பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/765

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

700

இந்தியா

விசாரணை செய்யத் தொழிற்சாலைக் கமிஷன் ஒன்று நியமிக்கப்பட்டது. இக்கமிட்டியின் சிபார்சுகளை அடிப்படையாகக் கொண்டு 1881-ல் இந்தியத் தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச் சட்டத்தின் பயனாகத் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் சிறுவர்களுக்கு நலன் ஏற்பட்டது. பகலில் ஓய்வு நேரத்துக்கும், ஆபத்துக்களைத் தடுக்கவும் இச்சட்டம் வழிதேடியது. 1890-ல் நிறுவப்பட்ட ஒரு கமிஷனுடைய சிபார்சுப் படி 1891-ல் தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. சிறுவர்களுக்கு மேலும் நலன் ஏற்பட்டது. பெண்கள் இரவிலும், ஒரு நாளில் 11 மணிக்கு அதிகமாகவும் வேலை செய்யக்கூடாதென்று இச்சட்டம் கூறியது. மேலும், தொழிற்சாலைகளில் காற்று வசதி, சுகாதாரம், போதுமான இடவசதி முதலியன இருக்கவேண்டுமென்பதும் இச்சட்டத்தினால் ஏற்பட்டது. பிறகு 1908-ல் மற்றொரு தொழிற்சாலைக் கமிஷன் நியமிக்கப்பட்டது. இக்கமிஷன் பலவிதத் தொழிற்சாலைகளிலும் வேலை செய்யும் தொழிலாளர்களின் நிலைமையை ஆராய்ந்து விடுத்த அறிக்கையின் பயனாக 1911-ல் இந்தியத் தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன் விளைவாக ஆண்கள் உட்பட எல்லா வேலைக்காரர்களுக்கும் நலன் கிட்டியது. தண்ணீர் வசதி, எந்திரங்களுக்குக் காப்பு, தீ விபத்திலிருந்து தப்புவிக்க வசதிகள் முதலியன முன்னைவிட அதிகம் செய்யப்பட்டன. முதல் யுத்தத்திலிருந்து தொழிலாளர்களிடையே பொருளாதாரக் கஷ்டமும் மனக்குறையும் பெருகிக் கிளர்ச்சியேற்பட்டது. மேலும் வாஷிங்டனில் கூடிய உலகத் தொழிலாளர் மாநாட்டின் ஒப்பந்தப்படி தொழிலாளர் நிலையை உயர்த்த வேண்டியிருந்தது. ஆகையால் 1922-ல் புதியதொரு தொழிற்சாலைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இச்சட்டப்படி தொழிற்சாலையில் சிறுவர்களை வேலைக்கு அமர்த்தக் கூடிய வயது உயர்த்தப்பட்டது. சிறுவர்கள் முதியோர்களின் வேலைக்காலம் குறைக்கப்பட்டது. தினசரி ஓய்வு நேரம் அதிகமாக் கப்பட்டது. வாரத்துக் கொருமுறை விடுமுறையும் விடப்பட்டது. 1929-ல்தொழிலாளர் நிலைமையை விசாரிக்க விட்லி பிரபுவின் தலைமையில் ஒரு ராயல் கமிஷன் நியமிக்கப்பட்டது. 1931-ல் அவர்கள் விடுத்த அறிக்கையின் பயனாக 1934-ல் தொழிற்சாலைச் சட்டம் பிறந்தது. இதனால் தொழிலாளிக்கு மற்றும் பல நன்மைகள் ஏற்பட்டன. 1948-ல் மறுபடியும் ஒரு புதுச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன் கீழ் அநேகமாக எல்லாத் தொழிற்சாலைகளும் கொண்டுவரப்பட்டன. தொழிற்சாலைக்காகக் கட்டடம் கட்டுமுன் லைசென்ஸ் பெற வேண்டுமென்பது, சுகாதாரம், காற்றோட்டம், இட வசதி முதலியவைகளைப் பற்றித் திட்டமான விதிகளும் ஏற்பட்டன. ஒவ்வொரு தொழிற்சாலையிலும் தொழிலாளிகளின் நலனைக் கவனிக்க உத்தியோகஸ்தர்களை (Welfare officers) நியமிக்கவும், சிற்றுண்டிச் சாலைகள் ஏற்படுத்தவும், மற்றும் பலவித நலன்கள் செய்து கொடுக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டது. ஒரு நாளில் 9 மணிக்கு மேலும், ஒரு வாரத்தில் 48 மணிக்கு மேலும் வேலை செய்வதும், 14 வயதுக்குட்பட்டவர்களைத் தொழிற்சாலைகளில் நியமிப்பதும் நிறுத்தப்பட்டன. இச்சட்டத்தினால் சுமார் 35 இலட்சம் தொழிலாளர்கள் நன்மையடைந்து வருகின்றனர்.

தேயிலைத் தோட்டங்கள், நிலக்கரிச் சுரங்கங்கள், போக்குவரத்துச் சாதனங்கள், கடைகள், வியாபார ஸ்தாபனங்கள், கப்பல்கள், துறைமுகங்கள் முதலியவைகளில் வேலை செய்து வரும் தொழிலாளிகளுக்குப் பாதுகாப்பு அளிப்பதற்காகத் தனித்தனிச் சட்டங்கள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.

வேறு நலன்களுக்கான திட்டங்கள்: முதன் முதலில் 1884-ல் பம்பாய்த் தொழிலாளிகளால் தொழிற்சாலைகளில் ஏற்படக்கூடிய எதிர்பாராத ஆபத்துக்களுக்கு நஷ்ட ஈடு வேண்டுமெனக் கிளர்ச்சி செய்யப்பட்டது. ஒரு தொழிலாளி ஆபத்து ஏற்பட்டு இறந்தால், 1885-ல் ஏற்பட்ட ஒரு சட்டத்தின்படி அவரை வேலையில் அமர்த்தியவர்மீது கோர்ட்டில் தாவா செய்ய இயன்றது. 1923-ல் தான் முதன்முதல் தொழிலாளர் நஷ்ட ஈட்டுச் சட்டம் இயற்றப்பட்டது. தொழிற்சாலையில் வேலை செய்யும்பொழுது உடலுக்கு ஏதேனும் விபத்து நேரிட்டாலும், தொழிலில் ஈடுபட்டதன் விளைவாக நோய் ஏற்பட்டாலும் அவற்றிற்காக நஷ்டஈடு பெறக்கூடும். முதன்முதலில் பத்து வகையான தொழிலாளர்களுக்குத்தான் இச்சட்டம் நலன் அளித்தது. பிறகு இச்சட்டம் பல தடவைகள் திருத்தப்பட்டு அநேகத் தொழிலாளர்களுக்கு நஷ்ட ஈடு அளிக்க இயன்றது.

1919-ல் தொழிற்சாலைகளில் வேலை செய்யும் பெண்களுக்குப் பேறுகால உதவி செய்ய வேண்டுமென்று உலகத் தொழிலாளர் மாநாட்டில் வற்புறுத்தப்பட்டது. 1924-ல் என். எம். ஜோஷியினால் மத்தியச் சட்ட சபையில் இவ்வுதவி அளிக்கவேண்டிக் கொண்டுவரப்பட்ட மசோதா நிராகரிக்கப்பட்டது. தொழிலாளர் ராயல் கமிஷனும் இவ்வுதவி அவசியம் கொடுக்க வேண்டுமென்று வற்பறுத்தியது. 1929-ல் பம்பாய் அரசாங்கம் பேறுகால உதவிச் சட்டம் ஒன்று பிறப்பித்தது. இதை அடுத்து மற்ற எல்லா மாகாணங்களிலும் இதுபோலச் சட்டங்கள் இயற்றப்பட்டன. அஸ்ஸாமிலும், மேற்கு வங்காளத்திலும் தேயிலைத் தோட்டங்களில் வேலை செய்யும் பெண்களுக்கும் உதவியளிக்கப்பட்டது. 1941-ல் மத்திய அரசாங்கத்தாரால் நிலக்கரி முதலிய சுரங்கங்களில் வேலை செய்வோருக்கும் தனிச் சட்டம் இயற்றப்பட்டது. இச்சட்டங்களால் பெண்களுக்குப் பேறுகாலத்துக்கு முன்னும் பின்னும் ஓய்வும், பண உதவியும் கொடுக்கவேண்டுமென்று கட்டாயப்படுத்தப்படுகிறது.

1936-ல் தொழிலாளர்களுக்குக் காலதாமதமின்றிக் கூலி கொடுப்பதற்காகவும், கூலியை நியாயமில்லாமல் குறைப்பதைத் தடுக்கவும், கூலி கொடுக்கைச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. 1948-ல் மத்தியச் சட்டசபையால் குறைந்த அளவுக் கூலிச் சட்டம் இயற்றப்பட்டது. இதனால் எந்த எந்தத் தொழில்களில் கூலிக்காரர்களுக்கு நியாயமான கூலி கொடுக்காமல் வேலை மட்டும் வாங்குகிறார்களோ, அந்த அந்தத் தொழில்களில், குறைந்த அளவு கூலி எவ்வளவு கொடுக்க வேண்டுமென்று உத்தரவிட அரசாங்கத்தாருக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டது. 1947 நவம்பர் மாதத்தில் ஏற்பட்ட தொழிலாளிகளுக்காக இன்ஷூரன்சுத் திட்டத்தில் அவர்கள் கட்டாயமாகச் சேர்க்கப்படுவார்கள். வேலை செய்வோரும் வேலை கொடுப்போரும் சந்தாக் கொடுக்கவேண்டும். நோய்வாய்ப்பட்டபோதும், வேலை செய்ய முடியாமல் சீர்கெட்ட பொழுதும், பேறு காலத்திலும் உதவியளிப்பதோடு அண்டியவர்களுக்கு உதவியும், மருத்துவ உதவியும் செய்யப்படும். இத்திட்டத்தை நிருவாகம் செய்ய ஒரு கார்ப்பொரேஷன் ஏற்படுத்தப்பட்டிருக்கிறது. இதில் தொழிலாளர் பிரதிநிதியும் உண்டு.

தொழிற் சங்கங்கள்: 1918-ல் வாடியா என்பவரால் நெசவாலைத் தொழிற்சாலை வேலைக்காரர்களுக்-