பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/804

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தோனீசியா

739

இந்தோனீசியா

பொருள்கள் உலகத்திலேயே இங்கேதான் மிக அதிகமாகக் கிடைக்கின்றன.

போக்குவரத்து: 1940-ல் இந்தோனீசியாவில் 4,700 மைல் நீளத்திற்குச் சாலைகள் இருந்தன. 1951-ல் 31,046 வாடகைக் கார்களும், 7,643 பஸ்களும், 7,663 மோட்டார் சைகிள்களும் இருந்தன. 1940 இறுதியிலும் 4,611 மைலுக்கு ரெயில் வசதி இருந்தது; ரெயில்வேக்கள் ஜாவாவிலும் சுமாத்ராவிலுமே அதிகம். ஏறத்தாழ 700 தபால் ஆபீசுகளும் 722 தந்தி ஆபீசுகளும் இருந்தன. ‘கருடா இந்தோனீசிய விமானப்போக்குவரத்துக்கள்’ விமான மார்க்கங்களை மிகுவித்திருக்கின்றன.

வர்த்தகம்: 1951-ல் இறக்குமதி 30,64,000 ஆயிரம் ருப்பியாக்கள் மதிப்புள்ள சரக்குக்களும், ஏற்றுமதி 46,63,800 ஆயிரம் ருப்பியாக்கள் மதிப்புள்ள சரக்குக்களும் ஆகும். தேயிலை, பெட்ரோலியம், ரப்பர், கொப்பரை, மிளகு, வெள்ளீயம் ஆகியவை முக்கியமான ஏற்றுமதிப் பொருள்கள். துணிமணிகள், அரிசி எந்திரங்கள் முதலியவை முக்கியமான இறக்குமதிப் பொருள்கள்.

முக்கியமான நகரங்கள்: (மக். 1951-ம் ஆண்டு மதிப்பு) ஜகார்ட்டா (தலைநகரம்): 28,00,000; ஜோக்கிய கார்ட்டா : 18,48,886; சுரபாயா: 7,14,898; பாண்டுங்: 6,59,213.

இந்தோனீசியா

வரலாறு: இந்தோனீசியா சு.2,000 தீவுகளைக் கொண்டது. மனித இனத்தின் ஆதிமூதாதையர் ஜாவாத்தீவில் வசித்ததாக அங்கு அகப்பட்ட பாசில் (Fossil) எலும்புகளிலிருந்து தெரிகிறது. தற்காலத்திய இந்தோனீசிய மக்களின் மூதாதையர் கி.மு. 1000 ஆண்டுகளுக்கு முன்பே இந்தோனீசியாவில் குடியேறினர். இவர்கள் சீன மக்களின் இனத்தைச் சேர்ந்தவர்கள். கி.மு. முதல் நூற்றாண்டிற்கு முன்னரே இந்தியாவிலிருந்து கப்பல்கள் இங்கு வரத் தொடங்கின. இந்தியர் ஜாவாவை யவத்வீபம் எனவும், சுமாத்ராவை சுவர்ணத்வீபம் எனவும் அழைத்தனர். இந்திய நாகரிகம் கி.பி. 1300 வரை இப் பிரதேசத்தில் நிலைத்திருந்தது. கி.மு. 3ஆம் நூற்றாண்டிலேயே சுமாத்ராவில் இந்துக்கள் குடியேறினர். இங்குக் கி.பி. 4ஆம் நூற்றாண்டில் தென்கிழக்குப் பகுதியில் ஸ்ரீவிஜயம் என்ற இராச்சியம் தோன்றியது. 7ஆம் நூற்றாண்டில் ஆண்ட ஜயநாசன் காலத்தில் ஸ்ரீவிஜயம் பெரிய பௌத்த கலாசாலையாக விளங்கியது. ஸ்ரீவிஜயத்தின் ஆட்சி சுமாத்ரா முழுவதிலும் பரவி மலேயாவிலும் வியாபித்தது. 8ஆம் நூற்றாண்டின் இறுதியில் சைலேந்திர ராச்சியம் தோன்றிற்று. சிலர் இது ஸ்ரீவிஜய ராச்சியத்தினின்று உதித்ததென்பர். மற்றும் சிலர், இது மலேயாவிலுதித்து எல்லாத் தீவுகளையும் ஆக்கிரமித்தது என்பர். இதன் கல்வெட்டுக்கள் பாண்டிய அரசர்களின் சாசனங்களை யொத்திருப்பதால் இவ்வரசின் கர்த்தாக்கள் தென்இந்தியர் எனலாம். கம்போடியா, அனாம் போன்ற பிரதேசங்களும் இவ்வரசின்கீழ் வந்தன. இவ்வரசின் மதம் மகாயான பௌத்தம். மத்திய ஜாவாவிலுள்ள போராபுதூர் என்னுமிடத்தில் இவ்வரசினால் கட்டப்பட்ட பௌத்த ஆலயத்தின் சிதைவுகள் இன்னும் காண்போரைக் கவர்கின்றன. அதன் 9 மாடிகளிலும் லலிதவிஸ்தரமென்னும் நூலில் கண்ட விதமே புத்தர் வாழ்க்கை, சிற்பங்களாகச் செதுக்கப்பட்டிருக்கிறது. இந்நாட்டிற்குத் தாய் நாட்டினுடன் நெருங்கிய தொடர்பு இருந்துவந்தது. 9ஆம் நூற்றாண்டில் சைலேந்திர அரசனான பலபுத்ரதேவன் வங்காளத்திலுள்ள நாலந்தாவில் பௌத்த விஹாரத்தைக் கட்டினான். ஆனால், இதன்பின் சோழ அரசர்களுக்கும் சைலேந்திரர்களுக்கும் சச்சரவு நிகழ்ந்தது. இராசேந்திர சோழன் ஒரு கப்பற்படையை அனுப்பிச் சங்கிராம விஜயோத்துங்க வர்மனை முறியடித்தான். இதன்பின், சைலேந்திர சாம்ராச்சியம் மெலிவடையத் தொடங்கிற்று. ஆனால் சீன வரலாறுகளிலிருந்து அது 14ஆம் நூற்றாண்டுவரை இருந்து வந்ததாகத் தெரிகிறது. மேற்கு ஜாவாவில், கி.பி. 2ஆம் நூற்றாண்டில் தேவவர்மன் என்பவன் ஆண்டான். 5ஆம் நூற்றாண்டில் உண்டான சமஸ்கிருதக் கல்வெட்டுக்கள் பூர்ணவர்மன் என்னும் அரசன் ஒரு கால்வாயை வெட்டியதாகக் கூறுகின்றன. மத்திய ஜாவாவில் 8ஆம் நூற்றாண்டில் ஆண்ட சஞ்சயன் தன் கல்வெட்டுக்களில் பிரமன், விஷ்ணு, சிவன் என்னும் மூன்று மூர்த்திகளையும் துதிக்கிறான். சைலேந்திரர்கள் ஜாவாவைக் கைப்பற்றி 778லிருந்து 879 வரை ஆண்டனர். சஞ்சயனின் சந்ததியார் ஜாவாவில் கிழக்குப் பகுதியில் வசித்தனர். 879-ல் இவர்கள் சைலேந்திரரைத் துரத்திவிட்டு, 927 வரை மத்திய ஜாவாவையும் கிழக்கு ஜாவாவையும் ஆண்டனர். இவர்களின் தலைநகரான பிரம்பானன் என்னுமிடத்தில் பல ஆலயங்களைக் கட்டினர். மத்தியில் சிவாலயமும் சுற்றிலும் பிரமன், விஷ்ணு, துர்க்கை அகத்தியர் ஆலயங்களும் இருக்கின்றன. ஆலயச் சுவர்களில் சிவதாண்டவத்தின் 32 முத்திரைகளும் இராமாயணக் கதையும் செதுக்கப்பட்டிருக்கின்றன. இதன் பக்கமுள்ள பௌத்தாலயத்தில் புத்தரைப்பற்றிய ஒரு சமஸ்கிருத பிரார்த்தனை ஜாவா மொழியில் பெயர்க்கப்பட்டிருக்கிறது. ஜாவா மொழியில் இலக்கியம் இக்காலத்தில்தான் ஆரம்பிக்கிறது. 927-ல் இவ்வமிசம் அழிந்தது. கிழக்கு ஜாவாவில் ஒரு புதிய அரச வமிசம் தோன்றியது. இவ்வமிசத்தைச் சேர்ந்த தரும வமிசனின் ஆட்சியில் மகாபாரதம் ஜாவா மொழியில் பெயர்க்கப்பட்டது; சிவசாசனமென்னும் சட்டநூல் இயற்றப்பட்டது. தரும வமிசனின் இருபேரன்மார் காலத்தில் அவர்கள் இராச்சியத்தைத் தங்களுக்குள் பிரித்துக் கொண்டனர். மேற்குப் பகுதியான கதிரி 12ஆம் நூற்றாண்டில் புகழ்பெறத் தொடங்கியது; அது ஒரு கடற்படைகொண்டு பாலித்தீவையும் போர்னியோவையும் வென்றது. ஜயவர்ஷனின் ஆட்சியில் திரிகுணன் என்னும் புலவர் கிருஷ்ணாயனம் என்னும் காவி-