பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/777

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தியா

712

இந்தியா

இத்தொழிற்சாலைகளில் நாட்டிற்குப் போதுமான அளவு உற்பத்தி இல்லை. சணல் பொருள்கள் மட்டும் நாட்டின் தேவைக்குமேல் தயாரிக்கப்பட்டு வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. நாட்டுமக்களுக்குத் தேவையான பொருள்களைச் செய்யும் பொருட்டும், அடுத்துள்ள பிறநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் பொருட்டும் பல தொழிற்சாலைகளைப் பன்மடங்கு பெருக்கலாம். இலங்கை, மலேயா, ஆஸ்திரேலியா, நியூஜீலாந்து இவ்விடங்களுக்கு இந்தியாவிலிருந்து அதிகமாக ஓடுகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகின்றன. இந்திய சமுத்திரத்தை அடுத்துத் தொழில் அபிவிருத்தி இல்லாத நாடுகளில் இந்தியாவில் செய்த பல சாமான்கள் எளிதில் வியாபாரமாகலாம். கனத்த ரசாயனப் பொருள்கள், எந்திர சாமான்கள், இரும்பு, எஃகு பொருள்கள் போன்ற ஆதாரக் கைத்தொழில்களை அமைத்து விருத்தி செய்தல் மிக அவசியமாகும். சக்தி ஆல்கஹாலைத் தயாரிப்பதற்குச் சர்க்கரைப்பாணியை உபயோகிப்பதுபோல், மற்றத் தொழில்களிலுண்டாகும் பயனற்ற பல்வகை உடன் விளைபொருள்களிலிருந்து பயன்படும் பொருள்களைச் செய்யும் பொருட்டுத் தொழிற்சாலைகள் பல ஏற்படவேண்டும். நாட்டின் பல பகுதிகளிலும் தொழில்கள் சமமாகப் பரவும்படி பல தொழிற்சாலைகளை எங்கும் ஏற்படுத்தித் தொழில் வளத்தைப் பெருக்கவேண்டியது கடமை. பார்க்க : கைத்தொழில்கள் - இந்தியக் கைத்தொழில்கள் பீ. எம். தி.

கைத்தொழில்களைத் தேசியமாக்குதல் : அரசாங்கத்தார் 1948 ஏப்ரல் ஆறாம் நாள் மக்கள் சபையில் கைத்தொழிற் கொள்கை பற்றிய அறிக்கையை வெளியிட்டனர். இவ்வறிக்கை இந்திய அரசாங்கத்தின் கைத்தொழிற் கொள்கையின் அடிப்படைத் தத்துவங்களையும் இன்றியமையாத அமிசங்களையும் கூறுகின்றது. இந்த அறிக்கையில் கைத்தொழில்கள் நான்கு வகைகளாகப் பகுக்கப்பட்டிருக்கின்றன. முதல்வகை அரசாங்கம் ஏக உரிமையாக நடத்துபவை. படைக்கலங்கள், அணுசக்தி, இருப்புப்பாதைப் போக்குவரத்து முதலியனவும், அவசர காலங்களில் நாட்டின் பாதுகாப்புக்கு இன்றியமையாதது என்று கருதப்படும் தொழிலும் இந்த வகையுள் அடங்கும்.

இரண்டாம் வகை, நிலக்கரி, இரும்பு, எஃகு, விமானம், கப்பல் கட்டுதல், டெலிபோன், தந்தி, ரேடியோ, தாது எண்ணெய்கள் போன்ற ஆதாரக் கைத்தொழில்களாகும். இத்தொழில்கள் இப்போது இருந்துவருவது போலவே இன்னும் பத்தாண்டுகட்குத் தனிப்பட்டவர்கள் கையில் இருந்துவரும். அதன் பின்னரே அவற்றைத் தேசியமாக்கும் விஷயம் சிந்திக்கப்படும். அப்பொழுதும் அரசாங்கம் உடனே எடுத்துக்கொள்ளும் என்பதில்லை ; எடுத்துக்கொள்வதற்குரிய உரிமையை மட்டும் அரசாங்கம் தனக்கு வைத்துக்கொண்டிருக்கிறது. அரசாங்கம் எடுத்துக்கொள்ளும்போது, நியாயமான நஷ்டஈடு கொடுக்கும். இப்போதுள்ளவை தவிரப் புதிதாக எந்தத் தொழிலையேனும் ஏற்படுத்த எண்ணினால் அப்போதும் அவசியம் ஏற்பட்டால் தனிப்பட்டவர் ஒத்துழைப்பையும் பெறும்.

உப்பு, எந்திரக்கருவிகள். உரங்கள், கன ரசாயனப் பொருள்கள், காகிதம், பருத்தி, கம்பளித்துணிகள், சிமென்டு, சர்க்கரை முதலிய 18 முக்கியமான கைத்தொழில்கள் மூன்றாம் வகையாகும். இவை அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்கு உட்பட்டு நடத்தப்பட வேண்டியவை.

இந்த மூன்றுவகைக் கைத்தொழில்கள் தவிர, ஏனையவை எல்லாம் அரசாங்கத்தின் கட்டுப்பாடின்றித் தனிப்பட்டவர் தம் விருப்பம்போல் நடத்தக்கூடியவை.

போக்குவரத்து வசதிகள், கைத்தொழில்களுக்குத் தேவையான கச்சாப்பொருள்களைக் குறைந்தபட்ச அளவில் இறக்குமதி செய்வதற்கான வசதிகள், அநியாயமான அன்னியப் போட்டியிலிருந்து பாதுகாப்பு, வரி விதிப்பதில் தக்க மாறுபாடுகள் முதலியவை செய்து, தனிப்பட்டவர் கைத்தொழில்களுக்கு உதவி செய்யத் தயாராக இருப்பதாகவும் அரசாங்கம் கூறுகிறது.

இந்திய அரசாங்கம் கைத்தொழில்களைப் பெரிய அளவில் தொடங்கி நடத்தும் திட்டம் எதுவுமில்லை என்று உறுதி கூறியது. அரசாங்கத்தினிடமுள்ள பண வசதியும், அரசாங்கம் மேற்கொண்டுள்ள திட்டம்களும் உள்ள நிலைமையில் அவ்வாறு தொடங்கி நடத்துவது முடியாத செயலாகவும் இருக்கிறது. ஐந்தாண்டுத் திட்டமானது அந்தக் கால அளவில் கைத்தொழில்களை வளர்ப்பது தனிப்பட்டவர் பொறுப்பு என்றே கூறுகிறது. வளர்ச்சிக்குத் தேவையான கட்டுப்பாடுகளுக்கும், திட்டத்தின் குறிக்கோளுக்கும் உட்பட்டுத் தனிப்பட்டவர் கைத்தொழில்களை நடத்த யாதொரு தடையுமில்லை என்று தெளிவாகக் கூறுகிறது.

அன்னிய உதவி : பொதுமக்கள் பயன்படுத்தும் பருத்தித் துணிகள், சர்க்கரை, சவர்க்காரம், காகிதம் முதலிய வாழ்க்கைப் பொருள்களை உற்பத்தி செய்யும் கைத்தொழில்களே இதுவரை இந்தியாவில் வளர்க்கப்பட்டு வந்திருக்கின்றன. பிற கைத்தொழில்களுக்குப் பயன்படும் எஃகு, சிமென்டு, சக்தி ஆல்கஹால், ரசாயனப் பொருள்கள் போன்ற ‘இடைப் பொருள்களை’ உற்பத்தி செய்யும் கைத்தொழில்களும் ஏற்பட்டு நடந்துவருகின்றன. ஆனால் சிமென்டு தவிர மற்றப் பொருள்கள் அனைத்தும் தேவையான அளவுக்கும் மிகக் குறைவாகவே உற்பத்தியாகின்றன. கப்பல் கட்டுதல், எந்திரக் கருவி உற்பத்திப் பொறிகள், டீசல் பொதி, நெசவுப் பொறிகள், ரெயில்வே எஞ்சின்கள் போன்ற மூலதனப் பொருள்களை (Capital goods) உற்பத்தி செய்யும் கைத்தொழில்களும் ஓரளவு தொடங்கப் பெற்று ஆரம்ப தசையில் இருந்து வருகின்றன. அதனால் இந்தியக் கைத்தொழில் வளர்ச்சிக்கு இன்னும் செய்ய வேண்டுவன பல வுள்ளன.

வருங்காலத்துக்கு வேண்டிய தலையாய தேவை மூலதனத்துக்குரிய நீதியாகும். இந்திய மக்கள் மூலதனமாகத் தரக்கூடியது சொற்பமே. ஏனெனில் மக்களுக்கு வருமானம் குறைவாயிருப்பதால் அவர்கள் சேமித்து வைக்கக்கூடிய நிலைமையில் இல்லை. அதனுடன் சேமிக்கக் கூடியதைக் கைத்தொழிலில் இடுவதற்குள்ள பழக்கமும் இப்பொழுதுதான் தொடங்கியிருக்கிறது. ஐந்தாண்டுத் திட்டமானது தனிப்பட்டவர் மூலம் 250-300 கோடி ரூபாய் மூலதனமாகத் தேவைப்படும் என்று கூறுகிறது. அதில் 125 கோடி ரூபாய் இதுவரையுள்ள கைத்தொழில்களை விரிவுபடுத்துவதற்கு வேண்டப்படும். ஆனால் தனிப்பட்ட கைத்தொழில்களுக்கு சென்ற மூன்றாண்டுக் காலத்தில் ஆண்டுதோறும் 15 கோடி ரூபாய் வீதமே நிதி மார்க்கட்டில் கிடைத்திருக்கிறது. ஆனால் அடுத்த ஐந்தாண்டுகளில் இத்தொகை 80-90 கோடியாக ஏறுமென்றும், கைத்தொழில் நிதி நிலையங்கள் 10-15 கோடி தரும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றன.

இவ்வாறு கைத்தொழில் வளர்ச்சிக்கு மூலதனம் கிடைப்பது குறைவாக இருப்பதால், அன்னிய மூலதனத்தைத் தாரளமாக எதிர்பார்க்க வேண்டியுள்ளது.