பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/743

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

678

இந்தியா

ளுடைய முக்கிய வேலையாக இருந்தது. சாலைகளை அமைத்தல், ஏரிகளை மராமத்துச் செய்தல், பஞ்ச நிவாரணம், கைத்தொழில் முன்னேற்றம் முதலிய வேலைகளை அவர்கள் கவனிக்கவில்லை. கவர்னரால் ஏற்படுத்தப்படும் விதிகளும் புதுமுறை நீதி நிருவாகமும் நடைமுறைக்கு வரலாயின. ஒவ்வொரு ஜில்லாவுக்கும் ஒரு நீதிபதி நியமிக்கப்பெற்றார் ; அந்நீதிபதியே போலீஸ் அதிகாரமும் பெற்றிருந்தார். அந்நீதிபதிகளை மேற்பார்க்க இராசதானிச் சட்டமன்றம் ஒன்று நியமிக்கப்பட்டது. வரி வசூல் விஷயங்களில் மக்களோடு நெருங்கிப் பழகும் நிலையில் இருப்பதால் கலெக்டருக்கு நீதி அதிகாரமும் இருக்கவேண்டும் என்று மன்ரோ கருதினார். 1814-ல் அவர் நிருவாகத்தில் மாறுதல்கள் செய்வதற்கெனத் தனிக் கமிஷனராக நியமிக்கப்பட்டார். 1816-ல் நீதி, போலீஸ் அதிகாரங்கள் கலெக்டருக்கு மாற்றப்பட்டன. சிறு வழக்குக்களை விசாரிக்க இந்திய முன் சீப்புகள் நியமிக்கப்பட்டனர். இந்திய நாட்டுத் தாபனங்களில் ஒன்றான பஞ்சாயத்தைக் கிராமங்களில் நிறுவவதில் மன்ரோ அக்கறை காட்டினார். நெசவுப் பொருள்களை ஏற்றுமதி செய்து வந்த இந்தியா இக்காலத்தில் இறக்குமதி செய்யத் தொடங்கியது. 1843-ல் இந்திய அரசாங்கச் சட்டப்படி இந்தியா முழுவதிலும் அடிமைநிலை அகற்றப்பட்டது. 1878-ல் தங்க நாணயமான வராகனை நீக்கி, வெள்ளி நாணயமான ரூபாயை நடைமுறைக்குக் கொண்டு வந்தனர்.

1871-ல் மைசூர் அரசர் திவான் பூர்ணையாவை வேலையினின்றும் அகற்றிவிட்டுத் தாமே ஆட்சியை மேற்கொண்டார். அவர் ஆட்சி திருப்திகரமாயில்லை என்று அங்கிருந்த ரெசிடென்டு சென்னை அரசாங்கத்திற்கு எழுதினார். மைசூர் அரசருக்குப் பிரிட்டிஷ்காரர்கள் பன்முறை எடுத்துக்காட்டியும் அவருடைய ஆட்சி முன் போலவே இருந்துவந்தது. குடிமக்கள் அந்த ஆட்சியை எதிர்த்துக் கிளர்ச்சி செய்தனர். ஆயினும் 1831-ல் பிரிட்டிஷ் துருப்புக்கள் விரைவில் கலகத்தை அடக்கிவிட்டனர். 1799ஆம் ஆண்டு ஒப்பந்தப்படி பென்டிங்க் பிரபு மைசூர் ஆட்சியைக் கம்பெனியே எடுத்து நடத்துவதென ஏற்படுத்திவிட்டார். அதே சமயத்தில் மெர்க்காராவையும் ஆங்கிலேயர் கைப்பற்றிக் கொண்டனர். குடகில் மக்கள் பிரிட்டிஷ் ஆட்சியை விரும்பினர் என்று கூறிக்கொண்டு 1834-ல் குடகு முழுவதையும் சேர்த்துக்கொண்டனர். அக்காலத்தில் சில உள்ளூர்த் தகராறுகளைத் தவிர, திருவாங்கூரிலும் கொச்சியிலும் எவ்விதக் குழப்பமும் இல்லை.

1855-ல் கருநாடக நவாபு வார்சின்றி இறந்துபோன தால் நவாபு பதவியை டால்ஹௌசி யொழித்தார். அதே யாண்டில் தஞ்சை மன்னருடைய பதவியும் போயிற்று. 1857-58 இந்தியக் கிளர்ச்சிக் காலத்திலும் தென் இந்தியாவில் ஒருவித குழப்பமும் ஏற்படவில்லை.

சென்னைப் படையில் இருந்த சிப்பாய்கள் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. இதுவரை சிப்பாய்கள் செய்துவந்த சில வேலைகளையெல்லாம் புதிதாக ஏற்படுத்தப்பட்ட போலீஸ்காரர்கள் ஏற்றுக்கொள்ளத் தொடங்கினர். 1859-1861-ல் ராபின்சன் என்பவர் போலீஸ் இலாகாவை வரிசைக்கிரம முறையில் அமைத்தார். காடுகளைக் காப்பாற்றும் வேலையும் அக்காலத்தில் தொடங்கப்பட்டது. நீலகிரியில் கொய்னாவும் மலையாளத்தில் தேக்குமரங்களும் ஏராளமாகக் கிடைத்தமையால் அக்காடுகள் அழிந்துபோகாமல் பார்த்துக்கொள்ள அரசாங்கம் ஏற்பாடு செய்தது. மேனாட்டுக் கல்விமுறையிலும் சென்னை வங்காளத்திற்குப் பின்வாங்கவில்லை. இராசதானிப் பள்ளிகளும் ஆரம்பிக்கப்பட்டு, இந்தியர் முயற்சியால் தொடங்கப்பட்ட பல பள்ளிகளும் எழுந்தன. நாட்டு மொழிகளை அரசாங்கத்தார் முழுவதும் புறக்கணித்தனர் என்று கூற இயலாது. ஜில்லாக்கள் தோறும் நாட்டு மொழிப்பள்ளிகள் ஆரம்பிக்கப்பட்டன. சென்னையில் ஒரு பல்கலைக்கழகம் நிறுவப் பெற்றது.

1876-1877-ல் தென்னிந்தியாவில் ஒரு பெரும்பஞ்சம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்பஞ்சம் ஏறத்தாழத் தென்னிந்தியா முழுவதும் பரவியிருந்தது. 1881-ல் ரிப்பன்பிரபு மைசூர் இராச்சியத்தைச் சுதேச மன்னராட்சியாகத் திரும்பவும் அமைத்தார். 1823-ல் சட்டமியற்றும் தனி அதிகாரத்தை இழந்த சென்னை இராச்சியம் 1861-ல் அவ்வதிகாரத்தைத் திரும்பப் பெற்றது. அக்காலத்தில் சென்னையில் உயர் நீதிமன்றம் ஏற்படுத்தப்பட்டது. கோதாவரி, கிருஷ்ணா, காவிரி முதலிய ஆற்று அணைக்கட்டுக்களும் நீர்ப்பாசனங்களும் அரசாங்கத்தாரால் ஏற்றுச் செய்யப்பட்டன. பிற்காலத்துப் பைக்காரா, மேட்டூர் நீர் மின்சாரத் திட்டங்களும் குறிப்பிடத்தக்கவை. மற்ற மாகாணங்களைவிடச் சென்னையில் பொதுவாகக் கல்வி முன்னேற்றமும், சிறப்பாக மாதர் கல்வி முன்னேற்றமும் அதிகமாயிருந்தன.

1892, 1909, 1919, 1921 ஆம் ஆண்டுகளில் பிரிட்டிஷார் புகுத்திய அரசியல் மாறுதல்களின் விளைவாகச் சென்னை மாகாணச் சட்டசபைகள் அதிகப் படியான அதிகாரங்களைப் பெற்றன. சென்னையில் செய்தித்தாள்களின் வரலாறும் முன்னேற்றத்தையே குறிக்கின்றது. சென்ற ஒரு நூற்றாண்டாகவே அவை செய்துள்ள வேலைகளும், அவற்றின் முன்னேற்றமும் போற்றத் தக்கவை. முன்பும் லிட்டன் பிரபு காலத்தில் சுதேச மொழி அச்சகச் சட்டத்தை எதிர்த்தது சென்னை மாகாணம் ஒன்றுதான். சமூகச் சீர்திருத்தமும் சமயச் சீர்திருத்தமும் சென்ற நூற்றாண்டுத் தென்னிந்திய வரலாற்றில் காணப்படும். 19-ஆம் நூற்றாண்டின் இறுதியில் சென்னையில் பிரமஞான சபையின் தலைமை அலுவலகம் நிறுவப் பெற்றது; அச்சபையின் தலைவராயிருந்த பெசன்ட் அம்மையார் தக்க முறையில் இந்திய முன்னேற்றத்திற்குத் தொண்டு புரிந்துள்ளார். இந்திய மொழியும் கலைகளும் முன்னேற்றம் அடைந்தன.

சென்னை மாகாணத்தைச் சார்ந்த பார்ப்பனரல்லாதார் ஜஸ்டிஸ் கட்சி என ஒரு கட்சி ஏற்படுத்திக் கொண்டு, 1920ஆம் ஆண்டுத் தேர்தல்களில் பெருவாரியாக வெற்றி பெற்றுச் சென்னை இராச்சியத்தின் ஆட்சியில் அமர்ந்தனர். 1921 ஆகஸ்டில் மலையாள நாட்டு ‘மாப்பிள்ளைகள்’ என்னும் முஸ்லிம் பிரிவினர் கலகம் செய்யத் தொடங்கிக் கொலை முதலியவற்றில் ஈடுபடலாயினர்.

இரண்டு உலக யுத்தங்களிலும் கலந்துகொண்ட சென்னைச் சிப்பாய்களின் போர்த்திறமையைப் பலரும் புகழ்ந்ததன் மூலம் சென்னைவாசிகள் போர்த்திறனற்ற வர்கள் என்னும் வசைச்சொல் நீங்கிற்று.

1920க்குப் பிறகு தென்னிந்திய வரலாறு பெரும்பாலும் இந்திய வரலாற்றின் பொது முன்னேற்றத்தின் ஒரு பகுதியாகவே அமைந்தது. சி. எஸ். ஸ்ரீ.

அரசியல் அமைப்பு

வடமேற்கு மாகாணத்திலிருந்து அஸ்ஸாம் வரையிலும், காச்மீரத்திலிருந்து கன்னியாகுமரி வரையிலும் பரந்து கிடக்கும் இந்தியாவைப் பிரிட்டிஷார் ஆண்டு வந்தபோது, பிரிட்டிஷ் இந்தியா எனப்பட்ட மாகா-