பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/755

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

690

இந்தியா

இறக்குமதி செய்யப்பட்ட பொருள்களின் முன், இந்தியக் கைத்தொழிற் பொருள்கள் நிற்க முடியவில்லை. மேலும் பிரான்சில் இந்தியச் சால்வைகளுக்குக் கிராக்கி குறைந்தது. மரக்கரி விலை ஏற்றத்தாலும், வெளிநாடுகளிலிருந்து இரும்பு இறக்குமதி செய்யப்பட்டதாலும் இந்திய இரும்பு, எஃகு உற்பத்தித் தொழில் பாழாகியது. சிலிநாட்டில் நைட்ரேட் இயற்கையில் அகப்பட்டதால் இந்தியாவில் வெடியுப்பு உற்பத்தி நின்றது. இவ்வாறு பல காரணங்களால் இந்தியக் கைத்தொழில்கள் அழிந்தன. பொருளாதார வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

நிலவரியும் நில உரிமையும் : இந்தியாவில் பண்டைக் காலம் முதல் நிலவரியே அரசாங்கத்தின் முக்கிய வருமானமாக இருந்தது. சாதாரணமாக ஒவ்வொரு கிராமத்தின் மொத்த மகசூலில் ஆறில் ஒரு பங்கு அரசனுடையது. இப்பங்கு கிராமத் தலைவனால் களத்துமேட்டிலேயே வசூலித்துக் கொடுக்கப்பட்டது. முஸ்லிம் ஆட்சியிலும் இம்முறையே வழக்கிலிருந்தது. ஆனால் முன்னைவிட இப் பங்கு அதிகம். முதன் முதலாக அரசாங்க வருமானத்தை நாணயமாகப் பெற்றுக் கொள்வதற்குத் தைமூரினாலும், பிறகு ஷெர்ஷாவினாலும் ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அக்பர் ஆட்சியில் தோடர் மல் செய்த நிலவரி ஏற்பாட்டின்படி நிலங்கள் அளக்கப்பட்டும், தரவாரியாகப் பிரிக்கப்பட்டும், அரசாங்கத்தின் பங்கு மொத்த மகசூலில் மூன்றில் ஒன்றாகத் தீர்மானிக்கப்பட்டது. பிறகு முன் 19 ஆண்டுகளின் தானியச் சராசரி விலை விகிதப்படி மதிப்பீட்டு, இத்தொகை ஒவ்வொரு குடியானவனிடமிருந்தும் பெற்றுக்கொள்ளப்பட்டது. இத்தொகையைத் திரட்டிச் சர்க்காருக்குச் செலுத்தப் பல தரகர்கள் இருந்தனர். தோடர் மல்லின் ஏற்பாடு ஏறக்குறைய ஒரு நூற்றாண்டு அமலில் இருந்தது. மொகலாய ஆட்சியின் இறுதிக் காலத்தில் ஒரு புதிய வழக்கம் தோன்றியது. ஒரு ஜில்லா அல்லது பர்கனாவில் நிலவரியை வசூல் செய்யும் உரிமை ஏலத்தில் விடப்பட்டு ஏலமெடுப்போரிடமிருந்து அரசாங்கத்தார் - தொகையைப் பெற்றுக்கொண்டனர். சர்க்காருக்குக் கட்டின தொகைபோக மீதி ஏலமெடுப் போருடையது. நாளடைவில் இவ்வரி வசூல் செய்யும் உரிமை பெற்றவர்கள் மிக்க ஆதிக்கம் பெற்றனர். உரிமையும் பரம்பரைப் பாத்தியமாக ஆயிற்று. வங்காளத்தில் இவர்கள் ஜமீன்தார்கள் என்று அழைக்கப்பட்டு, நிலத்தின் சொந்த உரிமையையும் அடைந்தனர். ஐக்கிய மாகாணத்திலும் மற்ற இடங்களிலும் இவர்கள் பல உரிமைகளைப் பெற்றனர்.

1765-ல் கிழக்கிந்தியக் கம்பெனியார் சர்க்கரவர்த்தி ஷா-ஆலமிடமிருந்து வங்காளம், பீகார், ஒரிஸ்ஸா மாகாணங்களில் நிலவரி வசூலிக்கும் உரிமையைப் பெற்றனர். கம்பெனியார் முதன் முதலில் ஜமீன்தார்களிடமே வரி வசூலிக்கும் வேலையை ஒப்படைத்தனர். ஆனால் ஜமீன்தார்கள் குடியானவரைத் துன்புறுத்தாவண்ணம் பாதுகாக்கப் பார்வையாளர்களையும் ஏற்படுத்தினர். 1769 முதல் 1774 வரை ஐந்து ஆண்டுகளுக்கு நிலவரியை ஒப்பந்தம் பேசிக் குத்தகைக்கு விட்டனர். பிறகு இக்குத்தகைத் தொகையை ஏலம் கூறி, ஏலமெடுப்போரிடமிருந்து மொத்தமாகப் பெற்று, வரி வசூல் உரிமையை ஏலதாரிடம் கொடுத்தனர். ஆண்டுதோறும் வரிவசூல் உரிமை குத்தகைக்கு விடப்பட்டது. ஆனால் இம்முறைகளில் பல குறைகள் இருந்தன. ஏலத்தில் அதிகத் தொகைக்கு எடுத்த பலர் பாழாயினர். 1786-ல் கவர்னர் ஜெனரலாக வந்த காரன் வாலிஸ் பிரபுவின் சிபார்சுப்படி 1793ஆம் ஆண்டில் வங்காளத்தில் சாசுவத நிலவரித் திட்டம் கொண்டு வரப்பட்டது. இதன்படி நிலவரியைக் குத்தகை எடுத்து வந்த ஜமீன்தார்கள் நிலச் சொந்தக்காரர்களாயினர். குடியானவர்களிடமிருந்து பெற்றுக்கொள்ளும் தொகையில் பதினொன்றில் பத்துப் பங்கு கம்பெனியாருக்குக் கட்டுவதென்றும், மீதி ஜமீன்தார்களுக்குரியதென்றும் ஏற்பாடாயிற்று. இத்தொகையை ஏற்றுவதோ குறைப்பதோ இல்லை என்று கம்பெனியார் உறுதி செய்தனர். 1802-1805-ல் இதே ஏற்பாடு வட சர்க்காரிலும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. மேலும் தென்னிந்தியாவில் திருநெல்வேலி ஜில்லாவிலும், இராமநாதபுரத்திலும், சிவகங்கையிலும் இருந்த பாளையக்காரர்களிடமும் இதே ஏற்பாடு செய்யப்பட்டது. மற்றும் சென்னை முதலிய தலைநகர்களைச் சுற்றிலும் கம்பெனியாருக்குச் சொந்தமாக இருந்த நிலங்களைப் பல துண்டுகளாகப் பிரித்து ஏலம் கூறி, ஏலமெடுப் போரைச் சாசுவத நிலவரி ஏற்பாட்டின் கீழ் கொண்டு வந்தனர். இதே முறையை இந்தியா முழுவதும் நிறுவ வேண்டுமென்று பலர் வற்புறுத்தினர். ஆனால் 1803-ல் இந்தியா மந்திரி மறுத்துவிட்டார். 1792-1802-ல் தற்காலம் சென்னை மாகாணத்தில் அடங்கிய பகுதிகள் கம்பெனியாருக்குச் சொந்தமாயின. இங்கே அக்காலம் கவர்னராக இருந்த தாமஸ் மன்ரோ ரயத்துவாரி நில ஏற்பாட்டை நிறுவினார். இம்முறைப்படி ஒவ்வொரு நிலச்சுவான்தாரிடமிருந்தும் நிலவரி வசூல் செய்வதென்று ஏற்பாடாயிற்று. நிலவரி செலுத்தும் வரை நிலத்தைப் பயிரிடுவதற்கும், பிறருக்கு மாற்றுவதற்கும், விற்பதற்கும் நிலச்சுவான்தார்களுக்கு உரிமை உண்டு. வரித்தொகை இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுபடியும் தீர்மானிக்கப்படும். இதே ஏற்பாடு பம்பாய் மாகாணத்திலும் கொண்டு வரப்பட்டது. ஐக்கிய மாகாணத்தில் பல கிராமங்கள் கிராம சமுதாயத்திற்குச் சொந்தமாக இருந்தன. இங்கே கம்பெனியார் இச்சமுதாய உரிமையை ஒப்புக் கொண்டு, நிலவரி செலுத்தும் பொறுப்பைச் சமுதாயத்தின் மீதும், ஒவ்வொரு கிராமவாசியின் மீதும் ஏற்றினர். மேலும் நிலவரித் தொகை தற்காலிகமாகவே தீர்மானிக்கப்பட்டது. இவ்வேற்பாட்டுக்கு மகல்வாரி முறை என்று பெயர். சில மாறுதல்களுடன் இதே முறை பஞ்சாபிலும் அமலுக்குக் கொண்டுவரப்பட்டது. மத்திய மாகாணங்களில் ஒவ்வொரு கிராமத்திலிருந்த குடியானவர் தங்களால் பயிரிடப்படும் நிலத்தின்மேல் உரிமை கொண்டாடினர். மேலும் இங்கு மகாராஷ்டிரர்கள் ஆட்சியில் குடியானவர்களிடமிருந்து வரி வசூல் செய்து அரசாங்கத்திற்குச் செலுத்திவந்த நடுவர்கள் பலர் இருந்தனர். இவர்களுக்குப் பட்டேல்கள் அல்லது மல்குசார்கள் என்று பெயர். இவர்களையே நிலத்திற்குச் சொந்தக்காரர்களாக்கி, வரி செலுத்தும் பொறுப்பை இவர்கள் மீது ஏற்றினர். இவ்விடத்திலும் தற்காலிகத் தீர்வைதான் போடப்பட்டது. இது தவிர ஐக்கிய மாகாணம், பஞ்சாப், வங்காளம், பம்பாய் முதலிய மாகாணங்களில் சிற்சில பகுதிகளில் இருந்து வந்த ஜமீன்தார்களோடு தாற்காலிகத் தீர்வை ஏற்பாடும் செய்யப்பட்டது. இம்மாதிரி இந்தியாவில் பற்பல நிலத்தீர்வை முறைகள் அமலுக்குக் கொண்டு வரப்பட்டன. பொதுவாக இவைகளைச் சாசுவத ஜமீன் ஏற்பாடு என்றும், தாற்காலிக ஜமீன் ஏற்பாடு என்றும், ரயத்துவாரி தீர்வை ஏற்பாடு என்றும் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் அரசாங்கத்தின் உரிமை என்னவென்று பார்க்கலாம். இந்து, முஸ்லீம் ஆட்சியில் அரசாங்கத்-