பக்கம்:கலைக்களஞ்சியம் 2.pdf/121

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இல்லிரியா

103

இலக்கணம்

இடத்திலும் புதைந்திருக்கும். மீன் வலையை இழுக்கும் போது அதில் சிக்கிக்கொண்டு வருவதுண்டு. இந்தப் பிராணியின் உணர்கொம்புகளில் முதல் இணை மிகவும் நீண்டு மயிரடர்ந்திருக்கும். அந்த இரண்டு உணர் கொம்புகளையும் ஒன்றாகச் சேர்த்து, மணலுக்கு மேலே நீரில் தெரியும்படி வைத்திருக்கும். உணர்கொம்பு மயிர்கள் ஒன்றுக்கொன்று பிணைந்து ஒரு குழாய்போல ஆகும். அதன் வழியாக மூச்சு விடுவதற்கு வேண்டிய நீர் உறிஞ்சப்படும். இம்முறையில் தூசில்லாமல் வடிகட்டிய தெளிந்த நீர் மணலுக்குள் புதைந்து கிடக்கும் பிராணியின் செவுளறைக்குக் கொண்டு போகப்படும். ஆல்யூனியா, இந்தியப் பெருங்கடல், பசிபிக் பெருங்கடல், மேற்கு இந்தியத் தீவுகள், மத்தியதரைக் கடல் முதலியவற்றின் கரைகளில் வாழ்கின்றது.

இல்லிரியா ஏட்ரியாடிக் கடலின் கீழ்க்கரையிலுள்ள நிலப்பகுதி. கி.மு.228-ல் ரோமானிய மாகாணமாக இருந்தது. 1815-ல் ஆஸ்திரியாவைச் சார்ந்து தனி இராச்சியமாயிருந்தது. முதல் உலக யுத்தத்தின் பயனாக அதன் ஒரு பகுதி ஆல்பேனியாவிலும் ஒரு பகுதி யூகோஸ்லாவியாவிலும் சேரலாயின.

இல்லினாய்ஸ் (Illinois) அமெரிக்க அமெரிக்க ஐக்கிய நாட்டிலுள்ள மூன்றாவது பெரிய இராச்சியம். மனிதன் என்று பொருள்படும் இல்லினி என்னும் சிவப்பு இந்தியச் சொல்லிலிருந்து பெயர்பெற்றுள்ளது. டப்பியில் இறைச்சி அடைக்கும் தொழில் இங்குப்போல் உலகில் வேறு எங்கும் நடக்கவில்லை. இந்த இராச்சியம் கால்நடை, பயிர்கள், தாதுக்கள் முதலியவற்றிற்குப் பேர்போனது. இது மிசிசிப்பிப் பள்ளத்தாக்கில் இருக்கிறது. ஆறுகளும் ஓடைகளுமாக 275 உள்ளன. அவற்றில்ஆயிரம் மைல் தூரம் கப்பல் போகக்கூடும். மக்: 87.12,176 (1950). இரும்புக் கைத்தொழில் சிறந்தது. இங்குள்ள சிக்காகோ நகரம் உலகத்திலுள்ள மிகப்பெரிய தானியச் சந்தைகளுள் ஒன்றாகும். இந்நகரத்தில் பல இருப்புப்பாதைகள் கூடுவதுபோல் உலகில் வேறு எங்கும் கூடுவதில்லை. இதுவே முக்கியமான துறைமுகம் மக் : 36,06,436 (1950).

இலக்கணக் கொத்து தொல்காப்பியம், திருக்கோவையார், திருவாசகம் முதலான சிறந்த நூல்களில் அருகிவரும் இலக்கண விதிகளைத் தொகுத்துக் கூறுவது. இது நன்னூல், தொல்காப்பியம் போன்ற நூல்களைப் படித்த பிறகே படிக்கத்தக்க தென்பர் இதன் ஆசிரியர். வடமொழியிலக்கணங்களில் உள்ள சில விதிகளும் இந்நூலில் இருக்கின்றன. இதன் ஆசிரியர் திருவாவடுதுறை ஆதீனத்தைச் சார்ந்த ஈசானமடம் சுவாமிநாத தேசிகர் ஆவர். இந்நூலுக்கு நூலாசிரியரே உரையும் இயற்றியுள்ளனர். இவர் கருத்தையும் விதிகளையும் சிவஞானபோதப் பேருரையாசிரியர் சிவஞான முனிவர் எடுத்தாள்வதால் சிவஞான முனிவருக்கு இவர் முற்பட்டவர் (17ஆம் நூ. பிற்பகுதி) நன்னூல் விருத்தியுரை செய்த சங்கர நமச்சிவாயர் இவருடைய மாணவராவர்.

இலக்கணஞ் சிதம்பரநாத முனிவர் சிவஞான முனிவர் மாணவர். திருப்பாதிரிப்புலியூர்ப் புராணம் பாடியவர். (18ஆம் நூ)

இலக்கணம் (Definition) : மொழிகளைக் கொண்டே நாம் எண்ணவும், எண்ணியவற்றைப் பிறர்க்கு உரைக்கவும் செய்கின்றோம். அந்த மொழிகளின் இலக்கணத்தைத் தெளிவாக்கிக் கொள்ளாவிட்டால் நம்முடைய எண்ணமும் பேச்சும் தெளிவாக இரா. இலக்கணம் என்பது ஒரு பதத்தாற் குறிக்கப்படும் பண்புகளின் விளக்கமாகும். இலக்கணம் பலவகைப்படும். சிலர் 'அனுபானம் அல்லது உடன்பருகுவது' என்பது போன்றதைச் சொல் பற்றிய இலக்கணம் என்றும், பொன் என்பது தகடாக்கவும் கம்பியாக்கவும் கூடிய மஞ்சள் நிறமுடை உலோகம்' என்பது போன்றதைப் பொருள் பற்றிய இலக்கணம் என்றும் கூறுவர். ஆனால் சொல்லுக்குப் பொருள் கூறுவது என்பது அது குறிக்கும் பொருளுக்கு இலக்கணம் கூறுவதேயாதலால் இவ்விரண்டிற்கும் வேறுபாடில்லை.

இமைகொட்டல் என்பதைக் குழந்தைகளுக்கு விளக்க வேண்டினால் இமைகளைக் கொட்டிக் காட்டுகிறோம். பொருள்களை இது மரம், இது மாடு என்று சுட்டிக் காட்டுகிறோம். இவற்றைச் சிலர் சுட்டிக்காட்டும் இலக்கணம் என்பர். காய்கறிகள் என்பது வாழைக் காய், புடலங்காய் போன்றவை என்று கூறுவது போன்றவை உதாரண இலக்கணம். 'யானையானது மூக்கைக் கையாக உபயோகிக்கும் பிராணி' என்று கூறுவது வருணனை இலக்கணம். ஆனால் இந்த மூன்றுவகை இலக்கணங்களிலும் இன்றியமையாத இயல்புகள் எல்லாம் குறிக்கப்படாததால் இவைகளை இலக்கணங்கள் என்று கூறுவது பொருந்தாது.

ஒருபொருள் எவ்விதம் உற்பத்தியாகிறது என்பதைக் கூறி விளக்குவதை உற்பத்தி இலக்கணம் என்பர். ஒரு கோட்டின் ஒரு முனையை அசையாமல் நிறுத்திக்கொண்டு, மற்ற முனையைச் சுற்றினால் வட்டம் என்பது பெறப்படும் என்று கணித நூலார் வட்டத்துக்கு இலக்கணம் கூறுவர். விஞ்ஞானிகள் இந்த விதமாக இலக்கணங் கூறும் முறையையே பெரிதும் கையாள்கிறார்கள்.

ஆயினும் மேனாட்டுத் தருக்க நூலாருடைய சம்பிரதாயப்படி, சாதி சிறப்பியல்புகள் வழியாகவே இலக்கணம் கூறுவது முறையாகும். அதாவது இலக்கணம் கூற விரும்பும் பொருள் எந்தச் சாதியைச் சேர்ந்தது என்றும், அதுபோன்ற மற்ற இனங்களிலிருந்து பிரித்துக் காட்டும் சிறப்பியல்பு யாது என்றும் கூறுவதாகும். உதாரணம்: முக்கோணம் என்பது மூன்று நேர்கோடுகளால் அடைக்கப்படும் வடிவம் என்பது. இதில் வடிலம் என்பது சாதியையும் மூன்று நேர்க்கோடுகளால் அடைக்கப்படுவது என்பது சிறப்பியல்பையும் விளக்குகின்றன.

இலக்கண விதிகள்: மேனாட்டுத் தருக்க நூலார் ஐந்து இலக்கண விதிகள் கூறுவர்:

1. இலக்கணமானது முக்கியமான எல்லாப் பண்புகளையும் கூறுவதாக இருக்கவேண்டும். மேற்கூறிய சாதி - சிறப்பியல்பு முறை இதற்குப் பயன்படும்.

2. இலக்கணமானது இலக்கியமாகிய பொருளின் பண்புகளைக்கூட்டியும் குறைத்தும் கூறலாகாது. அவை சமபரப்புடையவையாக வேண்டும்.'மை என்பது எழுதும் பொருள்' என்று கூறும் இலக்கணம், பலப்பம் முதலிய வேறு எழுதும் பொருள்கள் இருப்பதால் வேறு பொருளையும் குறிக்கும் அதிவியாப்தி என்னும் குற்றமுடையதாகும். 'மை என்பது கறுப்பு நிறமுள்ள எழுதும் பொருள்' என்று கூறும் இலக்கணம் சிவப்பு பச்சை முதலிய மைகளை விலக்குவதால் குறைபாடாகிய அவ்வியாப்தி என்னும் குற்றமுடையதாகும்.

3. இலக்கணம் தெளிவாக இருக்கவேண்டும்; இரு பொருள் தரக்கூடிய மொழிகளும் அலங்கார நடையும் இல்லாததாயும் இருக்கவேண்டும். பொருளைத் தெளிவுபடுத்துவதே இலக்கணம் கூறுவதன் நோக்கமாகும்.