பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/708

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

643

இந்தியா

அரசாங்கத்துக்குச் செலுத்த வேண்டிய வரித்தொகை ஏழு லட்சம் ரூபாயையும் உடனடியாகச் செலுத்த வேண்டுமென ஆவாவிலுள்ள உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அந்தத் திட்டத்தைத் தீர ஆராய்ந்து முடிவு செய்யுமாறு டபரின் பிரபு பர்மிய மன்னருக்குச் செய்தியனுப்பினார். இந்திய அரசாங்கம் தமது தனிப்பட்ட விவகாரங்களில் தலையிடுதல் கூடாதெனப் பர்மிய மன்னர் பதிலளிக்கவே மனக்கசப்பு ஏற்பட்டது. அன்றியும் வேறு பல ஆங்கில வர்த்தகர்களும் பர்மா அரசர்மீது பல குறைகள் கூறி, பர்மா முழுவதையும் கைப்பற்றும்படி இந்திய அரசாங்கத்தைத் தூண்டினர். டபரின் பிரபு போர் புரியாமலே, பர்மிய அரசரான தீபாவைச் சிறைப்படுத்திப் பின் உபகாரச் சம்பளம் கொடுத்து இந்தியாவுக்கு அனுப்பிவிட்டு, மேல் பர்மாவை ஆங்கிலேயர் ஆதிக்கத்தில் சேர்த்துக்கொண்டார். இவ்வாறாகப் பர்மா முழுமையும் ஆங்கிலேயருக்குச் சொந்தமாகிவிடவே, அது ஒரு தனி மாகாணமாக்கப்பட்டு, ஒரு கவர்னரின் ஆளுகைக்குள் வந்தது. 1935-ல் தான் பர்மா இந்திய அரசாங்கத்திலிருந்து பிரித்துத் தனி நாடாக அமைக்கப்பட்டது. 1947-ல் பர்மா பிரிட்டிஷாரிடமிருந்து விடுதலை பெற்றது.

உள்நாட்டு அமைதியும் சீர்திருத்தங்களும்: 1858-ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் கீழ் இந்தியா வந்தது முதல் நாட்டில் அமைதி நிலவுவதன் பொருட்டு அரசாங்கம் இடைவிடாது முயன்று வந்தது. இந்தியப்படை நவீன முறையில் அமைக்கப்பட்டதோடு, இந்தியர்களும் வெகுவாகப் படையில் சேர்த்துக்கொள்ளப்பட்டனர். கம்பெனியின் ஆட்சி முடிவு பெற்றபின் முதலாவது வைசிராயான கானிங் பிரபுவின் காலத்தில் இந்தியன் பீனல் கோடு என்ற குற்றத் தண்டனைச் சட்டம் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. அதைத் தொடர்ந்து சிவில் நடைமுறைச் சட்டம் (Civil Procedure Code), கிரிமினல் நடைமுறைச் சட்டம் (Criminal Procedure Code) என்னும் சட்டத் தொகுதிகளும் உருவாக்கப்பட்டன.

19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அரசாங்கத்தார் மக்களின் பொருளாதாரநிலை, வாழ்க்கைத்தரம் முதலியவற்றைச் சீர்திருத்த நன்கு முயன்றனர். இருப்புப்பாதைகள், தபால், தந்திபோன்ற வசதிகளைப் பெருக்குவதற்கு நாட்டின் வருமானத்தின் பெரும்பகுதியை அரசாங்கம் செலவு செய்தது. விவசாயம், வாணிகம், கைத்தொழில் முதலிய துறைகளில் பல சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. ஆயினும், இந்தியாவின் பரப்பளவு, மக்கள் தொகை, இயற்கைவளம் இவற்றிற்கு ஏற்றவாறு நாட்டை முன்னேறும்படி செய்யப்படாமையைக் குறித்தும், ராணுவத்திற்கும் அரசாங்க உத்தியோகஸ்தர்களுக்குமாகப் பெருவாரியான தொகை செலவிடப்படுவதை எதிர்த்தும், தேசிய உணர்ச்சி பெற்ற தலைவர்கள் போராடினர். மேலும், நாளடைவில் மக்களாட்சியை அமைக்கும் பொருட்டுப் பொது மக்களுக்குப் போதிய வசதிகள் அளிக்கப்படவில்லையென்ற புகார் மற்றொரு பக்கம் தோன்றியது.

கிராமக் குடிகள் தத்தம் கிராமங்களில் பணம் வசூலித்துப் பொதுமக்கள் நிருவாக சபைகளைக் கொண்டு கல்வி, சுகாதாரம், உள்நாட்டுப் பாதைகள் முதலியவற்றிற்காக அதைச் செலவு செய்துகொள்ள முதன் முதலாக வசதி அளிக்கப்பட்டது, வைசிராய் மேயோ பிரபுவின் காலத்தில்தான் (1869-72). பிற்காலத்தில் கிராமங்களிலும் சிறு நகரங்களிலும் மக்கள் ஆட்சி முன்னேற இது அடிப்படையாயிற்று. ஆனால் இத்துறையில் ரிப்பன் பிரபுவின் காலத்தில் தான் (1880-84) மிகவும் முக்கியமான சட்டம் இயற்றப்பட்டது. இவர் பொதுமக்களின் பிரதிநிதிகளின் அதிகாரத்தையும் பொறுப்பையும் பெருக்கி, மேற்பார்வை செய்துவந்த அரசாங்க அதிகாரிகளின் ஆதிக்கத்தைக் குறைக்க முயன்றார். அவருடைய சிறந்த, விரிவான கொள்கைகளை அவருக்குப்பின் வந்தவர்கள் பலர் பின்பற்றவில்லையாயினும், ரிப்பன் பிரபுவின் சட்டம், தலசுய ஆட்சி பின்னர் ஓங்கி வளர்வதற்கு அடிப்படையாய் விளங்கிற்று.

கர்சன் பிரபு வைசிராயாக இருந்த காலத்தில் (1898-1906) தல சுய ஆட்சிக்குச் சற்றுச் சோர்வு நேர்ந்தது. கல்கத்தா நகர சபையில் மக்கள் பிரதிநிதிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. கர்சன் பிரபு சுயாட்சியைவிட வலுவுற்ற, ஊக்கம் குன்றாத ஆட்சியே மேலென்னும் கொள்கையுடையவர். இம்மனப்பான்மை அவரால் ஏற்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள் பலவற்றில் தெளிவாயிற்று. இது அவரது ஆட்சியில் ஒரு பெருங்குறையேயாயினும், மக்களுக்கு நன்மை விளைவித்த பல சீர்திருத்தங்களையும் அவர் செய்தார். விவசாயம், வாணிகம், கைத்தொழில் முதலிய துறைகளில் ஈடுபட்டிருக்கும் மக்களுக்குப் பொருள் சேமிக்க வசதி அளிக்கும் பொருட்டுக் கூட்டுறவுச் சங்கங்களை நிறுவினார். ஆயினும் மக்களின் பொருளாதார நிலை குன்றியே இருந்தது. பழைய கட்டடங்கள், கல்வெட்டுக்கள், நாணயங்கள் முதலியவற்றைப் பாதுகாத்து ஆராய்ச்சிகள் செய்வதற்காகத் தொல்பொருளியல் இலாகா (Archaeological Department) ஒன்றும் ஏற்படுத்தப்பட்டது. உலகத்தின் முன்னணியில் நிற்கும் பல நாட்டு மக்களின் சராசரி வருமானத்தைவிட இந்திய மக்களின் சராசரி வருமானம் மிகக் குறைவாக இருந்தது. அடிக்கடி பஞ்சம் உண்டாயிற்று. பஞ்சத்தின் கொடுமையை அகற்ற அரசாங்கத்தார் பல நிவாரண வேலைகளை மேற்கொண்டாலும், குறிப்பிடும் வகையில் மாறுதல் ஒன்றும் ஏற்பட்டதாகக் கருத முடியாது. இரண்டாவது உலக யுத்த காலத்தும், அதற்குப் பின்னும் உணவுப் பொருள்கள் குறைவால் மக்கள் பட்ட துன்பத்திற்கு ஓர் அளவில்லை.

கல்வி : மக்களின் கல்வியை வளர்க்கக் கிழக்கிந்தியக் கம்பெனியாரின் ஆட்சிக் காலத்திலே துரைத்தனத்தார் முயற்சி எடுத்துக்கொண்டனர். 1835-ல் கல்வி விஷயமாகப் பிரிட்டிஷ் அரசாங்கம் வெளியிட்ட ஓர் அறிக்கையின்படி கல்வியின் பொருட்டுத் துரைத்தனம் செலவு செய்யும் பணம் முழுதும் மேனாட்டுக் கல்விக்காகவே வினியோகிக்கப்பட வேண்டுமெனக் கட்டளையிடப்பட்டது. 1854-ல் சர் சார்ல்ஸ் உட் என்பவரின் அறிக்கை ஆரம்பக் கல்வி முதல் உயர் தரக் கல்வி வரையில் முற்றிலும் பயிற்றுவிக்க ஒரு முறையை வற்புறுத்தியது. பெயர் பெற்ற இச் சாசனம் நாட்டு மொழிகளைப் போற்றிப் பெருக்க வசதியளித்தது.

வைசிராய் கானிங் பிரபுவின் காலத்தில் கல்கத்தா, பம்பாய், சென்னை ஆகிய நகரங்களில் பல்கலைக்கழகங்கள் நிறுவப்பட்டன. 1904-ல் கர்சன் பிரபு அமலுக்குக் கொண்டுவந்த ஒரு சட்டத்தின்படி, கல்லூரிகளுக்கும் பல்கலைக் கழகங்களுக்கும் இருந்த தனி உரிமைகள் சற்றுக் குறைக்கப்பட்டன. ஆயினும் கல்வி ஓங்கி வளர்ந்ததென்பதற்கு ஐயமில்லை. உயர்தரக் கல்வி பெற்ற இந்திய இளைஞர் மேனாடுகளுக்குச் சென்று, பயின்று வரலாயினர். அதையொட்டி விஞ்ஞான ஆராய்ச்சி பெருகிற்று. கர்சன் பிரபு காலத்தில் டைரக்டர் ஜெனரல் என்ற கல்வியிலாகாத் தலைமை-