பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அடிப்படை உரிமைகள்

46

அடிமைநிலை

அடி நிலை

காணப்படும் பகுதி. இது தூணைத் தாங்கி நிற்கிறது. தூணின் கனம் பரவி இருக்கும் பரப்பை இது அதிகமாக்கி அதை நிலைப்படுத்த உதவுகிறது. பழங்கால இந்தியக் கட்டடச் சிற்பத்தில் கல்லினால் ஆன அடிநிலையில் அழகிய வேலைப்பாடமைந்த சித்திரங்கள் செதுக்கப்பட்டன. அடிநிலையை இரும்பு போன்ற உலோகத்தினால் அமைப்பதும் உண்டு.

அடிப்படை உரிமைகள் (Fundamental rights) : இராச்சியங்களால் குறைக்கவோ மறுக்கவோ முடியாத அடிப்படையான சில உரிமைகள் குடிகளுக்குண்டு என்பதும் இவை எப்போதும் எம்மனிதனுக்கும் வழங்கப்படல் வேண்டும் என்பதும் நீண்டகாலமாக உலகில் வழங்கிவரும் கருத்துக்களாம். ஆயினும் இவை அண்மையில்தான் சில நாட்டு அரசியல் அமைப்புக்களில் தெளிவாகவும், தனியாகவும் குறிக்கப்பட்டுள்ளன. அதற்கு முன்பு எழுதித் தொகுக்கப்படாமல் கருத்தளவிலும் சில அரசாங்கங்களின் பழக்கத்திலும், சில மொழி இலக்கியங்களிலும் மட்டும் காணப்பட்டன. இவ்வாறு அடிப்படை உரிமைகளைச் சேர்த்துக் கூறியுள்ள அமைப்புக்களுள் இந்திய அரசியல் அமைப்பு முக்கியமானது. இம்மரபு அமெரிக்க அரசியல் அமைப்புச் சட்டத்திலிருந்து மேற்கொள்ளப்பட்டதாகும். 1950-ல் ஐக்கிய நாட்டு அரசியல் ஆதரவில் உலகப் பொதுவான மனித உரிமைகளைத் தொகுத்து வெளியிடப்பட்டமை இம்முயற்சியில் தற்கால மக்களுக்குள்ள ஊக்கத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.

பொதுவாக மக்களுக்கு அடிப்படையாக அமைந்துள்ள உரிமைகள் யாவை என்பது பற்றி அவர்கள் மனத்தில் எழும் குழப்பத்தாலும், அவை சரியானமுறையில் பாதுகாக்கப் படமாட்டா என்னும் அச்சத்தாலும் ஆட்சியாளருக்கு அனுகூலமாகவே நாட்டுச் சட்டங்கள் இயங்குவதாலும் அரசியல் புரட்சிகள் தோன்றுகின்றன. இவ்வாறு பலாத்காரமான மாறுதல்கள் அரசியல் நிலையில் ஏற்படாமல் இருப்பதற்காகச் சட்டங்களைப் பலரும் நன்கு அறியுமாறு தொகுத்து எழுதி வைத்துக்கொள்வது ஒரு பழைய மரபு. பண்டைய ரோமானியர்கள் பன்னிரு தொகுப்புச் சட்டங்கள் (Twelve Tables) செய்து வைத்துக் கொண்டது சட்ட அடிப்படையில் ஆட்சி நடைபெற வேண்டும் என்னும் கருத்தோடுதான். ரோமானிய சாம்ராச்சியம், அழிந்தபின் 'தோன்றிய குழப்பங்கள் மறைந்தவுடன் ஐரோப்பாவில் பல ஜெர்மானிய இராச்சியங்களில் கிறிஸ்தவக் குருக்களின் தூண்டுதலால் நாட்டுச் சட்டங்களை எழுதிவைப்பது முக்கியமான, அடிப்படையான வழக்கமாயிற்று.

இந்து தருமம் போன்ற பண்டைய மரபுகளில் அடிப்படை உரிமைகள் இடம் பெற்றுள்ளன. அம்மரபுகள் யாவராலும் மாற்றப்படக்கூடாதவை என்பதே அவற்றிற் காணும் அடிப்படை உரிமைகளுக்கு அடிப்படையான வலுவூட்டும் கருத்து. இவ்வாறு அன்றாட அரசாங்கம், சட்டசபை, ஆட்சிக்குழு முதலிய எவ்வகையினராலும் மாற்ற இயலாத, என்றும் நிலைக்கும் சில கோட்பாடுகளை நிருணயித்து வைப்பது அரசியல் துறையில் மிகப் பயன் தரும் ஒரு நீதி.

முற்காலத்தில் குடும்பம், சமயம், அரசியல், தேசியம் முதலிய பற்றுக்கள் மக்களுக்கு இருந்துவந்தன; ஆயினும் தொழிற் புரட்சியால் விளைந்துள்ள பலன்களைக் கண்டபின் மனிதர்களுக்குப் பொருளாதாரப் பிரச்சினைகளில் ஈடுபாடு மிகுந்து விட்டது; தற்காலத்தில் எந்தப் பிரச்சினையையும் பொருளாதார அடிப்படையில் ஆராய்வது மரபாகிவிட்டதால் அடிப்படை உரிமைகளையும் அம் முறையிலேயே வகுக்கத் தொடங்கியுள்ளனர்.

அடிப்படை உரிமைகள் என்னும் கோட்பாடு பெரும்பாலும் இங்கிலாந்தில் தோன்றிய ஒரு கோட்பாடாம். தனிமனிதனின் உயிர், உடல், பொருள் இவற்றைப் பாதுகாத்தல் என்னும் கொள்கையிலிருந்து சமூக நலன்கள் யாவற்றையும் காத்துத் தனிமனிதன் ஆயுள் முழுவதும் அவன் தேவைகளை அடையச் செய்வது அரசாங்கத்தின் கடமை என்றும், அப்பாதுகாப்பைப் பெறும் அடிப்படை உரிமை குடிகளுக்கு உண்டு என்றும் கருதும் நிலைக்கு இப்பொழுது வந்துள்ளோம். குடிகள் யாவரையும் ஏற்றத்தாழ்வின்றி ஒரேமுறையில் கருதும்சட்டங்கள் நாட்டில் நிலவவேண்டும் என்பதோடு மக்கள் எல்லோருக்கும் பொருளாதாரத் துறையில் சம வசதிகளையும் வாய்ப்புக்களையும் பெற உரிமை உண்டு என்ற கொள்கையும் இன்று உலகமெங்கும் பரவியுள்ளது. ரா. பா.

அடிபிக அமிலம் (Adipic Acid): [HOOC-CH2-CH2-CH2-CH2 - COOH] இது பீட் கிழங்கில் உள்ளது. கொழுப்புக்களையும், ஆமணக்கெண்ணெயையும் ஆக்சிகரணித்து இதைப் பெறலாம். தொழில்களில் இது முக்கியமாகப் பயன்படுகிறது. சமையல் பொடிகளிலும், தாதுநீர்களிலும் இது டார்டாரிக அமிலத்திற்குப் பதிலாகப் பயன்படுகிறது. நைலான் என்ற தொகுப்புப் பட்டு இழையின் தயாரிப்பில் இது பயன்படுகிறது. ஹெக்சா- மெதிலீன்-டையமீன் (NH2— [CH2) – NH2] என்ற பொருளுடன் இது வினைப்பட்டு மூலக்கூறு நிறை உயர்ந்த பாலிஅமைடு ஒன்றை அளிக்கிறது. இளகிய நிலையில் இக்கூட்டை மெல்லிய இழைகளாக இழுக்கலாம். இந்த இழைகளை மேலும் இழுத்து நான்கு மடங்கு நீளமுள்ளதாகவும் செய்யலாம். இவ்வாறு செய்வதால் இப்பொருளின் தன்மை மாறி இழுவலிமிக்க பளபளப்பான இழைகளைப் பெறலாம். இவ்விழை நைலான் (த. க.) என்ற பெயருடன் வழங்குகிறது. எஸ். எஸ். க.

அடிமைநிலை: அடிமைகள் என்று சிலரை மற்றுஞ் சிலர் தமக்கு உடைமைப் பொருளாக வைத்து ஆளுகின்ற நிலைக்கு அடிமைநிலை என்பது பெயர்.

போரில் கைதியாகப் பிடிபட்டவர்களைக் கொன்று விடுவதே மிகப் பழைய முறை ; பிற்காலத்தில் அவர்களை வேலைக்கு வைத்துக் கொள்ளலாம் என்று கண்டவர்கள் போர்க் கைதிகளை அடிமைகளாகக் கொண்டனர். இந்தியாவிலும் அடிமைநிலை ஆதிகாலத்திலிருந்து வந்துள்ளதாகத் தெரிகிறது. ரிக் வேதத்தில் அடிமைகள் ஒரு வகை உடைமை என்று கூறப்படுகின்றனர். சூதாட்டத்தில் தோற்றவர்கள் வென்றவர்களுக்கு அடிமைகளாகும் மரபு இருந்தது. கடனுக்காக அடிமையானவர்கள் உண்டு. சிலர் தம் நெருங்கிய உறவினர்களை விற்றுக் கடனைத் தீர்த்தனர். அடிமைகளில் இருவகை உண்டு. பண்ணையில் வேலை செய்யும் அடிமைகள் ஒருவகை, விலை கொடுத்து வாங்கிச் சொந்த வேலைக்கு வைத்துக் கொள்ளப்பட்டவர்கள் ஒருவகை.