பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/794

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்துஸ்தானி இசை

729

இந்துஸ்தானி இசை

பட்டன. இந்த ஆறு இராகங்களின் தற்காலப் பெயர்கள் பிலாவல், காபி, பைரவி, கல்யாணி, கமாஸ், ஜோன்புரி அல்லது அசாவேரி. வட நாட்டு இசையியலிற் புலமை வாய்ந்த வீ. என். பாத்கண்டே என்ற அறிஞர் இந்த இராக முறையைக் கருநாடக மேளகர்த்தா முறையைப் பின்பற்றி மாற்றியமைத்தார். நடைமுறையிலுள்ள இராகங்கள் அனைத்தையும் பத்து மேளங்கள் அல்லது தாட்டுக்களாகப் பகுத்தார். அவர் திட்டம் பின் வருமாறு :

1. கல்யாணி மேளம் (கருநாடக மேச கல்யாணி மேளம்). ஜன்ய ராகங்கள் : இமான், சுத்த கல்யாணி, பூபாளம், சந்திரகாந்தா, ஜயகல்யாணி, பூர்விகல்யாணி, இந்தோளம், மாலஸ்ரீ, கேதாரம், ஹம்மீரா, கானடா, சாயநாட்ட, சியாம கல்யாணி, கவுட சாரங்கா.

2. வேளாவளி (தீர சங்கராபரண மேளம்). ஜன்ய ராகங்கள் : சுத்த வேளாவளி, ஆல்ஹய்யா, சுக்ல வேளாவளி, தேவகிரி, இமானி, துர்கா, சர்பர்தா, ககுபா, நாட்ட வேளாவளி, லக்ஷசாகா, சங்கரா,தேஸ் கர், பேஹாக், ஹேமகல்யாணி, மலுஹா, நாட்ட, மாண்டு, குணகளி, பாஹடி.

3. கமாஸ் (ஹரிகாம்போதி மேளம்). ஜன்ய ராகங்கள்: கமாஸ், ஜிஞ்ஜோடி, சுரட்டி, தேஷ், கம்பாவதி, திலங்கு, ராஜேஸ்வரி, ஜயஜயவந்தி, காரா, திலக் காமோத்.

4. பைரவ (மாயாமாளவகெள்ள மேளம்). ஜன்ய ராகங்கள் : பைரவ, கலிங்கம், மேகரஞ்சனி, சௌராஷ் டிரம்,ஜோகியா,கௌரி, ராமகலி, பிரபாதம், விபாஸ், பங்காளம், சிவ-பைரவி, ஆனந்த பைரவி, ஆஹிரபைரவி,லலித-பஞ்சமம், குணக்ரி.

5. பூர்வி (காமவர்த்தனி மேளம்). ஜன்ய ராகங்கள் : பூர்வி, ரேவா, ஸ்ரீ, தீபகம், திரிவேணி, மாளவி, ஜான்கி, ஜேதஸ்ரீ, வசந்தகா, பூர்யாதனாஸ்ரீ, பரஜ்.

6. மாரவா (கமனஸ்ரம மேளம்). ஜன்ய ராகங்கள் : மாரவா, பூரியா, லலிதா, சோஹனி, வராடி, ஜைத்ரா, கம்பாரம், பட்டியாரம், சஜ்ஜக்கிரி, மாலிகவுரா, பஞ்சமம்.

7. காபி (கரஹரப்ரிய மேளம்). ஜன்ய ராகங்கள்: தனாஸ்ரீ, சைந்தவி, காபி, தனி,பீம்பளாஸ், பிரதிபாகி, பீலு, ஹம்சகங்கணி, வாகேஸ்ரீ, பஹார், சுஹா, சுக்ராயிகா, தேசா, சஹானா, நாயகி, மத்யமாதி, சாரங்கா, சுத்த சாரங்கா, விருந்தாவனி - சாரங்கா, சாமந்தா, மியான் சாரங்கா, பலஹம்சா, சுத்தமல்லார், படமஞ்சரி, கவுட மல்லார், சூரமல்லார், ராமதாசி மல்லார், மியான் - மல்லார், மேகமல்லார்.

8. ஆசாவரி (நடபைரவி மேளம்). ஜன்ய ராகங்கள் : ஆசாவரி, ஜவுன்புரி, காந்தாரி,தேசி, காட், சிந்து பைரவி, கௌசிகம், தர்பாரி, கானடா,அடானா, ஜிலாபா.

9. பைரவி (ஹனுமத் தோடிமேளம்). ஜன்ய ராகங்கள்: பைரவி, மால்கோஸ், பிலாஸ்கான்தோடி.

10. தோடி (சுபபந்துவராளி மேளம்). ஜன்ய ராகங்கள்: தோடி, கூர்ஜரி,மூல்தானி.

மொத்தத்தில் இந்துஸ்தானி இசையில் தற்காலத்தில் சுமார் 200 இராகங்கள் உள்ளன.

இந்துஸ்தானி இசையில் பாவத்திற்கேற்றவாறு இராகங்களைப் பிரித்திருப்பது போலவே, காலத்திற்கேற்றவாறும் பாகுபாடு செய்திருக்கிறார்கள். கருநாடக இசையில் பூபாளத்தை வைகறையிலும், நீலாம்பரியை இரவிலும் பாடுவது வழக்கமெனினும், மற்றச் சமயங்களில் அவற்றைப் பாடக்கூடாது என்பதில்லை. ஆனால் இந்துஸ்தானி இசையிலோ இராகங்கள் காலை, பிற்பகல், அந்திப்பொழுது என்ற வேளைகளுக்கேற்றவாறு பூர்வாங்க இராகங்கள், உத்தராங்க இராகங்கள், சந்திப் பிரகாச இராகங்கள் எனப் பகுக்கப்பட்டுள்ளன. ஒரு காலத்திற்குரிய இராகத்தை இன்னொன்றில் பாடலாகாது.

அலங்காரங்களும் கமகங்களும்: பழங்கால இந்துஸ்தானி இசைநூல்களில் குறிப்பிடப்படும் அலங்காரங்களிலும் கமகங்களிலும் மிகச் சிலவே தற்காலத்தில் வழக்கத்தில் உள்ளன. அவைகளும் தானத்தில் மட்டும் கையாளப்படுகின்றன. வலியும் நடுக்கமும் கொண்ட சில சுரங்களின் தொகுதி தற்காலத்தில் கமகம் எனப்படுகிறது. பழங்காலத்தில் ஸ்புரிதம் என வழங்கிய துடிப்பு இக்காலத்தில் கித்கிரி எனப்படுகிறது. தானம் எனப்படும் இசை வடிவம் ஆ, ஈ, ஓ போன்ற எளிய உயிரெழுத்துக்களின் சுரத்தொகுதி. இதன் கடைசிச் சுரத்தை அழுத்திப் பாடி மூச்சை வெளிவிடுவது மூர்கிதானம் எனப்படும். ஹலப்தானம் என்பதில் பாடும் போது நாக்கை மேலும் கீழும் அசைத்து, ஏ என்ற உயிரெழுத்து ஏய் என உச்சரிக்கப்படுகிறது. சப்த தானத்தில் இசைத் தொகுதியின் சுரங்கள் ஆரோகணத்திலும் அவரோகணத்திலும் துரிதமாகப் பாடப் பெறுகின்றன.

தாளம்: கருநாடக இசையைப் போலவே இந்துஸ்தானி இசையிலும் சம, அர்த்த சம, விஷம தாளங்கள் பயன்படுகின்றன. கையை அடித்து அழுத்தமான தட்டையும், கையை வீசி அழுத்தமில்லாத தட்டையும் குறிப்பிடுகிறார்கள். அழுத்தமற்ற தட்டு ‘காலி’ எனப்படும்.

இந்துஸ்தானி இசையிலும் பக்காவஜ் என்றழைக்கப்படும் மிருதங்கம் பயன்படுகிறது. ஆனால் இது துருபதம், ஹோரி, தமார் முதலிய இசைகளைப் பாடும் போதும், வீணை, ரபாப், சரோடு ஆகிய கருவிகளுக்கும் பக்கவாத்தியமாகப் பயன்படுகிறது.

14ஆம் நூற்றாண்டில் முஸ்லிம்களால் தோற்றுவிக்கப்பட்ட தபலா என்னும் வாத்தியம் கேயால், டுமரி முதலியவற்றைப் பாடும்போதும், சிதாருக்கும் பக்க வாத்தியமாகப் பயன்படுகிறது. இவ்விரு கருவிகளின் தத்துவமும் பயிலப்படும் வகையும் ஒன்றே. ஆனால் தபலாவில் இரு கருவிகள் பயனாவதால் இதில் விரலின் இயக்கம் அதிகம். பக்காவஜை வாசிக்கும்போது விரல்களும் உள்ளங் கைகளும் இயங்குகின்றன. தபலாவில் வலக்கையால் வாசிக்கப்படுவது ஷட்ஜம். இது தாளங்களின் இடைவெளியை நிரப்பி அவற்றைப் பெருக்கப் பயன்படுகிறது. சந்தத்தைக் குறிப்பிட இடக்கைக் கருவி பயன்படுகிறது. ஆகையால் இடக் கைக் கருவியின் ஓசை சட்டையின் தையலைப் போலும், வலக்கைக் கருவியின் ஓசை கலைஞனது கற்பனைக்குத் தக்கபடி அமையும் சித்திரத்தையலைப்போலும் உள்ளன.

தபலாவில் பயனாகும் முக்கியமான சொற்கள் ஒன்பது. இவை ‘போல்’ எனப்படும். தபலாவில் இவை தீ, நா, தா, திரிக், தீன், இட், கிட், தன், தா ஆகியவை. இவற்றுள் முதல் ஏழும் வலக்கையினாலும், கடைசி இரண்டும் இடக்கையினாலும் தோற்றுவிக்கப்படும். இந்த ஒன்பது ‘போல்’களையும் தக்கபடி இணைத்து, எண்ணற்ற வேறு ‘போல்கள்’ தோற்றுவிக்கப்படும். தபலாவை இரு வகைகளில் பயில்வதுண்டு. தபலாவின் அடிப்படைத் தாளம் டேகா அல்லது துணை எனப்படும். இசை அல்லது நடனத்தைத் திருத்தமாகப் பின்பற்றிக் கையின் அடியும் தபலாவின் ஒலியும் ஏககாலத்தில் நிகழ்ந்தால் அது சமம் எனப்படும். பொதுவாக இது தாளத்தின் முதல் மாத்திரையின்