பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/738

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

673

இந்தியா

பட்டார். இதனால் சீற்றங்கொண்ட பிரபுக்கள் இரகுநாத ராவ் பட்டத்துக்கு வரவொட்டாமல் தடுத்தார்கள். இப் பிரபுக்களின் தலைவர் நானாபட்னாவிஸ். மாதவ ராவ் இறந்தபின் அவர் பெற்ற சிசுவை இரண்டாவது மாதவ ராவ் என்னும் பட்டம் சூட்டிப் பேஷ்வாவாக நியமித்தனர். அவருக்கு உதவியாக அரசியல் நடத்த மந்திரி சபை ஒன்று அமைக்கப்பட்டது. இரகுநாத ராவ் பம்பாயிலிருந்து ஆங்கிலேயருடன் உடன்படிக்கை செய்துகொண்டு, அவர்களுக்குப் பம்பாய்க்கடுத்த சால்செட், பேஸேன் என்னும் தீவுகளைக் கொடுப்பதாக வாக்களித்தனர். இது 1775-ல் நடந்த சூரத்து உடன்படிக்கையாகும். இதனிடையே வாரன் ஹேஸ்டிங்க்ஸ் நானாவுடன் புரந்தர் நகரத்தில் ஓர் உடன்படிக்கை செய்துகொண்டார். ஆயினும் கம்பெனியின் அதிகாரிகள் இரகுநாத ராவையே பேஷ்வாவாகத் தேர்ந்தெடுத்தனர். வாட்கான் என்னுமிடத்தில் போர் நடந்தது. ஆங்கிலேயர் தோல்வியடைந்தனர். ஹேஸ்டிங்க்ஸ் ஒரு படையை அனுப்பி, கூர்ஜரத்தில் பல நாடுகளைக் கைப்பற்றியதால் வடக்கிலிருந்து மகாராஷ்டிரர்கள் நானாவின் உதவிக்கு வரமுடியவில்லை. சால்பாய் என்னுமிடத்தில் 1782-ல் நானா ஆங்கிலேயருடன் சமாதானம் செய்துகொண்டனர். 1783-ல் இரகுநாத ராவ் இறந்தார். மகத்ஜி சிந்தியா உன்னத நிலையை அடைந்தார்; எனினும், அவருக்கும் நானாவுக்கும் நட்பு இல்லை. அவர் 1794-ல் காலமானார்.

நிஜாம் நாடுகளில் முதல் பாஜிராவ் காலமுதல் விதிக்கப்பட்டு வந்த சௌத் வரியில் பாக்கி நின்றுவிட்டது. நானா அதைச் செலுத்தும்படி நிஜாம் அலியை வற்புறுத்தினார். ஆங்கிலேயர் நிஜாமுக்கு உதவி செய்யவில்லை. இது காரணமாகத் தொடர்ந்த போரில் கர்தா என்னுமிடத்தில் மகாராஷ்டிரர்களுக்கு வெற்றி கிடைத்தது. 1795-ல் பேஷ்வா இரண்டாம் மாதவ ராவ் நோய் கண்டிறந்தார். இரண்டாம் பாஜிராவுக்கும் சிம்னாஜிக்கும் போட்டி ஏற்பட்டது. அதிகாரத்தை இழக்க மனமில்லாத நானா, நிஜாம் அலியின் உதவியை நாடினார். சிம்னாஜி சிறை செய்யப்பட்டார். 1794-ல் பாஜிராவ் பேஷ்வாவாக நியமிக்கப்பட்டார். உடனே நானாவுக்கும் அவருக்கும் சமாதானம் ஏற்பட்டது. எனினும் இவர்களுக்குள் சிறிது காலத்திலேயே பகை மூண்டது. பேஷ்வா, சிந்தியாவின் நட்பைப்பெற்று மக்களுக்குக் கொடுமை புரியலானார். 1790-ல் ஆங்கிலேயருக்கும் மைசூருக்கும் நடந்த போரில், ஆங்கிலேயருக்கு உதவி செய்யும்படி நானா பாஜிராவிடம் ஆலோசனை சொன்னார். ஆனால் அவர் அதைக் கேட்கவில்லை. 1800-ல் நானா மரணமடைந்தார். பின்னர்க் குழப்பம் மிகுந்தது. பேஷ்வாவின் நாடு போர்களுக்கு உள்ளாகியது. முடிவில் அவருடைய நாடு ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டது.

ஐதராபாத் : இரண்டாம் அசப்ஜா நிஜாம் அலி (1762-1803) ஆங்கிலேயருடன் நட்புக்கொண்டிருந்தார். 1766லும் 1778லும் ஆங்கிலேயருடன் செய்து கொண்ட உடன்படிக்கைகளின்படி போர் ஏற்பட்டால் தம் நாட்டைக் காக்கப் படைகளைக் கொடுத்து உதவுவதாக ஆங்கிலேயர் வாக்களித்தனர். 1792லும் 1799 லும் மைசூருக்கு விரோதமாக ஆங்கிலேயருக்கு உதவி புரிந்து, அவ்வுதவிக்குக் கைம்மாறாகக் கடப்பை, கர்நூல், பல்லாரி, அனந்தப்பூர் முதலிய நாடுகளைப் பெற்றார். இவைகளுக்குக் ‘கொடுக்கப்பட்ட ஜில்லாக்கள்’ (Ceded Districts) என்று பெயர். 1798, 1800 ஆண்டுகளில் ஆங்கிலேயருடன் பாதுகாப்பு முறை உடன்படிக்கை (Subsidiary Alliance) செய்து கொண்டார். அதன்படித் தம் நாட்டைக் காப்பாற்ற ஒரு சேனையை வைத்துக்கொண்டு, அதன் செலவுக்காக 24 இலட்சம் ரூபாய் கொடுத்துத் தாம் ஆங்கிலேயரிடமிருந்து பெற்ற ஜில்லாக்களை அவர்களுக்கே கொடுத்து விட்டார். ஆங்கிலேயர் அல்லாத பிற ஐரோப்பியரைத் தம்மிடம் வைத்துக்கொள்வதில்லையென்றும், மற்ற இந்திய மன்னருடன் ஆங்கிலேயரின் உத்தரவின்றி எவ்வித உடன்படிக்கையும் செய்து கொள்வதில்லை யென்றும் ஒப்புக்கொண்டார். மற்றும் சில பாதுகாப்பு முறைத் திட்டங்களுக்கும் உட்பட்டனர்.

கருநாடகம் : முகம்மது அலியின் ஆட்சி மிகக் கீழான நிலைமையிலிருந்தது. நாட்டிலுள்ள கோட்டைகள் யாவும் ஆங்கிலேயரின் வசமிருந்தன. நவாபின் வரி வசூல் (திவானி) அதிகாரம் சொல்லளவுக்குத் தம்மிடமிருந்தாலும் இரட்டையாட்சிதான் நடந்து வந்தது. மற்றத் தென்னாட்டு மன்னர்களோடு நவாப் அக்கிரமமாகக் சண்டையிட்டுக்கொண்டிருந்தார். கம்பெனியாருக்கும் நவாபுக்கும் ஆங்கிலேயருக்கும் பேராபத்தை விளைவிக்க மைசூரில் ஐதர் அலி தோன்றினார்.

மைசூர் : ஐதர் அலி, திப்பு : ஐதர் மைசூர் சேனையின் அதிகாரி ஒருவரின் புதல்வர். அமைச்சர் நஞ்ச ராஜரின் நன்மதிப்பைப் பெற்றுத் திண்டுக்கல்லுக்குப் பவுஜதராக நியமிக்கப்பட்டார். 1761-ல் மைசூரில் சர்வாதிகாரியானார். 1763-ல் பிதனூர் சமஸ்தானத்தை வென்று பெருந்திரவியத்தைப் பெற்றார். சவனூர், கடப்பை, கர்நூல் முதலியவற்றைக் கைப்பற்றினார். பேஷ்வாவுடன் நடந்த போர்களில் தோல்வியடைந்தார். தமது தலைநகரமான ஸ்ரீரங்கபட்டணத்தைக் காத்தலே அவருக்குப் பெருமுயற்சியாக ஆயிற்று. எனினும் மற்ற இடங்களில் அவருக்கு வெற்றியே கிடைத்தது. மலையாளம், கன்னடம் முதலிய நாடுகளைக் கைப்பற்றினார். 1767-ல் அவர் ஆங்கிலேயரை எதிர்த்தார். திருவண்ணாமலையிலும், செங்கம் கணவாயிலும் போர் நடந்தது. எனினும் ஐதரைக் கருநாடகத்திலிருந்து துரத்த முடியவில்லை. ஐதர் தஞ்சாவூரைத் தாக்கி மிகுந்த திரவியத்தைப் பெற்றார். அவர் சென்னையை நோக்கி வந்ததை அறிந்த ஆங்கிலேயர் அவருடன் சமாதானம் செய்துகொண்டனர். 1778-ல் மீண்டும் போர் மூண்டது. 1780-ல் ஐதர் பெரும்படையைத் திரட்டிக்கொண்டு கருநாடகத்துள் நுழைந்தார். காஞ்சீபுரத்தில் ஆங்கிலத் தளகர்த்தர் பெய்லி தோல்வியடைந்து சிறைப்படுத்தப்பட்டார். ஆர்க்காடு ஐதரால் பிடிபட்டது. சென்னை அரசாங்கத்தின் துணைக்காக அயர்கூட்டின் (Eyre Coote) தலைமையின்கீழ் ஒரு படையும், மற்றும் ஒரு கப்பற்படையும் அனுப்பப்பட்டன. வந்தவாசியில் நடந்த போரில் ஐதர் தோல்வியுற்றார். அமெரிக்கச் சுதந்திரப் போரின் விளைவாக ஹாலந்தும் பிரான்ஸும் இங்கிலாந்துடன் பகைமை கொண்டன. இந்தியாவிலும் ஆங்கிலேயர் நாகபட்டினம் முதலிய டச்சுத் துறைமுகங்களைப் பிடித்தனர். பிரெஞ்சுக் கடற்படைகள் ஐதருக்கு துணை புரிய அனுப்பப்பட்டன, 1782-ல் ஐதர் மரணமடைந்தார். அவர் புதல்வரான திப்பு போரை நடத்தினார். புஸ்ஸி (Bussy) ஒரு பிரெஞ்சுப் படையுடன் வந்து இறங்கினார். பம்பாயிலிருந்து அனுப்பப்பட்ட ஆங்கிலேயப் படை ஒன்று மங்களூர், பிதனூர் முதலிய இடங்களைக் கைப்பற்றியது. ஆனால் திப்பு பிதனூரைத் திரும்பப் பிடித்துக் கொண்டார். தெற்கிலிருந்து ஓர் ஆங்கிலப் படை மைசூருக்கு வந்தது. 1784-ல் மங்களூரில் சமாதானம் ஏற்பட்டது. இருதிறத்தாரும் கைப்பற்றிய நாடுகள் மீண்டும் அவரவர்க்கே திருப்பி அளிக்கப்பட்டன.