பக்கம்:கலைக்களஞ்சியம் 1.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணுக்கொள்கை

58

அணுக்கொள்கை

யாது? ஆதியிலிருந்து அணுக்கொள்கையினர் இந்த வினாவுக்கு விடை கூறவில்லை. அணுக்கன் அழியாத முதற் பொருள்கள் என்று வைத்துக் கொண்டார்கள். இயக்கம் உண்டாவதன் காரணம் யாது என்பதைப் பற்றிச் சிந்திக்கவே இல்லை. பிரபஞ்சத்தில் முதற் காரணம் இயக்கம் என்று கூறுவதற்கும் பிரபஞ்சத்தை உண்டாக்கியவர் கடவுள் என்று கூறுவதற்கும் வேறுபாடில்லை. கடவுள் உண்டென்று கூறுவாரும் கடவுள் உண்டானதன் காரணத்தைக் கூறுவதில்லை.

ரஸெல் கூறியபடி ஐரோப்பாவில் ஆதியில் எழுந்த கொள்கைகளுள் அணுக்கொள்கையே இக்கால விஞ்ஞானத்துக்கு ஒத்ததாக இருக்கிறது. நியூட்டன் வகுத்த வரம்பிலா இடம் என்னும் கொள்கையானது அணுக்கொள்கையின் தர்க்கமுறை விருத்தியே யாகும். இக்காலத்து விஞ்ஞானிகள் ஐன்ஸ்ட்டைன் கொள்கையை ஆதாரமாக வைத்து நியூட்டன் வகுத்த இடக் கொள்கையை மறுத்தபோதிலும், அணுக்கொள்கையினர் பிரபஞ்சம் பற்றிக் கூறுவது தர்க்கமுறையில் சரியாகவே தோன்றுவதுடன் இதுவே மற்றத் தத்துவ இயலார் கூறும் கருத்தைக் காட்டிலும் அதிகமாக நம் நுகர்ச்சி அறிவுக்கு ஒத்ததாயுமிருக்கிறது.

பிளேட்டோவும் அரிஸ்டாட்டிலும் தோன்றிய பின்னர் அணுக்கொள்கையானது செல்வாக்கு இழக்கலாயிற்று. புலன்களின் வாயிலாக அறியும் பிரபஞ்சத்தை விலக்கிவிட்டுக் கருத்துக்களாலாய பிரபஞ்சம் ஒன்றையே பிளேட்டோ உள்பொருளாகக் கொண்டார். பிரபஞ்சம் ஒரு குறிக்கோளை நோக்கியே நடைபெற்று வருகிறது என்பதை விஞ்ஞானத்தின் அடிநிலைக் கருத்தாக அரிஸ்டாட்டில் கொண்டார்.

எபிக்யூரஸ் என்பவர் அணுக்கொள்கைக்குப் புத்துயிர் அளித்தார். அவர் ஸ்டோயிக் கொள்கையை மறுத்து அணுக்கொள்கையைத் தமது தத்துவத்தின் அடிநிலையாக ஆக்கினார். நாம் நுகர்ச்சி வாயிலாக அறியும் பிரபஞ்சத்தைத் தவிர வேறு எதுவும் கிடையாது என்றும், அறம் எனப்படுவது இன்பம் தேடும்பொழுது இன்னல் விளையாமல் கருத்தாயிருப்பதே என்றும் கூறினார். எபிக்யூரஸ் சடக்கொள்கையினரே (Materialist) அன்றி அணுக்கொள்கையினரல்லர். பிரபஞ்சம் அணுக்களால் ஆகியது என்பதை மட்டும் ஏற்றுக் கொண்டாரேயன்றி அணுக்கள் இயற்கை விதிகளுக்கு அடங்கியவை என்று டிமாக்ரெட்டஸ் கூறியதை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆன்மாவும் சடப் பொருளே; ஆன்ம அணுக்கள் உடல்முழுவதும் பரவியுள்ளன. புறப்பொருளானது ஆன்ம அணுக்களைத் தொடும்போது உண்டாகும் சூக்கும உருவங்களே புலனுணர்ச்சிக்குக் காரணம் ; மரண காலத்தில் ஆன்மஅணுக்கள்சிதறுண்டு போகின்றன என்று எபிக்யூரஸ் கூறினார்.

இவருடைய தத்துவ சாஸ்திரத்தை இக்காலத்து மக்கள் தெரிந்து கொள்ள நேர்ந்தது லூக்ரீஷெஸ் என்பவர் பாடியுள்ள காவியத்தின் வாயிலாகவே. ஐரோப்பிய வரலாற்றில் மத்திய காலம் என்று வழங்கப்பெறும் காலப்பகுதியில் இந்த அணுக்கொள்கையின் வகையான சடக்கொள்கை கிறிஸ்தவ சமயத்தின் செல்வாக்கால் மறைந்து போயிற்று. ஆனால் விஞ்ஞானம் பிறந்ததும் அறிஞர்கள் ரசாயன நிகழ்ச்சிகளை விளக்குவதற்கு அணுக்கொள்கையைப் பயன்படுத்தத் தொடங்கினர். இவ்வாறு அணுக்கொள்கையானது தத்துவத்திலிருந்து விஞ்ஞானத்துக்குச் சென்றதும், அது வியக்கத்தக்க விருத்தி அடைவதாயிற்று- இப்பொழுது அதன் பயனாக, அணு என்பது எலெக்ட்ரான்கள், புரோட்டான்கள் போன்ற மின்துகள்களால் ஆனது என்று அறிய முடிகிறது. இவ்வாறு அணுவின் அமைப்பைப் பற்றிக் கூறுவதும் அதை வைத்துப் பலவாறு பயன்படும் செயல்கள் ஆற்றுவதும் விஞ்ஞானத்தின் பாற்படும் ; தத்துவத்தின் பாற்படா.

இந்தியத் தத்துவமும் அணுக் கொள்கையும் :

இந்தியத் தரிசனங்களுள் ஜைனமும் வைசேஷிகமும் அணுக்கொள்கையை விரிவாக விருத்தி செய்துள்ளன. ஜைன தத்துவ இயலின்படி புத்கலம் என்னும் சடப்பொருள் உண்டாக்கப்படாததும், அழியாததும், என்றும் உள்ளதுமான பொருளாகும். இந்தப் புத்கலம் அணுக்களாலோ அல்லது பரமாணுக்களாலோ ஆனது; ஒவ்வொரு பரமாணுவும் தங்கும் இடம் ஆகாச பரமாணு என்று கூறப்படும். புத்கலப் பரமாணு புலன்களுக்கு எட்டாதது. புத்கலப் பரமாணுக்கள் சேர்ந்து கந்தம் ஆகின்றது. கந்தம் சூக்குமமாகவு மிருக்கலாம், தூலமாகவும் இருக்கலாம். நிலம், நீர், நெருப்பு, காற்று என்னும் நான்கு பூதங்களுக்கும் தனித்தனி அணுக்கள் கிடையா. அவை நான்கும் கந்த வேறுபாட்டாலேயே வேறுபட்டனவாக உள்ளன. ஜைனர்களுடைய ஆன்மக் கொள்கையும் அணுக்கொள்கையுடன் தொடர்புடையதே. கரும உடல் என்பது கரும புத்கலம் என்னும் சூக்கும அணுக்களால் ஆயது. ஆன்மா உளத் தூய்மையை இழக்கும்போது கரும அணுக்கள் அசேதனமாயினும் சேதனமாகிய ஆன்மாவுடன் தொடர்பு கொள்கின்றன. தூய்மை குன்றிய உள்ள நிலைமைகளே பாவ கருமம் ஆகின்றன. பாவ கருமமே கருமசரீரத்தை உண்டாக்குகின்றது. திரவிய கருமம் சூக்கும அணுக்களால் ஆயது. ஜைனர்கள் புத்கலப் பரமாணுக்களாலாய புத்கலச் சடப்பொரு ளுண்மையை ஒப்புக்கொள்வதுடன் ஆகாச -பரமாணுவாலாய இடம், காலப் பரமாணுவாலாய காலம் ஆகிய இரண்டின் உண்மையையும் ஒப்புக்கொள்கிறார்கள். இந்த மூன்றின் உண்மையை ஒப்புக்கொள்வதோடு தருமம், அதருமம் என்னும் இரண்டின் உண்மையை ஒப்புக்கொள்கிறார்கள். தருமம் என்பதும் அறநூற் பொருள்கள் அல்ல. அவை முறையே அணுக்களாலாய பிரபஞ்சம் முழுவதும் பரவி நிற்கும் இயக்கத்தையும், ஓய்வையும் குறிக்கும் தத்துவங்களாகும். இவை எல்லாம் அசேதனத் திரவியங்கள், ஆன்மாவே சேதனத் திரவியம். ஆன்மா என்னும் ஜீவன் உருப்பெறும்போது சூக்குமமான கரும உடலையும், பெற்றோர் வாயிலாக வந்து உணவால் வளர்க்கப் பெறும் தூல உடலையும் பெறுகின்றது. சேதனம் அசேதனமாகிய இந்த ஆறு உள்பொருள்களாலேயே பிரபஞ்சம் ஆக்கப்பட்டுள்ளது. அவை ஆறும் மாறுதல் அடையக் கூடியனவாக இருப்பினும் ஆக்கப்படாதவையும் அழியாதவையுவுமாகும்.

வைசேஷிக தரிசனமும் அணுக்கொள்கையைக் கூறுகின்றது. பருப்பொருளாகத் தோன்றும் பௌதிக உலகம் எப்படி உண்டாயது என்பதை விளக்குவதற்காக அணுக்கொள்கையை அது பயன்படுத்துகிறது. பொருள்கள் எல்லாம் மாறுதல் அடையக் கூடியன. மாறாததும் அழியாததுமான பொருளாகிய காரணத்தின் விளைவுகளே அவை. இந்த நிலையாத பொருள்களை உண்டாக்குவன அணுக்கள் அவை கண்ணுக்குப் புலனாகாதவை. பல பொருள்களால் ஆயதே உண்டாக்கப்பெற்ற பொருள் என்பதாகும். அப்பொருள்கள் அணுக்களின் தொகுதியாகும். அணுக்கள் பல் பொருள்களால் ஆனவை யல்ல. நிலம், நீர், நெருப்பு, காற்று ஆகியவை வேறு வேறு விதமான அணுக்களால் ஆயவை. படைப்பின் தொடக்கத்தில் அதிருஷ்டமே அணுக்களை இயக்கத் தொடங்குமாறு செய்தது. -உள் உறுப்பும்