பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/793

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துஸ்தானி இசை

728

இந்துஸ்தானி இசை

இராகங்களும் கருநாடக இசையில் இடம் பெற்றிருக்கின்றன. இவ்வாறு இராகங்களின் பெயர்கள் ஒன்றாக இருந்தாலும், கருநாடக இசையிலும் இந்துஸ்தானி இசையிலும் ஒரே பெயரால் குறிக்கப்படும் இராகம் வெவ்வேறு இசை வடிவுள்ளதாக இருக்கலாம். ஆனால் இந்த இருவகைப் பாகுபாடுகளையும் ஆராய்ந்தால் இவற்றில் கையாளப்படும் தத்துவம் ஒன்றே என விளங்கும்.

குறிப்பு : தென்னாட்டு இசையில் வழக்கொழிந்துபோன பல ராகங்கள் பழங்காலத்திலிருந்து பெயரும் வடிவமும் மாறாமல் இந்துஸ்தானி இசையில் இன்றும் வழங்கி வருகின்றன.

கருநாடக இசையில் மூல ராகங்கள், ஜனக ராகங்கள் என்றும், அவற்றிலிருந்து பெறப்படுபவை ஜன்ய ராகங்கள் என்றும் அழைக்கப்படுகின்றன. இந்துஸ்தானி இசையிலோ மூல ராகங்களிலிருந்து பெறப்படும் இராகங்கள் இராகினிகள் எனப்படும். இவை மூலங்களின் மனைவியர். ஏனைய இராகங்கள் புதல்வர், புதல்வியர், மருமக்கள் என்று குறிக்கப்படுகின்றன. கணக்கியல் முறையை அடிப்படையாகக் கொண்டு இராகங்களைப் பாகுபாடு செய்யாமல், இன்னிசை யுணர்ச்சியைக் கொண்டு இராகங்களைப் பகுக்கும் முறை இந்துஸ்தானி இசைக்குச் சிறப்பானது. சிலர் இத்தகைய மூலராகங்கள் ஐந்து என்றும், வேறு சிலர் ஆறு என்றும் கொள்வர். பாவத்திலும் சுர அமைப்பிலும் இவற்றை ஒத்த வேறு இராகங்கள் இவற்றிலிருந்து பெறப்படும். பழங்காலப் பாகுபாட்டு முறையில் சுரங்களின் தன்மையை விட வடிவ ஒப்புமையும் பாவமும் முக்கியமாக இருந்தன. ஆரம்ப நிலையில் இருந்த பல்லிய இசைக்கு ஏற்றவாறு இசை இவ்வாறு வகுக்கப்பட்டிருக்கலாம்.

பைரவ ராகத்தின் மனைவியான பாரவி ராகினியை உதாரணமாக எடுத்துக்கொள்வோம். இதன் அமைப்பு :

ம ரி க ரி சபபநித பபமகரிசசரிக.

இதனுடன் ஒவ்வொரு சுரத்தின் சம்வாதிகளையும் அனுவாதிகளையும் சேர்த்துப் பைரவ ராகத்தின் சுரங்களான நிரிசதநிசசகரிசசரிசததபமகரிச என்பனவற்றைப் பெறலாம். இந்த உதாரணத்திலிருந்து ஓர் இராகமும், அதன் இராகினியும் ஒன்றற்கொன்று பூரகமாக உள்ளன என்றும், நாதத்திலும் பாவத்திலும் நெருங்கிய தொடர்புள்ளவை என்றும் தெளிவாகும். இராகங்களும் இராகினிகளும் சில மன நிலைகளையும் பாவங்களையும் குறிக்கும் சின்னங்கள் எனலாம்.

இந்திய இசையில் ஒவ்வொரு சுரமும் சுருதியும் அவற்றிற்கே சிறப்பான வகையில் ஒலிக்கப்பட்டுத் தனிப்பட்ட வகையில் உள்ளத்தைப் பாதிக்கின்றன. சுருதிகளின் பெயர்களே இதைத் தெளிவாக்குகின்றன.

ஒவ்வொரு சுருதியுடனும் தொடர்புள்ள நிறமும் ஒன்றுண்டு. இதை அடிப்படையாகக் கொண்டு இசை வெளிப்படுத்தப்படும் பாவத்தை விவரிக்கும் பாடல்களை இயற்றினார்கள். ஓவியர்கள் இதை ஓவியத்தில் வரைந்து காட்டினார்கள். தெய்வீகத்தன்மை பொருந்திய இந்தப் பாவ ஓவியத்தைத் தன் இசையின் உதவியால் நம் அகக்கண்ணில் காட்டுவதே இந்திய இசைக் கலைஞனது நோக்கமாக இருக்கும். இவ்வகையில் இந்திய நாட்டு அறிஞர்கள் கேள்விப் புலனைப் பாதிக்கும் இசையொலியைப் பார்வைப் புலனுக்கேற்றதொன்றாக மாற்றினார்கள். நாதத்தின் வாயிலாக உள்ளத்தில் எழும் உருவத்தைச் சொற்களில் விவரிக்கும் முறையைச் சோமநாதர் என்பவர் கையாண்டார். இவற்றை வெறுங் கற்பனை எனக் கொண்டாலும், இராகத்திற்கு உருக்கொடுப்பதால் பாடகர்கள் இசையின் பாவத்தைத் திறம்பட வெளிக்காட்ட முடிகிறது.

இந்த இராக வடிவங்களிற் சில அழகிய கற்பனைகளாக விளங்குகின்றன. விபாஸ் ராகினியின் ஓவிய வடிவம் பின்வருமாறு: இரவு முழுதும் காதற் கேளிக்கைகளில் திளைத்திருந்த பெண்ணொருத்தி வைகறையில் ஆழ்ந்த துயிலில் இருக்கிறாள். அச்சமயம் அவள் உறக்கத்தைக் கெடுப்பதுபோலச் சேவல் கூவுகிறது. இவ்வாறு தனது படுக்கையறையில் துயில்கொள்ளும் பெண்ணையும், வெளியே கூவும் சேவலையும், தன் காதலியின் துயிலைக் கலைக்க முயலும் சேவலை விரட்டும் காதலனையும் ஓர் ஓவியத்தில் தீட்டினால் அது இந்த இசைவடிவத்தின்பாவத்தை அழகாகக் குறிக்கும்.

வெறுங் கற்பனையாக இல்லாது ஆழ்ந்த பொருளுள்ள இராக ஓவியங்களும் உண்டு. வளம் மிக்க புல்வெளியில் நின்றுகொண்டு, கையில் தனது வீணையை ஏந்தித்தன்னைச் சுற்றியுள்ள மான்கள் மகிழ இசைபாடும் கன்னியின் ஓவியம் தோடி இராகினியைக் குறிக்கின்றது. இதில் இசையினால் விலங்கினங்களும் கட்டுப்படும் என்பதும், பயிரை மேய வரும் மான்களை விரட்ட இசையைப் பயன்படுத்தும் பழக்கமும் தெளிவாகின்றன. தோடர்களிடையே வழங்கிய நாடோடி இசையிலிருந்தே இந்த இராக வடிவம் தோன்றியிருக்கலாம் என்பதையும் இது காட்டும். ஒவ்வோர் இராக ஓவியத்திற்கும் தக்க சூழ்நிலையை அமைத்து, இராகத்தின் பாவத்தையும் உட்பொருளையும் தெளிவாக்கிக் கலைஞன் இதை எளிதில் உணர்ந்து, தன் பாட்டில் வெளிக் காட்டப் பழங்காலத்தில் முயன்றான்.

இந்த இராகங்களும் இராகினிகளும் ஆறு பிரதம இராகங்களை அடிப்படையாகக் கொண்டு தொகுக்கப்-