பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/720

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

655

இந்தியா

நாட்டுக் கூர்ஜர அரசன் மிஹிரபோஜன் துருவனைத் தாக்க ஆரம்பித்ததும், துருவன் II-ம் அமோகவர்ஷனுடன் சமாதானம் செய்துகொண்டு (860), பிற பகைவர்களை வென்று தன் பதவியைக் காப்பாற்றிக்கொண்டான் (867). பங்கேசன் திரும்பிச் சென்ற பிறகு குணகவிஜயாதித்தன் கங்கனுடன் போர் புரிந்தான். அவன் நுளம்ப நாட்டின் வழியே கங்க நாட்டிற்கு வரவேண்டியிருந்ததால் மங்கி எனப்பட்ட நுளம்ப அரசனைப் போரில் கொன்றான். பிறகு கங்க நாட்டையடைந்து, நீதிமார்க்கனை அமோகவர்ஷனுக்குக் கீழ்ப் படியுமாறு செய்தான். அமோகவர்ஷன் போர் விருப்பற்றவன். சில வேளைகளில் அரசு தொழிலைத் துறந்து, சமண முனிவருடன் கலந்து, தியானத்திலும் வேதாந்தத்திலும் ஈடுபடுவதுண்டு. பிரச்னோத்தர ரத்ன மாலை யென்ற ஒரு சிறு சமண நூல் அவனால் இயற்றப்பட்டதென்பர். அவன் கவிராஜமார்க்கம் என்ற கன்னட நூலும் இயற்றியவன். அவனுக்குப் பின் அவன் மகன் II-ம் கிருஷ்ணன் பட்டம் பெற்றான் (880).

கி. பி. ஒன்பதாம் நூற்றாண்டிலிருந்து சு. 350 ஆண்டுகள் வரையில் தமிழ்நாடு சோழ இராச்சியமாக விளங்கிற்று. அவர்கள் படைகள் வடக்கே கங்கை வரையிலும் கிழக்கே சமுத்திரத்திற்கப்பால் கடாரம், ஸ்ரீ விஜயம் வரையிலும் சென்று வெற்றிகள் பெற்றன. அவர்கள் ஆட்சிக் காலத்தில் தமிழ்நாடு எல்லா வகையிலும் சிறப்புற்றுத் தமிழ்க் கலைகளும் சிறந்தோங்கின. இலக்கியம், சிற்பம், ஓவியம் முதலியவை அக்காலத்திற்போல வேறு எக்காலத்திலும் வளர்ச்சி பெறவில்லை. அரசாட்சியும் எண்ணிறந்த கிராம சபைகளாலும் அரசாங்க உத்தியோகஸ்தராலும் வெகு நன்றாக நடத்தப் பெற்றதற்கு நூற்றுக்கணக்கான சாசனங்கள் அத்தாட்சியாகும். கடைசியாகப் பன்னிரண்டாம் நூற்றாண்டின் இறுதியில் சோழரும் சாளுக்கியரும் சளைத்தனர். அவர்களுக்கு நெடுங்காலம் உட்பட்ட சிற்றரசர்கள் தலையெடுத்துச் சுயஆட்சியைத் தாபித்தனர். இவர்களில் முக்கியமானவர்கள் தெற்கே பாண்டியரும் ஹொய்சளரும்; வடக்கே யாதவரும் காகதீயரும். பதினான்காம் நூற்றாண்டின் துவக்கத்தில் இவர்களெல்லோருக்கும் வட இந்தியாவில் டெல்லியில் வேரூன்றிப்போன முகம்மதிய சுல்தான்களால் விபத்து நேர்ந்தது. அதை நீக்கப் பல முயற்சிகள் நடந்தன. அவற்றின் பயனாக விஜயநகர சாம்ராச்சியம் ஏற்பட்டது.

கி. பி. 850க்குச் சற்று முன்பாக விஜயாலய சோழன் பாண்டியச் சிற்றரசர் முத்தரையரிடமிருந்து தஞ்சை நகரைப் பிடித்துக்கொண்டான். அப்போது அவன் பல்லவரின்கீழ்ச் சிற்றரசனாக இருந்திருக்கவேண்டும். அதற்குப்பின் பாண்டியன் II-ம் வரகுணவர்மன் பல்லவர் மீது படையெடுத்து வந்தபோது பல்லவ நிருபதுங்கன் மகனும் இளவரசனும் ஆகிய அபாரஜிதன் அவனை எதிர்த்தான். அபராஜிதன் பக்கம் சோழன் I-ம் ஆதித்தனும், கங்கன் I-ம் பிருதிவீபதியும் சேர்ந்தனர். கும்பகோணத்துக்கருகில் திருப்புறம்பயத்தில் பெரும்போர் நிகழ்ந்தது (880). இதில் பிருதிவீபதியும் வரகுணவர்மனும் உயிர் நீத்தனர். அபராஜிதன் வெற்றி பெற்றான். ஆதித்தனோ இதுமுதல் தன் ஆதிக்கத்தை வளர்ப்பதே கருத்தாகக் கொண்டான். தொண்டை மண்டலத்தின்மீது படையெடுத்து, அபராஜிதனையே ஒரு போரில் கொன்று வீழ்த்திப் பல்லவரை வென்றான். பல்லவர் அரசு முடிந்து, சோழர் ஆதிக்கம் பெருகி, ராஷ்டிரகூடருடன் போட்டிக்குத் தயாராக நின்றனர் (890). கங்க அரசன் I-ம் பிருதிவீபதியின் பேரன் II-ம் பிருதிவீபதி ஆதித்தனுடைய ஆதிக்கத்தை அங்கீகரித்தான். காவேரிக் கரையெங்கும் சிவபெருமானுக்குப் பல கோயில்களைக் கட்டினான். இவன் காளத்திக்கருகில் தொண்டை நாட்டெல்லையில் இறந்தான். அங்கு அவனுக்கு ஒரு சமாதிக் கோயிலை அவன் மகன் I-ம் பராந்தகன் நிருமித்தான்.

I-ம் பராந்தக சோழன் 907-ல் பட்டம் பெற்று 48 ஆண்டுகள் ஆண்டான். பெரும்பாலும் அவன் ஆட்சி வெற்றிகரமாகவே இருந்தது. ஆனால் கடைசிக் காலத்தில் ராஷ்டிரகூடரால் பெருந்தொல்லை நேர்ந்தது. ஆட்சியின் தொடக்கத்தில் பராந்தகன் பாண்டிய மன்னனான ராஜசிம்மனையும் (900-20) அவனுக்கு உதவிபுரிந்த இலங்கை வேந்தன் II-ம் கஸ்ஸபனையும் வெள்ளூரில் தோற்கடித்து, ராஜசிம்மனை இலங்கைக்கு ஓடச் செய்து, 'மதுரை கொண்ட' என்ற விருதையும் பெற்றான். ராஜசிம்மன் இலங்கையினின்றும் கேரளத்துக்குச் சென்றான். அது அவன் தாய் பிறந்த நாடு. சில ஆண்டுகளுக்குப் பின் பராந்தகன் இலங்கையில் ராஜசிம்மன் வைத்துப்போன பாண்டிய முடியையும் ஆபரணங்களையும் IV-ம் உதய (940-53)னிடமிருந்து பெற முயன்றும் முடியவில்லை. இதை மறவாமல் பிற் காலத்தில் I-ம் ராஜேந்திரன் நிறைவேற்றினான்.

இதற்கிடையே ராஷ்டிரகூட நாட்டில் அமோகவர்ஷனுக்குப்பின் 980-ல் பட்டமெய்திய அவன் மகன் II-ம் கிருஷ்ணன் சோழநாட்டின்மீது படையெடுத்தான். அதற்குமுன் அவன் லாடதேசத்தை ஆண்டுவந்த தன் பிரதிநிதியை நீக்கி, அந் நாட்டைத் தன் ஆட்சிக் குள்ளாக்கினான். வேங்கி அரசன் குணகவிஜயாதித்த னுடன் போர் தொடங்கிப் பெருந்தோல்வியுற்றான் ; தன்னாட்டை விட்டுத் தன் மனைவியின் பிறப்பிடமான சேதி நாட்டுக்கு ஓடினான் ; அவனைத் துரத்திக் கொண்டு வந்த வேங்கிப் படைத்தலைவன் பண்டரங்கன், அவனையும் சேதிப்படைகளையும் தோற்கடித்து, கிருஷ்ணன் விசயாதித்தனை அடி வணங்கும்படி செய்தான். பிறகு அவன் நாடு அவனுக்கு மீண்டும் கொடுக்கப்பட்டது. விசயாதித்தன் இறந்ததும் (982) அவனுக்குப் பின் பட்டம் பெற்ற முதல் சாளுக்கிய வீமன் முடி சூட்டுமுன் அவனைக் கிருஷ்ணன் சிறைப் படுத்தினான். ஆனால் அவன் தப்பியோடி ராஷ்டிரகூட சேனைகளைத் தன் நாட்டினின்றும் விரட்டியடித்துச் சுய ஆட்சியை மீட்டுக்கொண்டான். கிருஷ்ணன் மறுபடி யும் போர் ஆரம்பிக்கவும், அவன் சேனை நிரவத்யபுரம், பெருவங்கூரு என்னுமிடங்களில் தோல்வியுற்றது. கிருஷ்ணன் சோழப் போர் ஆரம்பித்த காரணம் பின் வருமாறு : அவன் மகள் ஒருத்தி I-ம் ஆதித்தன் மனைவியாயிருந்து கன்னரதேவன் என்ற மகனைப் பெற்றாள். பராந்தகன் பட்டமெய்தியதால் கிருஷ்ணன் கன்னரதேவன் சார்பாகத் தன்னுடன் நட்புக்கொண்ட பாணர், வைதும்பர் முதலியவரையும் சேர்த்துக் கொண்டு போர் ஆரம்பித்தான். II-ம் கங்கப்பிருதிவீபதி பராந்தகனுக்காகப் போர் புரிந்து திருவல்லம் (வல்லாளம்) என்னுமிடத்தில் வெற்றியடைந்தான். பராந்தகன் பாணருடைய இராச்சியத்தைப் பறித்துப் பிருதிவீபதியிடம் கொடுத்து அவனுக்குப் பாணாதிராஜன் என்ற பட்டமும் அளித்தான். இது நடந்தது சு. 912-13-ல் II-ம் கிருஷ்ணனுக்குப் பின் அவன் பேரன் III-ம் இந்திரன் 915-ல் ராஷ்டிரகூட இராச்சியத்தை ஆள ஆரம்பித்தான். அவன் இளவரசனாயிருந்தபோதே பரமார உபேந்திரனுடன் வெற்றிகரமான போர் தொடுத்தான், பட்டம் பெற்ற பின் கன்னோசி அரசன்