பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/766

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

701

இந்தியா

காகச் சென்னைத் தொழிலாளர் யூனியன் நிறுவப்பட்டது. இதிலிருந்து அநேகத் தொழிற் சங்கங்கள் தோன்றின. பம்பாயிலும் அகமதாபாத்திலும் தொழிற்சங்கங்கள் அகமதாபாத்தில் வலுப்பெற்றன. மகாத்மா காந்தி இந்த இயக்கத்தில் ஈடுபட்டார். அவருடைய முயற்சியின் பயனாக, நெசவாலைத் தொழிற் சங்கம் ஏற்பட்டது. 1925க்குள் 175 சங்கங்கள் ஏற்பட்டன. ஆனால் தொழிற் சங்கங்கள் வளரப் பல இடையூறுகள் இருந்தன. பெரும்பான்மையான தொழிலாளிகள் கிராமத்திலிருந்து வருபவர்கள். இவர்களுக்குச் சங்கங்களில் ஊக்கம் போதவில்லை; படிப்புக் குறைவு. மேலும் தொழிலாளர்கள் ஓரிடத்தில் நிலைப்பவர்கள் அல்லர். இவர்களிடையே சாதி, மொழி வேற்றுமைகளால் ஒற்றுமையமையவில்லை. வறுமையும் முதலாளிகளின் எதிர்ப்பும் இடையூறாயிருந்தன. மேலும் சங்கங்களுக்கு அக்காலச் சட்டமும் பாதகமாக இருந்தது. சட்டத்தின் மூலம் சங்கங்களுக்குப் பாதுகாப்புத் தேவையென்று தெரிந்து 1921-ல் கிளர்ச்சியேற்பட்டது. 1926-ல் தொழிலாளர் சங்கச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. இதன்படி சங்கங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். சங்கங்கள் வேலை நிறுத்தம் செய்யத் தூண்டினால், அதற்காகச் சங்கத்தின்மீது சிவில், கிரிமினல் வழக்கு யாதொன்றும் தொடர முடியாது. இந்த முக்கியமான சட்டத்தினால் சங்கங்களுக்கு ஓர் அந்தஸ்து அளிக்கப்பட்டது. இதுமுதல் சங்கங்கள் அதிகமாக ஏற்பட்டன. 1927-ல் 29 சங்கங்கள் இருந்தன ; 1947-48-ல் 2666 ஆகப் பெருகி விட்டன.

1920-ல் எல்லாச் சங்கங்களையும் இணைக்க, அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு தேசிய ஸ்தாபனமாக நிறுவப்பட்டது. ஆண்டுதோறும் கூட்டம் கூடித் தொழிலாளரைப் பற்றிய எல்லா விஷயங்களையும் ஆராய்ந்துவந்த இச்சங்கம் 1924 முதல் வலுவடைந்தது. இது தவிர அகில இந்திய ரெயில்வே தொழிலாளர் பெடரேஷன், தபால் தந்தி இலாகாத் தொழிலாளர் பெடரேஷன் முதலிய பல்வேறு இணைப்புச்சங்கங்களும் உண்டாயின. 1929-ல் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசைக் கம்யூனிஸ்டுகள் கைப்பற்றியதின் பயனாக, மிதவாதிகள் என். எம்.ஜோஷியின் தலைமையில் பிரிந்து இந்தியத் தொழிலாளர் சங்கப் பெடரேஷன் என்ற ஒரு தனி ஸ்தாபனத்தை ஏற்படுத்திக் கொண்டனர். 1931-ல் தொழிலாளர் காங்கிரசிலிருந்து தீவிரக் கம்யூனிஸ்டுகள் பிரிந்து தனி ஸ்தாபனம் ஒன்றை நிறுவிக் கொண்டனர். 1933-ல் பிரிந்த ஸ்தாபனங்களை ஒன்று சேர்க்கத் தேசியத் தொழிற்சங்கப் பெடரேஷன் ஒன்று ஏற்படுத்தப்பட்டது. 1938-ல் மறுபடியும் அகில இந்தியத்தொழிலாளர் காங்கிரசில் ஒற்றுமை ஏற்பட்டது. ஆனால் 1940-ல் இரண்டாவது யுத்தத்தில் உதவி செய்வதா, இல்லையா என்ற பிரச்சினையின் மேல் மறுபடியும் பிளவு ஏற்பட்டது. உதவி செய்ய விரும்பியவர்கள் யமுனா தாஸ் மேத்தா தலைமையில் இந்தியத் தொழிலாளர் பெடரேஷன் என்ற தனி ஸ்தாபனம் ஏற்படுத்திக்கொண்டனர். இதற்கு எம். என். ராய் காரியதரிசியானார். யுத்தம் முடிந்த பிறகு, நாடெங்கும் வேலைநிறுத்தம் ஏற்பட்டபொழுது இந்தியத் தேசிய காங்கிரசு மகாசபைத் தலைவர்களால் நிறுவப்பட்டுக் காங்கிரசுத் தலைவர் கிருபளானியால் 1946-ல் துவக்கப்பட்ட இந்தியத் தேசியத் தொழிலாளர் சங்கக் காங்கிரஸ் ஸ்தாபனம் தோன்றியது. அனாவசியமாக வேலைநிறுத்தம் செய்து, மனக்கசப்பு மிகுந்து, பொருளுற்பத்தி மற்றவகையில் குறையக்கூடாதென்றும் சமரசம் ஏற்படாமல் இருந்தாலொழிய வேலை நிறுத்தம் கூடாதென்றும் உறுதிசெய்து இக்கொள்கையைப் பின்பற்றித் தொழிளாளர் சங்கங்களை நடத்த வேண்டுமென்பதே இதன் நோக்கம். 1948-ல் சோஷலிஸ்டுகள், காங்கிரசிலிருந்து பிரிந்தபின் இந்துஸ்தான் மஸ்தூர் பஞ்சாயத்து என்ற தனிச் சங்கம் நிறுவினர். பிறகு இச்சங்கமும், இந்தியத் தொழில் பெடரேஷனும் ஒன்றாகச் சேர்ந்து இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்றாகியது. தற்சமயம் அகில இந்தியத் தொழிலாளர் சங்கக் காங்கிரசு, அகில இந்திய தேசியத்தொழிலாளர் காங்கிரசு, இந்துஸ்தான் மஸ்தூர் சபா என்ற மூன்று முக்கிய இணைப்பு ஸ்தாபனங்கள் இருக்கின்றன. பார்க்க: தொழிற் சங்கங்கள். கே. ஆர்.

நிலப்பயன்பாடு

இந்திய யூனியனின் நிலப்பரப்பு 8,126 இலட்சம் ஏக்கர். அவற்றில் 6,235 இலட்சம் ஏக்கர் நிலத்தைப் பற்றித்தான் புள்ளி விவரங்கள் கிடைத்திருக்கின்றன. அவை வருமாறு:

பயிர்கள் ஏக்கர்
இலட்சத்தில்
மொத்தத்தில்
சதவிகிதம்
1. காடுகள் 934 15.0
2. சாகுபடியாகும் நிலம் 2684 43.0
3. தரிசு 494 9.5
4. பயிரிடக்கூடிய கரம்பு நிலம் 1027 16.0
5. பயிரக்கூடாத நிலம் 996 16.0


மொத்தம் 996 100


புள்ளி விவரம் கிடைக்காத 1891 இலட்சம் ஏக்கரில் பெரும்பகுதி மலைகளும், பாலைவனங்களும், அணுக முடியாத காடுகளுமாம்.

பயிர்த் தொழில்: பயிரிடப்படும் நிலத்தின் மொத்தப்பரப்பு 3240 இலட்சம் ஏக்கர். அதில் 355 இலட்சம் ஏக்கர் ஒரு போகத்துக்கு மேல் விளையும். 1950-51-ல் சாகுபடியான 3170 இலட்சம் ஏக்கருக்குப் புள்ளி விவரம் வருமாறு:

பயிர்கள் ஏக்கர்
இலட்சத்தில்
மொத்தத்தில்
சதவிகிதம்
I. உணவுப் பயிர்கள்
1. தானிய வகைகள் 1934.0 60.88
2. கடலை 187.1 5.90
3. மற்ற பருப்பு வகைகள் 284.7 8.98
4. பழம், காய்கறி வகைகள் 50.0 1.58
5. பிற உணவுப் பயிர்கள் 16.5 0.52


மொத்தம் 2472.3 77.86


II. வியாபாரப் பயிர்கள்
6. முக்கியமான எண்ணெய் வித்துகள் 266.8 8.41
7. பிற எண்ணெய் வித்துகள் 42.7 1.35
8. பருத்தி 145.6 4.59
9. சணல் 14.5 0.46
10. பிற நார் வகைகள் 10.5 0.33
11. கரும்பு 42.1 1.33
12. புகையிலை 9.0 0.28


மொத்தம் 531.2 16.75