பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அட்டிலா

38

அட்டை

அவர் பதவி வகிப்பார். அவருடைய ஊதியம் என்னவென்று ராஷ்டிரபதி தீர்மானிப்பார். இப்போது அது மாதம் ரூபாய் 4000 என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. அவர் சாதாரணமாக டெல்லியில் வசிப்பார்.

அட்டார்னி ஜெனரல் இந்திய அரசாங்கத்துக்கு விரோதமாகவுள்ள விசாரணைகளிலும், தமது ஆலோசனையை இந்திய அரசாங்கம் கேட்பதற்கு இடம் இருக்கக்கூடிய விசாரணைகளிலும் ஆஜராகக்கூடாது. அவர் இந்திய சர்க்காரின் உத்தரவின்றி எந்தக் குற்றம் சாட்டப்பட்டவர் சார்பிலும் ஆஜராகவும், எந்தக் கம்பெனியிலேனும் உத்தியோகம் ஏற்றுக்கொள்ளவும் கூடாது. எல்லா இராச்சியங்களிலும் கோர்ட்டுகளில் முதல் இடம் அட்டார்னி ஜெனரலுக்கும் அடுத்த இடம் இராச்சியத்திலுள்ள அட்வொக்கேட்டு ஜெனரலுக்கும் அளிக்கப்படும். உச்ச நீதிமன்றம் எந்த விசாரணையிலும் ஆஜராகும்படி அவருக்கு அறிவிப்பு அனுப்பலாம். அவர் தாம் அவசியம் ஆஜராக வேண்டுமென்று கருதுகிற எந்த விசாரணையிலும் தாம் பேச விரும்புவதாகக் கோர்ட்டுக்குத் தெரிவிக்கலாம். அவர் ஆஜராவது அவசியம் என்று உச்ச நீதிமன்றத்திற்குத் தோன்றினால் அது அவருக்கு அனுமதி தரும்.

அவர் டெல்லிச் சட்டசபைகளிலும், தாம் உறுப்பினராகவுள்ள சட்டசபைக் கமிட்டிகளிலும் பேசவும், கலந்து கொள்ளவும் அதிகாரம் உடையவர். ஆனால் இந்த அதிகாரம் அவருக்கு அந்தச் சபைகளில் வாக்குக் கொடுப்பதற்குள்ள உரிமையை அளிக்கமாட்டாது. ஏ. என். வீ.

அட்டிலா (406?-453) ஹூணர்களின் அரசன். அவன் செய்த போர்களும், வென்ற நாடுகளில் நடத்திய ஆட்சியும் மிகக் கொடுமையானவை. 433-ல் அவனும் அவன் சகோதரன் பிளிடாவும் சேர்ந்து மத்திய ஐரோப்பிய நாடுகளில் அக்காலத்தில் வாழ்ந்திருந்த பல பழங்குடிகளுக்குக் கூட்டு அரசர்களாயிருந்தனர். ஆயினும் பத்து ஆண்டுகள் கழித்து அவன் தன் சகோதரனைக் கொல்வித்தான். பிறகு கருங்கடலுக்கும் மத்தியதரைக் கடலுக்கும் இடையே உள்ள நாடுகள் முழுவதையும் சூறையாடினான். 451-ல் மத்திய ஐரோப்பா முழுவதும் அவன் வசமாயிற்று. மேற்கு ரோமானிய சாம்ராச்சியப் பேரரசனான III-ம் வேலன்ஷியனை வென்று டான்யூப் நதிக்குத் தெற்கேயுள்ள நாடுகளையும் கைப்பற்றினான். ஜெர்மனியும் பிரான்சும் அவனுக்கு அடிபணியும் நிலைமையும் வந்தது. கிறிஸ்தவ அரசர்கள் ஒன்றுகூடிக்கொண்டு சலோன் என்னுமிடத்தில் அவனைப் போரில் தோற்கடித்து அடக்கினர். 452-ல் அவன் இத்தாலிமேல் படையெடுத்து லம்பார்டி சமவெளியைக் கடந்து தெற்கு நோக்கி வந்தபோது ரோமிலிருந்த போப் I - ம் லியோவின் நன் முயற்சியால் ரோம் நகரம் தப்பிற்று. அட்டிலா ஹங்கேரிக்குத் திரும்பிச் சென்றான். ஹில்டா என்பவளுக்கும் அவனுக்கும் மணம் நடப்பதற்காக நிச்சயித்திருந்த நாளன்று இரவில் அவன் இறந்தான். அவன் இழைத்த கொடுமைகளைக் கருதி மக்கள் அவனைத் தெய்வ சாபம் என்றழைத்தனர்.

அட்டெபிரின் (Atebrin) கொயினாவுக்குப் பதிலாக மலேரியாக் காய்ச்சலிற் பயன்படும் ஒரு மருந்து. இது குவினகிரின் ஹைடிரோகுளோரைடு என்னும் ரசாயனப் பொருளால் ஆனது. மஞ்சள் நிறமான இப்பொருளை நெடுநாள் உட்கொள்வதால் உடல் தசைகள் அனைத்தும் இந்நிறத்தை யடைகின்றன. ஆனால் இதனால் தீங்கொன்றும் இல்லை.

அட்டை (Cardboard) : காகிதத்திற்குப் பதிலாகப் பழங்காலத்தில் பயனாகிவந்த பாபைரஸ் (Papy- rus) தாள்களை ஊறவைத்துப் போதுமான பருமனுக்கு ஒன்று சேர்த்து அடித்து, அழுத்தி, வெயிலில் காயவைத்து முன்னர் அட்டைகளைத் தயாரித்து வந்தனர். அக்காலத்தில் கீழ்நாடுகளில் புல்வகைகளைக் கொண்டு அட்டைகளைத் தயாரித்து விளையாட்டுச் சீட்டுக்களைச் செய்யப் பயனாக்கினர். இவ்வாறு தயாரிக்கப்பட்ட அட்டைத் துண்டுகளின்மேல் சீட்டுப் படங்களை வரைந்தார்கள்.

அட்டைகளைத் தயாரிக்கும் எந்திரம் காகிதத்தைத் தயாரிக்கும் எந்திரத்தைப் போன்றதே. இதிலும் செல்லுலோசைக் கொண்ட மூலப் பொருள் கூழ்போலாக்கப்படுகிறது. இத்துடன் தேவையான நிறப்பொருளைச் சேர்த்து அட்டை எந்திரத்தின் உதவியால் அட்டைக்ளாகச் செய்கிறார்கள். ஒட்டு அட்டை (Pasteboard) என்பது, பல காகிதத் தாள்களை ஒன்றாகச் சேர்த்து ஒட்டித் தயாரிக்கப்படுகிறது. உட்புறத்தில் மலிவான தாள்களையும், வெளிப்புறங்களில் மட்டும் உயர்ந்த ரகக் காகிதங்களையும் வைத்து ஒட்டித் தேவையான தடிப்புள்ள அட்டைகளைப் பெறலாம். ஒட்டு அட்டை அச்சுத் தொழிலில் அதிகமாகப் பயன்படுகிறது. சிறு பெட்டிகள் செய்யவும், உள்ளங்கிகள் போன்ற பொருள்களைப் பொதியவும் பயனாகிறது. பிரிஸ்டல் அட்டை (Bristolboard) என்பது மிக நேர்த்தியான அட்டை வகை. இது சித்திரம் வரைய ஏற்றது. வைக்கோல் அட்டை (Strawboard) என்பது மலிவான அட்டை. வைக்கோலைக் கொதிக்க வைத்து அடித்துக் கூழாக்கி இது தயாரிக்கப்படுகிறது.

அமெரிக்கா, கானடா, இங்கிலாந்து, ஜெர்மனி, ஹாலந்து, பின்லாந்து, நார்வே, ஸ்வீடன் ஆகிய நாடுகளில் அட்டைத் தயாரிப்புத் தொழில் முக்கியமானது.

அட்டை குளம் குட்டை ஆறு முதலிய நன்னீர் நிலைகளிலும், கடலிலும், ஈரத்தரை மீதும் வாழும் ஒரு வகைப் புழு. அன்னெலிடா (Annelida) என்னும்

அட்டை
1. மேற்புறம்
2. அடிப்புறம்

வளையப்புழுத் தொகுதியிலே ஹிருடினியா (Hirudinea) என்னும் வகுப்பைச் சேர்ந்தது. அட்டையில் பல சாதிகளுண்டு. அவை பலவகையான வாழ்க்கை முறையுள்ளவை. சில அட்டைகள் மண் புழு, பூச்சிகளின் லார்வா முதலிய மற்றச் சிற்றுயிர்களைப் பிடித்துத் தின்கின்றன. அசுத்தங்களை உண்டு தோட்டிகள்போல அவற்றைச் சில நீக்குகின்றன. பெரும்பாலான வகைகள் மற்றப் பிராணிகளின் உடம்பில் எப்போதும் அல்லது சிற்சில சமயங்களில் ஒட்டிக்கொண்டு அவற்றின் உடலிலுள்ள இரத்தத்தையோ சாற்றையோ உறிஞ்சி ஒட்டுண்ணிகளாக வாழ்கின்றன.

அட்டையின் உடல் சற்றுத் தட்டையாக இருக்கும். தோலின் மேலே குறுக்கே உடல்நெடுக மடிப்பு மடிப்பாக இருக்கும். மருத்துவத்தில் உபயோகப்படும் சாதாரண அட்டையின் உடலில் இந்தத் தோல் மடிப்புக்கள் நூற்றுக்குமேல் இருக்கும். இதன் உடல் 33 வளையங்களால் ஆனது. 26 வளையங்களை எண்ணலாம்.