பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/724

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

659

இந்தியா

நாடித் தன் தமையனுக்கு விரோதமாக வீரராசேந்திரனுடன் நட்புக்கொண்டாட ஆரம்பித்தான். இதன் பயனாக விஜயாதித்தன் வீரராசேந்திரனுக்கு அடிபணிந்து அவன்கீழ்ச் சிற்றரசனாக வேங்கி நாட்டை ஆளச் சம்மதித்தான். வீரராசேந்திரனுடைய பெண்களிருவரில் ஒருத்தி விக்கிரமாதித்தனையும் மற்றொருத்தி கலிங்க இராசராசனையும் மணந்தனர். விக்கிரமாதித்தனை II-ம் சோமேசுவரனுக்கு இளவரசாக நியமித்துச் சாளுக்கிய இராச்சியத்தின் தென்பாதியை அவன் ஆட்சிக்குள்ளாக்கிச் சமாதான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அவ்வேற்பாடுகள் 1070-ல் வீரராசேந்திரன் இறந்ததும் சீர்குலைந்து போயின.

1067-ல் வீரராசேந்திரன் இலங்கைக்கு ஒரு சேனையை அனுப்பிச் சோழரை எதிர்த்து I-ம் விஜய பாகுவை வென்று அவன் அரசியைச் சிறைபிடித்தான். விஜயபாகு வாதகிரி (வகிரிகலா)யில் ஓடி ஒளிந்திருந்து சில ஆண்டுகள் கழித்து அங்கிருந்து வெளிக் கிளம்பிச் சோழ ஆதிக்கத்தை இலங்கையிலிருந்து நீக்கித் தானே அத்தீவு முழுமைக்கும் அரசனானான். அப்போதைய சோழமன்னனான குலோத்துங்கனால் அதைத் தடுக்க இயலவில்லை (1072-73). வீரராசேந்திரன் 1068-ல் கடாரத்துக்கு ஒரு கப்பற்படையை யனுப்பித் தன்னை வணங்கிய அரசகுமாரனொருவனுக்கு அவன் உரிமையை மீட்டுக்கொடுத்தான். வீரராசேந்திரனுக்குப் பின் அவன் மகன் அதிராசேந்திரன் விக்கிரமாதித்தனுடைய உதவியால் அரசனான். ஆனால் ஒரு பொதுக் கலகத்தில் அவன் உயிரிழந்தான். வேங்கி அரசகுமாரனான இராசேந்திரன் குலோத்துங்கன் என்ற பட்டத்துடன் சோழ சிம்மாதனமேறினான் (1070). குலோத்துங்கன் 1070-ல் சோழ நாட்டையும் அதற்குச் சற்று முன்பின்னாக விஜயாதித்தனிடமிருந்து வேங்கியையும் ஒருங்கே பெற்று ஆண்டு வந்தான்.

ஆகவே விக்கிரமாதித்தனுக்கு ஒரு புறம் தன் தமையன் சோமேசுவரனும், மற்றொரு புறம் குலோத்துங்கனும் விரோதிகளாக ஏற்பட்டனர். அவர்களிருவரும் சேர்ந்து விக்கிரமாதித்தனைத் தாக்க உடன்படிக்கை செய்துகொண்டனர். விக்கிரமாதித்தன் பக்கம் அவன் தம்பி ஜயசிம்மனும் விஜயாதித்தனும் சேர்ந்தனர். மேலும் கொங்கண நாட்டுக் கதம்ப ஜயகேசியும் ஹொய்சள வமிசத்து வினயாதித்தனும் அவன் மகன் எறெயங்கனும் பல சிற்றரசரும் சேர்ந்தனர். யுத்தம் 1075-ல் ஆரம்பித்தது. கங்கவாடியில் விக்கிரமாதித் தன் தோல்வியடைந்து துங்கபத்திரை நதிவரை விரட்டப்பட்டான். ஆனால் மற்றொரு பக்கத்திலிருந்து அவனைத் தாக்கின சோமேசுவரன் அவன் தம்பியினிடம் சிறைப்பட்டான். விக்கிரமாதித்தன் சாளுக்கிய அரசனாகிச் சாளுக்கிய விக்கிரம சகாப்தத்தைத் (1075-76) துவக்கினான்.

குலோத்துங்கன் மகள் சூரியவல்லி என்பவள் வீரப் பெருமாள் என்ற சிங்கள அரசகுமாரனை மணந்தாள். இதனால் இலங்கை அரசனும் குலோத்துங்கனும் நட்பாகவே இருந்தனர் என்று கொள்ளலாம். ஆனால் பாண்டிய கேரள நாடுகளில் குழப்பம் ஏற்பட்டது. இதை அடக்கச் செம்பொன்மாரி, கோட்டாறு, விழிஞம், சாலை முதலிய இடங்களில் குலோத்துங்கன் பல வெற்றிகரமான போர்களை நடத்திப் பாண்டிய கேரள நாடுகளையும் மறுபடி தன் ஆட்சிக்குக் கீழ்ப்படியச் செய்தான். முக்கியமான இடங்களில் நிலைப்படைகளை நிறுவி, நாட்டில் மறுபடி கலகமேற்படாமல் காத்தான். ஆனால் பரம்பரையான பாண்டிய சேர அரசர் ஆட்சியை நீக்கவில்லை. சோழ நாட்டிலிருந்து 72 வியாபாரிகள் 1077-ல் பல விலையுயர்ந்த சரக்குக்களை எடுத்துக் கொண்டு சீன தேசத்துக்குக் கடல் வழியாகச் சென்று மீண்டதாகச் சீன நாட்டு வரலாற்றுக் குறிப்புக்களால் அறிகிறோம். 1090-ல் கடாரத்தரசன் நாகப்பட்டினத்து விஹாரங்களுக்காகக் குலோத்துங்கனிடம் ஒரு தூது அனுப்பினான்.

வேங்கியில் விஜயாதித்தனுக்குப்பின் குலோத்துங்கன் மக்கள் அவனுக்குப் பிரதிநிதிகளாக ஆண்டனர்: இராசராச மும்முடிச் சோழன் (1076-78); வீரசோழன் (1078-84); சோழகங்கன் (1084-89); மறுபடி வீரசோழன் (1089-92); கடைசியாக விக்கிரமசோழன் (1092-1118). 1097-ல் கொலனு அல்லது கொல்லேற்றின் கரையிலாண்ட கலிங்க மன்னன் அனந்தவர் மன் சோடகங்கனுடன் சேர்ந்து, விக்கிரமசோழனுக்கு எதிராகப் போர் தொடங்கினான். அப்போது விக்கிரமசோழனுக்கு உதவியாகச் சென்ற சிற்றரசரில் பராந்தக பாண்டியன் ஒருவன் (இச்செய்தி இவ்வரசனுடைய கன்னியாகுமரிச் சாசனமொன்றால் வெளியாகிறது). கொலனு அழிபட்டது; கலிங்க நாடும் படையெடுப்புக்கு உள்ளாகியது. எதிர்த்து நின்ற இரு மன்னரும் கீழ்ப்படிந்தபின் போர் நின்றது. மறுமுறை சுமார் 1110-ல் கலிங்க மன்னன் கப்பம் கட்டுவதை நிறுத்தவே, குலோத்துங்கனுடைய படைத் தலைவன் கருணாகரத் தொண்டைமான் பெருஞ்சேனையுடன் கலிங்க நாட்டில் புகுந்து, பெருஞ்சேதம் விளைவித்து, மிக்க பொருட்குவையுடன் திரும்பினான். இப்போரையே ஐயங்கொண்டார் தமது கலிங்கத்துப் பரணியில் சிறப்பித்துப் பாடியிருக்கிறார்.

கி. பி. 1115 வரை சோழ சக்கரவர்த்திக்கு இலங்கை பிரிந்து போனதைத் தவிர வேறு யாதொரு நஷ்டமும் ஏற்படவில்லை. துங்கபத்திரைக்குத் தெற்கேயுள்ள நாடு முழுவதும் வேங்கி நாடும் அவன் ஆட்சிக்குள்ளிருந்தன. கலிங்க நாடு கப்பம் கட்டி வந்தது. வட இந்தியாவில் கன்னோசி, பர்மாவில் பகான், இந்தோசீனாவில் காம்போஜம் முதலிய நாடுகளுடன் குலோத்துங்கன் நட்புப் பாராட்டித் தூதுகள் அனுப்புவதும் வரவேற்பதுமாக இருந்தான். ஆனால் விக்கிரமாதித்தன் சூழ்ச்சிகளால் கடைசி ஆண்டுகளில் மைசூரிலும் வேங்கியிலும் மறுபடியும் சச்சரவுகள் ஏற்பட்டன.

தொடக்கத்தில் ஏற்பட்ட போர்களுக்குப் பின் பொதுவாக விக்கிரமாதித்தனும் குலோத்துங்கனும் தத்தம் நாடுகளை அமைதியாகவே வெகுகாலம் ஆண்டு வந்தனர். விக்கிரமாதித்தன் பில்ஹணனைப் போன்ற கவிகளையும், விஞ்ஞானேசுவரரைப் போன்ற சரித்திரம் வல்லாரையும் ஆதரித்து வந்தான். சு. 1083-ல் அவன் தம்பி ஜயசிம்மன் அவனுக்கு விரோதமாகக் குலோத்துங்கனுக்குத் தூதனுப்பினான். விக்கிரமாதித்தன் அவனைப் போரில் வென்று சிறைப்படுத்தினான். ஹொய்சள நாட்டிலிருந்து நேரிட்ட ஆபத்து இதைவிட அதிகமானது. அங்கே எறெயங்கனுக்குப்பின் I-ம் பல்லாளன் (1100-1110) ஆண்டான். இவனும் இவன் முன்னோரும் சாளுக்கிய ஆதிக்கத்தை அங்கீகரித்த போதிலும், சிறிது சிறிதாகத் தங்களாட்சிக்குட்பட்ட நாடுகளைப் பெருக்கிக்கொண்டே வந்தனர். இதன் பயன் பல்லாளன் தம்பி பிட்டிகன் அல்லது விஷ்ணு வர்த்தனுடைய ஆட்சிக் காலத்தில் நன்றாகப் புலப்பட்டது. அவன் வீரமும் ஆற்றலும் வாய்ந்தவன். அவன் சோழநாடான கங்கவாடியை முதலில் தாக்கினான். தலக்காட்டில் சோழப் பிரதிநிதியான அதிக மானை வென்று கங்கவாடியைத் தன்னாட்டுடன் சேர்த்-