பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/774

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

709

இந்தியா

பிளாகோபைட்டு (Phlogopite) என்ற மஞ்சள் அப்பிரகமும் இந்தியாவில் கிடைக்கின்றன. இவற்றிலும் மஸ்கோவைட்டு அதிகமாகக் கிடைக்கிறது. கூடூர்ராபூர் தாலுகாக்களில் சுமார் 60 மைல் நீளமும், 12 லிருந்து 15 மைல் அகலமும் உள்ள பரப்பில் பல அப்பிரகப் புலங்கள் உள்ளன. நெல்லூர் மாவட்டத்தில் ஏராளமான மக்களுக்கு அப்பிரகம் பிழைப்பைத் தருகிறது. மேற்குக் கோதாவரி, மாவட்டத்திலுள்ள போச்சாவரத்திலும், சேலம் மாவட்டத்திலுள்ள இடப்பாடியிலும், மலையாளத்திலுள்ள வயநாட்டிலும், திருவிதாங்கூரிலுள்ள புனலூர், நெய்யூர், திருவனந்தபுரம் ஆகிய இடங்களிலும் சில அப்பிரகப் புலங்கள் உள்ளன. கருங்கல் திண்மமாக இறுகியபோது இது சிரைகளாகவும் கட்டிகளாகவும் தோன்றியிருக்க வேண்டும். சில சமயங்களில் இது ஆறு அல்லது ஏழடி அகலமும், ஓரடித் தடிப்புமுள்ள பெரிய கட்டிகளாகக் கிடைக்கிறது. இது தெளிவாகவும் கிடைப்பதுண்டு. பல கறைகளுடனும் கிடைப்பதுண்டு. உயர்ந்த ரக அப்பிரகம் சமதளமாகவும், கறைகளாவது வேறு குறைகளாவது இல்லாமலும் இருக்கும். அப்பிரகம் மின்சாரத் தொழிலிற்கு இன்றியமையாத பொருளாகும். எல்லாவகையான மின்சாரக் கருவிகளிலும் எந்திரங்களிலும் இது பயன்படுகிறது. காகிதம், சாந்து முதலியவற்றிற்குப் பளபளப்பைத் தரவும், ரப்பர், மெருகுத் துணி, வர்ணங்கள் முதலியவற்றிற்கு நிரவைப் பொருளாகவும் அப்பிரகத்தூள் பயன்படுகிறது. சிறு தகடுகளாகக் கிடைக்கும் அப்பிரகத்தின்மேல் அரக்கையோ, ஒரு செயற்கைப் பிசினையோ தடவி பல அடுக்குக்களை ஒன்று சேர்த்து, உயர்ந்த வெப்பத்தில் அழுத்தித் தேவையான தடிப்புள்ள கட்டியாக அதைப் பெறலாம். இதைத் தகடாகவோ, குழலாகவோ வேறு வடிவங்களாகவோ வெட்டலாம்.

எமரி, குருந்தம், படிகக்கல், சக்கிமுக்கிக்கல், கார்னெட்டுப் போன்ற பொருள்கள் மற்றப் பொருள்களைத் தேய்க்கவும், தொளைக்கவும், அவற்றிற்கு மெருகேற்றவும் பயனாவதால் மெருகூட்டிகள் எனப்படும். இவற்றைத் தூளாகவும், தூளிலோ துணியிலோ ஒட்டியும் பயன்படுத்துகிறார்கள். சாணை பிடிக்கும் சக்கரங்களாகவும் இவற்றை அமைப்பதுண்டு. இப்பொருள்களை நுண்ணிய தூளாக்கி, எஃகு முனையைக்கொண்டு உலோகங்களையும் மணிகளையும் தொளையிடலாம். தென்னிந்தியாவில் பல மெருகூட்டிப் பொருள்கள் கிடைக்கின்றன. நெல்லூர், திருநெல்வேலி மாவட்டங்களில் கார்னெட்டுக் கிடைக்கிறது. உண்மையான சக்கிமுக்கிக் கல் கிடைக்காவிட்டாலும், பலவகையான படிகக் கற்கள் கிடைக்கின்றன. சேலம், கோவை மாவட்டங்களில் முன்னர்க் குருந்தம் வெட்டி எடுக்கப்பட்டு வந்தது. இந்நாளிலும் கடினமான பாறை களிலிருந்து ஆண்டிற்குச் சுமார் 50 டன் நிறையுள்ள குருந்தம் எடுக்கப்படுகிறது.

வெப்பத்தைத் தாங்கும் பொருள்களான களிமண் வகைகளும், சிலிக்காவைக்கொண்ட பாறைகளும், மாக்னசைட்டு, குரோமைட்டு, பட்டுக்கல், பென்சில் கரி முதலிய பொருள்களும் உலோகங்களை உருக்கும் மூசைகள் செய்யவும், உலைகளின் உட்புறத்தில் வேய நீராவிக் குழாய்கள் முதலியவற்றில் வெப்பம் வீணாகாது தடுக்கவும் பயன்படுகின்றன. குரோமைட்டும் மாக்னசைட்டும் மைசூரிலும் சேலத்திலும் கிடைக்கின்றன. பல மாவட்டங்களில் களிமண் வகைகள் உள்ளன. குறிப்பாக மலையாளத்திலும், தென் கன்னடத்திலும், திருவிதாங்கூரிலும், இராமநாதபுரத்திலும், தென்னார்க்காட்டிலும், செங்கற்பட்டிலும், கிழக்குக் கோதாவரியிலும், மேற்குக் கோதாவரியிலும் இவை அதிகம். வெப்பந்தாங்கும் பொருள்களைத் தயாரிக்கும் தொழில் இந்தியாவில் அதிகமாக இல்லை.

பலவகைகளிற் பயனாகும் களிமண்கள் தென்னிந்தியாவில் உள்ளன. கருங்கல்லைப்போன்ற படிகப் பாறைகளிலுள்ள தாதுக்களில் ஏற்படும் மாறுதல்களால் சீனக் களிமண் தோன்றுகிறது. இது உயர்ந்த ரகப் பீங்கான் தயாரிக்கப் பயன்படுகிறது. வெப்பந்தாங்கும் பொருள்களைத் தயாரிக்கக் களிமண் பயனாவது மேலே கூறப்பட்டது. சாதாரணச் செங்கற்களையும், சாக்கடைக் குழல்களையும் செய்யப் பயனாகும் களிமண்வகைகளும் உண்டு. மேற்குக் கரையோரத்தில் திருவிதாங்கூர், மலையாளம், தென் கன்னடம் ஆகிய பகுதிகளில் சீனக் களிமண் உள்ளது. தென்னார்க்காட்டிலுள்ள திண்டிவனத்தின் அருகிலும் இது சிறிதளவு உள்ளது. இது திருவள்ளூரிலுள்ள பீங்கான் தொழிற்சாலையில் பயன்படுகிறது. திருவிதாங்கூர், மலையாளம், தென்கன்னடம், தென்னார்க்காடு, சென்னை, செங்கற்பட்டு, நெல்லூர், மேற்குக் கோதாவரி மாவட்டங்களில் அங்கங்கே கிடைக்கும் களிமண் வகைகளைப் பயன்படுத்தும் தொழிற்சாலைகள் பல உள்ளன.

அயச்செந்தூரம், காவிக்கல், மஞ்சட்சிலை, மாங்கனச ஆக்சைடு, பெரைட்டிஸ் (Barytes), மாக்கல், நிறமுள்ள களிமண் வகைகள் போன்ற பலபொருள்கள் வர்ணங்கள் செய்யப் பயனாகின்றன. குரோமியம், நாகம் போன்ற உலோகங்களின் கூட்டுக்களும் வர்ணங்கள் செய்யப் பயன்படுகின்றன. ராயலசீமை, தஞ்சை, புதுக் கோட்டை, இராமநாதபுரம், குண்டூர்ப் பகுதிகளில் உயர்ந்த ரகக் காவிக் கல்லும் மஞ்சட் சிலையும் கிடைக்கின்றன. அயச் செந்தூரம் சாண்டூரில் கிடைக்கிறது. கடப்பை, கர்நூல், அனந்தபூர் மாவட்டங்களில் பெரைட்டிஸ் கிடைக்கிறது. பம்பாய், கல்கத்தா நகரங்களில் உள்ளதுபோல் சென்னையில் வர்ணத் தொழில் இல்லை. பெரிய அளவில் வர்ணத் தொழிலை நடத்த இங்குப் போதிய மூலப் பொருள்கள் உள்ளன.

சீரான மணிவடிவான டாலமைட்டும் சுண்ணாம்புக் கல்லும் சிலைகளையும் நினைவுச் சின்னங்களையும் செய்யப்பயன்படுகின்றன. கலப்பு நிறங்களையும், சீரற்ற அளவுள்ள மணிகளையும் கொண்ட வகைகள் கட்டட வேலையில் பயனாகின்றன. விசாகப்பட்டினத்திலுள்ள அனந்த கிரியிலும், குண்டூரிலுள்ள மாச்செர்லாவிலும், சேலம், கோவைப் பகுதிகளிலும் உயர்ந்த ரகச் சலவைக் கல் உள்ளது. சாந்தும் சிமென்டும் தயாரிக்க ஏற்ற உயர்ந்த ரகச் சுண்ணாம்புக்கல் கர்நூல், குண்டூர், சேலம், கோவை, மதுரை, திருச்சி மாவட்டங்களில் கிடைக்கிறது. கல்லச்சு முறைக்கேற்ற நேர்த்தியான சுண்ணாம்புக்கல் வகை கர்நூல் மாவட்டத்தில் கிடைக்கிறது. உயர்ந்த ரகச் சுண்ணாம்புக்கல் தாதுக்களின் சில பகுதிகள் வெளுக்கும் தூள், கால்சியம் கார்பைடு, கால்சியம் சயனமைடு போன்ற ரசாயனப் பொருள்களைத் தயாரிக்க ஏற்றவை. எம். எஸ். கி.

நீர் மின்திறன்

திறன் கிடைக்கக் கூடிய இடங்களை இரண்டு வகையாகப் பிரிக்கலாம். 1. குன்றும் திறன்: விளையுந் தாவரங்களிலிருந்து எரிபொருள்கள் உற்பத்தி செய்யலாம். உதாரணமாக, பாணி (Molasses), இலுப்பைப் பூக்கள் முதலியவைகளிலிருந்து ஆல்கஹால் தயாரிக்கலாம் 2. குன்றாத்திறன்: நீர்வீழ்ச்சிகள், காற்று, அலைகள் முதலியவைகளிடமிருந்து பெறலாம்.