பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/764

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

699

இந்தியா

வது உலக யுத்தம் தொடங்கியதும் நிலைமை முற்றிலும் மாறியது; இறக்குமதி குறைந்து, ஏற்றுமதி மிகுந்தது. தவிர இங்கிலாந்து, அ.ஐ. நாடுகளின் சார்பாக, இந்திய அரசாங்கம் ஏராளமாகப் போர்ச் செலவு செய்தது. இந்தியா கொடுக்க வேண்டிய கடன் முழுவதும் நீங்கி, இங்கிலாந்து இந்தியாவுக்குக் கடன்பட்டது. 1945-46-ல் இங்கிலாந்திலிருந்து இந்தியாவுக்கு வர வேண்டிய தொகை ரூ.1,733 கோடியாயிருந்தது. இதை ஸ்டர்லிங்கு நிலுவைகள் என்று கூறுவர். போர் முடிந்தவுடன் இங்கிலாந்து இத்தொகையை உடனே கொடுக்க முடியாத நிலையில் இருந்தது. இங்கிலாந்தில் பலர் இத்தொகையில் தள்ளுபடி செய்ய வேண்டுமென்றும் கூறினர். இது விஷயமாகப் பல பேச்சுக்கள் நடந்தன. பின்னர் 14-8-47-ல் ஒரு தாற்காலிக ஒப்பந்தமும், 1948 ஜனவரியில் மற்றோர் ஒப்பந்தமும், 1948 ஜூலையில், 1951 ஜூன் முடிய மூன்று ஆண்டுகளுக்கு ஓர் ஒப்பந்தமும் செய்துகொள்ளப்பட்டன. இவற்றின்படி இந்தியாவிற்குரிய ஸ்டர்லிங்கு நிலுவையிலிருந்து அவ்வப்பொழுது இந்தியாவின் தேவைக்காகக் குறிப்பிட்ட தொகை கொடுக்கப்பட்டு வருகிறது. தவிர இந்தியாவுக்கும் பிரிட்டனுக்கும் உள்ள கொடுக்கல்வாங்கல் கணக்குச் சரி பார்க்கப்பட்டு நிலுவையில் ஈடு செய்யப்பட்டது.

யுத்தத்திற்குப் பின் அயல்நாடுகளிலிருந்து இந்தியாவுக்குப் பல பண்டங்கள் தேவையாக இருந்து வருகின்றன. நாட்டில் உணவு நெருக்கடி ஏற்பட்டு உணவுத் தானியங்கள் இறக்குமதி செய்ய வேண்டி வருகிறது. ஆனால் இந்தியாவிலிருந்து மூலப் பொருள்களின் ஏற்றுமதி குறைந்தது. இந்தியா-பாகிஸ்தான் பிரிவினையின் பயனாக மூலப்பொருள்களும் உணவுப் பொருள்களும் அதிகமாக விளையும் பகுதிகள் பாகிஸ்தானைச் சேர்ந்தன. ஆகையால் இந்தியாவிற்கு வர்த்தகப் பாதக நிலை ஏற்பட்டது. அமெரிக்க டாலர் நாணய நெருக்கடியால் இந்திய ஸ்டர்லிங்கு நிலுவையிலிருந்து விருப்பப்படி எடுத்து வர்த்தக நிலையைச் சமமாக்கிக் கொள்ள முடியவில்லை. ஆகையால் இந்தியாவில் இறக்குமதியை 1947-48 வரை கடுமையாகக் கட்டுப்படுத்த நேர்ந்தது. 1948 செப்டெம்பரில் பிரிட்டன் ஸ்டர்லிங்கு மதிப்பைக் குறைத்தபோது இந்தியாவும் ரூபாயின் மதிப்பைக் குறைக்கவே, இந்தியாவிலிருந்து டாலர் பழக்க நாடுகளுக்கு ஏற்றுமதி அதிகரித்தது. அந்நாடுகளிலிருந்து இறக்குமதி குறைந்தது. ஆகவே 1949 வரை குறைந்து வந்த ஸ்டர்லிங்கு நிலுவை மறுபடி ஏறி வருகிறது. 1950 ஜூலை முதல் இறக்குமதிக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டிருக்கின்றன.

தொழிலாளர் முதலாளிகள் நல்லுறவு: 1914க்கு முன் அகமதாபாத்தில் பஞ்சு நெசவு ஆலையில் தொழிலாளர்களுக்கும் முதலாளிகளுக்கும் ஏற்படும் சச்சரவைத் தடுக்க ஒரு மத்தியஸ்த போர்டு (Arbitration Board) இருந்து வந்தது. ஆனால் முதல் யுத்தத்திற்குப் பின் நாட்டில் வேலை நிறுத்தங்கள் அதிகரிக்கவே, இவைகளைத் தடுக்க ஓர் ஏற்பாடு அவசியமென்று புலப்பட்டது. சச்சரவுகளை விசாரித்து, அவற்றை நீக்க முதன் முதலாகச் சென்னை அரசாங்கத்தாரால் கோர்ட்டுகள் நியமிக்கப்பட்டு வந்தன. 1929-ல் தொழில் வழக்குச் சட்டம் ஒன்று பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சச்சரவு ஏற்பட்டால், அரசாங்கத்தாருக்கு அறிவிக்கலாமென்றும், அதைத் தடுக்கவோ தீர்க்கவோ அரசாங்கத்தார் விசாரணைக் கோர்ட்டுகள் (Courts of Enquiry) அல்லது சமரச போர்டு (Board of Conciliation) நியமிக்கலாமென்றும் ஏற்பாடாயிற்று. மேலும் இருப்புப்பாதை, தபால், தந்தி, தண்ணீர் வசதி, சுகாதாரம் முதலிய அவசியமான தொழில்களில் முன் அறிவிப்பில்லாமல் வேலை நிறுத்தம் செய்தலும் தொழிற்சாலையை அடைத்தலும் குற்றமென்றும், தொழிற் சச்சரவு தவிர மற்றக் காரணங்களுக்காக வேலை நிறுத்தம் செய்வது சட்டத்திற்கு முரணானது என்றும் ஏற்பட்டது. 1937-ல் பம்பாய் அரசாங்கத்தார் ஒரு தனிச் சட்டம் பிறப்பித்தனர். இதனால் தொழிற்சாலைகளில் வேலை நிறுத்தமோ, வேலை நீக்கமோ செய்வதற்குமுன் கட்டாயமாக மத்தியஸ்தத்திற்கு நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்று தீர்மானிக்கப்பட்டது; தொழில் சம்பந்தமான விவகாரங்களைத் தீர்க்க ஒரு கோர்ட்டை நியமிக்கவும் ஏற்பாடாயிற்று. இரண்டாவது உலக யுத்தத்தின்போது அவசரச் சட்டத்தினாலும் இந்தியப் பாதுகாப்புச் சட்டத்தினாலும் தொழிலாளிகளின் வேலை நிறுத்தம் செய்யும் உரிமை கட்டுப்படுத்தப்பட்டது. யுத்தத்திற்குப்பின் சச்சரவுகள் பெருகினமையால் 1947-ல் புதிய தொழில் வழக்குச் சட்டம் ஒன்று செய்யப்பட்டது. இச்சட்டப்படி சச்சரவுகள் ஏற்பட்டால் கட்டாயமாக மத்தியஸ்த நடவடிக்கை எடுத்துக்கொள்ள வேண்டுமென்றும், சமரசப் பேச்சுக்கள் முடிவடையுமுன் வேலை நிறுத்தமோ தொழிற்சாலை அடைப்போ செய்யக் கூடாதென்றும், ஒவ்வொரு தொழிற்சாலையிலும் நல்லுறவு நிலவச் செய்யத் தொழிற் கமிட்டி அமைக்கவேண்டுமென்றும், இதில் தொழிலாளர் பிரதிநிதிகளும் முதலாளிகள் பிரதிநிதிகளும் பாதிக்குப் பாதி இருக்க வேண்டுமென்றும் ஏற்பாடாயிற்று. மேலும் சச்சரவுகளைத் தீர்க்கவும், நல்லுறவு ஏற்படுத்தவும், தகுந்த உத்தியோகஸ்தர்களும் கோர்ட்டுக்களும் மத்தியஸ்தர்களும் நியமிக்க இச்சட்டம் அதிகாரம் அளித்தது.

1947 டிசம்பர் 15ஆம் தேதி தொழிலாளர், முதலாளிகள், அரசாங்கப் பிரதிநிதிகள் அடங்கிய கைத்தொழில் மாநாடு ஒன்று கூடி, மூன்று ஆண்டுகளுக்கு யாதொரு சச்சரவும் செய்வதில்லையென்றும், பொருளுற்பத்தியில் அனைவரும் முழுமனத்தோடும் ஈடுபடுவதென்றும் தீர்மானிக்கப்பட்டன. 1948 ஏப்ரலில் சர்க்காரும் இந்த ஒப்பந்தத்திற்கு இசைந்தனர். மேலும் அரசாங்கத்தார் நியாயமான கூலி, நியாயமான இலாபம், தொழிலாளர்களுக்கு நல்ல நிலைமை முதலியன ஏற்படுத்துவதும், கைத்தொழில் சம்பந்தமான எல்லா விவகாரங்களிலும் தொழிலாளர்களையும் கலந்து கொள்வது தங்கள் நோக்கமென்றும் அறிவித்தனர். இத்திட்டங்களைப்பற்றிய ஆலோசனை கூற மாகாண அரசாங்கத்தாருக்கும் மத்திய அரசாங்கத்தாருக்கும் முக்கட்சி ஆலோசனைச் சபைகள் ஏற்படுத்தப்பட்டன. மேலும் வரும் இலாபத்தில் தொழிலாளிகளுக்கு ஒரு பங்கு கொடுப்பது (Profit-sharing) நல்ல பயனளிக்குமென்று அரசாங்கத்தார் எண்ணினர். எவ்வகையில் இலாபம் பங்கு பிரிப்பதென்பதையும், நியாய இலாபம், நியாயக் கூலி ஆகியவற்றையும் நிருணயம் செய்ய ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. இக்கமிட்டி முதலில் ஆறு கைத்தொழில்களில் இலாபப்பிரிவினைச் சிபார்சு செய்தது. ஆனால் அவர்கள் கூறியதை இருதிறத்தாரும் ஒப்புக்கொள்ளவில்லை. தொழிலாளரிடையே அமைதி யுண்டாக்கப், பஞ்சு நெசவு, நிலக்கரி எடுப்பு, தோட்டக்கால் தொழில், சிமென்டு உற்பத்தி முதலிய சில தொழிற்சாலைகளில் முக்கட்சித் தொழிற் கமிட்டிகளும் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.

தொழிலாளர் பாதுகாப்பு: தொழிற்சாலைச் சட்டங்கள்: 1875-ல் பம்பாயில் தொழிலாளர் நிலையை