பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/92

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணு

57

அணுக்கொள்கை

சான்றுதேட முற்படவில்லை. இதுவே அவற்றின் வளர்ச்சிக்குப் பெருந்தடையாக இருந்தது.

ஆனால் 1840-ல் ஜான் டால்ட்டன் என்ற ஆங்கிலப் பள்ளி ஆசிரியர் விஞ்ஞான முறையில் அணுக் கொள்கை யொன்றை வெளியிட்டார். இதன் பின்னரே அணு அமைப்புப் பற்றிய அறிவு வளர்ந்தது. இவரது கொள்கையின்படி எல்லாப் பொருள்களும் அணுக்களால் ஆனவை. ஒரு பொருளின் அணுக்கள் அனைத்தும் ஒரே வகையின. இவை பிரிக்க முடியாத துகள்கள். வெவ்வேறு பொருள்களின் அணுக்கள் அளவிலும், நிறையிலும் வேறுபடும். இரு தனிமங்கள் ஒன்றுகூடும்போது அவ்விரண்டின் அணுக்கள் ஒன்று கூடி ஒரு கூட்டணுவாகின்றன. உதாரணமாக, ஒரு ஹைடிரஜன் அணுவும், ஒரு குளோரின் அணுவும் கூடி ஹைடிரஜன் குளோரைடு என்ற பொருளின் கூட்டணுவை அளிக்கின்றன. இக்காரணத்தால்தான் கூட்டுக்களில் உள்ள தனிமங்களின் விகிதம் மாறாதிருக்கிறது. இரு தனிமங்கள் ஒன்றுக்கு மேற்பட்ட விகிதங்களில் கூடும்போது கூடும் பொருள்களின் அளவு எளிய முழு எண் விகிதங்களில் இருப்பது இதனால்தான். இவ்வகையில் டால்ட்டன் தமது அணுக்கொள்கையின் உதவி கொண்டு ரசாயனச் சேர்க்கை விதிகளை விளக்கினார். பார்க்க: ரசாயனக் கூடுகை விதிகள்.

கூட்டுப் பொருள்களைப் பகுத்தும் அவற்றில் தனிம அணுக்கள் எவ்விகிதத்தில் கூடியுள்ளன என அறிந்தும் ஒரு தனிமத்தின் அணுவைப்போல் வேறொன்று எத்தனை மடங்கு கனமானது என டால்ட்டன் கணக்கிட்டார். எல்லா அணுக்களிலும் இலேசான ஹைடிரஜனைத் திட்டமாகக் கொண்டு மற்றத் தனிமங்களின் அணுக்கள் இதைப்போல் எவ்வளவு கனமானவை என அவர் அளவிட்டார். இந்த அளவு தனிமத்தின் அணு நிறை எனப்படும். (த.க.) ஆகையால் டால்ட்டனின் அணுக்கொள்கையினால் அணுநிறை என்ற முக்கியமான கருத்துப் பிறந்தது. இது ஒவ்வொரு தனிமத்திற்கும் முக்கியமானதொரு சிறப்பியல்பு என்று புலனாகியது. தற்காலத்தில் அணுநிறைகள் ஆக்சிஜனின் அணுநிறை 16 எனக் கொள்ளப்பட்டு அளவிடப்படுகின்றன. அணு நிறைகளை அளக்கப் பலமுறைகள் வழக்கத்தில் உள்ளன.

பலவேறு வகையான ரசாயன விளைவுகளை விளக்கும் திறன் பெற்றிருந்த டால்ட்டனின் அணுக்கொள்கை ரசாயனத்தில் விரைவில் இடம்பெற்றது. தற்காலத்தில் டால்ட்டனின் கருத்துக்களில் இரு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன, அணுக்கள் பிரிக்கமுடியாத துகள்கள் என டால்ட்டன் கருதினார். ஆனால் தற்காலப் பௌதிகம் அணுவை மின்னேற்றமுள்ள துகள்களாகப் பிரித்துக் காட்டியுள்ளது. (பார்க்க: அணுவடிவங்கள்) அணுவானது இன்னும் சிறு துகள்களாலானது என்பது ரசாயனத்தில் அணுக்கொள்கை பயனாவதைப் பாதிப்பதில்லை. ஒரு தனிமத்தின் எல்லா அணுக்களும் ஒரே நிறையுள்ளவை என டால்ட்டன் கருதினார். ஆனால் வெவ்வேறு நிறைகளுள்ள அணுக்கள் ஒரு தனிமத்தில் இருக்கக்கூடும் என்பது தற்போது தெளிவாகியுள்ளது (பார்க்க: ஐசோடோப்புகள்). ஆனால் ரசாயன வினையில் எண்ணிறந்த அணுக்கள் பங்கு கொள்வதால் தனி அணுக்களின் நிறைகளைவிட அவற்றின் சராசரி நிறைகளே முக்கியமானவை.

டால்ட்டன் கொள்கைக்குப் பின் அணுநிறை அளவீடுகள் மிகத்திருத்தமாகச் செய்யப்பட்டன. அதுவரை கண்டுபிடிக்கப்பட்ட தனிமங்களை அவற்றின் அணு நிறையை யொட்டி வரிசைப்படுத்தினால் ஒரு தனிமமும் அதற்கு எட்டாவதாக உள்ள தனிமமும் ஒத்த பண்புகள் கொண்டிருப்பதை 1869ஆம் ஆண்டில் மெண்டலீபு என்ற அறிஞர் காட்டினார். இதிலிருந்து அவர் வகுத்த நியதி ஆவர்த்த விதி எனப்படும். இந்த விதி சில புதுத் தனிமங்களைக் கண்டுபிடிக்க வழிகாட்டி ரசாயன முன்னேற்றத்திற்கு உதவியது. தனிமங்களின் பண்புகள் சீரான வகையில் மாறுவதிலிருந்து அவற்றின் அணுக்களிடையே அடிப்படையான தொடர்புகள் இருக்கக்கூடும் என்ற கருத்தும் தோன்றியது. இது அணு அமைப்பைப் பற்றிய கொள்கைகள் தோன்ற உதவியது. பார்க்க: ஆவர்த்த விதி.

அணுக்கொள்கை (Atomism) என்பது இந்தியச் சிந்தனையாளர்களும், கிரேக்கச் சிந்தனையாளர்களும் வகுத்த ஒரு தத்துவக் கொள்கையாகும். கிரேக்கத் தத்துவ சாஸ்திரத்தில் அணுக்கொள்கை என்னும்போது நினைவுக்கு வரும் பெயர்கள் லூசிப்பஸ் (Leucippus) என்பதும் டிமாக்ரெட்டஸ் என்பதுமாகும். லூசிப்பஸைப் பற்றிப் பண்டைக் கிரேக்கத் தத்துவ ஆசிரியர்களுக்குக்கூட அதிகமாகத் தெரிந்ததாயில்லை, அவரைப்பற்றி நாம் அறிவதெல்லாம் அவருடைய மாணவராகிய டிமாக்ரெட்டஸ் மூலமாகத்தான். இவ்விருவரும் சாக்கிரட்டீஸ் காலத்துக்கு முந்தியவர்கள். டிமாக்ரெட்டஸின் நூல்கள் தர்க்க முறையில் பொருத்தமான வாதங்களுடையவை. அவரே இக்காலத்து இயற்கை விஞ்ஞானத்தின் முன்னோடியாவார். காரியத்தின் நிகழ்ச்சிக்கு இன்றியமையாது நிகழவேண்டிய காரணத்தைக்கூறி விளக்கும் விஞ்ஞான முறையை முதன் முதலாக வகுத்தவர்கள் ஆதிக் கிரேக்க அணுக் கொள்கையினரே என்று பெர்ட்ரண்ட் ரஸெல் கூறுகிறார். இவ்வாறு ஆதி அணுக்கொள்கையானது தத்துவ சாஸ்திர விளக்கம் செய்வதற்கு நியதிக் கொள்கை (Determinism) யையே பயன்படுத்தியது. கிரேக்க அணுக்கொள்கையை நிறுவினவரான லூசிப்பஸ், பார்மனைடீஸ் (Parmenides) என்பவரைப் பிரதிநிதியாகக் கொண்ட எலியாட்டிக் (Eleatic) தத்துவக் கொள்கையினருடைய கருத்தை மறுக்கும் முகத்தானே அணுக் கொள்கையை மேற்கொண்டார்.

இயக்கம் என்பதும் மாறுதல் என்பதும் புலன்களுடைய திரிபுக் காட்சியே என்றும் உண்மையாகவே உள்பொருளாக இருப்பது மாறுதல் அறியாத கந்தழி (Changeless Absolute) யேதான் என்றும் பார்மனைடீஸ் கூறினார். இது வெறுங் கருத்தேதான். இதை நம்முடைய நுகர்ச்சி முற்றிலும் மறுக்கின்றது. அணுக்களேதான் உள்பொருள் என்று லூசிப்பஸும் டிமாக்ரெட்டஸும் கருதுகிறார்கள்; இந்த அணுக்கள் பிரிக்க முடியாத அளவு நுண்ணியவை. புலன்களுக்கு எட்டாத அளவு சூக்குமமானவை. உருவத்திலும் பரிமாணத்திலும் வேறுபடினும், அவை அனைத்தும் ஒரே பொருளாலேயே ஆனவை. பொருள்கள் உண்டாவதும் அழிவதும் முறையே இவ்வணுக்கள் சேர்வதாலும் பிரிவதாலுமே. ஆனால் அணுக்களோ நித்தியமானவை; அழியாதவை. அணுக்கள் சேர்ந்து பொருள்கள் உண்டாவதற்கும், அணுக்கள் பிரிந்து பொருள்கள் அழிவதற்கும் இயக்கம், இடம் என்னும் இரண்டு இருப்பதாக அணுக்கொள்கையினர் ஏற்றுக்கொள்ள வேண்டியவர்களாகிறார்கள். எலியாட்டிக் கொள்கையினர் இயக்கம், இடம் என்பவை இருப்பதாகக் கூறுவதில்லை.

அணுக்கொள்கைக்குப் பல பெரிய மறுப்புக்கள்

உள்ளன. அணுக்கள் சேர்வதற்கு இயக்கம் இன்றியமையாதது என்றால் இயக்கம் உண்டாவதன் காரணம்

8