பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/746

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

681

இந்தியா

புக்களாகும். இந்திய ஐக்கியத்தின் அரசாங்க மொழி, தேவநாகரி லிபியில் எழுதும் இந்தியாகும். ஆனால் ஆங்கில மொழி 1950 ஜனவரி 26 லிருந்து 15ஆண்டுகள் அரசியல் மொழியாக இருந்து வரும். இராச்சியச் சட்டசபை இராச்சியத்தில் இப்போது பயன்பட்டுவரும் ஏதேனும் ஒரு மொழியையோ, பல மொழிகளையோ, இந்தியையோ அரசாங்க மொழியாக ஆக்கலாம். அவ்வாறு செய்யும்வரை ஆங்கில மொழி அரசாங்க மொழியாக இருந்துவரும். சர்வதேச எண்கள் அரசாங்க எண்களாக ஆகும்.

இந்த அரசியல் சட்டத்தைத் திருத்த வேண்டுமானால், திருத்த மசோதா பார்லிமென்டு சபைகளுள் ஏதேனும் ஒன்றில் கொண்டுவரப்பட்டு, பிறகு ஒவ்வொரு சபையிலும் சபையின் மொத்த உறுப்பினர்களுள் பெரும்பான்மையோராலும், அன்று வந்து வாக்களிக்கும் உறுப்பினருள் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத தொகையினராலும் நிறைவேற்றப்பட வேண்டும். ராஷ்டிரபதி தேர்தல் முறை, யூனியனின் நிருவாக அமைப்பு, இராச்சியங்களின் நிருவாக அமைப்பு, ஈ இராச்சியங்களுக்கான உயர்நீதி மன்றங்கள், யூனியன் நீதி மன்றங்கள், இராச்சிய நீதி மன்றங்கள், சட்ட நிரூபண உறவுகள், ஏழாவது தப்சீலில் கண்ட பட்டிகள், பார்லிமென்டில் இராச்சியங்களின் பிரதிநிதித்துவம், அரசியலமைப்புத் திருத்தமுறை ஆகிய விஷயங்களில் எதைப்பற்றி ஒரு திருத்தம் ஏற்படுத்த வேண்டுமாயினும், முதல் தப்சீலில் கண்ட ஏ, பீ இராச்சியங்களில் பாதிக்குக் குறையாத சட்டசபைகளால் அங்கீகரிக்கப்படவேண்டும். அரசியலமைப்பிலுள்ள ஷரத்துக்கள் திருத்தப்படவேண்டுமாயின், இறுதியாக ராஷ்டிரபதி அதை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆயினும் ராஷ்டிரபதி மறுக்காமல் ஏற்றுக் கொள்வார் என்பதே கொள்கை.

நூல் : இந்திய அரசியல் அமைப்பு - சென்னை அரசாங்க வெளியீடு.


கல்வி

இந்தியாவில் பண்டைக்காலத்தில் பாடசாலைகளும், ஆச்சிரமங்களும், மடாலயங்களும், தொழிற்பள்ளிகளும், பல்கலைக்கழகங்களும் ஏராளமாக இருந்து கல்வியை வளர்த்து வந்தன. தட்சசீலம், நாலந்தா, காஞ்சி, மதுரை, விக்கிரமசீலம், நவத்வீபம், காசி முதலிய இடங்களிலிருந்த பண்டைய பல்கலைக்கழகங்கள் இலக் கியத்துறையிலும் விஞ்ஞானத்துறையிலும் பெரிய ஆராய்ச்சி நிலையங்களாகவும் இருந்தன. சில நகரங்கள் குறிப்பிட்ட துறையில் சிறப்படைந்திருந்தன. எடுத்துக் காட்டாகத் தஞ்சாவூர் இலக்கியம், கலை, விஞ்ஞானம் என்பவற்றிலும், கல்யாண் சட்டத்திலும், வானவியலிலும், பைத்தான் சட்டத்திலும், விஞ்ஞானத்திலும் பெயர்பெற்றிருந்தன. சிறந்த அயல்நாட்டுப் புலவர்களும் கவிஞர்களும், கல்யாண், நாலந்தாக் கழகங்களுக்கு வந்துபோயினர்.

முஸ்லிம்கள் ஆண்ட காலங்களில் நாடெங்கும் மக்தாப் என்ற பாடசாலைகளும், டெல்லி, லாகூர், ராம்பூர், இலட்சுமணபுரி, அலகாபாத், ஜான்புரி, அஜ்மீர், பீடார் என்ற ஊர்களில் மதராசா என்னும் கல்லூரிகளும் ஏற்பட்டன. இக்கல்லூரிகளில் இலக்கணம், தருக்கம், சட்டம், இயற்கையியல், தத்துவ சாஸ்திரம், உடலியல், வடிவ கணிதம், வானவியல் ஆகியவற்றில் சிறப்பான ஆராய்ச்சிகள் நடந்தன.

19ஆம் நூற்றாண்டின் முதற்பாதியில் பிரிட்டிஷார் ஆங்கிலமொழி மூலமாகக் கல்வி போதிக்கத் தொடங்கினர். அவர்களுடைய தலையாய நோக்கம் அரசாங்க நிருவாகத்துக்கு வேண்டிய குறைந்த சம்பள அலுவலாளர்களைத் தயாரிப்பதேயாகும். அதனால் தொழிற் கல்வியும், தொழில் நுட்பக் கல்வியும், ஆராய்ச்சியும் அருமையாகவே இருந்தன. ஆரம்பக்கல்வி நன்கு கவனிக்கப்படவில்லை. பிரிட்டிஷார் ஆண்டகாலத்தில் எழுதப்படிக்கத் தெரிந்தவர் தொகை 15% ஆகவே இருந்தது. ஆயினும் மேனாட்டுக் கல்வியானது இந்திய மக்களிடத்தில் சுதந்திரதாகத்தை எழுப்பியது.

இந்தியா சுதந்திரம் அடைந்தபிறகு அரசாங்கத்தின் கல்விக்கொள்கை நான்கு குறிக்கோள்களை உடையதாயிருக்கிறது. அவையாவன : 1. பள்ளி செல்லும் வயதுள்ள குழந்தைகள் அனைவருக்கும் கட்டாய இலவச ஆரம்ப ஆதாரக்கல்வி அளித்தல். 2. வயதுவந்தவர்க்குக் கல்வியறிவும், விவசாயம், கிராமக் கைத்தொழில்கள், குடியுரிமை முதலிய விஷயங்களைப்பற்றிய அறிவும் தருதல். 3. தொழில் நுட்பக்கல்வியை வளர்த்துப் பெருக்குதல். 4. பல்கலைக்கழகக் கல்வியைச் சீர்திருத்தி அமைத்தல்.

மத்தியக் கல்வி மந்திரி நிலையமானது இராச்சிய அரசாங்கங்களுடன் கலந்துகொண்டு நாடெங்கும் கட்டாய இலவச ஆதாரக்கல்வியைப் பரப்பும் 16 ஆண்டுத் திட்டத்தையும், 45 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்க்குச் சமூகக் கல்வி தரும் பத்தாண்டுத் திட்டத்தையும் வகுத்து, அவற்றை நடைமுறைக்குக் கொண்டுவரத் தொடங்கி யுள்ளது.

நடுத்தரக் கல்வியைச் சீர்திருத்தி அமைப்பதற்கான யோசனைகளைக் கூறுமாறு ஒரு கமிஷனை அரசாங்கத்தார் அமைத்தனர். அக்கமிஷன் கூறிய யோசனைகளை அரசாங்கத்தார் ஆராய்ந்து வருகிறார்கள், ஆசிரியர்கள் பயிற்சிக்கான முயற்சிகளையும் மத்திய அரசாங்கமும் இராச்சிய அரசாங்கங்களும் மேற்கொண்டுள்ளன. டெல்லியிலுள்ள கல்வி மத்திய நிலையம் கல்விப் பிரச்சினை களைப்பற்றி ஆராய்ச்சி செய்கின்றது. சாந்திநிகேதனத்திலுள்ள வினயபவனம் கலைகள் மூலமாக ஆதாரக் கல்வி அளிப்பதுபற்றிப் புதிய முறை ஒன்றைத் தொடங்கியுள்ளது.

அரசாங்கம் விஞ்ஞானக் கல்வியையும் தொழில் நுட்பக் கல்வியையும் வளர்ப்பதற்கான காரியங்களையும் செய்து வருகிறது. பல விஞ்ஞானிகளும் தொழில் நிபுணர்களும் பயிற்சி பெறுவதற்காக அயல் நாடுகளுக்கு அனுப்பப்படுகிறார்கள். நாட்டில் பன்னிரண்டு விஞ் ஞான ஆராய்ச்சி நிலையங்கள் நிறுவப்பட்டுள்ளன. ஆராய்ச்சி செய்ய ஆவலுள்ள திறமையான மாண வர்க்கு உபகாரநிதி அளிக்கப்படுகிறது.

அரசாங்கம் 1948-ல் பல்கலைக்கழகக் கல்விக் கமிஷனை நியமித்தது. அதன் யோசனைகளில் முக்கியமானவை ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. டெல்லி, அலிகார், காசி ஆகிய பல்கலைக் கழகங்கள் விஷயமாகச் சொன்ன யோசனைகளை நிறைவேற்றச் சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளன. அக்கமிஷன் கூறியபடி ரவீந்திரநாத் தாகூர் நிறுவிய விசுவபாரதி ஒரு மத்தியப் பல்கலைக்கழகமாக ஆக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் கலைகளைப் பாதுகாத்து வளர்ப்பதற்காக பல கழகங்கள் ஏற்பட்டு வருகின்றன. மிகச் சிறந்த இசைவலாளர்களுக்கு ராஷ்டிரபதி பரிசுகள் வழங்குகின்றனர். தமது கலையை வளர்ப்பதற்காகச் சிறந்த கலைஞர்களுக்கு உதவி அளிக்க ஏற்பாடு செய்யப் பட்டிருக்கிறது.

பிறநாட்டுக் கல்வி நிலையங்களுடன் தொடர்பு வைத்துக்கொள்வதற்கான திட்டங்களும் இடப்பட்டிருக்-