பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/731

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

666

இந்தியா

வந்தனர். அரசாங்க உத்தியோகஸ்தரும் பெருந்தனம், சிறுதனம் என்று இரண்டு பிரிவினராக அமைந்திருந்தனர். அரசனைச் சுற்றி உடன் கூட்டம் ஒன்றுண்டு. அரசனிடும் ஆணைகளை அவர்கள் கேட்டு எழுதிக் கொண்டு, ஓலைநாயகம் என்னும் அதிகாரிக்கு அனுப்புவதுண்டு. அவன் மேல் நடவடிக்கைகள் நிகழ்த்துவான். பொதுவாக உத்தியோகஸ்தருக்கு ஜீவிதங்களாக நிலம் கொடுக்கப்பட்டது; பட்டங்களும் வழங்கப்பட்டன. சோழர் காலத்தில் நிலவரி இலாகா மிகவும் சிறந்து விளங்கியது. ஒவ்வோர் ஊரிலும் நத்தம், வரிநிலம், வரியிலா நிலம் எல்லாவற்றையும் செவ்வையாக அளந்து, ஊரிலிருந்து சேரவேண்டிய வரியையும் கணக்கிட்டு, இவற்றையெல்லாம் ஒழுங்காகப் புத்தகங்களில் பதிவு செய்து வந்தனர். வரியிலா நிலங்களும் உண்டு; அவை தேவதானங்கள், பிரமதேயங்கள் போன்றவை. அவைகளையும் சாக்கிரதையாகப் பதிவு செய்து வந்தனர். வரி விளைபொருள்களைப் பொறுத்திருந்ததால் நிலங்களில் வளரும் பயிர் விவரங்களும் அவ்வப்போது விசாரித்து வரையப் பெற்றன. சுருங்கச் சொன்னால் தற்காலத்து நிலவரி இலாகா செய்யும் காரியங்களெல்லாம் அக்காலம்முதல் நடந்துவந்ததாகவே கொள்ளவேண்டும்.

பதின்மூன்றாவது நூற்றாண்டின் முடிவில் மார்க்கோ போலோ என்னும் இத்தாலிய வர்த்தகன் தென்னிந்தியாவில் சுமார் இரண்டாண்டு காலம் யாத்திரை செய்து அவன் கண்டதையும் கேட்டதையும் விவரமாகக் குறித்து வைத்திருக்கிறான். அவன் காலத்தில் கொல்லம் முதல் நெல்லூர் வரை உள்ள கடற்கரை மாபர் (அரபு மொழிச் சொல்; வழி அல்லது கடக்குமிடம் என்று பொருள்) எனப்பட்டது. பாண்டிய நாட்டிலுள்ள காயல்பட்டினம் ஒரு பெரிய துறைமுகமாக விளங்கிற்று. அவ்வூரை ஆண்ட அரசன் (பாண்டியன்) சேர்த்து வைத்திருந்த நகைகள், பொன், முத்து முதலியவற்றிற்குக் கணக்கேயில்லை. அவன் அயல்நாட்டு வியாபாரிகளை மிகவும் ஆதரித்தான். ஆகையால் அவர்கள் காயல்பட்டினத்திற்கு வர விரும்பினர். பாரசீகம், அரேபியா முதலிய நாடுகளிலிருந்து பல கப்பல்கள் அங்கு வந்தன; குதிரைகள் இறக்குமதி அதிகம். அரபிக் குதிரைகள் இந்தியாவில் வெகுநாள் உழைப்பதில்லை; சீக்கிரம் நோய்ப்பட்டு மாண்டுவிடுவதால் அவைகளுக்குப் பதிலாகக் குதிரைகள் எப்போதும் வேண்டியிருந்ததால், ஒவ்வோர் ஆண்டிலும் ஏராளமாகப் புதிய குதிரைகள் வந்து கொண்டேயிருந்தன. இதனால் இந்தியருக்கேற்பட்ட பொருட்செலவு அதிகம். முத்துக் குளிக்கும் பரவரையும் அவர் தொழிலையும் பற்றி மார்க்கோ போலோ விவரமாக எழுதுகிறான். பெரிய முத்துக்களை வியாபாரிகள் நாட்டு அரசனுக்கே விற்கவேண்டும்; பகிரங்கமாக வேறு இடங்களுக்கு அனுப்பமுடியாது. படை வீரரில் சிலர் அரசனைச் சூழ்ந்து, அவனுக்குப் பாதுகாப்பாக இருந்து, அவன் இறந்தால் கூடவே இறப்பது வழக்கம். அவர்களை வேளைக்காரர்கள் என்று சோழ நாட்டிலும், தென்னவன் ஆபத்துதவிகள் என்று பாண்டிய நாட்டிலும், வேறு இடங்களில் வேறு பெயர்களிட்டும் அழைத்தார்கள். இந்த ஏற்பாட்டை மார்க்கோ போலோ நன்றாகத் தெரிந்துகொண்டான். மக்கள் உடல்மீது அங்கியின்றிச் செல்வது அவனுக்கு வியப்பாயிருந்தது. அதனால் அவன் இந்தியாவில் தையற்காரரே யில்லையென்று எழுதிவிட்டான். ஆனால் தையற்காரரைப்பற்றி அக்காலத்துச் சாசனங்கள் பலவற்றில் படிக்கிறோம். உடன் கட்டையேறல் வழக்கத்திலிருந்ததென்று தெரிகிறது. மரண தண்டனைக்குட்பட்ட குற்றவாளிகள் தங்களைச் சில தெய்வங்களுக்குப் பலியாக அர்ப்பணம் செய்து கொள்வதுமுண்டு. வீடுகளில் தரையைக் கோமயத்தால் மெழுகுவதையும், எல்லோரும் பொதுவாகத் தரையில் உட்காருவதையும் மார்க்கோ போலோ கூறுகிறான். ஒவ்வொருவரும் தினம் நீரில் குளிப்பதும், சாப்பிட வலக்கையை மட்டும் உபயோகிப்பதும், நீர் பருக ஒவ்வொருவரும் தனித்தனியாகப் பாத்திரம் வைத்திருப்பதும், நீர் பருகும்போது எச்சிலில்லாமல் உயர்த்திப் பாத்திரத்திலிருந்து நீரை வாயில் வார்த்துக் கொள்ளுவதும் அவனுக்கு ஆச்சரியமாகத் தோன்றின. ஒருவன் கொடுக்க வேண்டிய கடன் பணத்தை வசூலிக்க அவனைக்கண்ட இடத்தில் அவனைச் சுற்றி ஒரு கோடிட்டுப் பணம் கொடுக்காமல் அதைத் தாண்டக்கூடாது என்று ஆணையிடும் வழக்கமிருந்தது. குடிப்பது குறைவு ; குடியர்களும் கப்பல்களிலே வேலை செய்பவரும் சாட்சியம் சொல்லத் தகுதியற்றவராகக் கருதப்பட்டனர்.

மந்திரவாதம், சோதிடம், சகுனம் முதலியவற்றில் மக்களுக்கு நம்பிக்கை இருந்தது, கோவில்களில் தேவதாசிகள் சேவகம், வாசனைச் சரக்குக்களுடன் வெற்றிலை போடுதல், பாம்பு, தேள் முதலியவற்றினின்றும் தப்புவதற்காகச் செல்வர் கூரையிலிருந்து கயிறுகளால் தொங்கவிடப்பட்ட மெல்லிய கட்டில்களில் தூங்குதல் முதலிய விவரங்களையும் மார்க்கோ போலோகூறுகிறான். ஆந்திர நாட்டில் பெண் (ருத்ராம்பாள்) அரசு புரிந்ததையும், அவள் நாட்டில் வைரச் சுரங்கங்கள் இருந்ததையும் அங்கே நயமான துணிகள் நெய்யப்பட்டதையும் அவன் குறிக்கிறான். மலையாள நாட்டில் யூதரும் கிறிஸ்தவரும் இருந்தனர். மிளகும் அவுரியும் இஞ்சியும் அதிகம். அவைகளுக்காகப் பல வியாபாரிகள் வெளிநாடுகளிலிருந்து வந்தனர். மலையாளக் கடற்கரையில் கடற் கொள்ளைக்காரர் அதிகமாக இருந்தனர். கே. ஏ. நீ.

(தமிழர், சிலப்பதிகாரம், தமிழ்ச் சங்கங்கள் ஆகியவற்றைப் பற்றிய வேறு கருத்துக்களுக்கு அத்தலைப்புக்களுள்ள தனிக் கட்டுரைகளைப் பார்க்க).

1300-1600 : இம் மூன்று நூற்றாண்டுகள், காவிரிக் கரையைச் சார்ந்த தமிழர்களுடைய அரசியல் தலைமை முடிவுற்ற காலம் ; துங்கபத்திரை நதிக் கரையில் எழுந்த விஜயநகர இராச்சியம் ஓங்கி இருந்த காலம். 1268-1310 ஆகிய நாற்பத்திரண்டு ஆண்டுகளாக மாறவர்மன் குலசேகர பாண்டியன் தென் இந்தியாவில் அமைதியை நிலை நாட்டி, நாடு செழிக்கச் செய்தான். ஆயினும் சுந்தரபாண்டியன், வீரபாண்டியன் ஆகிய தன் இருமக்களில் இளையவனைத் தனக்குப் பின்பு அரசனாக்க அவன் விரும்பினமையால் அந்த மக்களுக்குள் பகையுண்டாயிற்று. 1310-ல் சுந்தரன் தன் தந்தையைக் கொன்றான். வீரபாண்டியன் டெல்லி சுல்தானுடைய படைத் தலைவனான மாலிக்காபூரிடம் முறையிட்டுக்கொண்டு, அவன் உதவியால் பட்டம் எய்தினான். ஜடாவர்மன் என்னும் மறுபெயர் பூண்ட அந்த வீரபாண்டியன் 1340 வரையில் ஆண்டான். ஆயினும் 1334 லிருந்தே முகம்மதியர்களுக்கு மதுரையில் அடியிடுவதற்கு ஓர் இடம் கிடைத்துவிட்டது.

முகம்மதியர்கள் தென்னிந்தியாவில் புகுந்தது அக்கால அரசியலில் ஒரு முக்கியமான நிகழ்ச்சி. தென்னிந்திய அரசியலில் முக்கிய இடத்திற்குப் போட்டியிட முடியாத நிலையில் யாதவர்களும், காகதீயர்களும், ஹொய்சளர்களும் இருந்தனர். யாதவ அரசன் இராமச்சந்திரனும், காகதீய அரசன் பிரதாபருத்திரனும் ஹொய்சள மன்னன் மூன்றாம் வீரபல்லாளனும் பாண்டிய குலசேகரனும் தென் இந்திய ஆதிக்கத்தைத் தமக்குள் பங்கிட்டுக்கொண்டிருந்தனர். இப் பங்கீட்டைத்