பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/807

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இந்தோனீசியா

742

இந்தோனீசியா

ஏழாம் நூற்றாண்டில் இதிசிங்கு சென்றபோது சைலேந்திர அரச வமிசம் ஸ்ரீவிஜய இராச்சியத்தை அரசாண்டுகொண்டிருந்தது. அந்த வமிசமே "போரா புதூர்" என்னுமிடத்தில் உள்ள தூபத்தைக் கட்டியது. அதுவே உலகத்திலுள்ள பௌத்தக் கோயில்களிலெல்லாம் தலைமையான சிறப்புடையதாகும். அதிலுள்ள சிற்பங்கள் இணையற்றவை. சாந்தி பொழிவதுபோலச் சித்திரிக்கப்பட்டுள்ள அவற்றின் அழகு சொல்லுந்தரமன்று. இக் கோயில் சதுர வடிவமான ஆறு தட்டுக்கள் உடையது. அடித்தட்டின் ஒவ்வொரு பக்கமும் 497 அடி நீளமானது. இக் கோயிலில் உள்ள புத்தர் சிலைகள் மொத்தம் 504 ஆகும். இதன் வாயிலில் கால-மகர வேலைப்பாடு இக் கோயில் இந்தியக் கலையுடன் தொடர்புடையது என்று காட்டுகின்றது. ஆயினும் இக் கோயிலின் கலை முழுவதையும் இந்தியக் கலை என்று சொல்லாமல் இந்தோ-ஜாவாக் கலை என்று சொல்வதே பொருந்தும். ஜாவாச் சிற்பிகள் விலங்கு, பறவை, வீடு, உடை முதலியவற்றை எல்லாம் தம் நாட்டு முறையிலேயே சித்திரித்துளர். இக் கோயிலில் காணப்படும் செதுக்குச் சித்திரங்கள் ஏறக்குறைய ஆயிரத்து முந்நூறாகும். இவை புத்தர் ஞானோதயம் பெற்றது வரையுள்ள அவரது வாழ்க்கை நிகழ்ச்சிகளைச் சித்திரிக்கின்றன. இக் கோயில் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கட்டப்பட்டது என்று அறிஞர் கருதுகின்றனர்.

இதுவரை கூறிய இந்துக் கோயில்களும் பௌத்தக் கோயில்களும் காணப்படுமிடம் நடு ஜாவாவாகும். இவை எட்டாம் நூற்றாண்டு முதல் பத்தாம் நூற்றாண்டு வரையுள்ள இடைக்காலத்தில் ஆக்கப்பெற்றன.

பத்தாம் நூற்றாண்டுக்குப்பின் 14ஆம் நூற்றாண்டு வரை வளர்ந்தது கிழக்கு ஜாவாவிலாகும். இக்காலத்தில் ஜாவாக் கலை சிறிது சிறிதாக இந்தியக் கலைத் தொடர்பு அற்றதாக ஆயிற்று. இக்காலத்தில் கிழக்கு ஜாவாவில் எழுந்த சாண்டி ஜகோ (Chandi Djago) கோயிலும் சாண்டி பனாதரன் (Chandi Panataran) கோயிலும் முற்றிலும் ஜாவாக் கலைப் பொருள்களேயாகும். இங்குக் காணப்படும் இராம சரிதச் சித்திரங்கள் பிரம்பானனில் காணப்படும் இராம சரிதச் சித்திரங்களினின்றும் முற்றிலும் வேறுபட்டுத் தோன்றுவதைக் காணலாம். இக் கோயில்களின் புறத்தோற்றம் ஜாவாக் கலையினதாக இருப்பினும், அகத்தேயுள்ள சிலைகள் நடு ஜாவா முறையைத் தழுவினவாகவே காணப்படுகின்றன. இரண்டு கலை முறைகளும் இணைந்திருந்தன என்பதைப் பாலா என்னுமிடத்திலுள்ள கணேச விக்கிரகத்திலிருந்து அறிந்துகொள்ளலாம். அதன் முன்புறம் இந்திய முறையையும் பின்புறம் இந்தோனீசிய முறையையும் காட்டும். இந்தோனீசிய மக்கள் அரக்கர்களையும் அசுரர்களையும் சித்திரிப்பதில் மிகுந்த விருப்பமுடையவர்கள். அதுபோல் விஷ்ணுவின் வாகனமாகிய கருடனைச் சித்திரிப்பதிலும் மிகுந்த கருத்துடையவர்களாகக் காணப்படுகிறார்கள். இந்தோனீசியாவில் சைவமும் பௌத்தமுமே முதன்மையான சமயங்களாக இருந்தபடியால், அவர்கள் தங்கள் மன்னர்களை விஷ்ணுவைப்போலக் காட்டாமல் சிவன் போலவும் புத்தர் போலவுமே காட்டுகிறார்கள்.

இந்தியாவில் முஸ்லிம் மன்னர்கள் இந்துக் கோயில்களை இடித்துவிட்டு, அவையிருந்த இடங்களில் தங்கள் மசூதிகளையும் மாளிகைகளையும் எழுப்பினார்கள். ஆனால் இந்தோனீசியாவைக் கைப்பற்றிய முஸ்லிம் மன்னர்கள் அங்கே தங்கள் மதத்தை நிலை நிறுத்தியபோதிலும், அங்குள்ள மதங்களையும் கோயில்களையும் அழிக்காதிருந்தார்கள். அவர்கள் இந்தியாவில் ஒரு பெரிய கலை முறையை நிறுவியதுபோல் இந்தோனீசியாவில் நிறுவவில்லை. அதனால் இப்போது அங்குள்ள தொழிலாளிகள் தங்கள் கலைத்திறனைச் சிறு கலைகளிலேயே காட்டக் கூடியவர்களாயிருக்கிறார்கள்.

முஸ்லிம்கள் கட்டிய பழைய மசூதி ஒன்று கடுவா என்னுமிடத்தில் இருக்கிறது. அது சிலைகள் இல்லாத இந்துக் கோயில் போலவே காணப்படுகிறது. ஆகவே இஸ்லாம் ஜாவாக் கலையைப் பயன்படுத்திக் கொண்டதேயன்றித் தானாக வேறு கலையை உண்டாக்கவில்லை.

ஜாவா, பாலி இவற்றின் பண்டைய பண்பாடு இக் காலத்தில் காணப்படுவது வயாங் (Wayang) என்னும் நாடகச் சாலையிலும், கேயின் (Kain) என்னும் துணிகளிலுமேயாம். இசையும் நடனமும் மிகச் சிறந்த முறையில் உள்ளன. வயாங் கோலக் (Wayang Golek) என்பது பொம்மலாட்டம். முகமூடியணிந்த நாடகத்தை வயாங் தோப்பெங் (Wayang Topeng) என்றும், சாதாரண நாடகத்தை வயாங் வோங் (Wayang Wong) என்றும் கூறுவர். வயாங் என்னும் நாடக வகை மிகச் சிறந்ததாகும். இகாத் (Ikat) என்னும் துணிவகை மிகுந்த கலைப்பண்புடையது. இதுவும் இந்தியக் கலைத்தொடர்புடையதாகும்.

ஜாவா மக்கள் வரைந்த ஓவியங்கள் கிடைக்கவில்லை. ஏட்டுச் சுவடிகளில் வரைந்துள்ள விளக்கப் படங்கள் மட்டுமே காணப்படுகின்றன. ஆனால், நடு ஜாவாவினர் செய்துள்ள ஒரு செப்பு அரிச்சித்திரம் (Etching) கிடைத்துள்ளது. அதில் ஒரு பெண் குழந்தையுடன் காணப்படுகிறாள். இது அஜந்தா சித்திரத்தை நினைவூட்டுவதாக உள்ளது. பாலி என்னும் தீவில் சுவர் ஓவியங்களும் ஏட்டு விளக்கப் படங்களும் கிடைக்கின்றன. அவற்றுள் சில இதிகாசப் பொருளும், சில அகப்பொருளும் காட்டுவன.