பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/754

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

689

இந்தியா

நடத்தி வந்ததுண்டு. அக்பர் காலம் முதல் ஆங்கிலேயர்களும் டச்சுக்காரர்களும் இந்தியாவுக்கு வந்து பல இடங்களில் பண்டக சாலைகளைக் கட்டிக் கொண்டனர். அப்போது இந்தியாவில் ஆக்ரா, பாட்னா, அகமதாபாத், லாகூர், காசி,ஹூக்ளி, டாக்கா முதலிய பல நகரங்கள் செழிப்புற்றிருந்தன. போக்குவரத்துக்குச் சாலைகளும் ஆறுகளும் பயன்பட்டன. 17ஆம் நூற்றாண்டின் இறுதி முதல் நாட்டில் ஏற்பட்ட சண்டை சச்சரவுகளலும் குழப்பங்களாலும் மக்களின் பொருளாதார நிலை சீர்குலையத் தொடங்கியது. அன்னியர்கள் ஏராளமான செல்வத்தை இந்தியாவிலிருந்து கடத்தியதும், நாட்டில் ஆட்சிப் பலவீனமுண்டாயதும் இந்த வீழ்ச்சிக்குக் காரணங்களாகும்.

கம்பெனியார் ஆட்சியின் வளர்ச்சி : 1600ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட கிழக்கிந்தியக் கம்பெனி இந்தியாவெங்கும் பண்டக சாலைகள் ஏற்படுத்தி வியாபாரம் தொடங்கிற்று. சென்னை, பம்பாய், கல்கத்தா தலைநகரங்களாக ஆயின. 1744-1763-ல் மூன்று கருநாடக யுத்தங்களில் பிரெஞ்சுக்காரர்களை வீழ்த்தியபின் தென்னிந்தியாவில் கம்பெனியார் ஆதிக்கம் பெற்றனர். 1757-ல் பிளாசிச் சண்டைக்குப் பின்னர், வங்காளத்திலும் ஆதிக்கம் அடைந்தனர். 1765-ல் மொகலாயச் சக்கரவர்த்தியிடமிருந்து வங்காளத்தின் ஆட்சியுரிமையும் பெற்றனர். இதன் மூலம் சட்டபூர்வமான ஆட்சிநிலை அடைந்தனர். 1773ஆம் ஆண்டின் ஒழுங்குமுறைச் சட்டத்தின் (Regulating Act) வாயிலாகப் பார்லிமென்டு சபையின் அங்கீகாரமும் கிடைத்தது. 1784-ல் பிட் இந்தியச் சட்டப்படி (Pitt's India Act) கம்பெனியின் ஆட்சி இங்கிலாந்து மன்னரின் மேற்பார்வைக்குள்ளாக்கப்பட்டது. 1833ஆம் ஆண்டில் கம்பெனியின் சாசனம் புதுப்பிக்கப்பட்ட பொழுது, அவர்கள் வியாபாரத்தை முற்றிலும் விட்டுவிட்டு இந்தியாவை ஆளத் தொடங்கினர். 1775 - 1833க்குள் காசி, சால்செட், மைசூர், சூரத்து, தஞ்சை, கருநாடகம், தற்காலம் பம்பாய் மாகாணம் என வழங்கும் பேஷ்வாவின் நாடு, அஸ் ஸாம், அரக்கான், டெனாசரிம், குடகு முதலிய பகுதிகளும் கம்பெனிக்குச் சொந்தமாயின.

கம்பெனியின் ஆதிக்கம் வளர வளர நாட்டில் செழிப்புற்றிருந்த வாணிகமும் கைத்தொழிலும் சீர் குலையத் தொடங்கின. கம்பெனியாரின் குமாஸ்தாக்களும் மற்ற வேலைக்காரர்களும் சுதேச நவாபுகளிடமிருந்தும் அரசர்களிடமிருந்தும் பல வழிகளில் சேர்த்த செல்வமும், ஆட்சி வருமான மீதமும் இங்கிலாந்துக்கு அனுப்பப்பட்டு, நாடு வறுமையுற்றது. கம்பெனியாரின் அநியாயப் போட்டியாலும் வழிகளாலும் இந்திய வியாபாரிகள் அழிந்தனர். வங்காளத்தில் நெசவாளிகள் கம்பெனியாரால் துன்புறுத்தப்பட்டனர். இந்தியத் துணிகள் இங்கிலாந்தில் இறக்குமதி யாகாவண்ணம் சட்டம் போட்டும், கடற்சுங்க வரியை உயர்த்தியும் தடுத்தனர். இவற்றால் வங்காளத்தின் நெசவுத்தொழில் பாழாயிற்று. நிலவரியின் சுமை தாங்காமல் வேளாண்மை கேடுற்றது. கருநாடகத்தில் நவாபுக்குக் கடன்கொடுத்த அன்னியர்கள் ஈடாக நிலத்தின் வருமானம் முழுவதையும் பெற்றுத் தம் நாட்டுக்கு அனுப்பினர். பொதுவாகக் கம்பெனியார் இந்தியாவின் வருமானத்தை நாட்டின் முன்னேற்றத்திற்குச் செலவு செய்யாமல் நாட்டிலிருந்து வெளியேற்றி வந்தனர்.

19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்தியாவின் பொருளாதார நிலை: இந்தியாவின் வாழ்க்கை கிராமத்தை அடிப்படையாகக் கொண்டது. பெரும்பாலான மக்கள் கிராமங்களிலே வசித்து வந்தனர். ஒவ்வொரு கிராமமும் தன் தேவைகளைத் தானே நிறைவு செய்து கொண்டது. போக்குவரத்துச் சாதனங்களில் பல குறைகள் இருந்தன. இதனால் வாணிகம் தடைப்பட்டது. பஞ்ச காலங்களில் ஓரிடமிருந்து மற்றோரிடத்துக்கு உணவுப் பொருள்கள் கொண்டுபோவது இயலாத காரியம். கிராமங்களில் நாணயப் பழக்கம் இல்லை. பண்ட மாற்றுத்தான் நடைபெற்றது. தானிய மூலமாக செலவு செய்யப்பட்டது. நிலந்தான் செல்வமாயிருந் தது. நிலச் சொந்தக்காரர்களுக்குரிய பகுதி, தொழிலாளிகளுக்குரிய கூலி, சாமான்களுக்குரிய விலை முதலியன கிராம வழக்கப்படி தீர்மானிக்கப்பட்டு வந்தன. அக்காலத்தில் கிராமங்கள் அன்றிப் பல நகரங்களும் இருந்தன. இந்தியாவின் மக்கள் தொகையில் 10 சதவீதம் நகரங்களில் இருந்ததென்று கூறலாம். ஒவ்வொரு நகரத்திலும் ஏதேனும் ஒரு கைத்தொழில் செய்யப்பட்டு வந்தது. கைத்தொழிலால் வந்த பொருள்கள் மிகுந்த கலை நுணுக்கம் அமைந்த வேலைப்பாடுகளுடன் விளங்கினமையால் உலகப்புகழ் பெற்றிருந்தன. முக்கியமாக நெசவுத் தொழிலைத் தேசியத் தொழில் எனக் கூறலாம். இரும்பு, எஃகு உற்பத்தியும் உண்டு. பீரங்கி, வாள் முதலியன செய்யப்பட்டு வந்தன. வாளின் பிடிகளுக்கும் கேடயங்களுக்கும் சித்திர வேலைப்பாடு செய்வதும் முக்கியமான தொழிலாக இருந்தது. தங்கம், வெள்ளி, பித்தளைச் சாமான்களின்மீது எனாமல் பூசுவதும், சரிகைக் கம்பிகள் இழுத்தல், சலவைக்கல், தந்தம், சந்தனக் கட்டை ஆகியவற்றின் மீது சிற்ப வேலைகள் செய்தல், தோல் பதனிட்டுச் சாமான்கள் செய்தல், காகிதம் செய்தல், வாசனைச் சாமான்கள் செய்தல், கப்பல் கட்டுதல், கண்ணாடிச் சாமான்கள் செய்தல் முதலிய பலவிதத் தொழில்களும் நாட்டின் பற்பல பாகங்களில் செய்யப்பட்டு வந்தன. தொழிலாளர் சங்கங்கள், தொழிலாளர்களின் நலனைக் கவனித்தும், ஆக்கப்படும் பொருள்களின் தரத்தைப் பாதுகாத்தும் வந்தன. மேலும் சில அறங்களிலும் ஈடுபட்டு வந்தன. பொதுவாக ஒவ்வொரு தொழிலாளியும் விலைக்குச் செய்யச் சொல்லும் பொழுதே பொருள்கள் செய்து கொடுத்தனன். அதற்கு வேண்டிய கச்சாப் பொருள்களைச் சாமான்கள் வாங்குபவர்களிடமே பெற்றனன்.

பொருளாதார மாறுபாடு : சுமார் 19ஆம் நூற்றாண்டின் இடையிலிருந்து பொருளாதார வாழ்க்கையில் பல மாறுபாடுகள் உண்டாயின. இதற்கு நாட்டில் அன்னியர்களும் மேனாட்டுப் பண்பும் புகுந்தமையும், இருப்புப் பாதைகள் முதலிய புதிய போக்குவரத்துச் சாதனங்கள் ஏற்பட்டமையும், சூயெஸ் கால்வாய் வெட்டப்பட்டமையும், இங்கிலாந்தில் தொழிற் புரட்சியின் காரணமாக எந்திரங்களால் பெருவாரியாக ஆக்கப்பட்ட சாமான்களை இந்தியாவில் விற்கவேண்டி அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்ட புதுக்கொள்கைகளும் காரணங்களாகும். கிராமங்களில் சுயதேவைகளைப் பூர்த்தி செய்வது நின்றது. அன்னிய நாட்டுப்பொருள்கள் ஏராளமாக இறக்குமதி செய்யப்பட்டன. நாணயப் புழக்கம் உண்டாகியது. அன்னிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்கென்று விவசாயம் செய்யப்பட்டு வந்தது. விவசாயிகளுக்கிடையே கடன் மிகுந்து, நிலங்கள் கடன் கொடுத்தவர்களின் வசமாயின. ஏற்கெனவே பல கைத்தொழிற் பொருள்களை ஏற்றுமதி செய்த இந்தியா உணவுப் பொருள்களையும், மேனாட்டு எந்திரக் கைத்தொழிலுக்கு வேண்டிய கச்சாப் பொருள்களையும் ஏற்றுமதி செய்து, மேனாட்டிலிருந்து உற்பத்தி செய்த பொருள்களை இறக்குமதி செய்தது. இங்கிலாந்திலிருந்து குறைந்த விலையில் பெருவாரியாக