஆகவே, மக்கள் மறுபடியும் கிளர்ச்சி செய்யத் தொடங்கினர். அரசாங்கமும் அடக்கு முறையைக் கையாண்டது. 1914-ல், முதல் உலக யுத்தம் தோன்றியபோது, இந்தியா இங்கிலாந்துக்கு உதவி புரிந்தால், போர் முடிந்ததும் பொறுப்பாட்சி கிடைக்குமென இந்திய மக்கள் எதிர்பார்த்திருந்தனர். 1917 ஆகஸ்டு 20-ல் பிரிட்டிஷ் இந்தியா மந்திரி மான்டேகு, இந்திய அரசியல் சம்பந்தமாக அரசாங்கத்தாரின் கொள்கையை விளக்கி ஓர் அறிக்கை வெளியிட்டார். இந்தியர்களுக்குப் பொறுப்பாட்சி அளிப்பதே அரசாங்கத்தின் நோக்கமென்பதும், அதற்குப் படிப்படியாக முறைகள் கையாளப்படுமென்பதும் அறிவிக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து மான்டேகு இந்தியாவுக்கு