பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/744

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

679

இந்தியா

-ணங்கள் பிரிட்டிஷாருடைய நேர் ஆட்சியிலும், சமஸ்தான இந்தியா என்னும் பல நூறு சமஸ்தானங்கள் பிரிட்டிஷாருக்கு அடங்கிய சுதேசமன்னர் ஆட்சியிலும் இருந்து வந்தன. 1947 ஆகஸ்ட் 15-ல் பிரிட்டிஷார் இந்த நாட்டை இந்தியா, பாகிஸ்தான் என இரண்டாகப் பிரித்து, இரண்டையும் சுதந்திரமுள்ள ஆதிபத்திய வல்லரசுகளாகச் செய்தனர். கிழக்கு வங்காளம், மேற்கு பஞ்சாப், சிந்து, வடமேற்கு எல்லைப்புறம், பலூச்சிஸ் தானம் ஆகியவை பாகிஸ்தான்; ஏனைய பகுதி இந்தியா. இந்தியாவும் பாகிஸ்தானும் பிரிட்டிஷ் முடியரசின் கீழ் உள்ள குடியேற்ற நாடுகளாயின. ஆயினும் அவை உள்நாட்டு, வெளிநாட்டு விவகாரங்களைத் தங்கள் விருப்பம்போல் நடத்திக்கொள்ளலாம் என்று கூறப்பட்டது.

1947 முதல் 1949 டிசம்பர் வரை இந்தியாவின் எல்லைக்குள் அடங்கிய சமஸ்தானங்கள் இந்தியாவுடன் சேர்ந்துகொண்டன. அதன்பின் பல சிறு சமஸ்தானங்கள் அடுத்துள்ள மாகாணங்களுடன் இணைக்கப்பட்டன. எஞ்சியுள்ளவற்றில் மூன்று தவிர ஏனையவை சில ஐக்கியங்களாகத் தொகுக்கப்பெற்றன. ஆகவே, ஐந்நூற்றுக்கு மேற்பட்ட பழைய சமஸ்தானங்களில் இப்போது மூன்று தனி சமஸ்தான இராச்சியங்களாகவும், ஆறு ஐக்கியங்களாகவும் நிலைத்தவை தவிர, மற்றவை மாகாணங்களுடன் கலந்துவிட்டன.

மாகாணப் பிரதிநிதிகளும் சமஸ்தானப் பிரதிநிதிகளும் அடங்கிய அரசியல் நிருணய சபை ஏற்பட்டு, அரசியல் அமைப்புச் சட்டத்தை 1949 நவம்பர் 26ஆம் நாள் நிறைவேற்றியது. அது 1950 ஜனவரி 26ஆம் நாள் அமலுக்கு வந்தது. இந்தியா ஒரு சம்பூரண அதிகார ஜனநாயகக் குடியரசு என்று இந்திய மக்கள் முடிவு செய்வதாக அச்சட்டத்தின் பீடிகை கூறுகிறது.

இந்தியா குடியரசானதால் இங்கிலாந்தரசர் இனிமேல் இந்தியாவின் அரசராக இருக்கமாட்டார். இந்தியா அவரைத் தலைவராகக் கொண்ட காமன் வெல்த்தின் உறுப்பாக இன்று இருந்துவருகிறது. நினைத்தபோது காமன்வெல்த்தை விட்டு விலக இந்தியாவுக்கு உரிமையுண்டு.

இந்தியக் குடியரசு வேறு யாருக்கும் அடங்கியதன்று. பூரண சுதந்திரமுடையது. அதனால் அது ஓர் ஆதிபத்திய வல்லரசாகும். அதன் அரசாங்கம் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் மூலம் நடை பெறுமாதலால் அது ஜனநாயக அரசாகும்.

இந்தியா அல்லது பாரதம் பல இராச்சியங்களின் (States) ஐக்கியமாக அமைக்கப்பட்டிருக்கிறது. அதனால் அது இந்திய யூனியன் என்றும் வழங்கும். மத்திய அரசாங்கமும் இராச்சிய அரசாங்கமும் தனி அரசாங்கங்கள். ஓரளவுக்குக் கூட்டாட்சி அமைப்புப் போலவே இந்தியாவின் அரசியலமைப்புத் தோன்றுகிறது. இந்தியாவில் பிறந்து இந்தியாவிலேயே நிலையாகக் குடியிருப்போரும், பிற நாட்டில் பிறந்தாலும் இந்தியாவில் பிறந்த ஒருவரைப்பெற்றோரில் ஒருவராக உடையவராயும், இந்தியாவில் நிலையாகக் குடியிருப்பவராயும் உள்ளவரும், பிற நாட்டில் பிறந்திருந்தாலும் 1950 ஜனவரி 26ம் ஆம் நாளுக்கு முன் ஐந்து ஆண்டுகள் இந்தியாவில் வசித்தவராயும், இப்போது இந்தியாவில் நிலையாகக் குடியிருட்பவராயு முள்ளவரும் இந்திய யூனியன் குடிகள் ஆவர். மற்றவர்கள் குடியுரிமை பெறுவதற்குள்ள விதிகளும் கூறப்பட்டிருக்கின்றன.

இந்தியாவில் இயற்றப்பெறும் சட்டங்கள் அனைத்தும் அரசியல் அமைப்புச்சட்டத்துக்கு முரண்படாதவையா யிருக்கவேண்டும். அதிலும் முக்கியமாக அடிப்படை உரிமைகளுக்கு முரண்படக்கூடாது; எந்த அளவுக்கு முரண்படுகின்றனவோ அந்த அளவிற்கு அவை பயனற்றவையாகும்.

இந்திய அரசாங்கங்கள் நாட்டை ஆளும்போது கவனித்து அமலுக்குக் கொணர வேண்டிய இலட்சியங்கள் சில அரசியல் அமைப்புச் சட்டத்தின் ஓர் அத்தியாய மாகக் காணப்படுகின்றன. அரசாங்கம் இவைகளைக் கவனியாது நடந்தால், அதனால் பாதிக்கப்படுவோர் நீதி மன்றம் சென்று பரிகாரம் பெற முடியாதெனினும், அரசாங்கங்களுக்கு இவை சமூகப் பொருளாதாரத் துறைகளில் சிறந்த வழிகாட்டியாக உதவும்.

இந்திய ஐக்கியத்தின் நிருவாகத் தலைவர் ராஷ்டிரபதி எனப்படுவர். அவர் பார்லிமென்டின் உறுப்பினரும், இராச்சிய சட்டசபை உறுப்பினரும் தேர்ந்தெடுத்த வாக்காளர் மன்றத்தால் தேர்ந்தெடுக்கப்படுவார். ஒருவரே பலமுறை தேர்ந்தெடுக்கப்படலாம். தேர்ந்தெடுத்தபின் ஐந்து ஆண்டுகள் பதவிவகிப்பார். அவர் அரசியலமைப்புக்கு விரோதமாக நடந்ததாகப் பார்லிமென்டில் குற்றஞ்சாட்டப்பட்டு, அக்குற்றச்சாட்டு ருஜுவானால் அவர் பதவியைவிட்டு விலகக் கடவர். அவர் தாமாக ராஜிநாமா செய்யலாம்.

பார்லிமென்டின் உறுப்பினர்கள் உபராஷ்டிரபதியைத் தேர்ந்தெடுப்பர். அவரும் ஐந்து ஆண்டுகள் பதவி வகிப்பர். அவர் விலக வேண்டும் என்று பார்லிமென்டு தீர்மானித்தால் அவர் விலகுவார். ராஷ்டிரபதி தாற்காலிகமாக அயல்நாடு சென்றபோதும், ராஷ்டிரபதி தேர்ந்தெடுக்கப்பெறும் வரையும் உபராஷ்டிரபதி ராஷ்டிரபதியின் கடமைகளைச் செய்வார். உபராஷ்டிரபதியே பார்லிமென்டின் மேல்சபைக்குத் தலைவராவர்.

ராஷ்டிரபதி தம்முடைய பிரதம மந்திரியையும் அவருடைய கருத்துப்படி பிற மந்திரிகளையும் நியமிப்பார். மந்திரிகள் அனைவரும் கூட்டாகப் பார்லிமென்டுக்குப் பொறுப்புடையவர். ராஷ்டிரபதி மந்திரிகளின் கருத்துப்படி நடப்பர். மந்திரிகளுடைய கருத்துப் பிடிக்காவிடினும், அவர்கள் நடவடிக்கை அதிருப்தி தரினும், அவர்களை ராஜிநாமா செய்யுமாறு பணிக்க ராஷ்டிரபதிக்கு அதிகாரம் உண்டு.

மத்தியச் சட்டத் தாபனம் பார்லிமென்டு என்று வழங்கும். அது இராச்சியங்களின் சபை, மக்கள் சபை என்ற இரு சபைகள் கொண்டதாகும். இராச்சியங்களது சபையின் உறுப்பினர் 250க்குக் குறையாத தொகையினராவர். அவர்களுள் இலக்கியம், விஞ்ஞானம், கலை, பொதுமக்களுக்குத் தொண்டு செய்தல் ஆகியவற்றில் தனித் திறமை அல்லது பயிற்சியுடைய பன்னிருவர் ராஷ்டிரபதியால் நியமிக்கப் பெறுவர். ஒவ்வொரு இராச்சியத்திலிருந்தும் மேல்சபைக்குச் செல்லவேண்டிய உறுப்பினர் தொகை அதன் மக்கள் தொகையைப் பொறுத்ததாகும். அவர்களுள் மூன்றில் ஒரு பகுதியார் இரண்டாண்டுகட்கு ஒருமுறை தங்கள் பதவியினின்றும் விலகுவர். இச்சபை ராஷ்டிரபதியால் கலைக்கப்பட மாட்டாது.

மக்கள் சபை உறுப்பினர் ஐந்தாண்டு பதவியில் இருப்பர். இச்சபையில் 500க்கு மேற்படாத உறுப்பினர் இருப்பர். இவர்களும் மக்கள் தொகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப் பெறுவர். வயது வந்தவர்கள் அனைவரும் வாக்காளர் ஆவர். இச்சபையின் உறுப்பினர்கள் தங்கள் சபாநாயகரையும் உபசபாநாயகரையும் தேர்வர். உபசபாநாயகர் சபாநாயகர் வராத போதும், சபாநாயகர் பதவி காலியாயிருக்கும்போதும் சபாநாயகர் கடமைகளைச் செய்வர். இச்சபையை