பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/727

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

662

இந்தியா

குச் சோடர்கள் தங்களுடைய சுதந்திரத்தை நிறுவிக் கொண்டனர்.

பாண்டிய நாட்டில் ஜடாவர்மன் குலசேகரனுக்குப் பின் அவன் தம்பி மாறவர்மன் சுந்தரபாண்டியன் பட்டம் பெற்றான் (1216). உடனே அவன் சோழரால் முன் விளைந்த அவமானத்தை நினைந்து, அதை மாற்றுவதற்காகச் சோழநாட்டின்மீது படையெடுத்தான். அவன் ஆற்றலின் வேகமும் குலோத்துங்கன் மூப்பும் அவன் படையெழுச்சிக்கு எதிர்ப்பு ஒன்றுமில்லாமலாக்கி விட்டன. உறையூரும் தஞ்சாவூரும் தாக்குண்டன. குலோத்துங்கனும் அவன் மகன் இளவரசனாகிய III-ம் இராசராசனும் ஓடி ஒளிந்தனர். கும்பகோணத்தருகேயுள்ள ஆயிரத்தளியில் சுந்தரபாணடியன் வீராபிஷேகம் செய்துகொண்டான். பிறகு சிதம்பரம் சென்று நடராஜப் பெருமானை வணங்கினான். திரும்பும் வழியில் புதுக்கோட்டையிலுள்ள பொன்னமராவதியில் அவன் தங்கியிருக்கும்போது குலோத்துங்கனும் அவன் மகனும் வந்து அடிபணிந்தனர். இதற்குள் குலோத்துங்கன் வேண்டுகோளுக்கிணங்கி ஹொய்சள பல்லாளன் தன் மகன் நரசிம்மனை ஒரு சேனையுடன் ஸ்ரீரங்கத்துக்கு அனுப்பினதால் சுந்தர பாண்டியன் சோழனுடன் சமாதானம் செய்ய வேண்டிவந்தது. குலோத்துங்கன் தன் நாட்டை மீளப் பெற்றுப் பாண்டிய ஆதிக்கத்திற்குட்பட்டு நடக்கச் சம்மதித்தான். பாண்டியன் ‘சோணாடு வழங்கியருளிய’ என்ற விருதை ஏற்றுக் கொண்டான். குலோத்துங்கன் 1218-ல் இறக்கவே, III-ம் இராசராசன் பட்டம் பெற்றான். அவன் வலுவற்றவன்; அவன் காலத்தில் சோழ இராச்சியம் நிலைகுலைந்தது. எவ்விதமாகவோ ஒட்டப்படை ஒன்று ஸ்ரீரங்கத்தை யடைந்து, இரண்டு ஆண்டுக் காலம் சச்சரவுகள் செய்தபின் சுந்தரபாண்டியனால் 1225-ல் துரத்தப்பட்டது. ஹொய்சளர்கள் காஞ்சியைப் பிடித்துக்கொண்டு தெலுங்குச் சோடர்களுடனும் அவர்கள் மேலதிகாரிகளான காகதீயருடனும் போராடிக்கொண்டிருந்தனர். கோப்பெருஞ்சிங்கன் என்னும் காடவத் தலைவன் தென்னார்க்காட்டில் தன் அதிகாரத்தை ஸ்தாபித்துக்கொண்டு, இராசராசனுக்கும் ஹொய்சளருக்கும் விரோதமாகச் சுந்தரபாண்டியனுடன் உடன்படிக்கை செய்துகொண்டான். இவற்றையெல்லாம் சற்றும் கவனிக்காமல் இந்தச் சமயத்தில் இராசராசன் சுந்தரபாண்டியனுக்குச் சேர வேண்டிய கப்பத்தைக் கட்டாமல் நிறுத்தியதல்லாமல் அவனுடன் போரும் தொடங்கினான். உடனே சுந்தர பாண்டியன் சோழநாட்டின்மீது படையெடுத்து, இராசராசனைப் போரில் வென்று, அவன் பட்ட மகிளியுட்படப் பல பெண்டிரைச் சிறைப்படுத்தி, முடி கொண்ட சோழபுரமாகிய ஆயிரத்தளியில் மற்றொரு முறை விஜயாபிஷேகம் செய்துகொண்டான். வடக்கேயுள்ள ஹொய்சள II-ம் நரசிம்மன் சேனையுடன் சேர வேண்டிப்போன இராசராசன் காடவன் கோப்பெருஞ் சிங்கனால் தெள்ளாற்றுப் போரில் தோற்கடிக்கப் பெற்றுச் சேந்தமங்கலக் கோட்டையில் சிறை வைக்கப்பட்டான். சோழனுக்குற்ற விபத்துக்களைக் கேட்டு நரசிம்மன் உடனே காடவன் நண்பனான சேலம் மாவட்டத்திலுள்ள மகரநாட்டரசனைத் தாக்கிப் பின் ஸ்ரீரங்கம் சேர்ந்தான். அங்கிருந்து அவன் படைத் தலைவர் அப்பண்ணன், கொப்பய்யன் என்பவரைச் சோழமன்னனை விடுவிக்க அனுப்பினான். அவர்கள் பெரம்பலூர், தொழுதூர் ஆகிய ஊர்களின் வழியாகச் சென்று, கோப்பெருஞ்சிங்கன் நாட்டில் பல இடங்களை அழித்து வீட்டுச் சிதம்பரம் சென்றனர். அங்கிருந்து சேந்த மங்கலத்தைத் தாக்க எத்தனித்தனர். அதற்குள் கோப்பெருஞ்சிங்கன் நரசிம்மனிடம் சமாதானம் பேசத் தூது அனுப்பினான். நரசிம்மன் அத்தூதரைத் தன் படைத் தலைவரிடம் அனுப்பவே, அவர்கள் கோப்பெருஞ்சிங்கனால் விடுவிக்கப்பட்ட இராசராசனை வரவேற்றுச் சோழ நாட்டிற்கரசனாக மறுபடியும் அமர்த்தினர் (1231). நரசிம்மனும் சுந்தரபாண்டியனைக் காவேரிக் கரையில் மகேந்திர மங்கலப் போரில் தோற்க வைத்தான். சுந்தரபாண்டியன் சோழமன்னனுக்கு மறுபடி ஆட்சியைக் கொடுக்க இணங்க வேண்டியதாயிற்று. காடவனுடன் போர் நடந்துகொண்டிருப்பினும் ஹொய்சளர், சோழர், பாண்டியருக்குள் சமாதானம் ஏற்பட்டு, மணத்தொடர்புகளும் ஏற்பட்டன. நரசிம்மன் மகன் சோமேசுவரன் சுந்தரபாண்டியனுக்கும் இராசராசனுக்கும் பின் ஆண்ட பாண்டிய சோழ மன்னரால் மாமடி (மாமன்) என்றழைக்கப்படுகிறான். இராசராசன் (1231-1256) வரை ஆண்டான். ஆனால் அவன் ஆட்சியின் வலுக் குறைந்துகொண்டே வந்தது. கலகங்கள், துரோகங்கள், சிற்றரசருக்குள் போர்கள், சமாதானங்கள் முதலியன இராசராசனுக்குத் தெரியாமலே நடந்து வந்தன. ஹொய்சளருடைய மேலாதிக்கம் பாண்டிய சோழ நாடுகளில் அதிகமாகிக் கொண்டே வந்தது. இதற்குக் காரணம் சோமேசுவரன் மைசூர் ஆட்சியைத் தன் மந்திரிகள் வசம் விட்டு விட்டுத் தான் நேராகத் தமிழ் நாட்டில் ஹொய்சள அதிகாரத்தை நிலைநாட்டக் கங்கணம் கட்டிக் கொண்டது தான்.

1246-ல் சோழ இளவரசான மூன்றாம் இராசேந்திரன் இராசராசனைவிட மிகுந்த திறமைசாலி. அவன் சோழர் ஆதிக்கத்தை மீட்க முயன்றான். சோமேசுவரன் குறுக்கிடாவிட்டால் அவன் எண்ணம் நிறைவேறியிருக்கும். இராசேந்திரன் பாண்டிய நாட்டின் மேற்படையெடுத்து, இரு பாண்டிய வேந்தரைத் தோற்கடித்தான். அவர்களில் ஒருவன் II-ம் மாறவர்மன் சுந்தரபாண்டியன் (1233). உடனே சோமேசுவரன் பாண்டியர் கட்சியில் சேர்ந்து, இராசேந்திரனைப் போரில் வென்று, பின் அவனுடன் சமாதானம் செய்துகொண்டான். பாண்டியராவது சோழராவது ஹொய்சள உதவியின்றித் தனியரசு செலுத்தக் கூடாதென்பதே அவன் நோக்கம். 1240-ல் சோமேசுவரனால் தாக்கப்பட்ட நெல்லூர் அரசன் சோடதிக்கன் அல்லது கண்டகோபாலனென்பவன் இராசேந்திரனுடன் நட்புக்கொண்டான். திக்கன் தான் புரிந்த போர்களால் சாம்புவராயரையும் காடவராயரையும் அடக்கி இராசேந்திரன் ஆட்சியை வலுப்படுத்தினான். சோமேசுவரனையும் எதிர்த்துக் காஞ்சி நகரைத் தன் வயமாக்கிக் கொண்டான். சோமேசுவரனுக்கு மற்றொரு விரோதியான காகதீய கணபதியைத் தனக்கு மேலரசனாக ஒப்புக்கொண்டான்.

1251-ல் மிகவும் பராக்கிரமசாலியான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன் பட்டம் பெற்றதும் இராசேந்திரனுக்கும் சோமேசுவரனுக்கும் உள்ள நட்புப் பெருகியது. சுந்தரபாண்டியன் பல போர்களால் பாண்டியநாட்டின் ஆதிக்கத்தைப் பெருக்கி, நெல்லூர் வரையுள்ள நாடுகளைத் தன்வயமாக்கியதுமன்றி, இலங்கையையும் கேரளத்தையும் பாண்டியருக்கடிப்படுத்தினான். ஹொய்சள ஆதிக்கம் மைசூர் பீடபூமிக்குள் அடைபட்டது. சுந்தரபாண்டியனுடைய போர்களில் ஜடாவர்மன் வீரபாண்டியன் (1253) அவனுக்குத் துணையாய் நின்றான். சேரநாட்டரசன் வீரரவி உதயமார்த்தாண்டவர்மனும், சோழன் இராசேந்திரனும் சுந்தரபாண்டிய-