பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/776

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

711

இந்தியா

கின்றமையாலும், செய்யப்படும் பொருள்கள் சிறப்பற்றவையா யிருக்கின்றன.

எனினும் நாட்டில் பற்பல பகுதிகளில் மிகத் திறமை வாய்ந்த கைத்தொழில்களும் பல உள்ளன. மொரதபாதில் செய்யப்படும் உலோக சாமான்களும், காசியில் தயாரித்த ஆடைகளும் உலகப் புகழ் பெற்றவை. காசி, மதுரை, கும்பகோணம் போன்ற புண்ணியத்தலங்களுக்கு ஆண்டு முழுவதும் யாத்திரை செய்து வரும் மக்கள் விலை கொடுத்து வாங்கிக்கொண்டு போவதனால் இவ்விடங்களில் செய்யப்படும் பாத்திரங்கள், ஆடைகள் முதலியவைகட்கு எப்போதும் செலவு உண்டு. ஆக்ராவில் நடைபெறும் கற்சிற்ப வேலையும், லக்னௌவில் நடைபெறும் சித்திரத்தையல் வேலையும், மதுரை, மைசூர், காசியில் நடைபெறும் நுண்ணிழை நெசவு வேலையும், டெல்லி, தஞ்சை, வங்காளம் முதலிய இடங்களில் நடைபெறும் இசைக்கருவிகள், நகைகள், வாசனைப் பண்டங்கள் தயாரித்தலும், தக்கணத்தில் பல இடங்களில் நடைபெறும் கம்பள வேலையும் நாட்டில் உள்ள அரசர்களும் பிரபுக்களும் ஆதரித்ததனால்தான் செழித்து வளர்ந்தன. இவற்றுட் பல தொழில்கள் அரசாங்க முயற்சியால் வெளிநாடுகளிலிருந்து தொழில் நிபுணர்களையும், தொழில்களுக்கு வேண்டிய பொருள்களையும் கொணர்ந்து நிறுவப்பட்டவை. மைசூரில் கிடைக்கும் சந்தனம், அரக்கு முதலியனவும், திருவிதாங்கூரிலுள்ள தந்தமும் சில விலையுயர்ந்த கைத்தொழில்கள் ஆங்காங்கு நடைபெறுதற்குத் துணையாக அமைந்துள்ளன.

நாடு முழுவதுமே எல்லாவகைக் கைத்தொழிலின் முயற்சியும் சென்ற நூற்றைம்பதாண்டுகளாகக் குறைந்து வருகின்றது. எந்திரசாலைகளிற் பலவகைச் சாமான்களையும் அதிகமாகவும் விரைவாகவும் செய்வதோடு, மிக மலிவாகவும் தயாரிக்கலாம். இத்தகைய நயமான சாமான்கள் முன்போல் வெளி நாடுகளிலிருந்து இறக்குமதியாவதுடன் பல ஆண்டுகளாக உள் நாட்டிலேயே மிகுதியாகச் செய்யப்பட்டுப் போக்குவரவுச் சாதனங்களின் வளர்ச்சியால் நாடெங்கும் பரவி நன்கு விற்பனையாகின்றன. ஆகையால் காலமும் திறமும் அதிகமாகச் செலுத்திச் செய்வதனால் விலை உயர்ந்த கைத்தொழிற் சாமான்களின் விற்பனை குறைந்து, அத் தொழில்களும் அவற்றைப் பயில்வோரும் இப்போது தாழ் நிலையை அடைந்துள்ளனர். ஐரோப்பியர் ஆண்டபோது இக் கைத்தொழில்களின் அருமை தெரியாமல், இகழ்ந்து பாராட்டாதொழிந்தனர். மேலும் தம் நாட்டுச் செய்பொருள் விற்பனை மிகுத்தற்பொருட்டும் அவ்வாறு செய்தனர். ஆதரித்துப் போற்றும் பிரபுக்களின் தொகையும் நிலையும் நாளுக்கு நாள் குறைந்துவிட்டன. வறுமையால் வருந்தும் தொழிலாளர்களின் திறமையும் குன்றிவிட்டது.

புதுமுறையாகப் பலவகைப் பொருள்களை யந்திர சாலைகளில் செய்வது சென்ற 100 ஆண்டுகளாகத்தான் நடைபெற்று வருகிறது. சணல், பருத்தி ஆலைகளே முதன்முதல் 100 ஆண்டுகளுக்குமுன் ஏற்பட்டன. இவ்வாலைகள் ஏற்படுவதற்குக் காரணம் பிற நாடுகளில் நடந்த போர்களே. சென்ற நூற்றாண்டில் அமெரிக்க உள்நாட்டுப் போரின் விளைவாக முதலிற் பருத்தி ஆலைகள் கட்டப்பட்டமை போலவே, கிரிமியன் போருக்குப்பின் முதலிற் சணல் ஆலை தோன்றியது. இவ்வாறே இரும்பு, எஃகு, சிமென்டு, காகிதம், தீப்பெட்டி, சவர்க்காரம் முதலியன செய்யும் தொழிற்சாலைகள் முதல் உலகயுத்த காலத்தில் தோன்றின. இரண்டாவது உலக யுத்தத்துக்குப்பின், கப்பல்கள் கட்டுவதற்கும், ஆகாய விமானங்கள், மோட்டார் வண்டிகள், ரசாயனப் பொருள்கள், பீங்கான் சாமான்கள், மருந்துப் பொருள்கள் முதலியன செய்வதற்கும் பற்பலவிடங்களில் அநேக எந்திரசாலைகள் ஏற்பட்டன. யுத்தத்தின் கடுமையால் எவ்வகை இறக்குமதியும் குன்றவே, பல்வகைப் பொருள்களையும் உள்நாட்டிலேயே செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது. யுத்த காலத்தின் இலாப மிகுதியால் இத்தகைய தொழிற்சாலைகள் அமைத்தற்கு வேண்டிய முதலும் எளிதில் கிடைத்தது. யுத்த முயற்சிக்கு இன்றியமையாத இரும்பும் எஃகும் வெளிநாடுகளுலிருந்து இறக்குமதி செய்ய முடியாமையால், உடனே இரும்பு எஃகு தொழிற் சாலைகள் ஏற்படுத்தப்பட்டு, அபிவிருத்தி செய்யப்பட்டன.

பெரும்பாலும் இவ்வகை எந்திரசாலைகள் நாட்டின் சிற்சில பகுதிகளிலும் நகர்களிலுமே ஏற்பட்டுள்ளன. நாட்டிலுள்ள சணற்சாலைகள் கல்கத்தாவுக்கு இருமருங்கிலும் ஹூக்ளி ஆற்றோரங்களிலேயே பெரும்பாலும் அமைந்துள்ளன. கல்கத்தா துறைமுகத்தின் வழியாகத்தான் முதன்முதலில் சணல் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. அதுபற்றியே சணல் வியாபாரத்துக்குக் கல்கத்தாவே நடுவிடமாக இருந்தது. ஆலைகள் ஏற்பட்டபின் சணலாற் செய்யப்பட்ட பொருள்களும் மிகுதியாக ஏற்றுமதியாயின. ஆகவே, தொழிற்சாலைகளும் ஆற்றங்கரைகளிலே அமையலாயின. அதுபோலவே பஞ்சாலைகளும் முதன் முதல் பருத்தி மிகுதியாக ஏற்றுமதியாகி வந்த பம்பாயினருகே அமைக்கப்பட்டன. சாலைகளில் தயாரித்த நூலும் துணியும் எல்லாம் உள்நாட்டிலேயே விற்பனை யாவதுபற்றிப் பருத்திப் பயிராகும் பிரதேசங்களில் பருத்தி வியாபார கேந்திரங்களாயிருந்த அகமதாபாத், கோயம்புத்தூர், ஷோலாப்பூர் நாகபுரி முதலிய நகரங்களிலேயே பருத்தித்தொழிற்சாலைகள் தோன்றலாயின. இதனால் ஏற்றுமதிச் செலவு குறைந்தது. சென்ற முப்பது ஆண்டுகளாகக் கோயம்புத்தூர் போன்ற இடங்களில் மின்சாரச் சக்தி எளிதிற் கிடைப்பதால், பஞ்சாலைகள் பல பெருகிவருகின்றன.

தாமோதர் பள்ளத்தாக்கிலும் ஜாம்ஷெத்புரியை அடுத்தும் நிலக்கரிச் சுரங்கங்கள் மிகுதியாக இருப்பதால் பீகார் இராச்சியம் இத்தொழிலுக்கு நடுவிடமாய் உள்ளது. இந்தியாவில் உள்ள இரும்பு எஃகு தொழிற்சாலைகளிற் பெரும்பகுதியும், நிலக்கரியை மிகுதியாக உபயோகிக்கும் பல தொழில்களும் இந்தப் பிரதேசத்தில்தான் உள்ளன. சிந்திரி எருத்தொழிற்சாலைகளும், சித்தரஞ்சன் ரெயில் எஞ்சின் தொழிற்சாலை போன்ற பல புதிய தொழிற்சாலைகளும் இப்பிரதேசத்திலேயே ஏற்பட்டிருக்கின்றன. நிலக்கரி ஏராளமாகக் கிடைப்பதால் வேறு பல தொழிற்சாலைகளும் இப்பிரதேசத்தில் அமைக்கப்படலாம்.

சிமென்டு, தீப்பெட்டி, சவர்க்காரம், கண்ணாடி முதலிய தொழிற்சாலைகள் நாடெங்கும் பல இடங்களில் அமைந்துள்ளன. இப்பொருள்களுக்கு எங்கும் தேவை மிகுதி. இவற்றைச் செய்வதற்கு வேண்டிய கச்சாப் பொருள்களும் பலவிடங்களில் கிடைக்கின்றன. சர்க்கரை செய்யும் ஆலைகள் ஐக்கிய மாகாணங்களிலும் பீகாரிலும், ஓடுகள், பீங்கான் சாமான்கள் செய்யும் தொழிற்சாலைகள் மேற்குக் கடற்கரைப்பகுதிகளிலும் இருத்தல்போல், சில தொழில்கள் குறிப்பிட்ட சிற்சில இடங்களில்தாம் நடைபெறுகின்றன. இவற்றிற்கு வேண்டிய கச்சாப்பொருள்கள் இவ்விடங்களில் மட்டும் ஏராளமாக இருத்தலே இதற்குக் காரணம்.