பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/762

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

697

இந்தியா

வித்துக்கள் முதலிய மூலப்பொருள்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுத் துணிமணி, எந்திரங்கள், சர்க்கரை, ரசாயனப் பொருள்கள், மருந்துவகைகள்; கண்ணாடிச் சாமான்கள், சாயச்சரக்குகள், பெட்ரோல் முதலிய உற்பத்திப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன. இம்மாறுதல்களுக்குப் பல காரணங்கள் உள்ளன. இங்கிலாந்தில் உண்டான தொழிற்புரட்சியின் காரணமாக பிரிட்டிஷார் இந்தியாவிலிருந்து மூலப்பொருள்களையும் உணவுத் தானியங்களையும் மாத்திரம் இறக்குமதி செய்து, இந்தியாவுக்குப் பிரிட்டிஷ் எந்திரச்சாலைகளில் உற்பத்தி செய்யப்பட்ட பண்டங்களை ஏற்றுமதி செய்யத் தீர்மானித்துப் பல முறைகளைக் கையாண்டனர். புதிய சாலைகளும் ரெயில் வண்டிகளும், நீராவிக் கப்பல்களும் இந்திய வாணிகத்தைப் பெருக்கவும், இந்தியாவின் மூலை முடுக்குகளிலிருந்து மூலப் பொருள்களைத் திரட்டி ஏற்றுமதி செய்யவும், அயல் நாட்டுப் பண்டங்களை நாட்டிற் புகுத்தவும் உதவின. அமெரிக்க உள்நாட்டுப் போரின் (1861-65) பயனாக இங்கிலாந்தில் அமெரிக்கப் பருத்தி இறக்குமதி நின்று இந்தியப் பருத்திக்கு ஏராளமான தேவையேற்பட்டது. 1869-ல் சூயெஸ் கால்வாய் திறக்கப்பட்டதன் பயனாக இங்கிலாந்துக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் பண்டங்களை வெகு விரைவில் கேடு வராமலும், குறைந்த செலவிலும் ஏற்றிச் செல்ல இயன்றது. மத்தியதரைக் கடலில் அமைந்த துறைமுகங்கள் வழியாக இந்தியாவுக்கு ஐரோப்பிய நாடுகளுடன் நேர் வியாபாரத் தொடர்பும் வைத்துக் கொள்ள முடிந்தது; வியாபாரமும் பெருகிற்று.

19ஆம் நூற்றாண்டு முடிய இந்திய அரசாங்கத்தார் வியாபார விஷயமாகத் தலையிடாமைக் கொள்கையைப் பின்பற்றினர். வருமானத்தைப் பெருக்குவதற்கு மட்டும் அவ்வப்பொழுது குறைவான ஏற்றுமதி இறக்குமதி வரி போட்டதைத் தவிர வேறு தடையொன்றும் செய்யவில்லை; தடையிலா வாணிகம் (Free Trade) நடந்து வந்தது. 1900 முதல் 1914 வரை இந்திய வாணிகத்தில் இறக்குமதியை விட ஏற்றுமதி மிகுந்து வந்தது. மேலும் இக்காலத்தில் இங்கிலாந்துடன் வியாபாரத் தொடர்பு அதிகம் உண்டெனினும் அமெரிக்க ஐக்கிய நாடுகளுடனும், ஜப்பானுடனும், மத்திய ஐரோப்பிய நாடுகளுடனும் வாணிகம் பெருகி வந்தது. மேலும் கர்சன் பிரபு காலத்தில் அரசாங்கத்தாரும் முதன் முதல் வாணிகத் துறையில் தலையிட்டு உதவி செய்ய வேண்டுமெனக்கருதி, 1950-ல் வாணிகக் கைத்தொழில் இலாகா ஒன்று ஏற்படுத்தினர்.

முதல் உலக யுத்தத்தினால் இந்தியாவின் வெளிநாட்டு வாணிகத்துக்குப் பல தடைகள் ஏற்பட்டன. ஐரோப்பிய நாடுகளுடன் வியாபாரம் நின்றது. யுத்தகாலக் கட்டுப்பாடுகளாலும், நீர்மூழ்கிக் கப்பலின் தொந்தரவினாலும் நடுநிலைமை நாடுகளுடனும் கூட வியாபாரம் செய்யத் தடையுண்டாயிற்று. போதுமான கப்பல்களின்மையால் இங்கிலாந்து, பிரான்ஸ் முதலிய நாடுகளுக்குக்கூட ஏற்றுமதி குறைந்தது. அமெரிக்க ஐக்கிய நாடுகளிலிருந்தும் ஜப்பானிலிருந்தும் இந்தியாவுக்கு இறக்குமதி அதிகரித்தது. ஆயினும் யுத்தத்தின் பயனாக இந்திய வாணிகத்தில் ஒரு நல்ல மாறுதல் உண்டாயிற்று. துணி, சணற் பைகள், இரும்பு, எஃகு சாமான்கள் முதலிய உள்நாட்டுப் பொருள்களுக்குத் தேவையேற்பட்டு, ஏற்றுமதியும் அதிகரிக்கத் தொடங்கியது. மேலும் 1916 முதல் 1921 வரை அரசாங்கத்தாரின் தடையிலா வாணிகக் கொள்கை மாறியது. பண நெருக்கடியை முன்னிட்டுச் சுங்க வரி விகிதத்தை உயர்த்தியும், பல சாமான்கள் மீது புதிதாக வரி போட்டும், தோல், தேயிலை, அரிசி முதலியவைகள் மீது ஏற்றுமதி வரி போட்டும் வந்தனர். மேலும் பிரிட்டிஷ் சாம்ராச்சிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து பதனிடும் தோலுக்குச் சுங்க வரி விஷயத்தில் சலுகையும் காட்டப்பட்டது. இவ்வாறு முதன் முதலாகத் தடையிலா வியாபாரக் கொள்கைக்குத் தடை ஏற்பட்டது; வியாபாரச் சலுகையும் காட்டப்பட்டது.

1919க்குப் பின் யுத்த நெருக்கடிகள் தீர்ந்து, இந்திய வாணிகம் யுத்தத்திற்கு முன் இருந்ததைவிடப் பெருகிற்று. அயல்நாட்டு உற்பத்திப் பண்டங்களின் இறக்குமதி மேலும் குறைந்தது. இந்தியாவிலிருந்து சணல், தோல், கம்பளி, உலோகங்கள் முதலிய பொருள்களால் ஆக்கப்பட்ட பண்டங்களின் ஏற்றுமதி பெருகிற்று. ஆனால் நூல், பட்டு, அவுரிச்சாயம், கஞ்சா முதலிய பொருள்களின் ஏற்றுமதி குறைந்தது. பிரிட்டன், ஜப்பான், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, இத்தாலி முதலிய நாடுகளிலிருந்து இறக்குமதியும், பிரிட்டன், அமெரிக்க ஐக்கிய நாடுகள், ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான் முதலிய நாடுகளுக்கு ஏற்றுமதியும் சிறப்பாக நடந்து வந்தன. 1923 லிருந்து அரசாங்கத்தார் இந்தியக் கைத்தொழில்களுக்கு இறக்குமதி வரி மூலம் பாதுகாப்பு அளிக்க முன் வந்ததிலிருந்து தடையிலா வாணிகக் கொள்கை அடியோடு கைவிடப்பட்டது. 1929 முதல் 1939 வரை உலக வியாபார மந்தம் தொடங்கிற்று. இந்திய விவசாயப் பொருள்களின் விலை இறக்கத்தாலும், நாட்டில் பணப்பழக்கக் குறைவாலும், பாதுகாப்புக் கொள்கை பின்பற்றப்பட்டதாலும் இந்தியாவின் அயல்நாட்டு வியாபாரம் மிகுதியும் குறைந்தது. இறக்குமதியைவிட ஏற்றுமதி குறைந்ததால் இந்தியாவுக்கு வர்த்தக பாதக நிலை ஏற்பட்டு, 1931-32 லிருந்து தங்கம் ஏற்றுமதிசெய்ய வேண்டிவந்தது. 1932 லிருந்து மந்தம் நீங்கி, நிலைமை மாறி 1934-37-ல் ஏற்றுமதி அதிகரித்தது. 1937-39-ல் மறுபடியும் சற்று வாணிகத்தில் குறைவு ஏற்பட்டு, 1939-ல் திரும்பத் தழைத்தது. 1929 லிருந்து 1939 வரை பத்தாண்டுகளில் அயல் நாடுகளிலிருந்து இந்தியக் கைத்தொழில்களுக்கு வேண்டிய மூலப்பொருள்களும் எந்திரங்களும் அதிகமாக இறக்குமதி செய்யப்பட்டு வந்தன. அரசாங்கத்தாரால் வியாபார வளர்ச்சிக்காக 1918-ல் இங்கிலாந்தில் ஒரு வர்த்தகக் கமிஷனர் நியமிக்கப்பட்டார். 1926-ல் வர்த்தகப் பிரசார உத்தியோ கஸ்தர் கமிஷனருக்கு உதவியாக நியமிக்கப்பட்டார். 1930லிருந்து ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், கிழக்கு ஆப்பிரிக்கா, அமெரிக்க ஐக்கிய நாடுகள், அலெக்சாந்திரியா முதலிய இடங்களிலும் வர்த்தகக் கமிஷனர்கள் நியமிக்கப்பட்டனர். 1922-ல் வர்த்தக விவரப் புள்ளி இலாகா (Department of Commercial Intelligence & Statistics) திருத்தியமைக்கப்பட்டது. இந்த இலாகா சர்க்காருக்கும் வியாபாரிக்குமிடையே தொடர்பு ஏற்படுத்தியும், எல்லாவிதமான புள்ளி விவரங்களையும் சேகரித்து வெளியிட்டும், மற்றும் பல வகையிலும் வியாபாரத்துக்கு உதவி செய்கிறது.

இந்தியா - பிரிட்டன் வியாபார ஒப்பந்தங்கள்: 1932-ல் கானடா நாட்டில் ஆட்டவா (Ottawa) நகரில் பிரிட்டிஷ் சாம்ராச்சியத்தைச் சேர்ந்த நாடுகள் கூடிய சாம்ராச்சியப் பொருளாதார மாநாட்டில் சாம்ராச்சிய நாடுகளுக்கிடையில் வியாபாரச் சலுகைகள் அடங்கிய ஒப்பந்தங்கள் பல ஏற்பட்டன. இந்தியாவும் பிரிட்டனிலிருந்து இறக்குமதியாகும் பண்டங்கள் பலவற்றிற்கு மற்ற நாட்டுப் பண்டங்களுக்கு மேல்