பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/741

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

676

இந்தியா

-ரது ஆட்சியாகும். நூற்றாண்டின் நடுவில் அவர்களின் பேராட்சி பஞ்சாபிலிருந்து காவிரிக்கரைவரையும் பரவியிருந்தது. டெல்லி சக்கரவர்த்தி சிலகாலம் அவருக்குட் பட்டிருந்தார். நிஜாமும் மற்ற மன்னர்களும் அவர்களின் பலத்தை அசைக்க முடியவில்லை. பானிப்பட்டுத் தோல்வியாலும் அவர்கள் பலம் ஒடுங்கவில்லை. முதல் மூன்று பேஷ்வாக்கள், நாராயண ராவ், நானா பட்னாவிஸ், மகத்ஜி சிந்தியா முதலியவர்களின் வீரச் செயல்கள் அதிசயிக்கத் தக்கவை. மகாராஷ்டிரத் தலைவர்கள் தங்கள் பூசல்களையும் பொறாமைகளையும் ஒழித்துத் திப்புவைப்போலக் காரியத்தில் குறியுள்ளவர்களாக ஆங்கிலேயரை ஒன்றுபட்ட நோக்கத்துடன் பகைத்திருந்தால், ஆங்கிலேயரின் முன்னேற்றம் வெகு காலம் தடைப்பட்டிருக்கும் என்று வரலாற்று ஆசிரியர் ராபர்ட்ஸ் கூறுவது முற்றும் பொருந்தும். மகாராஷ்டிரம் கட்சிகளால் பிளவுபட்டவுடன், ஆங்கிலேயர் சிறிய மன்னர்களைப் போட்டிக்குவிட்டுச் சமயத்துக்கேற்றபடி உதவிசெய்து, தங்களுக்குப் பல கஷ்டங்களைக் கொடுத்துவந்த பிரெஞ்சுக்காரர், ஐதர், திப்பு ஆகியவர்களை வென்று, 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் சென்னை இராசதானியை நிருமாணித்தார்கள். ஐதராபாத், மைசூர், திருவிதாங்கூர், கொச்சி, புதுக்கோட்டை ஆகியவை 'பாதுகாப்பு' இராச்சியங்களாயின.

மக்களின் பொதுவாழ்க்கை , பண்பாடு : சிவாஜியின் அரசியல் திட்டம் முன்னரே குறிப்பிடப்பட்டுள்ளது. பேஷ்வாவின் ஆட்சி தக்கணத்தில் மகாராஷ்டிரத் தாய் நாட்டில் சீரான முறையில் நடைபெற்று வந்தது. அவர்கள் வென்ற மற்ற நாடுகளில் அமைதியான நிருவாகம் நடைபெறவில்லை. மக்களிடமிருந்து பல வகைகளில் பணம் வசூலிக்கப்பட்டது. மைசூர், பிதனூர், தஞ்சாவூர், மதுரை முதலிய சமஸ்தானங்களின் அரசியல் நிருவாகம் நன்றாகவே நடந்து வந்தது. வாய்க்கால்களும் குளங்களும் வெட்டப்பட்டன. நீர்ப்பாசனம் நன்கு கவனிக்கப்பட்டது. ஐதர், திப்பு இவர்களின் ஆட்சிக்காலத்தில் குடியானவர்களும் கூலித்தொழிலாளிகளும் நன்கு கவனிக்கப்பட்டனர். அவர்களது ஆட்சித்திறனை ஆங்கிலேயரும் பாராட்டிக் கூறியுள்ளனர். தஞ்சை இன்றுபோலவே அன்றும் நெற்களஞ்சியமாக விளங்கியது.

மகாராஷ்டிரரின் எளிய வாழ்க்கை நிலை நாளடைவில் மாறியது. மொகலாயர்களின் ஆடம்பர சுகவாழ்க்கை மகாராஷ்டிரரின் உள்ளத்தைக் கவர்ந்தது. மொகலாயரின் அரண்மனைகளைப்போன்ற பெரிய கட்டடங்கள் கட்டப்பட்டன. “என் தந்தையார், பாட்டனார் காலம் முதல் சென்ற 24 ஆண்டுகளாக வடக்கிலிருந்து தெற்கு நோக்கி வெள்ளமெடுத்துப்பாயும் ஆறுபோல் பொன்னும் பணமும் பெருகுகின்றன; அவை அவ்வளவு ஏராளமாகக் கிடைத்தும், நம் ஆசை மேன்மேலும் அதிகரிக்கிறது” என்று பேஷ்வா பாலாஜி தாம் எழுதிய கடிதமொன்றில் எழுதியிருப்பதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பணப்பெருக்கம் ஒன்றே அவர்கள் வாழ்க்கையை மாற்றப் போதுமானது. தெற்கில் மதுரைவரையில் அரசியல் மரியாதைகள் மொகலாய அரண்மனைகளில் நடப்பது போலவே சம்பிரதாயமாக நடைபெற்று வந்தன. உடையிலும் அப்படி மாறுபாடு தோன்றியது. பாரசீக மொழியே அரசியல் மொழியாகப் போற்றப்பட்டது. ஆங்கிலேய ஆட்சியிலுள்ள பட்டணங்களில் கவர்னர்கள் நவாபுகளின் படாடோபத்துடன் வசித்தார்கள். கம்பெனியில் வேலைசெய்யும் ஆங்கிலேயர்கள் தாங்கள் தனியே வியாபாரம் செய்து பணம் சம்பாதிப்பது வழக்கமாக இருந்தது. இந்த இரண்டு நூற்றாண்டுகளிலும் போரும், கலகமும், கொள்ளையும் மக்கள் வாழ்க்கையை எல்லாவிதத்திலும் பாதித்தன. சேனைகள் சென்ற ஊர்கள் பாழாயின. சண்டைக்குப் பிறகும் சேனையில் கூலிக்குச் சேவை செய்யும் வீரர்கள் கிராமங்களைக் கொள்ளையடிப்பது வழக்கம். உயிருக்கும் சொத்துக்கும் அடிக்கடி அபாயம் நேரும் காலமாகவே யிருந்தது. முஸ்லிம் படையெடுப்பைத் தடுக்கத் தஞ்சை விஜயராகவ நாயக்கர் அவர்களுக்கு ஏராளமான பணம் கொடுத்தார். நஷ்டத்தை ஈடுசெய்ய மக்களிடம் உபரியாக வரி சுமத்தப்பட்டது. ஏகோஜி காலத்திலும் அதிக வரி வசூலிக்கப்பட்டது; கோயில்களின் பணமும் செலவு செய்யப்பட்டது. இப்படிப் பல இடங்களில் நடந்தது. இந்த நிலைமையில் அடிக்கடி பஞ்சம் ஏற்பட்டது. “1630-ல் கூர்ஜரத்திலிருந்து கிழக்குக்கரைவரை எங்குப் பார்த்தாலும் பஞ்சத்தின் கொடுமையால் பிணக் குவியலாகத் தென்பட்டது” என்று ஓர் ஆங்கில வியாபாரி எழுதியிருக்கிறார். பஞ்சத்தில் கஷ்டப்பட்டவர்களுக்கு அன்னமளிப்பதை மதுரைச் சொக்கநாத நாயக்கர் நேரில் கவனித்தாராம். 17ஆம் நூற்றாண்டில் பஞ்சத்தில் தவிக்கும் மக்களை டச்சுக்காரர் விலைக்கு வாங்கி வெளி நாடுகளில் அடிமைகளாக விற்றார்களாம். 18ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேய வியாபாரிகளும் அடிமைகளை விற்பதும் வாங்குவதும் வழக்கம். 1788-ல் தான் அடிமைகளை ஏற்றுமதி செய்வது தடுக்கப்பட்டது.

பேஷ்வா, மைசூர் உடையார், தஞ்சை நாயக்கர், மகாராஷ்டிர போன்சலே, மதுரை நாயக்கர், சேதுபதி, தொண்டைமான் முதலிய அரச வமிசத்தினர் கல்வியை வளர்த்தார்கள். பல கவிகளையும் ஆசிரியர்களையும் ஆதரித்தார்கள். சதாசிவப் பிரமேந்திரர், அப்பய்ய தீட்சிதர், நீலகண்ட தீட்சிதர், கோவிந்த தீட்சிதர், ராமபத்திர தீட்சிதர், வேங்கடேச தீட்சிதர், வாசுதேவ தீட்சிதர், நாரயண தீட்சிதர், திருவிதாங்கூர் பாலராம வர்மா, இக்கேரி பசவ நாயக்கர், கலாலே நஞ்ச ராஜா முதலியவர்கள் இக்காலத்தில் பிரசித்தி பெற்ற வடமொழி ஆசிரியர்கள்.

ஸ்ரீதரர், மகீபதி, ராம்ஜோஷி, நரோசங்கர் முதலியவர்கள் மராத்தி மொழியில் பிரபல ஆசிரியர்கள், இக்காலத்தில் வரலாற்றைக் குறிக்கும் 'பக்கார்' (Bakhar) என்னும் மராத்தி நூல்கள் மிகவும் உபயோக முள்ளவை.

கன்னடத்தில் வீர சைவ, சமண ஆசிரியர்களால் புராணங்கள், பக்தர்கள், பெரியார்களின் சரித்திரங்கள் முதலியவைகள் எழுதப்பட்டன. தெலுங்கில் சதகங்களும் பிரபந்தங்களும் எழுதப்பட்டன. தஞ்சை நாயக்கர் சபையில் தெலுங்குமொழி மேன்மை யடைந்தது.

தமிழில் பிரபந்தங்களும், புராணங்களும், தொண்டை மண்டல சதகம், சோழ மண்டல சதகம் முதலிய சதகங்களும் எழுதப்பெற்றன. உமறுப் புலவர் நபிநாயகத்தின் சரித்திரத்தைச் சீறாப்புராணம் என்று பாடினார். கீழைக்கரை ஷயிக் காதர், சீதக்காதி மரக்காயர் இருவரும் முஸ்லிம் புலவர்கள். வீரமா முனிவர் (பெஸ்கி)என்ற கிறிஸ்தவப் பாதிரியார் தமிழில் அகராதி, இலக்கணம் முதலியவை இயற்றினார். ஆனந்தரங்கப் பிள்ளையின் தினசரிக் குறிப்பு வரலாற்று ஆராய்ச்சியாளர் களுக்கு இன்றியமையாதது.

சமயச் சண்டைகளை ஒழித்து, எச்சமயமும் உண்மையே என்று உபதேசித்த தாயுமானவர் அவதரித்த காலம் திருச்சிராப்பள்ளி நாயக்கர்களின் காலம். வேதாந்தத்தின் உண்மையை விருத்தியுரை,