பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/792

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துஸ்தானி இசை

727

இந்துஸ்தானி இசை

மின்றிக் கடவுள் எல்லோர்க்கும் எளியன் என்பதும், எல்லோரும் பக்தியினாலும் பிரபத்தியினாலும் முத்தி அடையலாம் என்பதுமாகும்.

ஆழ்வார்கள் காலத்துக்குப்பின் ஆசாரியர்கள் காலம். ஆழ்வார்கள் அனுபவ பக்தர்களும் கவிஞர்களுமாவர். ஆசாரியர்களோ, கல்விமான்களும் தத்துவஞானிகளுமாவர். வைணவ ஆசாரியர்களுள் தலைசிறந்தவர் பன்னிரண்டாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் விசிட்டாத்துவைத சித்தாந்தத்தை வகுத்த இராமானுசர்.

வைணவ மதத்திற்குப் பன்னிரண்டு ஆழ்வார்கள் எப்படியோ, அப்படியே சைவ மதத்திற்கு அறுபத்து மூன்று நாயன்மார்கள். வைணவ ஆசாரியர்கள் விசிட்டாத்துவைதத்தை வகுத்தது போலச் சைவ ஆசாரியர்கள் சைவ சித்தாந்தத்தை வகுத்தார்கள். அவர்களுள் தலையாயவர் மெய்கண்ட தேவர் ஆவர். நாயன்மார்களுடைய தோத்திரப் பாக்கள் எல்லாம் பத்தாம் நூற்றாண்டின் இறுதியில் பதினொரு திருமுறைகளாகத் தொகுக்கப் பெற்றன. சிவபெருமானை ஆண்டவனாகவும், தந்தையாகவும், காதலனாகவும் பாவித்து அன்பு செய்யும் தோத்திரங்களாக உள்ள இப்பாசுரங்கள் உலகத்துப் பக்தி இலக்கியங்களுள் மிகச் சிறந்தனவாக விளங்குகின்றன.

அன்பு நெறி : அடுத்த காலம் பதின்மூன்றாம் நூற்றாண்டுக்கும் பதினெட்டாம் நூற்றாண்டுக்கும் இடையே உள்ளது. இக்காலத்தில்தான் அன்பு நெறிக்குத் தத்துவ அடிநிலையாகத் தோன்றியவை மாத்துவருடைய துவைதமும் மெய்கண்டாருடைய சைவசித்தாந்தமும் ஆகும். இராமானந்தர், கபீர், நானக், மீராபாய், வல்லபர், சைதன்யர், துளசிதாசர், துகாராம் ஆகியோரும் இக்காலத்து எண்ணிறந்த பக்திப் பாடல்கள் இயற்றினர்.

நாட்டில் பல்வேறு பக்தி இயக்கங்கள் தோன்றிய போதிலும், அவற்றினிடைக் கீழ்க்கண்ட பொதுவான கூறுகள் காணப்பெற்றன: (1) அன்பும் அருளும் நிறைந்த கடவுளுண்மையில் நம்பிக்கை. (2) ஆன்மாக்கள் தனித்தனி என்பதில் நம்பிக்கை. (3) வீடு அடைவதற்குக் கரும ஞானங்களைவிடப் பக்தியே சிறந்த சாதனம் என்னும் எண்ணம். (4) குருபக்தியும் மந்திர வாயிலான தீட்சையும். (5) சாதி வேற்றுமை பாராட்டாமை. (6) சமய உணர்ச்சியை வெளியிட மக்கள் பொதுவாகப் பேசும் தமிழ் முதலிய மொழிகளைப் பயன்படுத்தல். (7) இறைவன் நாமத்தைச் செபித்தலால் நன்மை உண்டென்னும் நம்பிக்கை.

தற்கால மத அபிவிருத்திகள்: இந்தப் பக்தி இயக்கங்கள் பதினெட்டாம் நூற்றாண்டின் நடுவிலிருந்து பத்தொன்பதாம் நூற்றாண்டின் நடுவரை வளர்ச்சி குன்றிப்போய்விட்டன. அதன்பின் ஆங்கிலக் கல்வியும்,மேனாட்டு விஞ்ஞான நாகரிகமும், பிரம சமாஜம், ஆரிய சமாஜம், இராமகிருஷ்ண இயக்கம் போன்ற பல புகழ்பெற்ற மத இயக்கங்களைத் தோற்றுவித்தன. பல இந்து மத போதகர்கள் தோன்றி, இந்து மதத்தைத் தூய்மை செய்து, அதன் உண்மைகளைத் தம் அனுபவ வாயிலாக உறுதி செய்து, ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பரந்த உலகத்தார்க்கும் அதன் சாரத்தையும் பெருமையையும் எடுத்து ஓதி வந்தார்கள். டீ. எஸ். ச.


இந்துஸ்தானி இசை : வட இந்தியாவில் வழங்கும் இசை இந்துஸ்தானி இசை எனப்படும். இது தென்னாட்டில் வழங்கும் கருநாடக இசையினின்றும் வேறானது. இவ்விரு இசை வகைகளும் ஆதியில் ஒரே வகையில் தோன்றியிருப்பினும், ஒரே மரபைக் கொண்டிருப்பினும், பாடும் வகையிலும், உச்சரிப்பிலும், கமகங்களைப் பயன்படுத்தும் வகையிலும் வெவ்வேறான சிறப்பியல்புகள் கொண்டிருக்கின்றன. குறிப்பிட்ட காலத்தில் குறிப்பிட்ட இராகங்களைப் பாடுதல், இராகத்தின் பரிணாமம், ஓர் இராகத்தோடு நெருங்கிய தொடர்பற்ற சுரத்தையும் ஒரே இராகத்தில் ஒரு சுரத்தின் இரு வடிவங்களையும் பயன்படுத்தல், குரற் பயிற்சி முதலிய பழக்கங்களும் இவ்விரு இசைமுறைகளில் வேறாக உள்ளன. நாட்டின் தெற்கிலும் வடக்கிலும் ஆதியில் வழங்கிவந்த நாடோடி இசையினால் இவை வெவ்வேறாகப் பாதிக்கப்பட்டிருக்கலாம். இந்திய இசை, சுரத்தொகுதிகளையும் அச்சுரங்களிடையே உள்ள தொடர்புகளையும் அடிப்படையாகக் கொண்டிருப்பதால், நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் உள்ள மக்கள் இத்தொடர்களைப் பலவாறாக அமைக்க வழியேற்படுகிறது. தன் கருத்துக்களுக்கும் மரபிற்கும் ஏற்ற வகையில் ஒவ்வோர் இனமும், தனக்கேற்ற இசை மரபை ஏற்படுத்திக்கொண்டது.

பழங்காலத்திலிருந்தே நாடோடி இசையும் கலையிசையும் ஒரேவகையாக வளர்ந்தன. நாடோடி இசைச் செல்வத்தைத் தடையின்றி ஏற்றுக் கலையிசை வளர்ந்தது. 12ஆம் நூற்றாண்டிலேயே இசை நூலாசிரியர் சிலர் வடநாட்டு இசைக்கும் கருநாடக இசைக்கும் உள்ள வேறுபாடுகளைக் குறிப்பிட முற்பட்டனர். 14ஆம் நூற்றாண்டில் விஜயநகர சாம்ராச்சியத்தில் வாழ்ந்த வித்தியாரணியர் மேௗ-ஜன்ய அடிப்படையில் இராகங்களைத் தொகுக்க முயற்சி செய்தார். அதன் பின்னரே இந்த வேறுபாடுகள் தெளிவாக அமைந்தன. ஆனால் தென்னாட்டு இசை புரந்தர தாசரது (1484-1564) அரும்பணிக்குப் பின்னரே தனித்தன்மை கொண்டு விளங்கியது. 1620-ல் வேங்கடமகி என்ற பெரியார் வித்தியாரணியரது மேள ஜன்ய முறையைப் பின்பற்றிக் கருநாடக இசையைத் தனிப்பட்ட இசை முறையாக அமைத்தார்.

வடநாட்டு இசைமுறையைச் சீர்படுத்த இசைப் புலமையும், இசைக் கலையில் பயிற்சியும் ஒருங்கே அமையப்பெற்ற இத்தகைய மேதை தோன்றாமையால் அது பரதரது மரபில் சீரற்று வளர்ந்தது. பரதரும் சார்ங்கதேவரும் பண்டையில் தோற்றுவித்த சுத்த சுரசப்தகமும், கோமளம், தீவிரம் என்ற சுரப் பாகுபாடுகளும் 18ஆம் நூற்றாண்டுவரை மாறாமல் இருந்துவந்தன. மேனாட்டு இசைக் கருவிகள் இங்கு வழக்கத்திற்கு வந்தபின், சுத்த மேளம், ஷாட்ஜி என்பதிலிருந்து ஷட்ஜக் கிராமத்தின் நிஷாத மூர்ச்சனையாகிய நைஷதீ என்பதற்கு மாறிற்று.

மேளங்கள்: தற்கால இந்துஸ்தானி இசையின் சுத்த மேளம் பிலாவல் எனப்படும். வேளாவளி என்பது பிலாவல் என மருவியது.

பல வேறுபாடுகள் இருந்தாலும் இவ்விரு இசை முறைகளில் வல்லவர்கள் அவ்வப்போது கூடித் தம் கருத்துக்களைப் பரஸ்பரம் மாற்றிக் கொண்டதுண்டு. முஸ்லிம் படையெடுப்பிற்குப் பின்னர் வடமொழியில் இயற்றப்பட்ட இந்துஸ்தானி இசை நூல்களுங்கூட அகோபலர், புண்டரீக விட்டலர் போன்ற தென்னாட்டவர்களால் இயற்றப்பட்டவை. முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்பட்ட உசேனி, சகானா, தர்பார், நவரோஜ் போன்ற இராகங்களும், அண்மையில் தென்னாட்டில் வழக்கத்திற்கு வந்த காபி, பேஹாக், நாயகி, மாஞ்சி, யமன்,பியாகடை, கானடா, கமாஸ், அமீர் கல்யாணி, பூர்வி கல்யாணி, ஜங்கலா, விருந்தாவனி, தேசிக தோடி, தோடி, தீபகம், பிலஹரி (வேளாவளி) போன்ற