பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/742

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

677

இந்தியா

கீர்த்தனம் ஆகியவற்றின் வாயிலாக உபதேசித்த முனிவர் சதாசிவேந்திரர். 17ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அப்பய்ய தீட்சிதரும் சைவம், வேதாந்தம் இவைகளைச் சமரசப்படுத்தினார். சிவஞான முனிவர் 18-ஆம் நூற்றாண்டின் இடையில் திராவிட மாபாடியம் முதலிய சமய நூல்களை இயற்றினார். இசை வளர்ச்சியைக் கவனிப்போமானால் சதாசிவேந்திர பிரமேந்திரரின் கீர்த்தனங்கள், நாராயண தீர்த்தரின் 'கிருஷ்ண லீலாதரங்கிணி', நஞ்சராஜரின் 'சங்கீத கங்காதர' முதலிய வடமொழி கீதங்களும், 'பவாதா' என்ற மராத்தி பாக்களும், கன்னடத்தில் தாசர் பதங்களும், யட்சகானங்களும், தெலுங்கில் யட்சகானங்களும், பிறகு க்ஷேத்திரய்யாவின் பதங்களும், தியாகராஜரின் கீர்த்தனங்களும், தமிழில் குற்றாலக் குறவஞ்சியும்', அருணாசலக் கவிராயர் 'இராம நாடகமும்' கவிகுஞ்சர பாரதியின் பதங்களும், பல கவிகளாலியற்றப்பட்ட நாட்டுப் பாட்டு வகைகளும் குறிப்பிடத்தக்கன.

இசைக் கலையை வளர்த்தது தஞ்சையே. இங்கு நாயக்கர்களால் கட்டப்பட்ட 'சங்கீத மகால்' அற்புதமான கட்டடம். இரகுநாத நாயக்கர் காலத்தில் பல இராகங்களும், தாளங்களும், அபிநயங்களும் சீர்திருத்தப்பட்டன. புதியனவாகவும் நிறுவப்பட்டன. மகாராஷ்டிர துல்ஜாஜி மன்னர் ' சங்கீத சாராம்ருதம்' என்ற இசை நூலை இயற்றினார். இரகுநாத நாயக்கரின் இராணிகளாகிய இராமபத்திராம்பாளும், மதுரவாணியும், விஜயராகவ நாயக்கரின் ராணி ரங்கஜம்மாவும், சம்பகவல்லி, கஸ்தூரி, சசிரேகா, மோகனமூர்த்தி, கிருஷ்ணா முதலிய அரண்மனை மாதர்களும், முத்துப் பழனியும் கலைவாணிகள் என்று கூறலாம். இவர்கள் கவி இயற்றுவதிலும், இசைக் கலை, வாத்தியக் கலை, நாடகக் கலை, இம்மூன்றிலும் கீர்த்தி வாய்ந்தவர்கள். வீணை வித்துவான் பச்சிமிரியம் ஆதியப்பா, பல்லவி கோபாலய்யர் முதலாக 18ஆம் நூற்றாண்டின் இறுதியில் பிறந்த கருநாடக இசையின் மணிகளான தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரிகள் ஆகியோர் தஞ்சையில் தோன்றினார்கள்.

இந்து மன்னர்கள், முஸ்லிம்களுக்கும் கிறிஸ்தவர்களுக்கும் அதிகமாகச் சலுகை காட்டி வந்தார்கள். மங்கம்மாள் திருச்சிராப்பள்ளியில் பிரசித்தி பெற்ற தர்க்காவுக்கும் மகாராஷ்டிர மன்னர் நாகூர் தர்க்காவுக்கும், சேதுபதி ஒருவர் திருமயத்திற்கு அருகிலுள்ள காட்டுபாவா தர்க்காவுக்கும் மானியங்கள் - விட்டுள்ள செய்திகளைக் குறிக்கும் சாசனங்கள் கிடைத்திருக்கின்றன. அப்படியே முகம்மது அலி ஸ்ரீரங்கம் முதலிய பெரிய கோயில்களுக்கு நிலங்கள் விட்டுள்ளனர். திப்பு, பல கோயில்களுக்கும் மடங்களுக்கும் நன்கொடை யளித்தார். விஜயநகர காலத்திலிருந்தே கிறிஸ்தவப் பாதிரிகளைக் கௌரவமாக நடத்தினதுடன் அவர்கள் கோயில்களைக் கட்டவும், மதப்பிரசாரம் செய்யவும் அனுமதிக்கப்பட்டார்கள். சுவார்ட்ஸ் (Schwartz) என்ற கிறிஸ்தவப் பாதிரியார் தஞ்சை சரபோஜி மன்னருக்கு ஆசிரியராகவிருந்து, திருச்சிராப்பள்ளியிலும் தஞ்சையிலும் பள்ளிக்கூடங்களைநிறுவிப் பெருஞ் சேவை செய்தார். ஜெஸ்யூட் (Jesuit) சங்கத்தைச் சேர்ந்த பாதிரிமார்களும் பல இடங்களில் பள்ளிக்கூடங்களை நிறுவினார்கள். அக்கிரகாரங்கள் தோறும் அறிஞர்கள் பிள்ளைகளுக்கு இலவசமாக வடமொழி நூல்களைப் போதித்தார்கள். சைவ, வைணவ மடங்கள் தோறும் சமயக்கல்வியும் சாத்திரக்கல்வியும் போதிக்கப்பட்டன.

விஜயநகரக் கட்டடக் கலையின் வளர்ச்சி நாயக்கர் காலத்தில் காணப்பட்டது. 100, 1000 கால்களடங்கிய மண்டபங்கள் பலவிடங்களில் ஏற்பட்டன. நாயக்கர்கலையில் விசேஷமானவை இருபுறமும் உயர்ந்த பருத்த தூண்கள் வரிசையாக உள்ள பிராகாரங்கள். அத்தூண்களில் உயர்ந்த கம்பீரமான தோற்றமுள்ள பிம்பங்களும், யாளி, சிங்கம் முதலிய உருவங்களும் காணப்படும். சில இடங்களில் பல தாண்களின் கூட்டமடங்கிய தூண்கள் உள்ளன. இராமேசுவரத்தின் பிராகாரங்கள் உலகிலேயே மிக நீண்டவை. மதுரை, ஸ்ரீவில்லிபுத்தூர், திருநெல்வேலி, சுசீந்திரம், ஸ்ரீரங்கம் முதலிய இடங்களில் நாயக்கர் கலையின் மேம்பாட்டைப் பார்க்கலாம். இவ்விரண்டு நூற்றாண்டுகளில் தஞ்சை இசைக்கலையை வளர்த்தது. மதுரை சிற்பக் கட்டடக் கலைகளை வளர்த்தது. கூ. ரா. வே.

1800-1950 : 1799-ல் திப்பு சுல்தான் வீழ்ச்சியுற்றதும், ஆங்கிலேயர்கள் கன்னடத்திற்கும் பாராமகாலுக்கும் இடையேயுள்ள நாடு முழுவதையும் கைப்பற்றிக் கொண்டனர். சோழமண்டலக் கடற்கரைக்கும் மலபாருக்கும் இடையேயுள்ள நிலப்பரப்பு முழுவதும் ஆங்கிலேயர் வசமாயிற்று. 1800-ல் அச் சுல்தான் ஆங்கிலேயர்களோடு செய்து கொண்ட ஓர் ஒப்பந்தத்தின் மூலம் 1792-1799 வரை தமது மைசூர் வெற்றிகளால் அடைந்த நிலப்பகுதிகளை யெல்லாம் கம்பெனியாருக்கு விட்டுக் கொடுத்தார். இவ்வாறாக பிரிட்டிஷார் துங்கபத்திர நதி வரையிற் படர்ந்திருந்த பல்லாரி, கடப்பை, அனந்தப்பூர் ஜில்லாக்களைப் பெற்றனர். 1842-ல் பட்டமிழந்த கர்நூல் நவாபின் பிரதேசமும் பிரிட்டிஷாருக்கு உடைமையாயிற்று. இப்பிரதேசங்களில் முதன்முதல் கலெக்டராயிருந்த தாமஸ் மன்ரோ அந்த ஜில்லாக்களின் நிலைமையைச் செம்மைப் படுத்தினார்.

கருநாடகப் பிரதேசம் 1801-ல் கம்பெனியாரால் கைப்பற்றப்பட்டது. அவர்கள் முகம்மது அலியும் அவர் மகனும் வாக்குத் தவறி நடந்தனர் என்று குற்றஞ்சாட்டி வேறொருவருக்குப் பட்டங்கிடைக்கச் செய்தனர். புதிய நவாபு பெயரளவில் நவாபாகி விட்டதால் பிரிட்டிஷார் கைக்கு உண்மையான அதிகாரம் மாறிற்று. கருநாடகத்தைக் கைப்பற்றுவதற்குச் சிறிது காலம் முன்பே வண்மை மிக்க தஞ்சை இராச்சியம் ஆங்கிலேயர் கையிற் சிக்கிற்று. 1799-ல் தஞ்சை அரசை எய்திய சரபோஜி அரசர் இராச்சிய அதிகாரத்தைப் பிரிட்டிஷார் வசம் ஒப்புவித்துவிட்டுத் தஞ்சை நகரைமட்டும் தம் ஆட்சியின் கீழ் வைத்துக் கொள்வதென்று ஓர் ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டியதாயிற்று. இப்பிரதேசங்களை எல்லாம் கைப்பற்றிய பிறகு சென்னை இராசதானி ஒருவாறு அமைந்தது. திருநெல்வேலி, மதுரை ஜில்லாக்களில் இருந்த பாளையக்காரர்களை யடக்குவதற்குப் பிரிட்டிஷார் பன்முறை போர் தொடுக்கவேண்டிய தாயிற்று. 1801-ல் பாஞ்சாலங்குறிச்சியைச் சார்ந்த கட்டபொம்ம நாயக்கரின் வீழ்ச்சியோடு அவர்களுடைய எதிர்ப்பும் ஒடுங்கிற்று.

1806-ல் வேலூரில் ஒரு சிப்பாய் கலகம் தோன்றிற்று; 1857-ல் தோன்றிய பெரிய இந்தியக் கிளர்ச்சிக்கு ஒரு முன்னோடியாக இது அமைந்தது. சிப்பாய்களின் சமயவுணர்ச்சிகளைப் புண்படுத்தும் முறையில் ஏற்படுத்தப்பட்ட சில விதிகளின் காரணமாக இக்கலகம் உண்டாயிற்று.

19ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஜமீன்தார்கள், பாளையக்காரர்கள் முதலியவர்களுடைய ஆதிக்கத்தைக் குறைப்பதும், சட்டமன்றங்களை நிறுவுவதும், நிலவரித் திட்டங்களை நன்முறையில் அமைப்பதுமே ஆங்கிலேயர்க-