பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருள் காமிரா

95

இரேணுகை

கடித்துச் சிறிது தூரம் சென்று, பின் சிறிது தூரம் காற்றில் இறக்கையைப் பரப்பி மிதந்து, பிறகு மறுபடியும் படபடவெனச் சிறகடித்துச் செல்லும். இவை மரங்களில் பெரும்பொந்துகளில் முட்டையிடும். பேடை அடைகாத்துக் குஞ்சு பொரிக்கும் வகையும் வியப்பானதே. பொந்துள் அடைகாக்கும் பேடை தன் மலத்தை அலகினால் கொல்லறு கொண்டு பரப்புவது போல் பரப்பிப் பொந்தின் வாயை அடைத்துவிடும். இந்த அடைப்பின் நடுவில் பேடையின் அலகைக் கொள்ளும் ஒரு தொளை மட்டும் விட்டிருக்கும். ஆண் இரைதேடிக் கொண்டுவந்து, இந்தத் தொளைவழியாகப் பேடைக்கு இரை ஊட்டும். குஞ்சு பொரிக்குமட்டும் ஆண் கொண்டுதரும் உணவைப் புசித்துப் பேடை தன் சிறையுள் அடைபட்டிருக்கும். பிறகு அடைப்பை உடைத்து வெளிவரும். பெண் அடைகாக்கும் சமயத்தில் ஆண் இறக்கவே, வேறோர் ஆண் வந்து அதற்குத் தீனி கொடுத்ததையும் கண்டிருக்கிறார்கள்.

சாதாரணமாகக் காடுகளில் குடியிருக்கும் இருவாய்க் குருவி (Common Grey Hornbill) சாம்பல் நிறமாக ஒரு பருந்தின் அளவிருக்கும். மலையாள நாட்டடிலும் அங்குள்ள மலைத்தொடரிலும் இதன் அலகின் மீது மற்றோர் அலகுபோன்ற புடைப்புக் கிடையாது.

மலையாளத்திலும் வேறு இடங்களிலும் இதிலும் மிகப் பெரியதான ஓர் இருவாய்க் குருவி (Great Indian Hornbill) உண்டு. இது படத்தில் காண்பதுபோல், கறுப்பும் வைக்கோல் நிறமுமாகப் பட்டைபட்டையாக இருக்கும். இது பேரலகும் பெரிய வாலும் உட்பட நாலடிநீளமிருக்கும். இது சிறகடித்துப் பறக்கும் ஒலி நெடுந்தூரம் கேட்கும்படி முழங்கும். இருவாய்க் குருவிக்கு மலைமொங்கான் என்றும் பெயர். மா.கி.

இருள் காமிரா (Camera Obscura) என்னும் ஒளியியற் கருவியில் பொருள்களின் பிம்பங்கள் வெண்மையான பரப்பின்மேலோ, கருமையான பரப்பின்மேலோ தோன்றும். அப்போது அவற்றை எளிதில் வரைய முடிகிறது. படத்தில் காட்டப்பட்டுள்ள. இருள் காமிரா ஒளியைப் புகவிடாத ஒரு பெட்டி.

இருள் காமிரா

அதன் ஒரு பக்கத்தில் ஒரு குவி லென்ஸ் உள்ளது. அதன் வழியே உள்ளே வரும் ஒளிக்கதிர்கள் பெட்டியின் பக்கங்களுக்கு 45° சாய்வாக உள்ள ஓர் ஆடியினால் பிரதிபலிக்கப்பட்டுத்தேய்த்த கண்ணாடியினாலான திரையின்மேல் பிம்பத்தைத் தோற்றுவிக்கும். இதன்மேல் மெல்லிய தாளை வைத்துப் பொருளின் படத்தை வரையலாம். இவ்வமைப்பைப் பாட்டிஸ்டா டெல்லா போர்ட்டா என்ற இத்தாலியர் 1569-ல் முதலில் அமைத்தார் எனக் கூறுவர். ஆனால் இதற்கு நெடுங்காலத்திற்கு முன்னரே இதன் தத்துவம் அறியப்பட்டிருந்தது.

இருளர் கோயம்புத்தூர், நீலகிரி, செங்கற்பட்டு, வடஆர்க்காடு மாவட்டங்களில் காணப்படும் ஒருவகைப் பழங்குடிகள். இவர்கள் மிகுதியாக இருப்பது கோயம்புத்தூர் மாவட்டத்திலுள்ள ஐயாயிரம் அடி உயரத்திலுள்ள அட்டப்பாடி மலையிலாகும். அங்கு இவர்கள் தொகை சுமார் பதினையாயிரம். இவர்கள் ஏறக்குறைய 150 குடியிருப்புக்களில் மூங்கில் தட்டிகளையும் புல்லையும்கொண்டு குடிசைகள் கட்டி வாழ்ந்து வருகிறார்கள். இவர்கள் நாடோடிகளாக இருப்பதால் பெரிய வீடுகள் கட்ட விரும்புவதில்லை. இவர்களுள் மிகச்சில பிரிவுகளே

இருளர்

உதவி : சென்னைப் பொருட்காட்சிச்சாலை, சென்னை

காணப்படுகின்றன. இவர்களுடைய தலையான தொழில் வேளாண்மை. இவர்கள் ஏரின்றி மண்வெட்டியைக்கொண்டு நிலத்தை வெட்டியே பயிர் செய்கிறார்கள். வேளாண்மை நடைபெறாத நாட்களில் காப்பித்தோட்டங்களிலும், தேயிலைத் தோட்டங்களிலும் மரம் வெட்டவும் காடு வெட்டவும் செய்கிறார்கள். இவர்கள் திறமையான வேடர்கள். மலையிலேயே வாழ்கிறார்கள். பிற மக்களுடன் சேர விரும்புவதில்லை. கல்வி என்பது சிறிதும் கிடையாது. இவர்கள் வாழும் 900 ஏக்கர் பூமியும் மலபாரிலுள்ள மண்ணார்க்காடு மூப்பில் என்னும் ஜென்மிக்குச் சொந்தம்.

இரேணுகை : இவள் இரேணு என்னும் அரசன் மகளெனவும், வருமராசன் மகளெனவும் கூறுவர். சமதக்கினி முனிவரின் மனைவி. ஒருமுறை நீர் கொண்டுவரச் சென்றபோது நீரில் ஒரு கந்தருவனுடைய நிழலைக்கண்டு மயங்கியதால், சமதக்கினியால் வெறுக்கப்பட்டு, மகனான பரசுராமனால் தலை வேறு உடல் வேறாகத் துணிக்கப்பட்டாள். பின், பரசுராமன் தந்தையை வேண்டி இவளை உயிருடன் எழுப்பினான். அப்போது இவள் தலை வேற்றுடலிலே பொருத்தப்பட்டதனால் நிலைகெட்ட இவளைச் சமதக்கினி, "கிராமங்களிற் சென்று, தெய்வமாகி, அவர்களுக்குண்டான நோயைப் போக்கி வழிபாடு பெறுக" என ஏவியதாக உரைப்பர்.

இப்போது, மாரியம்மன் கோயிலிலே தலையுருவமாக மட்டும் வைத்து வழிபடுகின்ற தெய்வம் இவளே என்றுங் கூறுவர். இவளைப் பற்றிய வேறொரு கதை : சமதக்கினி இறந்தபோது இவளுந் தீப்புகுந்தாள். இவளுடல் வேகுமுன் இந்திரன் மழை பெய்வித்து, இவள் இறவாமற் காத்தான். எனினும் உடம்பெலாம் கொப்புளம் கண்டது. சிவபிரான் இவளைக் கிராமதேவதையாக இருந்து, மனிதர்களுக்குக் கொப்புளம் உண்டாகும்