பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/803

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தோ-சீனா

738

இந்தோனீசியா

ஒருங்கே காண முடிகிறது. எல்லையற்ற பரம்பொருளைக் காணும் அவா இந்தியக் கலை மரபிற்குரியது. இக் காலத்துக் கெமெர்ச் சிற்பங்களின் புன்சிரிப்புத் தவழும் முகத்தில் இதைக் காண்கிறோம். இவை மூடிய கண்களுடன் தியான நிலையில் உள்ளன.

நடிகை


உதவி: கிழக்குக் கோடிப் பிரெஞ்சுக் கலாசாலை. ஹானாய்.

க்ஷாம் கலைகள் (8-12ஆம் நூ.): சீனத்திற்கும் கெமர்ச் சாம்ராச்சியத்திற்கும் இடையில் க்ஷாம்பா என்னும் அரசு இருந்தது. இது இக்காலத்தில் அனாம் என வழங்குகிறது. இப்பகுதியில் மலேயா நாட்டவருடன் இனத் தொடர்புள்ள மாலுமிகள் வசித்து வந்தார்கள். இந்நாட்டுக் கலையைப் பல நாடுகள் மாறுபாடு அடையச்செய்தன. இந்நாட்டுக் கட்டடச் சிற்பத்திற்கு ஆங்காங்குக் காணப்படும் கோயில்கள் உதாரணமாகும். இவை இயற்கையழகு நிறைந்த இடங்களில் அமைக்கப்பெற்றன. மீசான் என்னுமிடத்திலுள்ள கோயில் வட்டவடிவமான பள்ளத்திலும், 'பின்தின்' என்னுமிடத்திலுள்ள கோயில் ஒரு குன்றின் மேலும் உள்ளன. இக்காலத்துச் சிற்பத்தில் கடினமும் மென்மையும் விந்தையான வகையில் கலந்துள்ளன.

7ஆம் அல்லது 8ஆம் நூற்றாண்டில் புதிதாகப் பிறந்த கலைமுறையின் இயற்கைத் தன்மை அக்காலத்து இந்தியச் சிற்பத்தின் இணைந்த தோற்றத்திற்கு உயிர் அளித்ததுபோல் காணப்படுகிறது.

டாங்-டுவாங் என்னுமிடத்திலுள்ள சிற்பங்கள் நாட்டு மக்களின் தோற்றத்தைப் பிரதிபலிக்கின்றன. அங்கு அமைக்கப்பட்ட புத்தர் சிலைகளுங்கூடத் தடித்த உதடுகளும், சப்பை மூக்கும் கொண்டு காணப்படுகின்றன. சிற்பத்தின் அலங்காரமும் அணியும் அநாகரிகமாகவும் மிகையாகவும் உள்ளன.

இதன்பின் 10ஆம் நூற்றாண்டில் இதற்கு எதிரான முறை வழக்கத்திற்கு வந்தது. இக்காலத்துக் கட்டடங்கள் க்ஷாம் கட்டடச் சிற்பத்திற்குச் சிறந்த உதாரணங்களாகும். படிப்படியான தோற்றமுள்ளவாறு அமைக்கப்பட்ட தூண்களும், அலங்காரத்தின் நேர்த்தியும் இக்கலைக்குத் தனிச்சிறப்புத் தருகின்றன. இக்காலத்து நடனச் சிற்பங்களில் தனிப்பட்டதொரு நெகிழ்வும் கண்ணைக் கவரும் நயமும் காணப்படுகின்றன.

11ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வியட்நாம் அரசு தோன்றி, இந்நாட்டின் தலைநகரம் தெற்கே போனபின் க்ஷாம் கலை மங்கியது. அதன் விரிவான அலங்காரங்கள் மறைந்தன. சிலைகளின் முதுகுபுறத்தில் முட்டுக்கொடுத்து, அவற்றைத் தாங்கும் வழக்கம் தோன்றியது. சிற்பக் கலையின் வீழ்ச்சிக்கு இவை அறிகுறிகளாகும்.

கெமர்க் கலை உச்சநிலையை அடைந்து திடீரென மறைந்தது. க்ஷாம் கலை வலிமையிழந்து காலப்போக்கில் மெல்ல மறைந்தது. ஜீ. நொ. —வை. சா.


இந்தோனீசியா டச்சுக்காரர்களுக்கு முன்பு சொந்தமாயிருந்து, 1945லிருந்து சுதந்திர நாடக விளங்குகிற தீவுக்கூட்டம். இது மலேயாத் தீவுக்கூட்டத்தின் பகுதி. ஜாவா, சுமாத்ரா, மதுரை, போர்னியோ, டைமோர், பாப்புவா, செலிபீஸ், மோலக்கஸ், பாலி, பிளோரில் முதலிய பல சிறு தீவுகள் சேர்ந்து இத்தீவுக்கூட்டம் அமைந்தது. இதுவும் ஜப்பானியத் தீவுகளைப்போல எரி மலைகள் மிகுந்துள்ள பிரதேசம். இங்கு 95 எரிமலைகள் உள்ளன. பரப்பு (டச்சு, நியூகினி உட்பட): 7,35,267 ச. மைல். மக்: சு. 7,80,00,000 (1950).

இத்தீவுகள் பூமத்தியரேகைப் பிரதேசத்தில் வரிசையாக இருக்கின்றன. மலேயா தீபகற்பத்திலிருந்து ஆஸ்திரேலியாவிற்குச் செல்லும் பாதைபோல் இவை அமைந்துள்ளன.

தட்பவெப்ப நிலை: இத்தீவுகளில் வெப்பமிகுந்த பூமத்தியரேகைத் தட்பவெப்ப நிலை காணப்படுகிறது. கோடையில் தென்கிழக்கிலிருந்தும், குளிர்காலத்தில் வட, வடகிழக்குப் பிரதேசங்களிலிருந்தும் காற்று வீசுகிறது. கடல்மட்ட உயரத்தில் உள்ள தீவுகளிலெல்லாம் ஆண்டுச் சராசரித் தட்பவெப்பம் 80° பா. இத்தீவுக் கூட்டம் முழுவதிலும் நல்ல மழை பெய்கிறது. சில இடங்களில் மட்டும் 40 அங். மழைக்குக் குறைவாகப் பெய்கிறது.

விளை பொருள்கள்: அயனமண்டலக் காடுகள் இங்கு மிக அடர்த்தியாக உள்ளன. பல தாதுப் பொருள்களும் கிடைக்கின்றன. மண்ணெண்ணெய், வெள்ளீயம் ஆகியவை அகப்படுகின்றன. ரப்பர், காப்பி, தேயிலை, சர்க்கரை, தென்னை ஏராளமாகப் பயிரிடப்படுகின்றன. உலகத்தில் கிடைக்கும் கொயினாவில் பெரும்பகுதி ஜாவாவில் விளைகிறது. பெரும்பான்மை மக்கள் மலாய் இனத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களிற் பெரும்பாலோரின் மதம் இஸ்லாம். சுமாத்ரா, போர்னியோ, பாப்புவா முதலிய தீவுகள் பரப்பிலும் செழிப்பிலும் மிகுந்திருப்பினும், முன்னேற்றமடையாத பிரதேசங்களாகவே இருக்கின்றன.

இங்குள்ள மோலக்கஸ் தீவு, இலவங்கத் தீவு என்றும் பெயர் பெறும். இலவங்கம் முதலிய வாசனைப்